ஃபாசிசமும் மருத்துவர்களும்

நேற்று ஒரு மருத்துவர் , அரசு மருத்துவமனையில் வேலைப்பளு தாங்கமுடியாமல் தற்கொலை செய்துள்ளார். அரசு மருத்துவர்களுக்கு இருக்கும் பணிச்சுமை வெளியே தெரிவதில்லை.
அதை விடுத்து பொத்தம்பொதுவாய் எல்லா மருத்துவர்களுக்கும் இருக்கும் அழுத்தம் வெளியே தெரிவதில்லை.
ஒரு மருத்துவர் மருத்துவம் படித்து முதுகலை சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப் படித்து வெளியே வந்து சொந்தமாய் க்ளினிக் நடத்த குறைந்தது 12 வருடங்கள் ஆகின்றன.
இதில் நீட் என்ற தடைக்கல்லைத் தாண்டி வரவேண்டும். குடும்ப வறுமை அவர்களை அனுமதிக்க வேண்டும்.
இதில் கடந்த ஜூன் மாதத்தில் க்ளினிக் எஸ்டபிளிஸ்மெண்ட் ஆக்ட் என நம் எடப்பாடி அரசு ஒரு சட்டம் கொண்டு வந்து கிளினிக்குகளை 5000 கட்டி பதிந்துகொள்ள வேண்டும் என்று கூறியது.
இது எதற்காக என்றால் கஜானாவில் பணம் இல்லை என்பதற்காகத்தானே ஒழிய வேறு எந்த ஹைகோர்ட்டும் இல்லை.
ஒரு மருத்துவன் வெளியே வரும்பொழுது பதிய வேண்டும். பிறகு நர்சிங் ஹோம் கட்ட பதிய வேண்டும். ஆப்ரேஷன் தியேட்டர் வைக்க பதிய வேண்டும். பிறகும் இதை ப் பதிய வேண்டும். கேட்டால் போலி மருத்துவர்களைப் பிடிக்கப்போகிறார்களாம். இல்லாவிட்டால் தெரியாதாம்.
விட்டுவிடுங்கள் அடுத்து கிளினிக் நடத்த மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் மருத்துவமனைகள் அனுமதி பெற வேண்டும்.
அதாவது மருத்துவமனைகள் என்றால் அப்பலோ வேலம்மாள் போன்ற மருத்துவமனைகள் மட்டுமல்ல, நம் கிராமங்களில் நகரின் புறப்பகுதிகளில் ஏதாவது ஒரு ஏழை மருத்துவன் ஏழைகளுக்காக நானூறு சதுர அடியில் அமர்ந்துகொண்டு ப்ராக்டிஸ் செய்துகொண்டிருப்பான் அவனும் அவனுடைய கிளினிக்கை மாசு கட்டுபாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்றுகொள்ளவேண்டும்.

அவ்வளவு உயிர்களைக் காவு வாங்கிய ஸ்டெர்லைட் ஆலையே மனிதருள் மாணிக்கமாய் செயல்படுகிறது  என பசுமை தீர்ப்பாயம் சொல்கையில் ஒரு சாதாரண க்ளினிக் என்ன செய்யும். Bio Medical Wastage என்று மனித உறுப்புகள் இரத்தம் பஞ்சு ஊசி மருந்து பாட்டில்கள் இவற்றை முறைப்படி அழிக்கும் நிறுவனத்துடன் க்ளினிக்குகள் உடன்பாடு செய்துள்ளார்களா என்று சோதிக்க ஆவணத்தை அளிக்கச்சொன்னால் போதுமானது. இதைத் தவிர வேறு என்ன மாசு கெட்டுப்போகும்.
சரி விட்டுவிடுங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி வாங்க போக வேண்டும்.
ஐயா, நான் இங்கு க்ளினிக் நடத்துகிறேன் எனக்கு அனுமதி தாரும் எனக் கேட்டால் அவர்கள் ஆன்லைனில் இருக்கும் 60 கேள்விகளுக்கு பதில் அளித்து 19 வகையான ஆவணங்களைக் கேட்கிறார்கள்.
சரி , ஆன்லைன் செல்லுங்கள், மருத்துவமனைக்களுக்கென்று ஒரு பக்கம் வைத்திருக்கிறார்களா, இல்லை. Health care என்ற பிரிவு தான். தொழிற்சாலைகளுக்கும் அது தான் மருத்துவமனைகளுக்கும் அதுதான்.
அதில் raw material status என்று இருக்கிறது. இவர்கள் வைத்திருப்பது மருத்துவமனை. தொழிற்சாலைக்குத்தான் மூலப்பொருள் தேவை எனக்கேட்டால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை raw material ல் போடவேண்டுமாம். ஒரு மனிதனை எப்படி ஒரு அரசாங்கம் மூலப்பொருளாய் எடுக்கச்சொல்லும். மருத்துவமனைகளுக்கு அனுமதி கொடுக்கவேண்டும் அவர்கள் கேட்கவேண்டும் என நினைக்கும் அரசாங்கம் மாசுகட்டுப்பாட்டு த் துறையினரின் ஆன்லைனில் ஏன் தனிப்பிரிவாய் விண்ணப்பத்தை வைக்கவில்லை. ஆக, இவர்கள் நோக்கம் க்ளினிக்குகளிடமிருந்து  பணம் புடுங்குவது தான். கணக்கு எடுத்துக்கொள்ளுங்கள் உங்கள் தெரு உங்கள் பகுதி உங்கள் ஊர் எத்தனை க்ளினிக்குகள்.
சரி விட்டு விடுங்கள். அரசு சொல்லிவிட்டது. நீங்கள் மருத்துவர். அருகிலிருக்கும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் செல்கிறீர்கள். இனி கிளினிக் நடத்த அனுமதி கோரலாம்.
ஆனால் அவர்கள் கேட்பது , எப்பொழுது க்ளினிக் ஆரம்பித்தாய். உதாரணத்திற்கு 2000 மாவது ஆண்டென்றால் அதிலிருந்து இப்பொழுது வரை நீ கட்டு என் கிறார்கள் . குறைந்தது 56000 வரை கட்டு என் கிறார்கள். கட்டாவிட்டால் கட்டிடத்திற்கு கரண்ட் தண்ணீர் நிறுத்தப்படும் என மிரட்டுகிறார்கள். அரசு அதிகாரிகளின் அதிகாரப் போதை அது.
எனக்குத் தெரிந்த ஒரு கிராமத்தில் ஒரு மருத்துவர் , தம்பி நான் வரதே 3 மணி நேரம் ப்ராக்டிஸ் தான் . இதற்கு 56000 கட்ட வேண்டும் 19 ஆவணம் வேண்டும் என்றால் நான் க்ளினிக்கையே மூடப்போகிறேன் என் கிறார். இனிமேல் க்ளினிக் நடத்த அனுமதி பெற்றுக்கொள் என்றால் மருத்துவர்கள் வாங்குவார்கள். இருபது வருடமாகக் கட்டவில்லை அதையும் சேர்த்துக்கட்டு என்றால் , இருபது வருடமாக மாசுகட்டுப்பாட்டுத்துறை என்ன செய்தது. வருடத்திற்கு ஒரு முறை ஆய்விற்கு வரவில்லையா. ஆய்வு செய்யாமல் இருந்ததற்கு அரசிற்கு என்ன தண்டனை. எப்பொழுது அரசு கடமையைச் செய்யவில்லையோ அதற்கும் எப்படி கட்டணம் கேட்கும். ஒரு க்ளினிக் இருபது வருடமாக எத்தனை நோயாளிகளுக்கு வைத்தியம் செய்திருக்கும். ஒரு மீன் கடையை விட ஒரு புரோட்டா கடையைவிட ஒரு நச்சு வாயு உற்பத்தி செய்யும் ஆலையைவிட ஒரு க்ளினிக் எவ்வளவு மாசை உண்டாக்கும். இவர்களுக்கு சட்டத்தின் பெயரால் கொள்ளை அடிக்கவேண்டும். கஜானாவை நிரப்ப வேண்டும். அவ்வளவு தான்.


ஆக, இது இரண்டு நிகழ்வுகளை நிகழ்த்தும் என அனுமானிக்கப்படுகிறது.

 ஒன்று, திராவிட ஆட்சிகளில் ஊருக்கு ஊர்  கிராமத்திற்கு கிராமம் பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும் கொண்டு வந்த தமிழ்நாடு இனி அவற்றை அழிக்கப்போகிறது. கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்களை அவர்களது வேலையில் சலிப்பை உண்டாக்கி வெளியே ஓடச்செய்யும். விளைவு மக்களை கார்ப்பரேட் மருத்துவமனைகளை நோக்கி அழகாய்த் தள்ளிவிடுவர்.

இரண்டு, பணம் கொழுத்த மருத்துவமனைகள், சிறிய சிறிய மருத்துவர்கள் இல்லாததால் , தன்னிடம் வரும் நோயாளிகளிடம் இப்படி வெட்டியாகக அரசிற்குக் கட்டும் பணத்தையும் தலையில் கட்டி அவர்கள் தப்பித்துவிடுவர்.
பாதிப்பு பொதுமக்களுக்கே.



இந்த விசயத்தில் நான் சொல்லாதது , இதில் அரசு சொல்லிவிட்டது என அதை எப்படியாவது அனுமதி வாங்கவேண்டும் என நேர்மையாக ஒரு மருத்துவன் அணுகினால் , அவனை நோகடிக்கும் அரசு ஊழியர்களின் அலட்சியப்போக்கும் லஞ்ச மேலாண்மையும் நிற்கின்றன. அவர்கள் கேட்கும் ஆவணங்களில் இது குறை அது குறை எனச்சொல்லி தன்னை மனிதருள் மாணிக்கமாகக் காட்டிக்கொள்கிறார்கள்.
உதாரணத்திற்கு க்ளினிக் வரும் ஒரு நோயாளி எவ்வளவு நிலத்தடி நீரை பயன்படுத்துகிறார் அதற்கு சான்று கேட்கிறார்.
ஒரு நோயாளி எவ்வளவு கழிவுநீரை வெளியேற்றுகிறார் அதற்கு சான்று.
செப்ட்யூக் டேங்கின் நீளம் அகலம் உயரம் அதில் சேகரமாகும் கழிவுகளின் அளவு , தினமும் மாதம் வருடம் அளவு
அதேபோல் நிலத்தடி நீரின் சேகரமாகும் அளவு செலவழிக்கும் அளவு மாததிற்கு வருடத்திற்கு இதற்கெல்லாம் சான்று,
நீர் நிலைகளிலிருந்து க்ளினிக் எவ்வளவு தூரத்திலிருக்கிறது என்பதற்கானசான்று
இந்த நாளில் உன் க்ளினிக்கின் சொத்து மதிப்பு எவ்வளவு, நிலம் எவ்வளவு விலை, கட்டிடம் எவ்வளவு விலை. க்ளினிக்கில் இருக்கும் சேர் டேபிள் ஸ்டெத்தஸ்கோப் எடை மிஷின் எல்லாம் எவ்வளவு விலை. அதற்குச் சான்று.

இது எல்லாம் உதாரணத்திற்கு கொடுத்திருக்கிறேன். இதற்கு மேல் உங்களுக்கு வேண்டுமானால், உங்கள் அருகிலிருக்கும் ஒரு நேர்மையான மருத்துவனை நோயாளி போல் இல்லாமல், இவ்வளவு சிக்கல் இருப்பது உண்மையா எனக் கேட்டு பாருங்கள்.
இது எல்லாம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. தெரியவிடப்போவதுமில்லை. மருத்துவர்களின் சங்கம் தான் இதை வெளியே கொண்டுவரவேண்டும். ஒவ்வொரு துறையினரின் சங்கத்திலும் ஆளும் கட்சி தன் வலையை வீசி குரல்வளையை நெறிக்கும் ஃபாஸிஸ பாணி மருத்துவர்களின் சங்கத்திலும் நடக்கிறதா என மருத்துவர்களே வெளியே சொல்ல வேண்டும்.

குறிப்பு அடுத்த தலைமுறை மருத்துவர்கள் இனி மருத்துவப் படிப்பிற்கு வருவது இனி கஷ்டம். அதை நாம் செய்யவில்லை.அரசு செவ்வனே செய்கிறது. இந்த விசயங்கள் அனைத்தும் அவர்களுக்கு ஓட்டுப் போட்டவர்களுக்குக் கூடத் தெரியாது என்பது தான் அபத்தம். அதற்கும்தான்  ஃபாசிசம் என்று பெயர் வைக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8