லைஃப் இஸ் கோயிங்க் ஆன்...
ப்ரவீனுக்கு பர்சேஸ் வரவேண்டும் என்று வரவில்லை. ஏதோ ஒரு அழுத்தம். வந்துவிட்டான்.
நண்பர்கள் இல்லாமல் இப்படி அவன் மால் போன்ற இடங்களுக்கு வருவதில்லை. கடைசியாக அவனுக்குப் பிடித்த கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு நண்பர்களை அழைத்த போது யாரும் வரமுடியவில்லை. முதல் நாளே பார்த்தே ஆகவேண்டும் எனத் தனியாளாகப் போனான். டிக்கெட் கவுண்டரில் இருந்தவர் கூட என்ன சார் தனியா எப்படி படம் பார்க்குறீங்க என்றார். அவனுக்கு அது கூச்சத்தை அதிகப்படுத்தியது. அவன் தனியாகப் படம் பார்ப்பது அது தான் முதல் தடவையாக இருந்தது.
இப்பொழுது ஒரு சட்டை வாங்கலாம் என்று மால் ன் நான்காவது மாடியில் இருக்கும் ஒரு ஏசி கடைக்குள் தனியாகத்தான் வந்திருக்கிறான். இரண்டு கட்டம் போட்ட சட்டைகள் எடுத்துத் தனியாக வைத்திருக்கிறான். அவனுக்குத் துணி எடுக்க உதவியாக வந்த ஷோரூமின் உதவியாளர் பையன், அந்தச் சட்டைகள் கேஷ்வல் டைப் ஸ்லிம் ஃபிட் என்றும் லேடிஸ் கூட இதைப்போடலாம் எனவும் கூறியிருந்தான். ஸ்லிம் ஃபிட்களில் ப்ரவீனுக்கு விருப்பம் இல்லை தான்.
இருந்தாலும் ஒரு சட்டையை எடுத்துக்கொண்டு ட்ரையல் ரூம் உள்ளே சென்று போட்டுப்பார்த்து விட்டு வெளியே வந்தான், அதை பில் பண்ணலாமா, எனக் கேட்டான் ஷோ ரூம் பையன்.
அதைத் தனியாக எடுத்துவைத்து பில் பண்ணிருங்க என்றுவிட்டு இன்னொரு சட்டை பார்க்கனும் எனப் பார்க்கப்போனான். எதுவும் அவனுக்குப் பிடித்த மாதிரி இல்லை.
தான் முதலில் எடுத்துவைத்த இன்னொரு சட்டையை ட்ரையல் பார்த்துவிடலாம் என அந்தச் சட்டை வைத்த ரேக் பார்த்தான். அங்கு அந்தச் சட்டை இல்லை. தேடிக்கொண்டிருந்த போதே இன்னொரு ட்ரையல் ரூமில் இருந்து அந்தச் சட்டை போட்டுக்கொண்டு ஒரு பெண் வந்தாள்.
பெண் என்ன பெண்...ஸ்வாதி. ப்ரவீனுக்குத் தெரியும் அவள் ஸ்வாதி என.
ஸ்வாதிக்கும் தெரியும் இவன் ப்ரவீன் என்று ..
கல்லூரி தோழி. அவள் கம்ப்யூட்டர் சயின்ஸ், இவன் பிசிக்ஸ்.
காரிடரில் பார்த்துக்கொண்ட சந்திப்பு. பிறகு என் எஸ் எஸ் கேம்ப்பில் கலந்துகொண்டு ஒரு ஊர்வலம் , ஒரு சுத்தம் செய்தல். அவ்வளவு தான்.
பிறகு கேண்டீனில் டீ. கும்பலாய் என் எஸ் எஸ் நண்பர்கள் பலரும் சேர்ந்து மீனாட்சி அம்மன் கோயில் போனார்கள். வரலாற்று ஆர்வலர் ஒருவரை அழைத்துக்கொண்டு கதைகளைக் கேட்டார்கள். வைத்தியநாத ஐயரின்ஆலய நுழைவு போராட்டம் பற்றிய பேச்சில் இருவரும் கண்களில் பேசிக்கொண்டார்கள்.
மாதத்தின் முதல் வெள்ளி, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவது வழக்கமென அந்தச் சந்திப்பில் ஸ்வாதி கூறியிருந்தாள். அடுத்த மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருநீறு பிள்ளையாருக்கு எதிரில் இருவரும் சிரித்துக்கொண்டு கடந்தனர். எதேச்சையாகத்தான் வந்ததாகக் கூறியிருந்தான். அவள் நம்பிவிட்டதாக அவன் நினைத்துக்கொண்டே வீடு வந்திருந்தான். அவள் நம்பிவிட்டதாகத்தான் தன் தோழியிடமும் கூறியிருந்தாள். ஆனால் அவள் நம்பவில்லை.இரண்டு மூன்று முதல் வெள்ளிகளில் சிரித்தார்கள். ஆங்கிலத்தில் ப்ளூஸ் என்று கூறுவார்களே. அப்படி ஏதோ சொல்லமுடியாத ஓர் ஊடக அலை இருவருக்கும் இடையே மொட்டுவிட ஆரம்பித்திருந்தது. ஆனால் இருவருமே அந்த அலைவரிசையை வளர்க்க மெனக்கெட வில்லை. குறிப்பாய் ப்ரவீன்.
கல்லூரியின் கடைசி கால கட்ட நண்பர்களுக்குச் சிக்கல் வெறுமனே அறிமுகம் மட்டும் தான் கிடைக்கும். அதற்குள் கல்லூரி முடிந்திருந்தது. இருவரும் வெவ்வேறு கல்லூரிகள். எங்கு படிக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்வதற்குள் முதுகலை முடிந்தது. ஆறேழு வருடங்கள் கழித்து
ஒரு முறை கம்பெனி மீட்டிங்க் என்று பெங்களூர் சென்ற போது ரோட்டோர கையேந்தி கடை ஒன்றில் உடன் வேலை பார்ப்பவர்களுடன் கும்பலாய் மசால் தோசை சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் பேருந்தில் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்தான். முன் நெற்றிப்பொட்டு இருந்தது. ஸ்வாதி தான் எனத் தெளிவாகத்தெரிந்தது.
பதினைந்து வருடங்கள் கழித்து இவன் தனக்கென எடுத்த சட்டையை அவள் மாட்டிக்கொண்டு வந்து நிற்கிறாள். கடைப் பையன் , ஸ்வாதியிடம், மேடம் இது சார் எடுத்து வச்சிருந்தார் என ப்ரவீனைக் காண்பித்தான்.
ஸ்வாதிக்கு, பார்த்ததும் இன்ப அதிர்ச்சி....
நீங்க ப்ரவீன் தான....
எப்படி இருக்கீங்க ஸ்வாதி....
ஓ ..மை காட்...ஞாபகம் வச்சிருக்கீங்க ப்ரவீன்..ஹவ் ஆர் யூ.....எத்தனை வருஷம் ஆச்சு.......என்றாள்
இஃப் ஐ எம் கரெக்ட் 20 வருஷம் ....
ஆமா கடைசியா கான்வகேஷன்ல பாத்தோமா ப்ரவீன்....
இல்லங்க..நான் அப்ப பாக்கல....கடைசியா ஒரு வெள்ளிக்கிழமை கோயில்ல..
ஓ மை காட்....எனச் சத்தமா சிரித்தாள் ஸ்வாதி.
ஷோ ரூம் உதவி பையன் இருவரும் தெரிந்தவர்கள் எனப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
இது நீங்க எடுத்த ஷர்ட்டா....
இல்ல எடுத்து வச்சிருந்தேன்....ட்ரையல் போடலாமா வேணாமானு யோசிச்சேன்..
ஓ...ஸாரி..தென்..இருங்க ..மாத்திட்டு வந்துறேன்....
நோ இஸ்யூஸ்....இட்ஸ் ஃபிட் ஃபார் யூ ஸ்வாதி.. நீங்களே எடுத்துக்கோங்க...
ஆர் யூ ஸ்யுர்?
கண்டிப்பா...
ஸ்வாதி, அந்தப் பையனைப் பார்த்து, ரொம்ப நாள் கழிச்சு என் ஃப்ரண்ட பாத்திருக்கேன். அவரே சொல்லிட்டார், இத போட்டுக்கிறேன். பில் பண்ணிருங்க , இது என் பழைய ட்ரஸ் இதை பேக் பண்ணிக்கிறேன். ஒரு பேக் தாங்க என்றாள்.
இருவரும் பில் பண்ணி பணம் செலுத்திவிட்டு அந்தக் ஷோரூமைவிட்டு வெளியே வந்தார்கள் . எதிரில் ஒரு காஃபி ஷாப் இருந்தது.
ஒரு டார்க் ப்ரவுனி, இரண்டு கேப்பச்சீனோ.. ஸ்வாதியே ஆர்டர் பண்ணிணாள்.
இப்பொழுது ப்ரவீன் ஏசி ஷோ ரூம் மற்றும் சர்வீஸ் ப்ரொவைடர். டூரிசம் , கால் டாக்ஸி பிசினஸில் இறங்கியுள்ளான். மனைவி ஒரு மகன். முதல் வகுப்பு.
ஸ்வாதி ஒரு ஐடி கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் துறையில் பெரிய அனுபவத்துடன் தென்னிந்திய பொறுப்பாளர். சென்னையில் இருக்கிறாள். மதுரையில் ஒரு நிறுவனத்தின் அழைப்பின் பெயரில் உரை கொடுக்க வந்திருக்கிறாள். தலைமைவிருந்தினர்.
ஸோ, ஸ்வாதி இப்ப பெயிட் நேரெட்டர்..அப்ப்டித்தானே, ப்ரவீன் கேட்டான்
கம் ஆன் ப்ரவீன், அதுலாம் இல்ல....ஜஸ்ட் ஷேரிங்க் நாலேட்ஜ்...
ஸ்வாதி, குழந்தைக என்ன பண்றாங்க.....ஹஸ்பெண்ட் என்ன பண்றார்,
ஹீ இஸ் ஆர்க்கிடெக், பொண்ணு ஏழாவது படிக்கிறா...
மீட்டிங்க் எப்ப ஸ்வாதி...
அதற்குள் காஃபி வந்தது. ப்ரவுனி பிரித்துச் சாப்பிட்டார்கள்.
நேத்து சாயங்காலமே முடிஞ்சது. இன்னைக்கு கோயில் போனேன். எப்ப முடியும்னு தெரியாது. ஸோ நாளைக்கு தான் டிக்கெட் போட்டுருக்கேன். காலைல ஸ்பைஸ் ஜெட் ஏழே கால் மணிக்கு. உங்களுக்கு என்ன ப்ளான் இப்ப.. எனக் கேட்டாள் ஸ்வாதி.
ஆக்சுவலி போர் அடிச்சு கொஞ்சம் மனசு லேசா ஆகட்டும்னு தான் வந்தேன். லேசா ஆயிருச்சு. ஏன்?
இல்ல நம்ம காலேஜ் பக்கம் போகனும், எனக்குப் பாக்கனும் ப்ரவீன்...மணி இப்பவே நாலு...போகலாமா..வெளிய இருந்துகூட பாக்கனும்.
அவ்வளவு தான....வாங்க போகலாம்...
உங்களுக்கு எதுவும் தொந்தரவு இல்லையே....
அட வாங்க......
ப்ரவீன் தன்னுடன் காரில் ஸ்வாதியை ஏற்றிக்கொண்டு கல்லூரிக்குப் போனான்..
மதுரை ரொம்ப மாறிடுச்சுல ப்ரவீன்...
இத தான் வெளியூர் போய்ட்டு வர எல்லாரும் சொல்றாங்க ஸ்வாதி, ஏன் மதுரை மாறக்கூடாதா. அப்படியே இருக்கனுமா..
அட..மதுரக்காரருக்கு கோபம் வருதோ...
இருக்காதா பின்ன....மதுரைய விட்டுக்கொடுக்கமுடியாது. ஸ்வாதி..
ஓகே....ஓகே...கோயில் போனேன் ப்ரவீன்....
அதுவும் மாறிடுச்சா...
ஜோக்கா...னு ப்ரவீனின் முழங்கையைத் தட்டினாள் ஸ்வாதி....
கார் ஓட்டிக்கொண்டிருந்தவனுக்கு அது எந்த இடையூறையும் தரவில்லை. ஆனால் மனம் தான் ஒரு வேகத்தடை மேல் ஏறி இறங்கியது.
திருநீறு பிள்ளையார் பாத்தேன் ப்ரவீன்..... என்றாள்...
காருக்குள் வாய் பேசிடும் புல்லாங்குழல் , நீ தான் ஒரு பூவின் மடல் என்று ஜேசுதாஸின் குரல் மட்டும் மௌனத்தின் நடுவில் கேட்டது.
என்ன சத்தத்தையே காணாம் என்றாள்
இன்னைக்கு முத வெள்ளிக்கிழமையா என்றான் ப்ரவீன்...
உன்னைப் போல நானும் மலர் சூடும் பெண்மை, விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை என்று இப்பொழுது நிலவும் அமைதியில் ஜேசுதாஸ் பாடிக்கொண்டிருந்தார்...
ஸ்வாதி சிரித்தாள்...
வாய் பேசிடும் புல்லாங்குழல்...நீ தான் ஒரு பூவின் மடல் என்று மறுபடியும் பாடினார் ஜேசுதாஸ்....
கல்லூரிக்கு வெளியே வந்து நின்றார்கள். மணி ஐந்து.
ஒருவழியாய் செக்யூரிட்டியுடன் தாஜா செய்து உள்ளே நுழைந்தார்கள்.
மரங்கள் அப்படியே இருந்தன. கூடுதலாய் சில புதிய மரங்கள்.
கேண்டின் , அந்த காரிடர் பார்த்தாள் ஸ்வாதி.
நிறைய மிஸ் பண்ணிட்டேன் ப்ரவீன்...என்றாள்.
அப்படி பெருசா மிஸ் பண்ண மாதிரி தெரியலயே ஸ்வாதி என்றான்...
லைஃப் இஸ் கோயிங்க் ஆன்....ல என்றாள்
இட் ஹேஸ் ட்டூ....என்றான்.
ஹார்பட்டர் படம் மாதிரி டாலர சுத்தவிட்டு டைம் மிஷின் கிடைச்சா என்ன பன்ணுவீங்க ப்ரவீன்.....
கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ்க்கு அப்ளிகேஷன் தந்திருப்பேன்....என்றான்.
சத்தமாய் சிரித்தாள்..
ஸ்வாதிக்கு இப்பொழுது என் எஸ் எஸ் கேம்ப் எனச் சுத்தம் செய்த ஒரு ஆசிரமத்திற்கு செல்லவேண்டும். மதுரையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருந்தது.
இப்பொழுது நெடுஞ்சாலை அது.
மதுரையைவிட்டு வெளியே வந்ததும் மழை.
காருக்குள் பூவே ..காதல் தீதே....மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக மாறியதே என இளையராஜாவின் இசை இருந்தது...
என்னைய ஒரு பையன் லவ் பண்ணான் ப்ரவீன்...சென்னைல..
கல்யாணத்துக்கு அப்புறமா...ப்ரவீன் கேட்டான்.
ஹாஹா..எஸ்..நான் பிஜி.படிக்கிறப்ப....
ஓ...
அவனுக்கு கொஞ்சம் உங்க சாயல்...
பார்றா....அப்புறம்..
நிறைய ஃபாலோ பண்ணான்..
என் சாயல்னே விரட்டிருப்பீங்களே.....
நீ பார்த்ததால் தானடி..சூடானது மார்கழி...நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி ..பாடல் சத்தம் மட்டும் கேட்டது....
நல்ல மழை ஆரம்பித்திருந்தது.
ஆசிரமத்தின் வெளியே கார் நின்றது.
வெளியே இறங்கி போய் பார்க்கிறீங்களா ஸ்வாதி...
இல்ல ப்ரவீன்....ஆபிஸ் டென்ஸன், இரண்டு நாளா இல்ல. இப்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன். உங்கள பாத்தது மனசு லைட்டா ஆயிருச்சு.....இப்படியே கார்ல போகலாம். ரிடர்ன் போங்க..
ப்ரவீன், ஸ்வாதியின் கண்களையே பார்த்தான்.....
என்னாச்சு ப்ரவீன்....
இல்ல..காலேஜ் படிக்கிறப்ப ஒரு லொங்கடா டிவிஎஸ் ஃபிஃப்டி தான் இருந்துச்சு ஸ்வாதி..அப்ப கார் இல்லாம போச்சு..என்றான் ப்ரவீன்...
ஹாஹாஹா வெனச் சத்தமாய்ச் சிரித்தாள். மழை வலுத்திருந்தது.
வழியில் ஒரு காஃபி குடிக்க காரை நிறுத்தினான்.
நீங்க காருக்குள்ளேயே உட்காருங்க..காஃபி வாங்கிட்டு வரேன்..மழை பெய்யுது..
அவன் கடைக்குள் போவதற்குள் அவளும் கதவைத்திறந்து வெளியே வந்தாள்..
இருவரும் நனைந்துகொண்டே கடையின் ஓரத்தில் ஒடுங்கிக்கொண்டு காஃபி குடித்தார்கள்...
ஒரு பெரிய சாஃப்ட்வேர் அக்கவுண்டன்ட் ஜெனரலை இப்படி நனையவிட்டுட்டேனே .....என்றான் ப்ரவீன்..
சென்னைல இப்படி நனைய முடியாது ப்ரவீன்...ஹெக்டிக் ஷெட்யூல்..வருஷத்துல மூணு மாசம் ஃபாரின் ட்ரிப்னு..எதுவுமே நினைச்சத பண்ணமுடியாது. ஐ லவ் இட்.. என்றாள்.
நனைந்ததோடு காரில் ஏறினார்கள்.
ஸ்வாதி தங்கியிருக்கும் ஹோட்டலின் வாசலில் கார் வந்து நின்றது.
ப்ரவீன்..வாங்களேன் ரூம் க்கு....பேர் வித் மீ சம் டைம்...இல்லாட்டி கிளம்பனுமா என்றாள்...
ரூமுக்குள் நுழைந்ததும் இருக்கும் ஒரே சேரில் அவனை அமர்வைத்து கட்டிலில் அமர்ந்தாள். லாப்டாப்பில் இருக்கும் மகள் கணவன் புகைப்படங்களைக் காண்பித்தாள்.
இவன் தன் மனைவி மகள் படத்தைக் காண்பித்தான் தன் மொபைலில்..
டிவி பேருக்கு ஓடிக்கொண்டிருந்தது.
பண் பாடிடும் சந்தம். உன் நாவினில் சிந்தும். மேகம் ஒன்று நேரில் வந்து வாழ்த்த வந்ததடி..இது தொடரும் வளரும் என்று ஒரு பாடல் ஓடிக்கொண்டிருந்தது....
மணி எட்டு ஸ்வாதி...நான் கிளம்புறேன். டைம் ஆயிருச்சு என்றான் ப்ரவீன்..
ஆர் யூ ஷ்யர்..என்றாள் ஸ்வாதி..
அறைக்கு வெளியே வந்தான் ப்ரவீன்.
லிஃப்ட் வரை வந்தாள் ஸ்வாதி.
லிஃப்ட் க்குள் போய்விட்டு கதவு தானாய் சாத்தாதபடி கைகளால் தடுத்துக்கொண்டே..
தேங்க்யூ...யூ மேட் மை டே...என்றான் ப்ரவீன்..
எதுக்கு தேங்க்ஸ்லாம் ப்ரவீன்...
என்னைய நம்பி ரூம் வரை கூப்புட்டு இருக்கீங்கள...
ப்ரவீன்..யூ ஆர் அ ஜெம்.....எனக்கு படிக்கிறப்பவே மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிருச்சுனு தெரிஞ்சதும் நீங்க கோயிலுக்கு வரத நிறுத்திக்கிட்டீங்க....அப்பத்தான் உங்க மேல இம்ப்ரஸ் ஆனேன்.. என்றாள் ஸ்வாதி....
கைய எடுத்துட்டா லிஃப்ட் கதவு பூட்டிரும் ஸ்வாதி....என்றான்...
லைஃப் இஸ் கோயிங் ஆன் ல என்றாள்...
ப்ரவீன் கைய எடுத்தான்..லிஃப்ட் கதவு பூட்டிக்கொண்டது...
அஃப்கோர்ஸ்...இட் ஹேஸ் ட்டூ....
கருத்துகள்
கருத்துரையிடுக