நானுனக்கு...

பலூன் களைத்
தவறவிட்டு
பின் ஓடிவரும்
குழந்தையின்
கண்களைப் போல

சுண்டப்பட்ட
நாணயத்தை
விரல்களுக்குள்
ஒளித்துக்கொண்டு
பூவா தலையா
எனப் பார்க்கும்
விழிகளைப் போல

திரை விழுந்த
பார்வையோடு
மங்கலாகத் தெரியும்
தொலைதூரப்
பேருந்தின்
முகப்பு எழுத்தைத்
தெள்ளத் தெளிவாய்
தேடிப் பார்க்கும்
மூதாட்டியின்
பார்வைத் தேடல் போல...

எல்லா முகங்களிலும்
ப்ரியமானவர்களின்
முகம் தெரியும்படியாய்
காத்திருக்கும்
விழிகளைப் போல

அப்பொழுது தான்
பிரசவித்தத்
தன் குழந்தை
கண் திறந்துப் பார்ப்பதைப்
பார்க்கும்
தந்தையின் கண்களைப் போல...

முதல் முறையாக
புகைவண்டியைப்
பிரமிக்கும்
சிறுமியொருத்தின்
ஆச்சர்யப் பார்வைகளைப் போல

வெறுமையின் நாளை
முடிக்கும் தருவாயில்
கை முழுக்க
யாசகம் பெறும்
ஒரு யாசகக்காரனின்
ஈரக் கண்களைப் போல...


பரபரக்கும் சாலையொன்றைக்
கை பிடித்து கடக்கும்
அறிமுகமற்ற
தாத்தா ஒருவரின்
நன்றி நவிழும்
பார்வையைப் போல.....

எந்த ரொட்டித்துண்டிற்கும்
அல்லாது
வெறும் சமிக்ஞைகளுக்கு
வாலாட்டும்
ப்ரிய நாய்க்குட்டியின்
ப்ரியக் கண்களைப் போல...

என்றோ ஒன்றாய்
கேட்ட
பாடலொன்றின்
ஒற்றை வரியில்
மீண்டும் மீண்டும்
தெரியும்
ஞாபகக் கண்களைப் போலத்
தொடர்வாய்

நீயெனக்கு.....



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8