"நோய்களின் தாய்" நூலை முன்வைத்து...

எழுத்தாளர் டாக்டர்.மணிவண்ணன் எழுதிய "நோய்களின் தாய்" என்ற நூலை முன்வைத்து.

இரண்டு வருடங்களுக்கு முன் என் உடல் எடை 86 இப்பொழுது 75 சராசரியாக. இந்த இரண்டு வருடங்களில் நானாக எடுத்துக்கொண்ட அல்லது ஏற்படுத்திக்கொண்ட ஆர்வம் மற்றும் விளைவாக இதைச் சொல்வேன். முகநூலில் "சைரன்" என்ற தொடரும் "சைரன்- பக்க விளைவுகளும்" என்ற தொடரும் இந்த காலகட்டத்தில் தான் எழுதினேன். இவற்றை நோக்கி என்னைத் தள்ளியது இரண்டு நிகழ்வுகள்.

முதல் நிகழ்வாய், என் அம்மா எப்பொழுதும் பார்க்கும் ஒரு அனுபவம் பெற்ற ஒரு மூத்த மருத்துவரிடம் மேல்வயிறு வலி என்று தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் போக அது சரியாகவில்லை. ஒரு பெண் மருத்துவரைப் பார்த்தால் கொஞ்சம் நன்றாக இருக்குமென நான் சொல்ல, மருத்துவரை மாற்ற என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் நிறைய யோசனை. அதனை மீறி டாக்டர். நல்லினி அருள் அவர்களிடம் அழைத்துச்செல்ல , அது வரை அல்சர் என நம்பிக்கொண்டிருந்த எங்களுக்கு அது அல்சர் இல்லை என்றும் , மருத்துவர் எடுத்த கிரியாட்டினின் ஆய்வில் 4 ல் இருந்தது (இருக்க வேண்டியது ஒன்றுக்கும் குறைவு) உடனடியாக ஒரு சிறுநீரக சிறப்பு நிபுணரிடம் காண்பிக்க ஒரு மருத்துவமனையில் அட்மிட் செய்து ஏழு நாட்களுக்குப் பிறகு அவரைத் தேற்றி அழைத்துவந்தோம். அப்பொழுது நான் கற்றுகொண்ட ஒரு மருத்துவச் சொல் diabetic induced nephro patient அதாவது சர்க்கரை நோயினால் சிறுநீரகம் பாதிப்படைந்த ஒரு நோயாளி எங்கள் அம்மா. மாத்திரைகளை நிறுத்திவிட்டு இன்சுலின் எடுக்கத் தொடங்கிய காலம் அது. நான் அடிப்படையில் ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதி என்பதால் இன்சுலின் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் விளக்கமுடிந்தது.

இரண்டாம் நிகழ்வாய், என் நண்பன் இரத்த அழுத்தம் அதிகமாகி வலிப்பு வர சோதனை செய்ய சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தான். கோவையில் டாக்டர். மங்கல்குமார் அவனைப் பரிசோதித்துவிட்டு எடையைக் குறை கொழுப்பைக் குறை என்றார்.
அவனுக்காகவும் , என் அப்பா அம்மா சர்க்கரை நோயாளிகள் எனக்கும் வரும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வாட்சப் குழு ஒன்றை ஆரம்பித்து நண்பர்களை இணைத்து தினமும் கையாளும் உடற்பயிற்சிகளைப் பதிவிடுங்கள் என்று அழைத்தேன். இப்படித்தான் ஆரோக்கிய வழிமுறைகள் டயட் உடற்பயிற்சி போன்ற தரவுகளை நோக்கி நகர ஆரம்பித்தேன்.

நிற்க,

ஒரு சாமான்யன் தன் உடல்நிலை பற்றி அக்கறை கொள்ள அவன் சில வலிகளையும் அனுபவங்களையும் பெற்றுக்கொண்டு பிறகு தான் அக்கறை கொள்ள ஆரம்பிக்கிறான் என்பதற்கு நான் மிக நல்ல உதாரணம். ஆனால் டாக்.மணிவண்ணன் எழுதிய ' நோய்களின் தான் " என்ற தலைப்பில் சர்க்கரை நோய் பற்றி எழுதியிருப்பது ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம். வருமுன் காப்போம் என்பதற்கான ஒரு முன்னேற்பாடு.
குடும்ப வரலாற்றில் பரம்பரை சர்க்கரை நோயாளிகளை வைத்திருந்தாலும் அல்லது மோசமான வாழ்வியல் சூழல் காரணமாக உங்கள் குடும்பத்தில் நீங்களே முதல் சர்க்கரை நோயாளியாக மாறுகிறீர்கள் என்றால் இந்த " நோய்களின் தாய்" நீங்கள் படிக்கவேண்டிய புத்தகம்.

சர்க்கரை நோய் என்றால் என்ன , வந்தால் என்ன செய்யும்,  எந்த எந்த உறுப்புகளைத் தாக்கும் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும். வந்த பின்னால் என்ன செய்யவேண்டும் என்று அளவீடுகளுடன் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் ஒப்பீடு செய்து டாக்டர். மணிவண்ணன் எழுதியிருக்கிறார்.
சர்க்கரை நோயாளிகளின் உளவியல் பிரச்சினைகளை டாக்டர். மணிவண்ணன் போன்ற அனுபவரீதியான மருத்துவர்கள் வேகமாகக் கணிப்பதே அவர்களின் நோயின் தாக்கத்தை வெகு சீக்கிரமாகக் கண்டறிய உதவுகிறது என்பது என் அனுமானம்.
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வந்தவுடன் நோயாளிகள் தன்னுடைய அக்கறையைக் கொஞ்சம் தளர்த்திக்கொள்வார்கள். அசட்டையாக மருத்துவர்களை அணுகுவார்கள். அதைப் பற்றியும் போகுற போக்கில் டாக்டர். மணிவண்னன் புத்தகத்தில் தொட்டுச் செல்வார்.
நாம் சரியாக சர்க்கரை நோய்க்குச் சரியான மருத்துவ வைத்தியமுறையில் சென்று கொண்டிருப்போம். உடனிருக்கும் அல்லது பக்கத்துவீட்டுக்காரர்கள் அல்லது சுற்றுப்புறத்தார் இதைச் செய் அதைச் செய் என திசை திருப்புவார்கள். போதிய மருத்துவக் கலந்தாலோசனை இல்லாமல் நோயாளிகள் உள்ளாகும் சிக்கல்களையும் தன் அனுபவ வழி எழுதியிருக்கிறார்கள்.
கர்ப்பவதிகள் எப்படி சர்க்கரை நோய்க்கு ஆட்படுகிறார்கள், சர்க்கரை நோய் வந்தால் எப்படி இருதயம், நரம்பு மண்டலம், செரிமான மண்டலம், கண் , பல் போன்றவை பாதிக்கப்படுகின்றன , அறிகுறிகள் யாவை, தடுக்கும் முறைகள் யாவை என்று எழுதியிருக்கிறார்.

சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி காலில் புண் ஏற்படுத்திக்கொள்கிறார்கள் அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன என்று அவர் விவரிக்கும் பக்கங்களைப் புரட்டுகையில் சர்க்கரை நோயாளிகள் சில மருத்துவமனைகளுக்கு வருவதையும் அவர்கள் தங்கள் விரல்களை இழந்திருப்பதையும் காலில் கட்டுடன் வருவதையும் நொண்டி நொண்டி வருவதையும் பல மருத்துவமனைகளில் கண்ட அனுபவத்தில்  நோயின் பாதிப்பு மற்றும் ஆழமான ரணமும் டாக்டரின் எழுத்தால் உணரவைக்கப்படுகிறது.
சர்க்கரையின் அளவு அதிகமாக ஏற்படும் பாதிப்புகளை விவரிக்கும்வண்ணமே, குறைந்தாலும் ஏற்படும் பாதிப்புகளை விவரித்திருக்கிறார்.

குழந்தைகளுக்கு வரும் சர்க்கரை நோய் பற்றிய பதிவில் தனக்கு நேர்ந்த அனுபவமாக 12 வயது குழந்தை என்னை சாகவிடுங்கள் என்று கதறியதையும் பின், அந்தக் குழந்தை தேறி வர மன நல மருத்துவ ஆலோசனையைப் பெற்று தந்ததையும் விவரித்திருப்பது நோயின் விளிம்பில் இருப்பவர்களும் நோயால் பாதிக்கப்படுபவரும் உணர்வால் உணர்பவை.
BRITTLE DIABETES  என்ற வகைமையான ஒரு குழந்தைக்கு வந்த சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளித்ததையும் அந்தக் குழந்தை பற்றிய கட்டுரை பிரபல இதழ் ஆனந்தவிகடனில் வந்ததையும் தன் பேட்டியையும் அதில் நினைவுகூர்கிறார். மருத்துவ வசதிகள் பெருகியிருப்பதைச் சுட்டிக்காட்டி ஒரு நம்பிக்கையை அளிக்கிறார்.
மிகவும் விசித்திரமாக ஒருவருக்கு காலில் புண் ஏற்பட தொடர்ந்து அந்த நோயாளியைக் கண்காணிக்க அந்தப் புண் அவர் வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகள் கடிப்பதால் வருபவை என்றும் அதைச் சமாளிக்க வேப்ப எண்ணெய் தடவி படுக்கச்சொன்னதையும் அவரது அனுபவக் கதையில் பகிர்ந்திருக்கிறார்.
இன்றைய காலத்தில் டயட்டில் இருப்பவர்களுக்கு ஓட்ஸ் என்பது FANTASY வகையறா. ஆனால் அதைக் கூழாய்த்தான் நிறைய நண்பர்கள் குடிக்கிறார்கள். அது உப்புமா போன்று திட உணவாய் சாப்பிடலாம் என்று ஒரு தகவலைச் சொல்லியிருக்கிறார்.

ஆக, டாக்டர்.மணிவண்ணன் எழுதிய " நோய்களின் தாய்" என்ற நூல் சர்க்கரை நோய்க்கான ஒரு சின்ன குறிப்பேடு. நோய்களைப் பற்றிய அறிவு வேண்டுபவரும், நோய் பாதிக்கப்பட்டவர்களும் வீட்டில் வைத்திருக்க வேண்டிய ஒரு புத்தகம்.

தொடர்ந்து தனக்கு ஏற்படும் அனுபவங்களைத் தொகுத்து அந்த நோயாளிகள் மூலமாக சர்க்கரை நோயின் தன்மைகளை இன்னொரு தொகுப்பாகக் கொண்டு வர வேண்டும் என்பது இந்தக் கட்டுரையின் மூலமாக மருத்துவர்.மணிவண்ணனுக்கு நான் வைக்கும் அன்பு வேண்டுதல்.

நிற்க,
தொடர்ந்து வாசிப்பும், இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரைகளை நிகழ்த்தவும், உரைகளைத் தொகுக்கவும், உரைகளைக் கவனிக்கவும் இருக்கும் சிற்சில பணிகளின் நடுவே கற்றுகொண்ட விதத்தில், இந்தப் புத்தகத்தில் ஓர் எழுத்தாளராக எப்படி ஆரம்பிக்கவேண்டும் சொல்லவேண்டியதை எப்படி கொண்டுசெல்லவேண்டும் எப்படி முடிக்க வேண்டுமென முதிர்ந்த எழுத்தாளராகவே மருத்துவர் தென்படுவதே அடுத்தப் புத்தகத்திற்கான என் வேண்டுதலுக்கான காரணம்.

பழனிக்குமார்
ZODIAC HEALTH CARE
மதுரை. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....