தீர்த்தங்கர் ராய் எழுதிய கிழக்கிந்திய கம்பெனி

தீர்த்தங்கர் ராய் எழுதி எஸ்.க்ருஷணன் தமிழில் மொழிபெயர்த்த கிழக்கிந்திய கம்பெனி நூலை முன்வைத்து....

கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கம் வளர்ந்துப் பிரவாகம் எடுத்தல் பிறகு சரிவைச் சந்தித்தல் என நூல் கூறும் தொனி அருமை.

நவீன காலத்திற்கு முந்தைய பண்டைய கால வர்த்தகத்தைப் புரிந்துகொள்வதற்கு பலவிதமான வரலாற்றுத் தரவுகளுடன் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது. முதல் நாற்பத்தைந்து பக்கங்கள் அணிந்துரை முன்னுரை என இருந்தாலும் இப்புத்தகத்தைத் தொடர்ந்து படிக்க அடிப்படையாய் சில விசயங்கள் நாம் கற்றுக்கொண்டுதான் படிக்க முடியும் என்பதற்காக  அத்தனைப் பக்கங்கள்
எழுதப்பட்டிருக்கின்றன.

ஆங்கிலேயர்கள் பதினாறாம் நூற்றாண்டில் கடல் கடந்து வணிகம் செய்யும் நிலையில் இருந்தார்கள். பிரிட்டனில் தனிப்பட்ட வணிகர்கள் சிலர் தன்னிச்சையாக மேற்கு ஆசியா இந்தியா சீனா என்று கடல் வணிகத்தில் இருந்தார்கள்.
அமெரிக்காவில் இருந்த ஐபீரியப் பேரரசுவும் ஸ்பானியர்களும் போர்ச்சுக்கீசியர்களும் ஆங்கிலேயர்களின் போட்டியாளர்கள்.
கிழக்கு மேற்கு என ஸ்பானியர்களும் போர்ச்சுக்கீசியர்களும் கடல்வழி வாணிபத்தின்பொருட்டு கடல்வழியை ஆக்கிரமித்துவைத்திருந்தனர். அதிலிருந்து நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் வாஸ்கோடகாமா கடல்வழி இந்தியா வந்தடைந்திருந்தார். ஆதலால் கடல்வழித் தேடல் என மாலுமிகள் கடலோடிகள் எனப் பெருந்திரள் பேரரசுகளின் நடுவே உருவாகியிருந்தனர்.
ஸ்பானியர்களும் போர்ச்சுக்கீசியர்களும் கடல்வழி அரசாங்கத்தை நிறுவுவதில் குறிக்கோளாக இருந்தார்களே தவிர வணிகம் செய்வது அவர்களுக்கு இரண்டாம்பட்சம் தான். ஆதலால் ஆங்கிலேயர்கள் கடல்வழி வணிகம் செய்யத் தருணம் காத்துக்கொண்டிருந்தனர். வெறும் வணிக நோக்குடன் ஆங்கிலேயர்கள் கடல்வழி போகக் காத்திருந்த நேரத்தில் ஐரோப்பிய வணிக மையம் பிரிட்டனுக்கு மாற நிறைய வணிகர்கள் ஒரே அலைவரிசையில் கடல் கடந்து வணிகம் செய்ய ஒன்று திரண்டனர். இறுதியாக வணிகர்கள் வங்கியாளர்கள் மாலுமிகள் கடலோடிகள் அனைவரும் ஒன்று திரண்டு உருவானது கிழக்கிந்திய கம்பெனி.

கடல்வாணிபம் பெருக கடற்கொள்ளையர்கள் பெருக ஒரு கடற்வழி டான் சில கைத்தடிகளுடன் ஸ்பானியக் கப்பலை கொள்ளையடிக்க ஸ்பானியர்களின் கடற்படை பலம் எவ்வளவு வலிமையற்றது என ஆங்கிலேயர்கள் தெரிந்துகொண்டனர். நாம் நினைப்பது போல் உடனே நேரடியாக ஸ்பானியர்களுடன் அவர்கள் சண்டைக்குச் செல்லவில்லை. மாற்றாக அந்தக் கடற்கொள்ளையனுக்கு வீரர்களை அனுப்பி உதவி ஸ்பானியர்களின் வணிக கப்பல் எல்லாவற்றையும் கொள்ளையடிக்க உதவி செய்து பனாமாபூச்சந்தியில் கப்பல் போகவேண்டுமானால் அவனது தயவு வேண்டும் என்றளவில் அவனைப் பெரியாளாக மாற்றி பிறகு அவன் மூலமாகவே இந்தியாவைக் கடல்வழி அடைய மேப் களையும் மற்ற கப்பல் மாலுமிகளையும் குஜராத் கடலோடிகளையும் பெற்று கிழக்கிந்திய கம்பெனியின் முதல் பயணக் கப்பல் பெரும் வணிகப் பொருட்களுடன் கிளம்பியது.

1699வாக்கிலேயே கூட்டு முதலீடு joint stock வரையறுக்கப்பட்ட கடமைகள் limited liability என கிழக்கிந்திய கம்பெனி தான் எவ்வளவு பெரிய கார்ப்பரேட் சாம்ராஜ்யம் என அடிப்படையில் ஸ்திரமாகக் கட்டமைக்கப்பட்டிருந்திருக்கிறது. பயணத்தில் குறிப்பெடுத்து அதை ரிப்போர்ட்டாக தலைமையகத்திற்குச் சமர்ப்பித்து இருக்கிறார்கள். அடுக்கடுக்காக ரிப்போர்டிங் சிஸ்டம் இருந்துள்ளது.
இப்போதிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிழக்கிந்திய கம்பெனி தான் தாய் நிறுவனம் எனத் திகழ்ந்திருக்கிறது.
முதல் பயணத்திலேயே கப்பலுக்குக் காப்பீடு செய்திருக்கிறார்கள்.
ஹூண்டி என்ற வரைவோலை சிஸ்டம் இருந்துள்ளது.
பரிமாற்றுச்சீட்டுமுறையைப் பின்பற்றியிருக்கிறார்கள்.
இது எல்லாம் 1600லேயே நிகழ்ந்திருப்பதை இப்புத்தகம் எழுத்தின் மூலமாகக் கண்முன் காட்டுகிறது.

இப்பொழுது இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முந்தைய  வரலாற்றுத் தோல்விகளிலிருந்து திருந்தி திருந்தி தன்னைத் தகவமைத்துக்கொள்ளவும் கிழக்கிந்திய கம்பெனி பல தோல்விகளைப் பதிவு செய்துள்ளது.

தன்னிச்சையாகச் செயல்பட்டுக்கொள்ள அரசிடமிருந்து அதிகாரம் வாங்கிய கிழக்கிந்திய கம்பெனி கடல்வழி பாதுகாப்பிற்கு தனக்கென குட்டி படையையையும் வைத்துக்கொண்டுள்ளது.
தன் படையைத் தவறாகப் பயன்படுத்துதல் குறைவான சம்பளம் தந்ததால் ஏற்பட்ட மாலுமி கடலோடிகளின் பிரச்சினைகளைத் தவிர்க்க அவர்களைத் தனித்து வியாபாரம் செய்துகொள்ள அனுமதித்தல் என்று பல தவறுகள்.
வந்த மாலுமிகள் பலர் தனித்து வியாபாரம் செய்தார்களாம். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளாக வந்தவர்கள் கூட தனியாக முதலீடு செய்து வியாபாரம் செய்ததைத் தலைமையிடம் கண்டுகொள்ளவில்லை. காரணம் இங்கு அவர்கள் கிட்டத்தட்ட அரசர்களைத் தன் பிடியில் வைத்திருந்தார்கள்.
பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டாலும் மதராஸ் பம்பாய் கல்கத்தா நகரங்களில் நிறுவப்பட்டக் கிளைகள் தனித்து இயங்க ஆரம்பித்தன.
இந்திய அரசர்களிடம் மோதல்போக்கைக் கடைபிடிக்கவேண்டாம் என்றபடியே தான் பிரட்டிஷ் அரசி விரும்புவதாக சில கருத்துகளை இந்தப் புத்தகம் தெரிவிக்கிறது. ஆனால் கிழக்கிந்திய கம்பெனெயின் வருமானம் நாடாளுமன்றத்தைத் தன் வசம் வைக்கும் அளவிற்குச் செல்வாக்காய் இருந்தது எனக் கூறும்போது அரசியல் மாற்றங்கள் எவ்வாறுஎல்லாம் இருந்திருக்குமென நம்மால் யூகிக்கமுடிகிறது.
இந்திய நெசவாளர்களின் திறன் பருத்தியாடை ஏற்றுமதி அதனால் பிரிட்டனில் ஏற்பட்ட அதன் சந்தை அது பற்றியத் தரவுகள் நமக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன.
ஒரு கட்டத்தில் இந்திய பருத்தியாடைகளை இறக்குமதி செய்யாதீர்கள் என பிரிட்டனின் நெசவாளர்கள் போராட்டம் செய்வதை கண்முன் நிறுத்துகிறது.
வேறுவழியில்லாமல் கிழக்கிந்திய கம்பெனி தன் இறக்குமதியை தேயிலை பக்கம் திருப்புகிறது.
பிரச்சினை வந்தாலும் கூட தொடர்ந்து இயங்கும் கார்ப்பரேட் யுக்திகளுள் ஒன்று அது.
சீனாவின் தேயிலைக்கு ஒரு சந்தையை பிரிட்டனில் ஏற்படுத்துகிறது.
சீனாவில் தேயிலையை வாங்கிக்கொள்ள பண்டமாற்று முறைக்கு ஓப்பியம் தந்துள்ளது. இதன் மூலம் சீனாவில் ஓப்பியத்திற்குச் சந்தையை ஏற்படுத்த, இந்தியாவில் மகாராஷ்டிரா பாட்னா வங்காளத்தில் ஓப்பியம் பயிரிடச் சொல்லி தரகர்களை முகவர்களை முடுக்கிவிடுகிறது.
ஓப்பியம் சீனாவில் தடைசெய்யப்பட இந்தியாவின் கல்கத்தாவில் ஏலம் விட்டு தரகர்கள் மூலமாக சீன எல்லையில் லஞ்சம் கொடுத்து விற்கப்பட்டதாம்.
1800 ல் ஆரம்பித்த இந்த வியாபாரத்தால் 1900ம் ஆண்டு 27 சதவிகித சீன இளைஞர்கள் போதைக்கு அடிமையானதாகத் தகவல் சொல்கிறது.
மாவோ வின் 1948 போராட்டமே சீனாவை போதையிலிருந்து வெளியேற்றியதாக ஆசிரியர் கூறுகிறார்.

இது போன்ற மற்ற வரலாற்று நிகழ்வுகளாக மராத்தியர் ஆங்கிலேயர் தொடர்ச்சியான போருக்குப் பின்னால் ஓப்பியத்தின் ஏற்றுமதி ஆதிக்கச் சண்டையே காரணம் என்கிறார்.

அக்பர் ஔரங்கசீப் ஷாஜஹான் என ஆங்கிலேயர்களை வரவேற்று வியாபாரம் செய்ததையும் முகலாயர்களின் 150 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் மராத்தியர்கள் மட்டுமே பிரச்சினை தந்துள்ளார்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு.

போர்ச்சுக்கீசியர்கள் டச்சுக்காரர்களின் வெறுப்பு அரசியல் இந்திய அரசர்களை ஆங்கிலேயர்பக்கம் திருப்பியிருக்கிறது.
கிட்டத்தட்ட பம்பாய் மதராஸ் வங்காளம் என கடற்துறைமுகங்களில் கிழக்கிந்திய கம்பெனிதான் நிர்வாகம் நடத்தியிருக்கிறது.
பெயருக்கு அரசர்களை நிர்வாகம் செய்யச்சொல்லி நிதி மேலாண்மையை கிழக்கிந்தியகம்பெனி தான் செய்திருக்கிறது.
வெறும் குமாஸ்தா. கணக்கெழுத வந்தவர். மன அழுத்த நோயாளி. தற்கொலைக்கு முயன்றபோது துப்பாக்கியில் தோட்டா இல்லாமல் தப்பித்தவர். ஆனால் சொல்லாடல் மூலம் வியாபாரம் செய்வதில் வல்லவர் என்றே ஒரே திறமை மட்டும் தான். அவர் தான் வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற இராபர்ட்க்ளைவ். ப்ளாசிப் போர் கர்னாடிக் போர் போன்ற வரலாற்றுத்தரவுகளை இப்புத்தகம் போகிறபோக்கில் தெரிவிக்கிறது.
ஒரு வியாபாரக் கம்பெனியினரால் ஆட்சியை நிலைநிறுத்தமுடியாது என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசி பிரிட்டன் தனித்தனி அதிகாரிகளை நியமித்திருக்கிறது.

1857 ல் இறுதியாக இந்தியா பிரிட்டிஷின் கையிலென அரசி அறிவிப்பதற்கு பல ஆண்டுகள் முன்னரே கிழக்கிந்திய கம்பெனியின் சந்தை மதிப்பு சரிவிற்கு வந்திருந்ததாம். ஆனால் உண்மை ஒரு பேரரசை நிறுவ ஒரு வாணிபக் கம்பெனி பல விதங்களில் உதவியுள்ளது தான்.

வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....