குழந்தைகளும் பாலியல் கொடுமைகளும்

வாட்ஸப்பில் ஒரு வீடியோ வருகிறது. அறுபது வயது மதிக்கத்தக்க முதியவன் ஒருவன் நான்கு அல்லது மூன்று வயது பெண் குழந்தையுடன் ஒரு புதருக்குள் இருப்பதும், அக்குழந்தையை நிர்வாணப்படுத்தி அவனும் உடைகளை கழற்றி உடலுறவிற்குத் தயாராகும் தருணம் அங்கு இருப்பவர்கள் வீடியோ சகிதம் சுற்றி வளைத்து வருகிறார்கள்.
அக்கிழவன் அக்குழந்தையை போ என்றதும் அது உடையை மாட்டிக்கொண்டு ஓடுகிறது. அவனை அடித்து இழுத்து வருகிறார்கள்.

சமூக வலைத் தளங்கள் மூலமாக இப்பொழுது இது மாதிரியான குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

உணர்வுச் சலனம் என்றால் என்ன என்றால் இது போன்ற விஷயங்களைப் பார்க்கும்பொழுதும் கேட்கும்பொழுதும் ஏற்படும் உணர்வுகளின் குழப்பம் தான். எரிச்சல் அடைவதா, கோபப்படுவதா இல்லை இது போன்ற சமூகத்தில் தான் நாமும் நம் குழந்தைகளுடன் வாழப்போகிறோம் என்று பயப்படுவதா என்று தெரியாமல் நிற்கிறோம் அல்லவா அது தான்.

ஒரு குழந்தை என்றும் பாராமல் அதன் மீது தன் வக்கிர எண்ணங்களைத் திணிக்கும் இந்த வன்மக்காரர்களை என்ன செய்வது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் இது போன்ற அத்துமீறல்கள் குறையும் என்று இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் சொல்லிக்கொண்டு போவது.
என்றைக்கு நீ தான் குழந்தையை பார்த்து வளர்க்க வேண்டும் என்று கத்தியை சுழற்றி நமக்கு அறிவுரையை வழங்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

பெண்கள் மீதான , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் குற்ற உணர்ச்சியும் பொறுப்பும் கூடிக்கொண்டே போகிறது.
குறிப்பாகக் குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்களுக்கு ஆண்கள் ஒவ்வொருவரும் கூடுதலான பொறுப்புணர்வுடன் இருத்தல் அவசியம் என்றே தெரிகிறது.

நான்கு வீடுகள் ஒரே காம்பவுண்டுக்குள் இருக்கும் ஒரு அமைப்பு. அது ஒரு மெட் ரோ டவுன் இல்லை. பெரிய மாநகரம் இல்லை. அது ஒரு பெரிய கிராமம்.
தாயாய் பிள்ளையாய் பழகும் கிராமம் எனச் சொல்வோம் இல்லையா..அப்படி.
தாத்தா சித்தப்பா மாமா என அழைத்து வாழும் ஒரு தமிழ்நாட்டு பெரிய கிராமத்தில் சின்ன தாத்தா என்றழைக்கப்பட்டவர் ஐந்து வயதுக் குழந்தையை பாலியல் வக்கிரத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்.
பிடிபட்டதும் உறவினர் ஊரார் அவரைத் தள்ளி வைப்பதுலாம் வேற கதை.

இன்னொரு வாட்ஸப் வீடியோவில் மருத்துவர் கூறுகிறார். அவரிடம் வரும் ஒரு பெண் தன் பதினொன்று வயது குழந்தையின் வயது வீங்கி இருக்கிறது என மருத்துவம் பார்க்க வந்தார் என்றும் ஆய்வில் அந்தக் குழந்தை கர்ப்பம் என்றும் தெரிவிக்கிறார்.

குழந்தை விசயம் என்று தனக்குள் புதைத்துக்கொண்டு வாழும் பெற்றோர் இன்னும் எத்தனையோ. துயரங்களைத் தூக்கிச் சுமக்கும் அப்பாவித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்பொழுது.

நாம் நம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானச் சமூகத்தை விட்டுவைத்துச் செல்வோமா என்பது நாம் இருக்கும்பொழுதே சந்தேகத்தை எழுப்புகிறது.

ஆழமான அதே சமயத்தில் நுண்ணிய அமைப்பில் நாம் நம் குழந்தைகளுக்கு விழிப்புணர்ச்சியைக் கண்டிப்பாகச் சொல்லித்தரவேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கிறோம்.
குழந்தை யார் யாரைப் பார்க்கிறாள் என்றிலிருந்து ஆரம்பித்து அது யாருடன் பழகுகிறது அது யாரைப் பார்த்துப் பயப்படுகிறது என்பதையெல்லாம் நாம் நமக்கே ஆராய்ச்சி செய்யவேண்டும்.

ஒரு குழந்தையை ஒரு நண்பர் ஓர் உறவினர் பக்கத்துவீட்டுக்காரர் இப்படி யாரேனும் அழைக்க அந்தக் குழந்தை போக யோசிக்கிறது என்றால் மாமா தானே தாத்தா தானே என்று குழந்தைக்கு அறிவுரை வழங்குவதற்குப் பதிலாக நாமும் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து அறிவுரைகளை வழங்கலாம்.

குழந்தையுடன் நாமாகவே அவர்களின் உலகத்திற்குள் பயணித்து அவர்களது உலகை நாம் காண வேண்டும். அவர்களின் உலகத்தில் அவர்களுக்கானப் பார்வையில் பார்த்து நம் உலகின் அபத்தங்களை அவர்களின் மொழியில் அவர்களுக்குத் தெரியப்படுத்துவது அவசியம்.

சட்டங்கள் போடும் வரை தண்டனைகள் கடுமையாகும் வரை அடுத்தவன் திருந்தும் வரை பயத்தையும் நடுக்கத்தையும் நாம் தூக்கித்தான் சுமக்க வேண்டுமா என்றால் எரிச்சல் அற்று கோபம் அற்று நடுக்கம் அற்று பயம் அற்று நிதானமாக நாம் இயங்கித்தான் ஆக வேண்டும்.

பாலியல் வக்கிரகாரகள் அவர்களுக்கெனத் தனி முகமூடியுடன வருவதில்லை. அபத்தங்கள் நிகழ்வதற்கு முன் நம் குழந்தைகளை அவர்கள் நெருங்குவதற்கு முன் நாம் தான் அவர்களை அழிக்க வேண்டும்.

குழந்தையின் உடை உணவு மருத்துவம் என்பதோடு நின்றுவிடாமல் மனிதர்களையும் பார்த்து பார்த்து குழந்தைகளுக்கு அறிமுகம் செய்துவைப்பது பெரிய கடமையாய் இருக்கிறது.

ரசாயனக் குண்டுகளை விட அணு ஆயுத பயங்கரவாதத்தைவிடக் கொடியது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பயங்கரவாதம்.

சாதி அற்று மொழி அற்று மதம் அற்று பாலியல் வன்முறைகளுக்கு எதிராகக் கரங்களை உயர்த்துவது இப்பொழுது பெருங்கடமை.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....