கொதிநிலை

ஒரு சிறிய பாத்திரத்தில் கொதிக்க வைத்தப் பாலை ஊற்றிப் பிறகு பிரத்யேகமான டீத்தூளை அதில் தூவி தேவைக்கேற்ப சீனி சேர்த்து நல்ல கொதிநிலைக்குக் கொதிக்க வைத்து சிறிதளவு புதினா வெட்டிவேர் வகைகளை மேலே தூவி சில நொடிகளில் அதை இறக்கி வடித்து டீ க்ளாஸில் ஊற்றி பாய் கடையின் மாஸ்டர் நீட்டினால் காத்திருக்கும் கைகள் எனக்கு எனக்கு என நீண்டு எடுக்கும். அப்படி அந்தக் கடை பிரசித்தம். உண்மையில் அந்தக் கடை பிரசித்தமா இல்லை அந்தக் கடையின் டீ பிரசித்தமா எனக் கேட்டால் அந்தக் கடையின் டீ தான் பிரசித்தம். பாய் கடை டீ என்றால் தனி கிக்குத்தான் என்று சொல்லிக்கொண்டே வந்து டீ பருகுவார்கள்.

அன்று அவனுக்குக் கூட அந்தப் பகுதியில் தான் வேலை. அந்தப் பகுதியில் அவன் வேலைக்கு வந்துவிட்டால் பாய் கடையில் டீ அருந்திவிட்டுத்தான் செல்வான். ஒரு விற்பனையாளனுக்கு டீ சாப்பிடுவது என்பது ஒரு பழக்கம் அல்ல. சமயத்தில் அதுவும் ஒரு வேலை போலத்தான். எதற்காக டீ சாப்பிடுகிறோம் என்று தனித்து உணராதபடிக்குக் கூட அவன் டீ சாப்பிட்டு இருக்கிறான். 
வேலை சரியாக நடக்கவில்லை என்றால் ,
களைப்பாக உணர்ந்தால், போகும் வழியில் பிடித்த நண்பர்களைப் பார்த்தால்,  இப்படி டீ சாப்பிட அவனுக்குக் காரணங்கள்  உண்டு.
டீ சாப்பிடுவது என்பது சில நேரங்களில் அவனுக்கு அது ஓர் உணர்வு.

ஒரு விற்பனையாளனின் மாத நாட்களில் 20ம் தேதிக்குப் பின் வரக்கூடிய நாட்கள் வேகமாக ஓடுகின்றன. அந்த நாட்களின் வேகத்தை விரட்டிப் பிடிக்க அவன் அதை விட வேகமாக ஓட நினைக்கிறான்.
ஒரு விற்பனை பிரதிநிதி மாதத்தின் முப்பது நாளும் ஒரு முழு தீயைக் கையில் வைத்துக்கொண்டு ஓட வேண்டும் . அதற்கு டார்கெட் பட்ஜெட் எனச் சொல்லிக்கொள்ளலாம். இருபதாம் தேதியைத் தொட்டுவிட்டால் போதும் அந்தத்தீ அவனது மூளைக்குள் இறங்கி அவன் உடல் முழுதும் பரவும்.  
பத்து நாட்களில் முப்பது நாட்களுக்கான ஓட்டத்தை ஓட வேண்டும். 
நாளை எந்தெந்த வாடிக்கையாளர்களைப்   பார்க்கப் போகிறாய் என்று அவனது மேலாளரின் மேலாளர் கேட்டு இருந்தார். பொதுவாக விற்பனையாளனின் சில நிர்வாகங்களில் ஒரு தொழில்முறை புரோட்டோகால் உண்டு. களத்தில் வேலை பார்க்கும் விற்பனையாளனுக்கு ஒரு மேலாளர் இருப்பார். அவருக்கு மேல் இன்னொரு மேலாளர் இருப்பார். அவருக்கும் மேலே இன்னொரு மேலாளர் இருப்பார். ரீஜீனல் , ஜோனல் என்று பெயர் வைத்துக்கொள்வார்கள். பிறகு முதலாளி இருப்பார். 

கடை மட்டத்தில் இருக்கும் விற்பனையாளனுக்கு அவனுக்கு அடுத்தபடியாக இருக்கும் மேலாளர் மட்டும் அடிக்கடி தொடர்பில் இருப்பார். அதற்கடுத்தபடியாக இருக்கும் உயர் மேலாளர் கடைமட்ட விற்பனையாளனை அழைக்கிறார் என்றால் அது ஒருவகையான அழுத்தம்.
சிக்கலானச் சமயங்களில் இப்படி நடப்பதுண்டு. ஒரு செய்யப்போகும் வேலையின் முக்கியத்துவத்தை அவர் அழைப்பதன் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம். வெறும் மாதாந்திர அல்லது வருடாந்திரக் கூட்டங்களில் பார்த்துப் பழகிப்போன அதிகார வர்க்கத்து முகங்களை அவ்வப்போது அலைபேசியில் குரல் மூலமாகக் கேட்பது என்பது ஒரு வகை அழுத்தம் தான்.
இருபதாம் தேதி அது. இரவு நேரத்தில் வீட்டிற்குப் போகும் வழியில் அவனது மேனேஜரின் மேனேஜர் என ஒருவர் அழைக்கிறார். உரையாடலின் ஆரம்பத்திலேயே அவனது குரல் பம்மி குழைந்து கூனி குறுகி என எல்லா வர்ணனைகளையும் அப்பிக்கொண்டு இருந்தது.
இந்த மாதத்தின் இலக்கு என்ன.
இன்னும் பத்து நாள் தான் இருக்கிறது. எப்படி முடிப்பது.
நாளை யார் யாரை எல்லாம் பார்க்கப்போகிறாய்.
யார் யாரிடம் எல்லாம் நாளையே டார்கெட்டை முடிக்கப்போகிறாய்.
இல்லை..இல்லை நாளையே டார்கெட்டை முடித்துவிட்டு என்னைக் கூப்பிடு. '
இது தான் அதிகார வர்க்க அலைபேசி மேனேஜரின் உரையாடல்.
உண்மையைச் சொல்லப்போனால் அவன் வீட்டிற்குச் சென்றதும் அவனுக்கு அதைப் பற்றிய ஓட்டம் தான்.  அப்பா வந்த சந்தோசத்தில் இரண்டு வயது மகன் ஓடிவந்து குதித்த போது கூட உணர்வற்றுத்தான் தூக்கினான். 

அவனது ஜோனல் மேனேஜர் அழைத்துப் பேசியதில் சிக்கல் இல்லை. அடுத்த நாள் செயல் திட்டமாக மூன்று வாடிக்கையாளர்களைப் பார்க்கப்போவதாக அவரிடம் அவன் கூறியிருந்தான்.
டார்கெட் முடிப்பாயா என்ற கேள்விக்கு அவன் இல்லை என்று சொன்னால்  எதிர்மறை சிந்தனையாளனாக இருந்தால் எப்படி வேலை பார்ப்பாய் என்பார். 
ஆமா என்றால் , ஆர்டரை எடுத்துவிடு என்பார். சுருக்கமாகச்சொன்னால் நம் முன் இரண்டு விரலை நீட்டி  ஒன்றைத் தொடு என ஒரு விரலை மட்டும் காண்பிக்கும் வியாபாரத் தந்திரம் அது. 
அவன் ஆம் என்று தான் சொல்லியிருக்கிறான். அந்த வாடிக்கையாளரிடம் ஆர்டர் எடுத்தே ஆக வேண்டும் . அவர் தான் நாளைய மிகப்பெரிய டார்கெட்.  பிறகு இருக்கும் இரண்டு வாடிக்கையாளர்கள் சிறிய அளவு எதிர்பார்ப்பு தான்.

 மகனுக்குக் கதை சொன்னால் தான் தூக்கம் வரும். அதுவும் அவன் தான் சொல்ல வேண்டும். எப்பொழுதும் கதை முழுவதுமாக அவன் சொல்லி முடிப்பதற்குள் மகன் தூங்கிவிடுவான்.
 அன்றைய இரவுக் கதையை மகன் தூங்குவதற்கு முன்னதாகவே முடித்திருந்தான்.
அவனுக்கு அவ்வளவு வேகம். சொல்லப்போனால் எப்பொழுது விடியும் என்றுதான் இருந்தான். 
அந்த வாடிக்கையாளரிடம் அவன் கேட்கப்போகும் ஆர்டருக்கு அவர் தலையை ஆட்டுவாரா ஆர்டர் போடுவாரா என்பதே சந்தேகம் தான்.
ஆனால் ஆர்டர் எடுத்தாகவேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டுள்ளது அவனுக்கு.
 இது தான் மேலதிகாரிகளின் சாமர்த்தியம். ஒரு கொள்கையை தனக்குக் கீழிருப்பவர்களூக்கு  ஓனர்ஷிப் க்வாலிட்டியாக இறக்கிவிடுவது. 
அதை இப்பொழுது அவன் தூக்கிச்சுமந்து கொண்டிருந்தான். 
 அனைவரும் தூங்கியிருந்தார்கள். 
தூங்காமல் இருப்பவனுக்குப் புதிய விடியல் என்பது வேலைகளை ஆரம்பிப்பது தானே. கிளம்பியிருந்தான்.

அவனைப் பார்த்ததும் பாய் கடையின் மாஸ்டர் டீ யா என்றார்.
ஆமா என்று தலையை அசைத்து இருந்தான்.
உண்மையில் அவனுக்கு இப்பொழுதும் டீ சாப்பிட வேண்டும் என்று தோன்றவில்லை.
அந்த பாய் கடையிலிருந்து நான்கு கட்டிடங்கள் தாண்டித்தான் அவன் சந்திக்க இருக்கும் வாடிக்கையாளரின் அலுவலகம்.
அதற்காகத்தான் இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறான்.
முந்தைய நாள் இரவிலிருந்து ஜோனல் பேசியது மட்டும் தான் ஓடியது.  முதல் வேலையாக இந்தப் பகுதிக்கு வந்துவிட்டான்.
பாய் கடையில் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு முறையும் கொதித்தப் பாலை ஊற்றி தனித்தனியாக டீ போடுவார்கள். நல்ல கொதிநிலையில் பாலும் டீத்தூளும் சேர்ந்து ஒரு நல்ல மணத்தை ப் பரப்பும். அதை அவன் கவனிக்கவே இல்லை. அவன் அங்கிருந்து அந்த வாடிக்கையாளரின் கட்டிடத்தையே பார்த்துக்கொண்டிருந்தான.

அந்தக் கட்டிடம் சற்று உயரமாக இருந்தது. மெல்லிய சந்தன நிறத்தில் வண்ணம் அடித்திருந்தார்கள்.
வாசலில் கார் வந்து போகும்படியாய் சறுக்கு போட்டு ஒரு வாசலும், படி கொண்டு ஒரு வாசலும் வைத்திருந்தார்கள். வாசலில் நான்கைந்து பைக்குகள் இருந்தன. இதைப் பார்த்ததும் அவனுக்குப் பகீர் என்று இருந்தது. அவனுக்கு முன்னால் அந்த வாடிக்கையாளரை இவனைப் போன்று ஏதும் போட்டியாளர் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி வந்து இருப்பானோ என்று.
பாய் கடையின் மாஸ்டர் கொதிக்க வைத்திருந்த டீ பாத்திரத்தில் உற்றுப் பார்த்தான். டீ நல்ல கொதிநிலையில் தான் இருந்தது. அதன் வாசத்தை இப்பொழுது நன்றாகவே உணர்ந்தான்.
சீக்கிரம் டீ வந்து விடும். குடித்துவிட்டு கிளம்பிவிடலாம் என்று நினைத்துக்கொண்டே அந்த வாடிக்கையாளரின் வாசலை மறுபடியும் பார்த்தான்.
நான்கு பைக்குகளில் ஒரு பைக்குக்கான உரிமையாளன் வண்டியை எடுத்துக்கொண்டிருந்தான்.
நல்ல வேளை அது அவனது போட்டியாளன் இல்லை. வாடிக்கையாளருக்கான வாடிக்கையாளர்.
இருந்தாலும் மீதியிருந்த மூன்று வண்டிகள் இன்னும் ஓர் அதிர்வைத் தந்து கொண்டிருந்தன. டீ அவன் கைக்குத் தரப்பட்டது.
உண்மையில் அந்த வாடிக்கையாளரைப் பார்த்ததும் எப்படி ஆர்டர் கேட்பது என்பதை ஒரு சோதனைக்காக மனதிற்குள் பேசிப்பார்க்கத்தான் இந்த டீக்கடைக்கு அவன் வந்திருக்கிறான்.
உண்மையில் அவன் இப்பொழுது அந்த வாடிக்கையாளருடன் பேசிக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டான்.
ஒரு வாடிக்கையாளரைப் பார்த்ததும் நேரடியாக ஆர்டர் கேட்டுவிடமுடியாது. ஆனால் கேட்டுத்தான் ஆக வேண்டும். அதற்காகத்தான வந்திருக்கிறோம்.
கேட்டதும் அவரும் கொடுத்துவிடுவாரா என்று தெரியாது. கொடுக்கும் மனநிலையிலாவது இருப்பாரா என்பதும் தெரியாது. அப்படி இல்லை என்றால் முதலில் அவன் , அந்த வாடிக்கையாளரை அவனுக்கு ஆர்டர் கொடுக்கும் மனநிலைக்கு நகர்த்த வேண்டியது இருக்கும்.
அந்த வாடிக்கையாளர் அவனுக்குத் தர இருக்கும் ஐந்து நிமிடத்தில் இது எல்லாம் நடந்தாக வேண்டும்.
அவனுக்குத் தெரியும் எதுவும் அதுவாக நடப்பதில்லை என்று.
சில விசயங்களை நடத்தி ஆக வேண்டும். ஒரு விற்பனை பிரதிநிதிக்கு அது தெரிந்திருக்க வேண்டும்.
விற்பனை என்பது விற்பனை அதுவாக ஆவதற்கும் விற்பதற்கும் உள்ள வித்தியாசம். அதைத்  தெரிந்திருக்க வேண்டும். இப்பொழுது அந்த டீ டம்ளர் காலியாகி இருந்தது.
டீக்குக் காசைக் கொடுத்துவிட்டு வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு அந்த வாடிக்கையாளரின் அலுவலகத்தை நோக்கி நடந்தான்.


 அவரது கட்டிடத்திற்குள் நுழைகையில் தனது ஷூக்களை வெளியில் கழற்றிவிட்டு அதற்கு முன் வந்திருப்பவர்களில் வேறு யாரும் ஷூக்களைக் கழற்றிவைத்திருக்கின்றனரா எனப் பார்த்தான்.
அப்படி ஏதும் இல்லை.
நல்ல வேளை இதற்கு முன் யாரும் வேறு போட்டி நிறுவன விற்பனைபிரதிநிதி வரவில்லை. இவன் தான் முதல் ஆள்.
உள்ளே நுழைந்ததும் பெரிய ஹால் இருந்தது.
அதன் வலப்புறத்தில் அங்கு இருக்கும் முதலாளியைப் பார்க்க அவரது வாடிக்கையாளர்கள் இருந்தனர்.
இடப் புறத்தில் வரவேற்பு மேடை இருந்தது.
இரண்டு பெண்கள் அங்கு அமர்ந்து மும்மரமாக கம்ப்யூட்டரிலும் ரிஜிஸ்டர் நோட்டிலும் எதையோ பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஒரு துப்புரவுப் பெண் நீண்ட குச்சியின் முனையில் நூல்களால் தொங்கியபடி இருக்கும் ஒரு கற்றையைக் கட்டி தரையைத் துடைத்துக்கொண்டிருந்தாள். வாசத்திற்காக நறுமணத் திரவியம் எதையோ கலந்து அதில் துடைக்கலாம். ஒரு வித மணம் அந்த அறை முழுவதும் இருந்தது.

இவன் வரவேற்பு மேடைக்கு அருகில் செனறு அங்கு இருந்தப் பெண்களில் ஒருத்தியிடம் தன்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்து தான் வந்திருப்பதாக அவருக்குத் தெரிவிக்கச் சொன்னான்.
அந்தப் பெண் அவனது விசிட்டிங்கார்டை வாங்கிக்கொண்டு எதிரே இருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். மணி அப்பொழுது காலை பத்தரை.
ஒரு விற்பனை பிரதிநிதிக்கு அந்தப் பார்வையின் அர்த்தம் தெரியாமல் இல்லை.
அவளைப் பேசவிடாமல், அவனே சொன்னான், 'லேட் ஆனாலும் பரவாயில்லை, காத்திருந்து பார்த்துக்கிறேன் என்று.

அவன் அங்கு இருந்த காத்திருப்போர்களுக்கான நாற்காலியில் அமர்ந்தான்.

அவருக்கு நன்றாகவே தெரியும் அவன் வந்திருப்பது ஆர்டர் கேட்கத்தான் என்பது.
அவருக்குத் தேவைப்பட்டிருந்தால் அவர் தேவைக்கு அலைபேசியில் தானே அழைத்து ஆர்டர் கொடுத்திருப்பார். அவ்வளவு டிமாண்ட் விற்பனைகள் எல்லாம் இப்பொழுது இல்லை.
இன்று நாம் வராவிட்டால் இன்னொரு கம்பெனியின் பிரதிநிதி வந்து ஆர்டர் எடுத்துவிடுவார்.
ஆதலால் இன்று அவரிடம் ஆர்டர் எடுப்பது என்பது அவரது தேவைக்கு மேல் அவன் அவருடன் இருக்கும் பழக்கத்திற்கு கிடைத்தால் உண்டு.
அதை எப்படி அவன் அவரிடம் கோரிக்கையாக வைக்கப்போகிறான் என்பது தான் அவன் இதுவரை கற்ற மார்க்கெட்டிங் அறிவு. அல்லது அனுபவம்.
ஒரு விற்பனை பிரதிநிதிக்கு ஒவ்வொரு வாடிக்கையாளனும் அவனுடைய திறமையை வளர்த்துவிடுகின்றான். வெற்றியின் மூலமாகவோ, அல்லது தோல்வியின் மூலமாகவோ.
 தேர்ந்த விற்பனையாளன் மெருகேறி கற்றுக்கொள்கிறான். சாதாரணமானவர்கள் கற்றுக்கொள்ளாமல் அப்படியே மழுங்கிவிடுகிறார்கள். ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அவரைப் பார்க்க வேண்டியவர்கள் எல்லோரையும் அவர் பார்த்து முடித்துவிட்டார். சொல்லப்போனால் அவனுக்குப் பின்னால் வந்த அவரது வாடிக்கையாளர்களைக் கூட அவர் பார்த்துவிட்டார். யாருக்குமே வாடிக்கையாளர்கள் தானே முதன்மை.
 உதவியாளர் பெண் ஒருத்தி வெளியில் வந்து பார்த்துவிட்டு ஒரே ஒரு ரெப் மட்டும் இருக்கிறார் என இன்டர் காமில் கூறுகிறார்.
அவர் உள்ளிருந்து அவனை அழைப்பதாக அந்தப் பெண் கூறினாள்.
 அவர் அறைக்குள் நுழைகிறான்.
அவர் அவரது அறைக்குள் நடுவில் அமர்ந்திருந்தார்.
இன்று அவர் ஏனோ முக்கியமான பொருளாகக் காட்சி தருகிறார். அவனுக்கு அப்படித் தெரிகிறது.
அவர் அவருக்குப் பொருத்தமான சட்டையை அணிந்திருந்தார். அப்படி அவன் பார்த்து பிரமிக்கலாம்.
மெதுவாக பேச்சைத் தொடர்ந்தான.
குட் மார்னிங் முதல் ஆரம்பித்து அரசியல் கலை இலக்கியம் சாப்பாடு என ஒரு ரவுண்ட் பேசி முடித்து ஐந்தாவது நிமிடத்தில் தொழில் ரீதியான பேச்சைத் தொடர்ந்தான்.
அவர் மெதுவாக அவனைக் கவனித்தார்.
நடுக்கம் இல்லாமல் அவன் பேசினான்.
முதல் நாள் ஜோனல் பேசிய எந்த அழுத்தத்திற்கும் உள்ளான மனநிலையை அவன் அவரிடம் காண்பிக்க வில்லை.
தான் ஒரு நிதானமாக , தனது கடமையைச் செய்வதாகக் காண்பித்துக்கொண்டான்.
இன்று அவரிடம் ஆர்டர் எடுத்துவிட்டு ஜோனலை அவன் அழைக்காவிட்டால் அவரே அவனை அழைத்து ஆர்டர்எடுத்தாச்சா எனக் கூடக் கேட்பார்.
 அவன் அவரைச் சந்தித்தப் பிறகு அவனது மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவேண்டும். அந்தளவு அவன் அவரைப் பார்ப்பது இன்று பெரிய விசயமாகப் பார்க்கபடுகிறது என்பதை அவன் அவரிடம் மெதுவாக வேறு வார்த்தைகளில் சொல்லிக்கொண்டிருந்தான்.

தனக்கு எவ்வளவு ஆர்டர் வேண்டும் என்பதை அவரிடம் மெதுவாகச் சொல்லிவிட்டான். உண்மையில் மயிலுக்கு வலி தெரியாமல அதன் பீலிகளைப் பிடுங்கும் கலை தான் மார்க்கெட்டிங். அதைத் தான் அவன் செய்துகொண்டிருந்தான்.

அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் அவனை புன்சிரிப்பு முகத்துடன் அவனைப் பேச அனுமதித்திருந்தார். அது அவனுக்கு மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது.

அவர் ஒரு கட்டத்தில் , சரி செய்திரலாம். என்று தலையசைத்தார்.
வெளியே வெயிட் பண்ணுங்க. எவ்வளவு ஆர்டர் எப்பொழுது என்பதைத் தன் உதவியாளரிடம் ஆலோசனை செய்து சொல்வதாகச் சொன்னார்.
அது அவனுக்கு ஒரு பெரிய வெற்றி.
வெளியே வந்து காத்திருந்தான்.

கிட்டத்தட்ட ஒரு பெரிய பாரம் இறங்கியதை உணர்ந்தான். தன் கடமைகளில் தொண்ணூறு சதவீதம் முடிந்ததைப் போல் உணர்ந்தான் . இன்று கொஞ்சம் தூங்கிக்கொள்ளலாம் என்று கூட நினைத்தான். முதல் நாள் வரமறுத்திருந்தத் தூக்கம் அவனுக்காக அவனது மூளையில் எப்பொழுதும் கண்களில் தவழக் காத்திருந்தது. சுரப்பிகள் அதைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன.
இன்டர்காமில் அவர் உள்ளிருந்து அவரது உதவியாளரை அழைத்தார். அந்தப் பெண் உள்ளே போனார். அவன் அதைக் கவனித்துக்கொண்டே இருந்தான்.
அவன் விசயமாகத்தான் பேசப்போகிறார்கள் என அவனுக்குத் தெரியும். ஐந்து நிமிடத்தில் அவள் வெளியே வந்தாள். நேராக அவளது இருக்கைக்குச் சென்று ஒரு ஃபைலை எடுத்துக்கொண்டு போனாள்.
அவன் அந்த அறையின் வாசலையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவன் தன் கண்ணுக்கு அந்த அறையின் கதவுகள் திறப்பது போலவே தெரிந்தது. அப்படியே அரை மணி நேரம் ஆகியது. பிறகு அந்தக் கதவு உண்மையிலேயே திறந்தன.
அந்தப் பெண் வந்தாள்.
 கையில் ஃபைல் வைத்திருந்தாள்.
அனேகமாக அதில் அவனுக்காக அவர்கள் தயாரித்து வைத்திருந்த ஆர்டர் இருக்கலாம்.
அவர் அவனிடம் கொடுப்பதற்காக எழுதிய ஆர்டர் குறிப்புகளை அந்தப் பெண் அதில் வைத்திருக்கலாம் .
 அவள் கதவை மூடியதும் அவனைத்தான் பார்த்தாள்.
ஏன் என்றால் அவர் சொல்லி அனுப்பிருக்கலாம். தான் காத்திருக்கச் சொல்லியிருக்கிறோம். அவனிடம் ஆரடர் கொடுத்துவிடு என்று கூடச் சொல்லியிருக்கலாம்.
அவள் நேராக அந்தப் ஃபைலை அவளது மார்போடு அணைத்த படி ஒரு கையை மட்டும் ஆட்டியபடி அவனை நெருங்கினாள்.
அவளைப் பார்த்ததும் அவன் இருக்கையிலிருந்து எழுந்தான்.
அவள் சொல்வதை குறிப்பதற்காக பேனாவை தன் சட்டையிலிருந்து உருவினான்.
பக்கத்தில் வந்தவள் கம்பெனி முழுக்க ஆடிட்டிங்க் போயிட்டு இருக்கு. அதனால் ஸ்டாக் எதுவும் பண்ண வேண்டாம் என்று ஆடிட்டர் சொல்லிட்டார். அதுனால சார்  ஆர்டர் எதுவும் தரவில்லை . முடிந்தால் அடுத்த மாதம் வருவீங்களாம் பாத்துக்கலாம் என்று சொல்லியபடி நின்று கொண்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவன் இப்பொழுது கொஞ்சம் சிரித்த முகத்தைக் காண்பிக்க வேண்டும். அது தான் மார்க்கெட்டிங்க் விதி என்று அவனுலகம் அவனுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அவன் சிரித்த முகத்துடன் அப்படியா என்று சொன்னான்.
அவள் ஆமா என்று தலையசைத்து அங்கு நடந்த உரையாடலுக்குத் தொடர்பற்று இருந்தாள்.
அவன் அவரது அறையைப் பார்த்தான். அந்த அறைக்கதவுகள் மூடியிருந்தன.
மறுபடியும் அவரைப் பார்க்க முடியாது அவனால்.
அது அவனுக்குத் தெரியும்.  அப்படி பார்த்தாலும் அவனுக்கு அனுமதி கிடைக்கப்போவதில்லை.
 ஹாரி பட்டர் கதைகளில் வருவதைப் போல டைம் மிஷினில் கடந்த காலத்திற்குள் நுழைந்து அவரது அறைக்குள் மறுபடியும் தன் கோரிக்கைகளை அழுத்தமாகச் சொல்லியிருக்கலாமா என்றெல்லாம் இப்பொழுது யோசிக்க அவனுக்கு அங்கு இடம் இல்லை.
அவன் சரி என்று கிளம்பும் வரை அவள் பார்த்துகொண்டிருந்தாள்.  ஷீக்களை போடும் போது மீண்டும் அவரின் அறையைக் கவனித்தான். அது மூடப்பட்டுத்தான் இருந்தது.

பத்து வருட வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்ச்சி வெற்றி தோல்வி ஏற்றம் இறக்க மனச் சலனங்களை  ஒரு பொழுதில் ஒரு வாடிக்கையாளர் கொடுத்துவிடுகிறார் . மூன்று மணி நேரத்தில் அவன் மகிழ்ச்சியில் உயரத்திற்குச் சென்று ஒன்றும் இல்லாமல் விழுந்து விடுகிறான். எதார்த்தங்களை மனம் ஏற்க எவ்வளவு நேரம் ஆகும்.

ஒரு நாள் இரவின் அழுத்தத்தையும் ஒரு நொடியில் இறக்கி வைத்து விட்டு அடுத்த அரை மணி நேரத்தில் அதை முழுவதையும் மறுபடியும் அவன் மூளையில் ஏற்றிக்கொள்ள வேண்டும். இப்பொழுது அது முன்னதை விட அதிகப் பாரமாகத் தெரிந்தது.
அடுத்த இரண்டு வாடிக்கையாளர்களுக்கு என்னென்னலாம் பேச வேண்டும் என்பதை அவன் தயார் செய்ய வேண்டும். அதை அவன் உணர ஆரம்பிக்கையில் பாய் டீக்கடையின் வாசலை அடைந்திருந்தான்.

பாய் கடையின் மாஸ்டருக்கு முன்னால் அந்தப் பாத்திரத்தில் பாலோடு டீத்தூளும் சேர்ந்து  கொதிநிலையில் ஒரு நல்ல டீ கொதித்துக்கொண்டிருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....