விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 1
மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் முதன் முதலாகக் கம்பெனியில் சேரும்பொழுது அவர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள்.
கம்பெனி பயிற்சியின் போது அவர்களது ஒரிஜினல் முகத்தைத் தூக்கியெறிந்துவிட்டு கம்பெனியின் இயல்பை அவர்களது முகத்தில் அவர்கள் அறியாமலேயே ஏற்றிவிடும்.
நான் வேலைக்கு வருவதற்கு முன்பே என் நண்பன் ஒருவன் மெடிக்கல் ரெப்பாக இருந்தான். அவனுக்கென்று ஒரு மேனேஜர் இருந்தார். அவர் அவனுடன் ஒரு நண்பனைப் போல பழகிக்கொண்டிருந்தார். எனக்கு அதைப் பார்த்ததும் எல்லா மேனேஜர்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்று பட்டது.
ஆனால், நான் வேலைக்குச் சேர்ந்ததும் எனக்கு வந்த முதல் மேனஜர் எனக்கு ஐந்தாம் வகுப்பு எடுத்த ஆயுதலட்சுமி டீச்சரின் ஆண் வடிவம். அவ்வளவு கடுமை என்று அப்பொழுது பட்டது. (பிறகு இலகுவான மனதுக்காரர் என்று நான் புரிந்துகொண்டேன்)
ஒரு மருத்துவர் முன் ஒரு ரெப் எப்படி நிற்கவேண்டும் , எப்படி அமர வேண்டும் எப்படி பார்க்கவேண்டும் என்று என் உடல்மொழியை மாற்றினார். அப்படி அவர் சொல்லிக்கொடுத்த பல விசயங்களை இன்னும் நான் செய்துகொண்டிருக்கிறேன். அதில் ஒன்று , எவ்வளவு நெருக்கமான டாக்டராக இருந்தாலும் அவர்களது அறையில் மேஜைக்கு அருகில் அமரும்பொழுது கூட மேஜையில் சாய்ந்தபடிக்கோ அல்லது மேஜையில் கை வைத்தோ அமர்வது கிடையாது.
இன்னொன்று எங்கள் தயாரிப்புகளை மருத்துவர்களிடம் டீடெய்ல் செய்வோம். பிரசன்டேஷன் முடியும்பொழுது ஆர்டர் கேட்கவேண்டும். அந்த மேனேஜர் , எனக்குச் சொல்லிக்கொடுக்கும்பொழுது, 'பழனி, எவ்வளவு பிரஸ்ஸர் இருந்தாலும், அனாவசியமா ப்ளீஸ் போடாத. ப்ளீஸ் கிவ் ஆர்டர் னு போடாத , தன்மானம் விட்டு நம்ம ஆர்டர் கேட்கவேண்டாம் " என்றார்.
தமிழ்நாடு , கேரளா மாநிலங்களுக்கு அவர்தான் பொறுப்பாகி இருந்தார். கம்பெனியில் தென்னிந்தியளவில் விற்பனையில் அவர் கிட்டத்தட்ட ஒரு சிங்கம். கர்நாடகாவையும் அவருக்குக் கொடுக்கக் கம்பெனி திட்டமிட்டுக்கொண்டிருந்தது.
அத்தனை வருட பாரம்பர்யக் கம்பெனி நட்டத்தைச் சந்திப்பதாகவும், மெடிக்கல் ரெப்களை கமிஷன் ஏஜென்டுகளாய் மாற்றுவதாகவும் அறிவித்தது. எவ்வளவு விற்கிறோமோ அதில் பத்து சதவீதம் சம்பளம் என்று ஆக்கியது. சென்னை, கோவை , ஈரோடு , பெங்களூரு போன்ற ஊர்களில் ஒரே மாதத்தில் கூண்டோடு ராஜினாமா செய்தார்கள். அப்பொழுதும் எங்கள் மேனேஜருக்கு அந்தக் கெத்து குறையவில்லை. கம்பெனி மூடப்படப்போகிறது என்ற விசயத்தை வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டார்.
ஒரு மல்டி நேஷனல் கம்பெனி புது டிவிஷனுக்காக எங்கள் கம்பெனியிலிருந்து கொத்தாக ஆளை எடுத்தது. அனைத்து ரெப்களும் அங்கு போனார்கள். நானும் அங்கு இன்டர்வ்யூக்குச் சென்றேன். அந்தக் கம்பெனியின் சேல்ஸ்மேனேஜர் மும்பையில் இந்திய தேசிய அளவில் விற்பனைக்குப் பொறுப்பில் இருந்தார். கையில் சிகரெட்டுடன் தான் அவரது அறையில் என்னை இன்டர்வ்யூ செய்தார்.
ஒரு மாதம் கழித்து எங்கள் மேனேஜரும் அந்த நிறுவனத்தில் தமிழ்நாடு பொறுப்பிற்காகப் பரிந்துரைக்கப்பட்டு, இன்டர்வ்யூ போயிருக்கிறார். ஒரு பாரம்பர்யமான நிறுவனத்தில் தென்னிந்திய சிங்கமாகக் கர்ஜிக்கும் ஒரு சேல்ஸ் லெஜண்ட் இன்னொரு கம்பெனிக்கு வருகிறார் என்பது எல்லா கம்பெனி ரெப்களூக்கும் மேனேஜர்களுக்கும் தீயாய் பரவியது. அந்த நிறுவனத்தில் சேர்ந்துவிட்ட எங்கள் பழைய கம்பெனி நண்பர்கள் அனைவரும் எங்கள் மேனஜர் எப்பொழுது ஜாயின் பண்ணுவார் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவர் சேரவில்லை.
அவரிடம் தொலைபேசியில் அழைத்து , சார் நீங்கள் வருவதாகச் சொன்னார்கள். ஏன் வரவில்லை என்று கேட்டேன். எங்கள் மேனேஜர் இன்டர்வ்யூ வரும்பொழுது இந்தக் கம்பெனி சேல்ஸ்மேனேஜர் மும்பையில் சிகரெட்டுடன் இன்டர்வ்யூ எடுக்க அமர்ந்திருக்கிறார். உள்ளே நுழைந்த எங்கள் மேனேஜர் , அலுவலகத்தில் சிகரெட் பிடிப்பது தவறு, அதுவும் என்னை இன்டர்வ்யூ எடுக்கும்பொழுது நீங்கள் சிகரெட் பிடிப்பது எனக்குப் பிடிக்கவில்லை என்றிருக்கிறார். பிடிக்கவில்லை என்றால், வெளியே செல்லுங்கள் என்று அவர் பதலளித்திருக்கிறார். எங்கள் மேனேஜர் வெளியேறி வந்துவிட்டார். அதனால் சேரவில்லை என்றார்.
அவருக்கு அப்பொழுது கல்யாண வயதில் ஒரு பொண்ணும்,கல்லூரியில் சேர ஒரு மகனும் இருந்தார்கள். இரண்டு மாதத்தில் ஒரு ஊரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபொழுது இன்னொரு கம்பெனியின் ரெப் என்னைப் பார்த்தார். அது இந்தியளவில் பெரிய கம்பெனி தான்.
உங்கள் பழைய மேனேஜர் இப்பொழுது எங்கள் கம்பெனியில் சேர்ந்திருக்கிறார் என்றார். அப்படியா என்றேன். அந்தக் கம்பெனியில் முதலாளியின் மகள் தான் பொறுப்பில் இருந்திருக்கிறார். அந்த சிகரெட் மேட்டர் களத்தில் பல அதிர்வுகளைத் தந்தது. அவர் இன்டர்வ்யூவில் இப்படி நடந்துகொண்டது அவருக்கும் போயிருக்கும் தானே. இவரை வேலையில் சேர்த்து இரண்டு மாதத்தில் விற்பனை பிரதிநிதிகளுக்கான மீட்டிங்க் நடந்திருக்கிறது.
அனைத்து ரெப் களுக்கும் நடுவே , மிஸ்டர்...என்று அவர் பெயரைச் சொல்லி, ஒரு க்ளாஸ் தண்ணி எடுத்துக்கொடுங்க என்று சொல்லியிருக்கிறார், அந்த வட இந்திய முதலாளியின் மகள். சிகரெட்டை எறி இல்லாவிட்டால் கம்பெனி வேண்டாம் என வெளிவந்த ஒரு சிங்கம் இரண்டு மாதத்தில் இன்னொரு கம்பெனியில் வேலைக்குச் சேரவேண்டிய குடும்பச்சூழல்.
நான் கேட்டேன், அவர் தண்ணி எடுத்துக்கொடுத்தாரா....
அவன் ஆமா என்று சிரித்தான். எவ்வளவு ஆட்டம் ஆடுனான் ஃபீல்ட்ல..எங்க கம்பெனில அவர அடக்கி வச்சிருக்கானுக பாத்தியா என்றான்...
விற்பனைப் பிரதிநிதிகளின் வாழ்க்கை என்பது ஒரு பெரிய ராட்டினம் மாதிரி. எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போகிறோமோ அவ்வளவு வேகமாகக் கீழிறங்குவோம். பொருளாதார நிலையிலும் சரி, வெற்றி தோல்வி கொண்டாடும் மன நிலையிலும் சரி....
##விற்பனைப்பிரதிநிதியின் தனிக்குறிப்புகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக