டிவிஎஸ் சேம்ப்

மாப்ள விஷயம் தெரியுமா
(இப்படி உரிமையா கேக்குறவன் என் நண்பன் கணேஷ்குமார். இப்பொழுது தொடர்பில் இல்லை. இப்பொழுதுனா இப்பொழுது. ஏன் என்றால் அப்படி அவன் கேட்டபொழுது வருடம் கி.பி 1994. )
சொல்லுடா...
அவங்க அப்பா வண்டி வாங்கிருக்காங்களாம்.
என்ன வண்டி தெரியுஉஉஉமாஆஆஆஆ னு பெருமையா கேட்டான்.
அப்ப டிவிஎஸ் சேம்ப் பயங்கர ஃபேமஸ்.
என் சீனியர் உதயச்சந்திரன் அதுல வருவான். ஒரு நாள் அவன் வண்டி ஸ்டார்ட் பண்ணப்ப ஹாரன் அடிச்சேன். சின்னப்பிள்ளைத்தனமா இருக்குல.
அப்பலாம் மோட்டர்வண்டிகளை தெரிஞ்சவங்க ஓட்டுறது கம்மி. அப்படி யாராவது இருந்தா அவங்கட்ட அனுமதி வாங்கி ஒரு தடவை ஹாரன் அடிப்பேன்.
இப்ப கணேஷ்குமார் அப்பா வாங்கிருக்கார்.
டே..சூப்பருரா...என்ன கலர் சில்வரா..
(சில்வர் தான் உதயச் சந்திரனோடது)
இல்லடா ப்ளு...
டே சூப்பர்றா..(சூப்பர் டா வத்தான் நாக்கு வளையாம சூப்பர்ர்றா...னு வர்து)
இப்ப நான் பக்கத்து வீட்டு நண்பன்ட்ட சொன்னேன். அவன் பேரும் கணேஷ். கணேஷ்னா வெறும் கணேஷ். கணேஷ்ன்ற பேர சுருக்கமுடியல. அவன் என்னுல பாதி அப்ப. ஒரு வயசு ஜுனியர். எது பண்ணாலும் சேர்ந்துதான். பட்டம் விடுறது, பம்பரம் சுத்துறது, கிட்டி கிரிக்கெட் அப்புறம் ஒளிஞ்சு பிடிச்சு. இப்படி எல்லாத்தைலயும் பாதி.
கணேஷ்குமார்க்கு என் மூலமா கணேஷயும் தெரியும்.
மூணுபேரையும் வச்சு கணேஷ்குமார் டிரிபுள்ஸ் அடிக்குற ப்ளான் அடுத்த நாள்.
அப்ப ஃபோன்லாம் இல்ல. சனிக்கிழமை. ஞாபகம் இருக்கு. லீவு அன்னைக்கு.
நானும் கணேஷும் இருந்தது மேலப்பொன்னகரம் எட்டாவது தெரு. கணேஷ்குமார் இருந்தது அஞ்சாவது தெரு.
காலைல டிவிஎஸ் சேம்ப் வரும் அதுல ரவுண்ட்னு கணேஷும் நானும் கிளம்பி இருக்கோம்.
எட்டாவது தெருல இருந்து சேம்ப்ல கிளம்பி ஏழாவது தெரு போயி ஆறாவது தெரு ல திரும்பி ஒரு பிள்ளையார் கோயில் இருக்கும். அங்க முட்டி எட்டாவது தெருக்கு வரனும்னு வாயிலேயே ஒரு மேப் சொன்னேன் கணேஷ்க்கு .
அதுக்கு அவன் சொன்னான் எட்டாவது தெரு கயல் பேக்கரி தாண்டி குறுக்கால நுழைஞ்சு ஜெயில் கிரவுண்ட் போறது னு அவன் வாயில ஒரு மேப் சொன்னான்.
ஆனா வண்டிக்கு சொந்தக்காரன ஆள காணாம்.
ரொம்ப லேட் ஆகுதுனு நாங்களே கிளம்பி நடந்துபோய் அவன் வீட்ல பாத்துரலாம்னு நடந்து போனோம்.
அவங்க வீட்டு கதவு சாத்திருந்தது. எல்லாரும் உள்ள இருந்தாங்க.
ரொம்ப சர்வ ஜாக்ரதையா கணேஷ் அங்க சேம்ப் வண்டிய தேடுனான்.
பழனி...வண்டிய காணாம்...
புது வண்டிடா உள்ள நிப்பாட்டிருப்பாங்க..
என்ன பண்ணலாம்னு கணேஷ சத்தமா கூப்பிட்டோம்
கணேஷ்...கணேஷ்...( ரெண்டு தடவ கூப்பிட்டோம்னு அர்த்தம்)
உள்ளுக்குள்ள வீட்டு ஸ்க்ரீன் தாண்டி யாரோ வந்தாங்க...
ஸ்கீரின விலக்குற கேப் ல உள்ள வண்டிய பாத்ரனும்....
டக்குனு விலக்கிட்டு கணேஷோட தங்கச்சி வந்து நிண்டது...
கணேஷ் இருக்கானா...
குளிக்குறான்..நாங்கலாம் மார்க்கெட் போறோம்னு அந்தப் பொண்ணு சும்மா பீத்திக்குச்சு. அதுலயே தெரிஞ்சது அவைங்க வண்டில போகப்போறாஙைகனு...
நகர்ந்து வந்துட்டோம். ஏன்னா அவிங்க மார்க்கெட் போறாஙைக..
வண்டிலதான் போவாஙைக...
சேம்ப்லயா..னு கணேஷ் கேட்டான்.
நான்லாம் சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டதும் நாலு வீடு தாண்டி இருக்குற நாடார் கடைக்கு தேங்காச்சில்லு வாங்ககூட சைக்கிள எடுப்பேன்...
சேம்ப்னா விடுவானுகளா....
சாயங்காலம் நாலுமணி...
ஒரு சேம்ப் சத்தம் குறஞ்சுட்டே வந்து வீட்டு வாசல்ல நிக்குற மாதிரி இருந்துச்சு ..
எட்டிப் பாத்தா கணேஷ்குமார்....
அவன விடுங்க...நம்ம சேம்ப்...
ப்ளு கலர்
டிவிஎஸ்..சேம்ப்...
நம்ம ஊரு வண்டி டிவி எஸ் சேம்ப் னு ஒரு பிஜிஎம் காதுல கேக்க ஓடி வந்து வண்டிக்கிட்ட வந்தேன்...
கணேஷும் வந்துட்டான்...
சீட்ட தொட்டுப் பாத்தேன்.
பெடல..
ஹேண்ட்பார...
அப்புறம் ஹாரன..
ஹேண்ட்பார் ஓரத்துல கலர் கலர் ரிப்பனா தொங்கவிடப்போறானாம்.
கணேஷ் சுத்தி சுத்தி வந்தான். முன்னாடி ஒல்லியா இருக்கு..வேகமா போகும் தெரியும்ல...னான்
நானும் முன்னாடி நிண்டு பாத்தேன்...
ஏ..ஆமாடா... னேன்...
அவன் விடல. ..காத்த கிழிச்சுட்டு போகும் தெரியும்மாஆஆஆ னான்...
நானும் கணேஷும் என்னென்னமோ சொன்னோம்.
அப்போதைக்கு நான் சைட் அடிச்ச ஃபாத்திமாவும் கணேஷ் சைட் அடிச்ச கலாவும் எங்க கண்ணுல இல்ல ..
நிண்டதுலாம் நம்மூரு வண்டி டிவி எஸ் சேம்ப்...
எங்களுக்கு தெரிஞ்சவங்க வண்டி வச்சுக்கிட்டது இல்ல. இப்ப ஒருத்தன் கொண்டுவந்திருக்கான். எட்டாவது தெருவையே ஏளனமா பாத்தோம்.
டே..இந்த ரோடு என்ன குட்டையா இருக்குனு கவுண்டமணி ரேஞ்ச்க்கு ரவுசு பண்ணோம்.
ரவுண்ட் போலாமா..கணேஷ்குமார் கேட்டான்.
அதுக்குத்தான ஒட்டுமொத்த மேலப்பொன்னகரம் எட்டாவது தெருவையும் நானும் கணேஷும் அளந்து வச்சிருந்தோம்
அவன் கேட்டதுதான் தாமசம்...வண்டில ஏற தயாராயிட்டோம்...
வண்டிய ஸ்டாண்ட் போட்டு கணேஷ்குமார் ஸ்டார்ட் பண்றான்.
க்ஸ்க்ஸ்க்ஸக்ஸ்...னு செயின் சவுண்ட்ல இருந்து அப்படியே ஸ்டார்ட் ஆனது சேம்ப்.
எப்போதுமே டிவிஎஸ் சேம்ப் வகையறா வண்டிகளை ஸ்டார்ட் பண்றது பெரிய கலை. கணேஷ்குமார் ஒரே சுத்துல எடுத்துட்டான்...
அந்த வண்டி சத்தம் ஒரு இளையராஜா படத்தோட மாஸ் எண்ட்ரி மியூசிக்கா கேட்டுச்சு.
ஸ்டாண்ட எடுத்ததும் ஒரு அடி நகண்டு போய் நிப்பாட்டுனான்...
ஏ..சீறுதுப்பா..னான் கணேஷ்..
(ஒல்லியா இருந்தா காத்த கிழிச்சுட்டு போகும்னு அவன் சொன்னது இப்பவும் கேக்குது....)
கணேஷ்குமார் ஓட்ட
அவனுக்குப்பின்னாடி கணேஷ்
அவனுக்கும் பின்னாடி நான்.
உட்கார்ந்துட்டோம்.
கணேஷ்குமார் வண்டிய லேசா நகட்டுறான்.
மெல்ல..ஊறுது சேம்ப்...
மெல்ல...
மெல்ல..மெல்ல..
ஓ.....
இப்ப கீழ வச்சிருந்த இடது காலையும் கணேஷ்குமார் பெடல்ல வச்சுக்கிட்டான்...
லேசா ஹேண்ட்பார ஆட்டி ஸிடெடி பண்ணி இப்ப ஆக்ஸிலேட்டர திருகுறான்...
சேம்ப் சீறுது...
காத்தக் கிழிக்குதுபோ...நடுல இருந்து கணேஷ் கத்துனான்...
ஆஹா...அது ஒரு பரவசநிலை...
எங்க மேப்புல இல்லாத ரூட்ல கணேஷ்குமார் போனான்.
எங்க எட்டாவது தெரு வீடுகள்லாம் வேகம் வேகமா போகுது...
கணேஷ்குமார் நேரா பாக்க
கணேஷ் இடது பக்கமா தல வச்சு பாக்க
கடைசியா நான் வலதுபக்கமா தல வச்சு பாக்க( கணேஷ் மாதிரியே இடது பக்கம் பாத்தா முன்னாடி இருக்குற அவன் தல எண்ணெய் ஒட்டுது மூஞ்சில) என்னனாலும் பெர்ஸ்னாலிட்டி முக்கியம்டோய்...
சேம்ப் வேகமா பறக்குது..
குமார் வீடு நாடார் கடை பாத்திமா வீடு..எல்லாம் சர சரனு வேகமா போகுது...
கயல் பேக்கரிட்ட லெப்ட் அடிச்சான்...
ஏழாவது தெரு அடுத்து ஆறாவது தெருக்குள நுழைஞ்சான்...
வண்டிய விரட்டுனோம்
அப்படியே ஆரப்பாளையம் மெயின் ரோட்டப் பிடிச்சு லெப்ட் அடிச்சு எட்டாவது தெருல நுழையுற ப்ளான்...
அப்படி போனா கணேஷ்குமார் சைட் அடிக்குற ஹெலன் வீட்டுப் பக்கமா போலாம்ன்றது அவன் கணக்கு...
அவனவனுக்கு அவனவன் வாழ்க்கை.
இது தெரிஞ்சதும் நான் சொன்னேன்...
ஃபாத்திமா வீட்டுக்குட்ட போய் திரும்புடா....
கலா வீட்டுக்கிட்டனு நடுல இருக்கிறவனும் அவன் சத்துக்கு கேட்க..ஒரே சிரிப்பு.
மணி நாலரை இருக்கும்.
இந்த டைம் மதுரைல முக்குக்கு முக்கு வடை போடுற டைம்.
ஆரப்பாளையம் மெயின்ரோடு.
சேம்ப்
வலப்பக்கமா பாக்குறேன்.
ஒரு கிழவர் சைக்கிள்ல பின்னாடி ஒரு சட்டிய வச்சுக்கிட்டு உருட்டிட்டு வர்றார்.
ரோட்டோட வலது பக்கத்துல இருந்து இடது பக்கம் போகப்போறார்.
நான் அத பாத்துட்டேன்.
அஃப்கோர்ஸ் வண்டி ஓட்டுற கணேஷ்குமாரும் பாத்துட்டான்.
ஆனா விதி....அந்த கிழவர் பாக்கல..
எட்டிப்பாத்தா அந்தச் சட்டிக்குள்ள வடைக்குப் பிசைஞ்ச மாவு..
எங்கேயோ மாவ பிசைஞ்சு கடைக்கு வடை போட எடுத்துட்டு வர்றப்ப சம்பவமா ஆகப்போது...
நான் கத்துறேன்...
கணேஷ்குமாரும் கத்துறான்.
நாங்க எல்லோரும் கத்துறோம்...
தேம்பாவணி பஸ் ஸ்டாப்ல நிண்ட சிலரும் கத்துறாங்க..
கணேஷ்குமார் பிரேக் க அமுக்குறான்...
சேம்ப் நிக்கல..
போகுது...
போகுது..
இல்ல...இல்ல காத்த கிழிக்குது..
கிழவரும் நிக்கல...வர்றாரு.
பக்கத்துல போயிட்டோம்.
கணேஷ்குமார் ரெண்டு காலையும் தரைல தேய்ச்சு வேகத்த குறைக்கப் பாக்குறான்.
நானும்..தான்
பக்கத்துல போயிட்டோம்.
தாத்தாவோட சைக்கிள் முன் சக்கரமும் எங்க சேம்ப் முன் சக்கரமும் தொடபோற தூரத்துல எங்க சேம்ப் நிண்டுருச்சு....
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...
ஆனா அதிர்ச்சில வந்த தாத்தா பேலன்ஸ் பண்ணமுடியாம சைக்கிள கீழ போட்டுட்டார்.
அட அது பரவாலங்க...சைக்கிள கீழ போட்டதும் அவர் கொண்டுவந்த சட்டியில இருந்து வடை மாவு உருண்டு ஓடுது.
ஆமைவடைக்கு பிசைஞ்ச மாவு போல...
நல்லா லாவகமா பெரிய உருண்டையா பிசைய அது பெரிய உருளையா உருண்டு ஓடுது..
எங்களுக்குப் பயம்.
வண்டிய நிப்பாட்டி இறங்குனேன்.
கணேஷ்குமார் எடுத்ததும் சவுண்ட் கொடுத்துட்டான்.
விபத்துல முதல்ல சத்தம் கொடுத்துட்டா சேஃப் போல...
என்ன தாத்தா இப்டியா வருவீங்க..
நானும் ஒத்தாசைக்கு சவுண்ட் கொடுத்தேன்
கூட்டம் கூடிருச்சு...
தாத்தா ஓடுன மாவ எடுத்து சட்டிக்குள போட்டார்.
நான் சைக்கிள எடுத்துக் கொடுத்தேன்
சுத்தி நிண்ட கூட்டம் முழுக்கப் பாக்குது... தாத்தாவையும் அந்த மாவையும்.
சைக்கிள ஓரமா நகட்டி கணேஷ்குமார் கேரியர்ல மாவுச்சட்டிய வச்சுக்கொடுத்தான்.
சுத்தி நிக்குற கூட்டத்த பாத்தா நடுல ஒரு ஆள்.
சிரிக்கிறாங்க
யாருனு பாத்தா நடுல உக்காந்து வந்த உயிர்நண்பன் கணேஷ்.
பிரச்சனைனு வந்ததும் பயபுள்ள பொதுஜனத்தோட போய் நிண்டுகிச்சு...
இப்பகூட பஞ்சதந்திரம் படத்துல ஒரு சீன் அது மாதிரி வரும். இப்பயும் கணேஷும் நானும் அதச் சொல்லி சிரிப்போம்.
கோபத்துல கணேஷ்குமார் அவன அங்கேயே இறக்கிவிட்டு என்னைய கூப்ட்டு வந்தான்....
இத ஏன் இப்ப சொல்றேன்னா...நீங்க எந்தக் கடையிலாவது ஆமைவடை சாப்ட்டு இருக்கீங்களா....?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....