குட்டுப்பட்டி

குருதிப்புனல் படத்தில் ஒரு காட்சி வரும். கதவு இடுக்கு வழியே கமல் கண்களைக் காண்பித்து ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் உண்டு என வசனம் வரும்.
இரசாயணத் துறை மாணவனாக யூடெட்டிக் பாயிண்ட் என நான் அடிக்கடிச் சொல்வதுண்டு.
திங்கட்கிழமை நன்றாக இருண்டிருந்த காட்டுப்பகுதி. காட்டுப்பகுதி என்று குறிப்பிடுவதில் அந்த நிலச் சரகம் அடங்கிவிடுவதில்லை. மலைப் பாங்கான வடிவமைப்புக்கொண்டப் பகுதி. நடு ரோட்டில் நின்று பார்த்தால் இருமருங்கிலும் மலைச் சரிவாய்க் காணலாம். அதில் எங்கும் பசுமையாக விவசாயம் நடக்கும். கீழ் பரப்புவரை செடி கொடி மரம் எல்லாமே தாவரங்கள் கற்கள் மணல் இப்படி.
நத்தம் என்ற ஒரு கிராமம் தாண்டிய கிராமத்துப் பாதை.
ரோட்டை சுத்தமாக வழுவழுப்பாய் போட்டு வைத்திருக்கிறார்கள்.
நான் வேலை முடித்து வரும்பொழுது இரவு எட்டு. நகர்ப்புற இருளுக்கும் கிராமத்து இருளுக்கும் வித்தியாசம் குளிரும் சீக்கிரம் ஊர் அடங்கிவிடும் தன்மையும். அதனாலேயே கிராமத்து இருளில் அடர் என்ற தன்மை இரு சிட்டிகைக் கூடுதலாக இருக்கிறது. அப்படி இன்டென்ஸ் டார்க் இரவு.
யோசித்துப்பாருங்கள்.
அழகிய கிராமத்துப்பாதை.
குளிர்
மண்வாசனை
இருள்
புல்லட் பயணம்.
ரசித்து வந்திருக்கக்கூடிய பயணத்தில் அலுவலகநிமித்தம் வேலை நேரத்தில் டைம் பாம் வைத்ததுபோல் வேகமாக நத்தம் நோக்கி விரைந்தேன்.
எனக்கு நினைவு தெரிந்து அந்தத் திருப்பத்தில் அறுபது கிமீ வேகத்தில்  நான் இருந்திருக்க வேண்டும்.
எந்த அறிவிப்பும் இல்லாமல் போர்ட்டும் இல்லாமல் ஒரு வேகத்தடை.
புல்லட்டில் பல பாசிட்டிவ் வகை இருந்தாலும் நெகட்டிவ் ஹெட்லைட் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. வெளிச்சம் பவர்ஃபுல்லாக இருந்தாலும் 20மீட்டர்வரை தான். நாம் புல்லட் என்றாலே கெத்து என்றோடு ஓட்டாமல் வேகமாக ஓட்டுவோம். அப்படி ஓடுதிறனுக்கு ஏற்றவாறு பார்வைதிறனுக்கு ஹெட்லைட் 50 மீ வரையாவது கவர் செய்தால் தான் நம் வேகத்திற்கு ஏற்றபடி சுதாரிக்கமுடியும்.
நான் புல்லட் எடுத்த அடுத்த நாளே இந்தக் குறையை ஷோரூமில் சொல்ல மெதுவாகச் செல்வதற்காகவே இப்படி வடிவமைக்கப்பட்டதும் ஹெட்லைட் வெல்டிங் பண்ணப்பட்டு வருவதால் அசைக்கமுடியாது என்றும் கூற நான் சொன்ன பதில் நான்குவழிச்சாலையில் பிரச்சினை இல்லை. நத்தம் மாதிரியான குக்கிராமங்களுக்கு இந்த லென்த் வெளிச்சம் பத்தாது என்று தான் சொல்லியிருந்தேன்.
ஆக, இந்தப் பகுதி பிரச்சினைகளும் என் ஹெட்லைட்டின் திறனும் முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்தாலும் கூட அன்று நான் வந்த  60 கிமீ வேகம் என்பது அதிகம் தான்.
அந்தச் சாலையின் ஒரு சிறிய வளைவில் தான் வேகத்தடை பார்த்தேன்.
வேகத்தடையை பார்த்தமாத்திரத்தில் வண்டியைச் சுதாரிக்க ப்ரேக் இட்டால் ஸ்கிட் ஆகும் எனக் கணிக்க வேகத்தடை வந்துவிட்டது.
வருமுன் காப்போம் அல்லது வந்ததை என்ஜாய் பண்ணுவோம் சித்தாந்தப்படி அதே வேகத்தில் ப்ரேக் இடாமல் வேகத்தடையில் ஏற்றினேன்.
நான் செய்த தவறு பள்ளம் வர கொஞ்சம் உட்கார்ந்தபடி எழுவது. அப்படி எந்திரித்து வேகத்தடை ஏற்றியது.
கடந்தாச்சு என்று நினைப்பதற்குள்
சீட்டில் உட்காருவதற்குள் அடுத்த வேகத்தடை.
எதிர்பார்க்கவில்லை.
அறியாமல் ப்ரேக் அமுக்க
வண்டி ஸ்கிட் ஆக
வண்டி நேராகச் செல்லாமல் இடப்பக்கமாய் திரும்ப
வண்டி தடுமாற
இடப்பக்கம் ரோட்டிலிருந்து விலகி புதருக்குள் அதே வேகம் புக
என் கண்ணுக்கு நேரே ரோட்டில் ஓரமாய் கிராமப்புறங்களில் அமர போடுவார்களே அந்தத் திண்டு.
சுய நினைவில் அதில் முட்டக்கூடாதென ஃப்ரண்ட் பிரேக்.
இது எல்லாமே ஒரு நொடியில்.
எங்கு இடித்தேன். எப்படி இடித்தேன்லாம் தெரியவில்லை. திண்டு வரை போகவில்லை.
அதற்குப் பிறகு நான் கண்ட காட்சி நான் வந்த திசை பார்த்து உட்கார்ந்திருக்கிறேன். கால் விரித்து.
இரண்டடி தாண்டி என் பைக் செல்லும் திசை பார்த்தபடி கிடக்கிறது.
எனக்கு இடக்கை தோள்பட்டை இடது மார்பு கழுத்து முதுகு வரை என்னமோ கனமாய் இறங்கி அழுத்த கண்களைக் கட்டிவிட்டது.
படுத்துவிடத் தோன்றியது.
ஆள் அரவமற்ற கிராமத்தின் வெளிப்பகுதி. கண்கள் முழுக்க இருட்டு. இடது கை மார்பு தோள்பட்டை அசைக்கமுடியவில்லை. வலப்பக்கம் சின்னதாய் கீழே விழுந்த என்  பைக்கின் ஹெட்லைட் மட்டும் தெரிகிறது. கண்களின் மேல் பகுதி கீழ்பகுதி முழுக்க இருட்ட நடுவே கொஞ்சம் வெளிச்சமாய் வண்டியின் லைட். 
என்னால் அப்படி உட்கார்ந்திருக்க முடியவில்லை. யாரோ வரும் சத்தம் கேட்டது. 
அந்தப் பகுதியில் கிராமத்தவர்கள்  இரவில் நடக்க எதிரில் வரும் வாகனங்களுக்குத் தெரிவிக்கும்வண்ணம் டார்ச் லைட் வைத்திருப்பார்கள். வந்த மூவரும் வைத்திருந்தனர். 
என் முகத்தில் அடித்தார்கள். நான் கண்களை மூடிக்கொண்டேன். 
என்ன தண்ணியா என்றார்கள்.
இல்ல என்றேன்..
என்ன இல்ல....தண்ணிய போட்டு விழுந்திருக்கியா என்றார்கள்..
இல்லண்ணே..நான் மெடிக்கல் ரெப்.ஸ்பீட் ப்ரேக் பாக்கல...என்றேன்.
இருட்டுக்குள் மேலிருந்து கீழ் வரை டார்ச் லைட் அடித்துப் பார்த்திருக்க வேண்டும். கையில் இரத்தம் ஒழுகியதை அப்பொழுது தான் பார்த்தேன். 
இன் பண்ணி ஷூ லாம் போட்ட ஒருவனை இப்படி பார்த்திருக்க வாய்ப்பில்லை தான் போல. 
எந்திரிங்க சார் என்றார் ஒருவர். 
என்னால முடியல என்றேன்.
என் இடப்பக்கம் இறங்கியவர் என் இடக்கையைப் பிடிக்க 
அண்ணே என் வலது கையைப் பிடிங்க..என்று கத்தினேன். 
ஒருவர் என் இடப்பக்கம் வந்து என் உடம்பைப் பிடிக்க வலப்பக்கம் நின்றவர் என் வலத் தோளை அணைத்துத் தூக்க எழுந்தேன். 
மூச்சு விட முதுகுத் தண்டில் மின்னல் வெட்டும் என்ற வைரமுத்துவின் வரியை அன்று தான் உணர்ந்தேன். 
பக்கத்துத் திண்டில் அமரவைத்தனர்.
நான் மெண்டலி ஸ்டேபிள் என்பதை உணர்ந்தேன். உணர்ந்தேன் என்பதை விட ஸ்டேபிளாக இருக்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தேன்.
சூழ்நிலையை உணர ஆரம்பித்தேன். 
வேகமாக எழுந்தேன். அவர்கள் பிடித்தார்கள். 
இல்லண்ணே...நார்மலாத்தான் இருக்கேன்னு சொல்லிட்டு வலிக்கும் இடக்கையை ஆட்டினேன். என்னால் முடிந்தது. கடவுளே!..இது ஃப்ராச்சர் இல்லை என்று பெருமூச்சு வந்தது. அதை விட இடப்பக்க மார்பு இழுத்து வலித்தது.
தோள்பட்டையை ஒரு சுழற்று சுழற்றிப் பார்த்தேன். (கில்லி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை நினைத்துப்பார்ப்பவர்களுக்கு என் கண்டனங்கள். )கடுமையான  வலி. 
ம்ம்மா...என என்னை மறந்து உச்சரித்தேன்.
என்னை மறுபடியும் அமரவைத்து ஒருவர் பக்கத்துத் தோட்டத்திற்குள் இருந்து ஒரு பெரிய ஆயில் டப்பா நிறைய தண்ணீர் கொண்டு வந்தார். முகத்தில் ஓங்கி அடித்து முகத்தைக் கழுவி விட்டார்.
அண்ணே நான் நார்மலாத்தான் இருக்கேன் என்றேன்.
இருங்க தம்பி..எம்புட்டு அடி விழுந்திருக்கும். நாங்க பாத்தோம்ல...பதட்டம் இருக்கும். தண்ணிய குடிங்க. தணியட்டும் என்றார்.
கைகளில் அந்த கேன் வாங்க என் இடக்கை அவ்வளவு நடுக்கம். என்னால் அதைத் தூக்க முடியவில்லை. 
நான் ஊத்துறேன். நீங்க வாய திறங்க என்றார். 
தண்ணீர் ஊற்ற என் தாடை கழுத்து சட்டை என நனைய நனைய குடித்தேன். ஒருவர் அவரது துண்டால் துடைத்துவிட, நான் என்னென்ன வேலை செய்கிறேன் என்ன கொண்டுவந்தேன் என்று கேட்டு என் பை, என் மொபைல் எல்லாவற்றையும் எடுத்தார்கள். ஓரமாய் கிடந்த என் புல்லட்டை மூவராலும் எடுக்கமுடியவில்லை. அந்த வழியாய வந்த ஒருவர் தன் பைக்கின் வெளிச்சத்தைக் காண்பித்து வண்டி நிறுத்த வண்டியை ரோட்டுக்கு கொண்டுவந்தார்கள்.
ஒருவர் என் வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்டிப்பார்த்தார்.
லெஃப்ட் நல்லா அணைக்குது சார். எப்படி போவீங்க என்றார். 
இது எந்த ஊர் என்றேன். குட்டுப்பட்டி என்றார்கள்.
இங்கிருந்து நத்தம் எத்தனை கி.மீ என்றேன்
7 என்றார்கள்.
நான் போயிருவேன் என்றேன்.
அவர்கள் வேண்டாம் என்றார்கள். அங்கிருந்து 200மீ தான் ஊர் . எங்கள் வீட்டில் தங்குங்கள். நாளை செல்லலாம் என்றார்கள்.
ஒருவர் வண்டியை நிறுத்திவிட்டு செல்லுங்கள். பஸ்ஸில் அனுப்பிவைக்கிறோம். நாளை நண்பர்கள் உறவினர்களை அனுப்பி எடுங்கள். நம்புங்கள் என்றார்.
இன்னொருவர் யாரையாவது வந்து அழைத்துப்போகச்சொல்லுங்கள். அதுவரை எங்கள் ஊருக்குள் வாருங்கள் என்றார்.
நத்தம் போயிட்டா அங்கு நிறைய கடைக்காரர்களைத் தெரியும் என்றேன். ஒருவருக்கு அழைத்தால் அவர் வெயிட்டிங்க். மதுரை சென்றிருப்பதாகக் கடையில் தகவல்.
எனக்கும் அங்கேயே அமர்ந்திருப்பதில் உடன்பாடில்லை. இருக்க இருக்க வலி கூடும். 
எல்லோருக்கும் நன்றி தெரிவித்து இல்லண்ணே நான் நார்மலா இருக்கேன். வண்டி ஓட்டிர முடியும். மதுரை வர முடியாது. நத்தம் வரை. அங்க வண்டிய நிப்பாட்டிட்டு காருல போயிரேன் என்றேன்.
வண்டிய ஓட்டிக்காண்பிக்கச் சொன்னார்கள்.
நான் ஓட்டிக் காண்பித்தேன். 
இங்கிருந்து 2 கிமீ புதூர் என்ற ஊர். அதுவரை ஒருவர் பின் வருவார் என ஒருவரை அனுப்பினார்கள். 30 கிமீ வேகத்திலேயே வந்தேன். அவர் பேசிக்கொண்டே வந்தார்.
கிளம்பும்பொழுது ஒருவர் சொன்னார் நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொறுப்பாளர் என்று. அனேகமாக குட்டுப்பட்டி ஊர் என்று நினைக்கிறேன்.
நான் இருந்த பதற்றத்தில் பெயரோ மொபைல் நம்பரோ கேட்காமல் வந்துவிட்டேன்.
கிராமங்கள் அழகாய் இருப்பதற்குக் காரணத்தில் ஒன்று மனிதர்களின் மனத்தினால தானே.
புதூரில் உடன் வந்தவர் பிரிய நான் நன்றி என்று கத்திக்கொண்டே தனியாக வண்டி ஓட்டி வரும்பொழுது தான் என் வலிகளுக்கு ஏற்றபடி முணங்க முடிந்தது.
இடது தோள்பட்டையில் அவ்வளவு வலி. நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. அந்த ஐந்து கிமீ தூரத்தை நான் வந்தது.
கிடைத்திருப்பது எல்லாம் சர்ப்ளஸ். 
தோல் உராய்வுகளும் தசைப் பிடிப்புகளும் என உடம்பு ரோபோ போல் ஆகிக் கிடந்தது. இன்று கொஞ்சம் பரவாயில்லை. 
வலிகள் பழக பழக பழகிவிட்டன. 
விழுவதற்கும் எழுவதற்கும் உள்ள கால வித்தியாசத்தில் தான் வெற்றி உள்ளது என்று என்றோ எழுதி வைத்தததில் இவ்வளவு வலி சொல்லவில்லை என்பது தான் நிதர்சனம். சில ப்ரேக்கிங்க் பாயிண்டுகளுக்கு இன்னும் சில புள்ளிகள் தேவைப்படுகின்றன தொடர்வதற்கு.

மீள்வேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....