மருந்து விற்பனை பிரதிநிதியாகிய நான்...

சில நாட்களுக்கு முன் ஒரு மருத்துவர் வீட்டில் துப்பாக்கிமுனையில் ஒரு கொள்ளை சம்பவம் நடக்கிறது. விசாரித்த சில நாட்களில் அச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளைக்காரர்கள் பிடிபடுகிறார்கள். துப்பாக்கி சப்ளை செய்த சஸ்பெண்ட் ஆன ஒரு காவல்துறை அதிகாரி கவர்னர் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி என வட்டம் வருகிறது. கொள்ளைக்காரர்களுக்கு அந்த மருத்துவரிடம் பணம் இருக்கும் என்றும் அவர் வீட்டையும் காண்பித்துக்கொடுத்தவர் ஒரு மருந்துவிற்பனைபிரதிநிதி.
இப்படித்தான் செய்தி வெளிவந்துள்ளது.
பொதுவாகவே மருந்துவிற்பனைபிரதிநிதி களைப் பார்த்தாலே மக்களுக்கு ஏகப்பட்ட அவல உணர்ச்சிகள் உண்டு.
மருத்துவர்களுக்கு டீல் போடும் சூத்திரதாரர்கள்
நோயாளிகள் காத்திருக்க அவர்கள் உள்ளே சென்று வெகுநேரம் வெட்டி பேச்சு பேசுபவர்கள்.
வெயிலிலும் மழையிலும் நாயாய் அலைபவர்களென ஓர் அவல உணர்வோடு இங்கு பார்ப்பவர்கள் உண்டு.
இது மிகைப்படுத்தப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் அது உங்கள் பெருந்தன்மை.
உண்மையில் இந்த மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் என்பவர்கள் யார்.

அயல்நாட்டு பிரதிநிதி என்று வருபவன் ஒட்டுமொத்த தேசத்திற்காகவும் அந்த தேச மக்களுக்காகவும் தன்னை முன்னிலைப்படுத்தி வருபவன் என்றே அர்த்தம்.
மருந்துவிற்பனை பிரதிநிதி என்பவன் அவன் பின் அவன் சார்ந்திருக்கும் ஒரு நிறுவனத்தின் சார்பாக வருபவன்.
சரி அவனது வேலை என்ன?
ஒரு மருத்துவருக்கு ஒரு நோயாளியைப் பார்த்தால் உங்கள் மொழியில் கல்லா கட்டலாம்.
வேலை முடிந்தது என்று கிளம்பலாம்.

ஆனால் இந்த மெடிக்கல் ரெப்களை ஏன் பார்க்கவேண்டும்.
உடனே, அவர்கள் டாக்டருடன் டீல் போடுவார்கள் அது இது என்று பொத்தம்பொதுவாய் பேசாதீர்கள்.

ஒரு மருந்து கம்பெனி தன் மருந்துகளைச் சந்தைப்படுத்த இந்த மெடிக்கல்ரெப்களை நியமிக்கிறது.
ஒரு மெடிக்கல் ரெப் வேலைக்கு அவனைத் தயார்படுத்த முன் காலங்களில் b.pharm d.pharm படித்தவர்களைத் தேர்ந்தெடுத்தது போக அறிவியல் படித்திருந்தால் போதும் என்றும் இப்பொழுது ஆங்கிலம் வாயில் வந்தால் போதும் என்றும் கடைசியில் வேலைக்கு ஆள் வந்தாலே மெடிக்கல் ரெப்பாக்கும் நிலைமையும் உண்டாகிவிட்டது.
ஒரு கம்பெனி ஒரு ரெப்பை ரெப்பாகவே உருவாக்க அவனுக்கு உடற்கூறு சம்பந்தமான அறிவியலையும் மருந்து சம்பந்தமான அறிவியலையும் பிறகு அதில் தன் நிறுவன பிராண்டிற்கான அறிவியலையும் சொல்லிக்கொடுத்துத்தான் அனுப்பும்.
ஆக, மெடிக்கல் ரெப் என்பவர்கள் மற்ற மார்க்கெட்டிங்லிருந்து சற்று வேறுபடுபவர்களாக இருப்பர்.
அடுத்ததாக அவர்கள் சார்ந்திருப்பது பெரும்பாலும் படித்தவர்களுடனான வேலை. உதாரணத்திற்கு மருத்துவர்கள். அதற்கேற்றபடியான ஒரு பகட்டையும் தோரணையையும் கொண்டிருப்பர்.
மற்ற மார்க்கெட்டிங்கிலிருந்து வேறுபடக்காரணம் என நான் சொல்வது சமூகத்திலிருக்கும் உயர் படிப்புசார் தொழில்களில் ஒன்றான மருத்துவத்தில் அதன் நிபுணர்களிடம் சென்று அவர்களையே சம்மதிக்கவைத்து தன் பிராண்ட்களை எழுத வைப்பார்கள். நிபுணத்துவர்களை சம்மதிக்கவைப்பது எளிதான வேலை இல்லை தானே.

ஒரு மெடிக்கல் ரெப் ஒரு மருத்துவரைப் பார்த்து தன் பிராண்ட்களை புரோமோட் செய்வார். அதாவது மருத்துவர் தனக்கு வரும் நோயாளிகளுக்கு அவரது மருந்தைப் பரிந்துரைக்கும்படி.
ஒரு ரெப் சொல்லிவிட்டால் உடனே மருத்துவர் எழுதிவிடுவாரா...
ஒரு சாதாரண பாரசிட்டமால் மாத்திரைக்கு மதுரையில் மூவாயிரம் (குறைந்தது) பிராண்ட்களை புரோமோட் செய்வார்களென நினைக்கிறேன். அத்தனை கம்பெனிகள் உண்டு. அத்தனை ரெப்கள் உண்டு. அத்தனைபேரும் தங்கள் மருந்தைச்சொல்ல மருத்துவர் அதில் ஒன்றை எழுதுவார்.
சரி அவர்கள் வேலை இருக்கட்டும். மருத்துவர்கள் ஏன் இவர்களைப் பார்க்கவேண்டும்.
காரணம் இருக்கிறது. மருத்துவம் என்பது ஆழமானப் படிப்பு. நோயை நோய்சார் காரணிகளை நோய் தரும் சமிக்ஞைகளை நோயாளியின் மனநிலையை உடற்கூற்றின் அளவீடுகளை மருந்துகளை மருந்துகளின் அளவை என இத்தனை ஞாபகம் வைக்கவேண்டும்.
மெடிக்கல்ரெப்கள் தங்கள் பிராண்ட்களை புரோமோட் செய்யும்போது மருத்துவர்களுக்கு அதை ஹைலைட் செய்ய வாய்ப்புண்டு. ஒருவன் தினமும் பாடப்புத்தகங்களை வேலைக்கு வந்தப் பின்னும் படிக்க நேரம் இருக்காது. பெரூம்பாலோருக்குத் தேவையும் இருக்காது. ஆனால் வக்கீல் மரூத்துவர்களுக்கு அப்படி அல்ல.
குறிப்பாக மருத்துவர்களுக்கு.
இதை ரெப்கள் மூலமாக ஞாபகக் கிளர்வு செய்ய என எடுத்துக்கொள்ளலாம்.
அடுத்ததாக மருத்துவத் துறையில் ஏற்படும் அப்டேட்களைச் செய்தியாக சேனலில் போடமாட்டார்கள். பத்ரிகையில் வாய்ப்பு குறைவு. வாட்ஸப்? அப்படியே என்றாலும் எத்தனை பேரைச் சென்றடையும். ஆனால் மெடிக்கல்ரெப்கள் மருத்துவரைச் சென்றடைவார்கள். அவர்கள் மூலமாக கம்பெனிகள் அப்டேட் களை டாக்டர்களுக்கு வழங்கும்.

உதாரணம்: ஒரு சாதாரண மருந்து சாதாரண தயாரிப்பிலும் வரும். நிறுத்தி நிதானமாய் கரையும் sustained release தயாரிப்பாகவும் வரும். அதன் முக்கியத்துவத்தை மெடிக்கல் ரெப் கள் மூலமாக மருத்துவர்களுக்கு கம்பெனி வழங்கும்.

அடுத்ததாக ட்ரெண்டிங். அதாவது secondary failure மருந்துகளுக்கு உண்டு. ஒரு மருந்தை உதாரணத்திற்கு சுகர் மாத்திரை . ஒரு குறிப்பிட்ட மருந்தை தொடர்ந்து சாப்பிட அது அந்த நோயாளிக்கு வேலைசெய்யாது. அதாவது மனித உடம்பு resist செய்யும். இப்படி சில மருந்துகள் அவுட் ஆஃப் பீரியட் என்றாகிவிடும் போது அடுத்த மருந்து சந்தையில் எது வேகமாகப் போகிறதென்ற சர்வே மருத்துவர்களுக்கு மெடிக்கல் ரெப் மூலமாகத்தான் வழங்கப்படும்.

ஆனால் கிணற்றுத்தவளைத்தனமானக் கருத்து உண்டு. கம்பெனி ஓசி தரான். அதான் டாக்டர் எழுதுறான் என்று.
எங்கு வியாபாரம் இல்லை. தியேட்டர் போகிறீர்கள். குளிர்பானம் பெப்ஸியோ கோக்கோத் தான் இருக்கிறது. ஏன் எனக் கேளுங்களேன்.

உயிர் காக்கும் விசயமென டபாய்த்தல் எல்லாம் வேண்டாம்.
க்ளோப்ஜாமூன் பாக்கெட் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். அப்படி எனில் அதன் அடக்கவிலை என்ன.
உப்பு?
உங்கள் தாமிரபரணி...ஆனால் அக்வாஃபினா உங்கள் நீரா...
குடி குடியைக் கெடுக்கும் என்று விளம்பரம் எதற்கு? தயாரிப்பைக் குறையுங்களேன்.
சிகரெட் விற்பனையில் பெரும்பாலும் கோலொச்சும் ஐடிசி யாருடையது.
இங்கு எல்லாம் வியாபாரம் தான்.
மருந்தும் அப்படித்தான்.

ஒரு மருந்தை உங்களுக்கு மருத்துவர் எழுதி இருக்கிறார் என்றால் அதற்குப் பின் மருத்துவருக்கும் கம்பெனிக்கும் டீல் என ஏன் யோசிக்கவேண்டும். இந்த உலகமே சார்புடையது. ஒரு எல்கேஜி குழந்தைக்கு யூனிஃபார்ம் பள்ளி சொல்லும் கடையில் எடுத்தாக வேண்டும்.
உண்மையில் அந்த மருத்துவர் ஒரு மருந்தை எழுதி இருக்கிறார் என்றால் அதற்குப் பின் ஒரு மெடிக்கல் ரெப்பின் உழைப்பு இருக்கிறது. நீங்கள் குறை சொல்லும் நேரத்தில் ஒரு சாதாரண பாராசிட்டமாலிற்கு ஆயிரம் ரெப்களை முந்தி வெற்றி பெற்ற ஒரு ரெப்பின் உழைப்பு உள்ளது.
மெடிக்கல் ரெப்களில் சிலர் ஒரு கட்டத்தில் விரக்தியில் இந்தக் களத்தையே விட்டு வெளியே செல்வர். அவர்களை பேங்கிங் இன்ஷீயூரன்ஸ் துறை தத்து எடுத்தன. காரணம் இவர்களுக்குப் பணம் அதிகம் புழங்கும் மருத்துவர்களைத் தெரியும்.
மற்றொன்று முக்கியமானது. மெடிக்கல் ரெப்கள் ஓரளவிற்கு கஷ்டமர்களின் நேரத்திற்கு வளைந்தோடிவிடுவர்.
உங்களுக்குத் தெரியுமா நோயாளிகளைப் பார்த்தப் பின்பே மெடிக்கல் ரெப்களைப் பார்க்கும் மருத்துவர்கள் உண்டு. இரவு பதினொரு மணிக்கு வீட்டில் டிவி சீரியலைப் பார்த்துவிட்டு பிறகு க்ளினிக் வரும் நோயாளிகளைப் பற்றித் தெரியுமா....

ஒரு முறை இரவு ஒன்பது மணிக்குக் கார்ட் கொடுத்து மருத்துவரைப் பார்க்க நான் உள்ளே அழைக்கப்பட்ட போது மணி நடுநிசி ஒன்று.
குட் ஈவினிங் டாக்டர் என்றேன்.
அவர் சே..குட்மார்னிங் என்றார்.
இப்படிக் காத்திருந்து நம்மைப் பார்க்கவரானே என்று அந்த மருத்துவர் ஒரு மெடிக்கல்ரெப்பிற்கு அவருடைய பிராண்டை எழுதமாட்டாரா...
இதை டீல் என்பார்களா..

இரண்டு வருஷமா உங்களைப் பாக்குறேன் டாக்டர். மாசம் ரெண்டுவாட்டினு. இதுவரைக்கும் நீங்க என்னோட ஒரு ப்ராண்டைக் கூட சப்போர்ட் பண்ணல. இனியும் வரேன். ஏதாவது ஒரு ப்ராண்ட் ஒரே ஒரு ப்ராண்ட் சப்போர்ட் பண்ணமுடியுமா என்று ஒரு கிராமத்தில் மதிய உணவைத் தவறவிட்டு அடுத்த உணவகம் இல்லாத அத்துவானக் கிராமத்துக் க்ளினிக்கின் நடு ஹாலில் நின்று ஒரு மருத்துவர் முன் இப்படி மெடிக்கல் ரெப் கேட்பான்.
ஒரு மருத்துவர் ஒரு ப்ராண்டை எழுதுகிறார் என்றால் தரம் தான் முதலில். ஏனென்றால் எந்த மருத்துவனும் தரங்குறைந்த மருந்தை தெரிந்தே எழுதமாட்டார்கள். அடுத்தடுத்து நோயாளிகளுக்குக் குணமானால்தானே அவர்கள் நிலைக்க முடியும்.
தரத்திற்குப் பின்பு அங்கு ஒரு மெடிக்கல் ரெப்புடைய பெரும் உழைப்பு இருக்கிறது.
போத்தீஸ் கட்டைப்பை போல சில ரிமைண்டர்களை மருந்துக் கம்பெனிகள் வழங்கினால் அது லஞ்சம் எனப் பெயர்பெற்றுவிடும்.
சில மருத்துவமனைகள் இருக்கின்றன. நோயாளிகள் இருக்கும்பொழுது மெடிக்கல்ரெப்கள் க்ளினிக் உள்ளேயே நிற்கக்கூடாது. வெளியே போங்கள் என அங்கு வேலை பார்க்கும் செவிலியர் சொல்வார். இப்படித்தான் நிலைமை.

இதோ இன்று ஒரு மெடிக்கல் ரெப் கொள்ளைக்காரர்களுக்கு ஐடியா கொடுத்து டாக்டரின் வீட்டையும் அவரிடம் எவ்வளவு பண்ம் இருக்கலாம் என்றும் கை காட்டியிருக்கிறார்.
நேற்று நேரடியாக ஒரு மருத்துவமனையின் பி.ஆர்.ஓ அழைத்தார். பழனிக்குமார் இனி உங்களை நாங்கள் எப்படி நம்புவது என்றார்..

இந்த உங்களை என்பதை என்னையவா ஒட்டுமொத்த மெடிக்கல்ரெப்பையுமா என எப்படிக் கேட்பது.
ஆனால் நான் கேட்டுவிட்டேன்.
அதற்கு அவர் எல்லாரையும் தான் என்று சிரித்தார்.
வரலாற்றில் பல நம்பிக்கைத்துரோகங்களை பலரின் நம்பிக்கைககளைத் தூக்கிச் சுமந்த நம்பிக்கையானவர்கள் தான் செய்திருக்கிறார்கள்.
திருடனை துரோகியை ஒரே நாளில் முடிவு செய்து அவனுக்கு ஓரிடத்தை இச்சமூகம் கொடுத்துவிடும். அப்படி முடிவுசெய்தபின் சமூகம் அவனைக் கண்டுகொள்ளாது.
ஆனால் உண்மையில் நேர்மைக்காரர்களை விசுவாசிகளைத் தான் இச்சமூகம் தினம் அல்ல நொடிக்கு ஒருமுறை சோதிக்கும்.
இப்பொழுதும் நீ நேர்மையாக இருக்கிறாயா என சோதித்துக்கொண்டே இருக்கும்.
இது தான் எதார்த்தம்.

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் எல்லா இடத்திலும் உண்மையாக இருப்பதில்லை.

பத்து போலிஸ் லஞ்சம் வாங்க ஓரே ஒரு போலிஸ் நேர்மையாக இருந்தாலும் நாம் அப்படி பார்க்கிறோமா..

நல்லவனாய் இருப்பதும் கெட்டவனாய் இருப்பதும் அவரவரின் தனிப்பட்ட இயல்பு வாழ்க்கைமுறை. அதில் அவர் தொழில்சார் இனத்தை அல்லது மற்றவரின் நேர்மை மீது உங்கள் வன்மச் சந்தேகத்தை அல்லது உங்களது தெளிவற்ற கருத்துக்கணிப்பைத் திணிக்காதீர்கள்.

மூன்று நாட்கள் நெல்லையில் தங்கி நெல்லை மற்றும் அதன் சுற்றியுள்ள ஊர்களில் மருத்துவர்களைப் பார்த்துவிட்டு இரவு ஒன்பது மணிக்கு என் அருகில் பேருந்தில் அமர்ந்து ஒரு விற்பனை பிரதிநிதி வருகிறான். வீடியோசாட்டில் அவனது நான்குவயது குழந்தை பேசுகிறது.
ஏம்பா எப்ப பாத்தாலும் வெளியேவே போகுற எப்ப வீட்டுக்கு வருவ எனக் கேட்கிறது.
வீட்டுக்குத்தான்டா வரேன் என்கிறான்.
நம்ம செல்ஃபி எடுப்போமா என்கிறது.
வந்ததும் எடுப்போம் என்கிறான்.
நாளைக்கு ஸ்கூல் வருவியா என்கிறது குழந்தை.
நாளைக்கு காலைல அப்பா டூட்டி வேகமா போகனும் நீ அம்மாவோட போறியா என்கிறான்..
நீ வந்து விடுப்பா என அழுகிறது. அருகில் அவளம்மா சமாதானப்படுத்துகிறாள்.
அவனிடம் என் இயர்ஃபோன் கொடுத்து இதில் பேசுங்கள் என்கிறேன். காதுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
பேசி முடித்ததும் அவன் இயர்ஃபோன் அம்பா சமுத்திரத்திலிருந்து இரவு வேலைமுடித்து ரெப்புடன் வரும்போது நாய் விரட்டி கீழே விழுந்து தொலைந்துவிட்டதாகச் சொன்னான். எந்த மருத்துவரைக் கடைசியாகப் பார்த்தானோ அதே மருத்துவரிடம் முதலுதவிக்குப் போனார்களாம்.
இதுவரை அந்த மருத்துவர் எழுதாத அவர்களது பிராண்டை அவர்களுக்கே எழுதியதாகச் சந்தோசப்பட்டான்.
சரி நாளைக்குக் காலை குழந்தைய ஸ்கூல விடவேண்டியதான பாஸ் என்றேன்.
அட போங்கபாஸ் நாளை தஞ்சாவூரில் ஒரு க்ளினிக்கில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச ஹூமோக்ளோபின் செக் பண்ற கேம்ப் எங்க கம்பெனி மூலமா பண்றோம். இதைச் செய்தாவது அந்த மருத்துவரை எழுத வைக்கவேண்டும் . நான் தான் ஏரியா மேனேஜர் போகனும் என்றான். இவன் வீடு போகும்பொழுது இரவு பன்னிரெண்டு ஆகிவிடும். குழந்தை தூங்கியிருக்கும். மறுநாள் காலை தஞ்சையில் இவன் குறைந்தபட்சம் 11க்குள் இருக்கவேண்டுமானால் ஏழு மணிக்கே பஸ் ஏறவேண்டும். அதற்குள் குழந்தை எழுந்து இவன் முகத்தைப் பார்க்குமா..தெரியாது.

உங்கள் கையில் ஒரு டாக்டர் மருந்துச்சீட்டு தந்திருக்கிறாரா...உங்களுக்கு என்ன தெரிகிறது.
மருந்தா...
மருந்துவிற்பனைப் பிரதிநிதியாகிய நான் அந்தச் சீட்டில் ஒரு மெடிக்கல் ரெப்பின் கடும் உழைப்பையும் அவனுக்கும் அவன் குடும்பத்திற்குற்குமான தூரத்தையும் உண்மையையும் பார்க்கிறேன்.

ஓர் இயல்பற்றத் தவற்றிற்காக ஒட்டுமொத்த இனத்தையும் அப்படி கைகாட்டுவது ஒருவகை வன்மம் தானே..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8