விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 4


கல்லூரி முடித்ததும் என்ன வேலைக்குப்போகலாம் என்றுலாம் யோசிக்கவில்லை, இரண்டு தீர்மானங்கள். ஏதாவது பள்ளிக்கு , என் ஆசையான ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிப்பது, இரண்டாவதாக  எந்த வேலை கிடைத்தாலும் செய்வது. 


மெடிக்கல் ரெப் வேலைக்கு இன்டர்வ்யூ வந்தது.


எந்த பஸ் வருகிறதோ அதில் ஏறிவிடவேண்டும் என்ற மனநிலை தான். சரியான பஸ் சரியான நேரத்தில் தான் ஏறியிருக்கிறோம் என்பதை உணர சில ஆண்டுகள் பிடித்தாலும் கூட , ஆரம்பகட்டம் படு மோசமானவை. 


அப்பா அம்மா வின் முகத்திற்காகப் பெண் கொடுக்கலாம், ஆனால் பையன் தான் ரெப்பு வேல பாக்குறான்...என்று இழுத்துப்பேசியவர் என் கண்களை நேருக்கு நேராய் பார்த்திருந்தார்.  என் மீதும் நான் பார்க்கும் வேலை மீதும் அவர் வைத்திருந்த அந்த அவமரியாதை பார்வையை மறக்கமுடியாது.


முதல் மாதம் திண்டுக்கல் அவுட்ஸ்டேஷன் வொர்க். மதுரையிலிருந்து திண்டுக்கலுக்குப் பஸ் ஏறி, அங்கு வாடகை சைக்கிள் எடுத்து, ஓட்டி வேலை பார்க்கவேண்டும். 


முதல் நாள் பேருந்து நிலையத்திலிருந்து மாலை ஒரு மருத்துவரைப் பார்க்க வியர்த்து விறுவிறுத்துப் போய்க்கொண்டிருக்கிறேன்.


 என்னுடன் முதுகலை ஒன்றாய் படித்த என் வகுப்புத்தோழி ஒரு ஆசிரியையாக , பள்ளி முடித்து எதிரே வந்துகொண்டிருந்தார். 


அப்பா ஆசிரியர், அம்மா ஆசிரியர் நானும் கல்லூரியில் படிக்கும்பொழுதே பார்ட் டைம் ட்யூஷன்லாம் எடுத்துக்கொண்டிருந்தேன். பற்றாக்குறைக்கு என் தோழர்களும் தோழிகளும் என் ஆட்டோக்ராஃபில் நான் செமினார் எடுக்கும் முறையை ஆஹா ஓஹோ என எழுதி என் தலையில் கொம்பைச் சீவி வைத்திருந்தனர். 


அந்த மழுங்கிய கொம்போடு தான் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன். "பழனி, நீ மெடிக்கல் ரெப்பா...வாட்..மேன்..நம்ப முடியல" என்றார் ( இந்தப் பதிவை முகநூலில் அவர் படிக்க நேரிடும். வெள்ளந்தியாய் அன்று அவர் என்னிடம் கேட்ட கேள்வி ஓர் உண்மையான தோழியாய் என் மீதான அதீத அக்கறையுடன் தான் கேட்டார் என்றும் தெரியும்)


அன்றைய இரவை என்னால் மறக்கமுடியாது. வேலைக்குச் சேர்ந்த ஒரே மாதத்தில் சரியானப் பாதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோமா எனக் குழப்பியது அந்த இரவு. 


அடுத்த மாதம் திண்டுக்கலில் வேலைபார்க்கும்பொழுது என் தோழி வரும் சைக்கிள் ஓட்டுவதற்கு ஏதுவான இறக்கமானப் பாதையைத் தவிர்த்து மாற்றுப்பாதையில் பெரிய ஏற்றமாய் இருக்கும் , அதில் பயணித்திருக்கிறேன். 


வெளியூரில் நீங்கள் சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஓட்டியிருக்கிறீர்களா? செக்கை இழுத்து ஓட்டுவது போலிருக்கும். மூன்று மாதங்கள் இப்படி தவிர்த்திருக்கிறேன். 


எங்கள் பகுதியிலேயே ஒருவர் ஃபேன்ஸிஸ்டோர் வைத்திருந்தார். 

அவரது மகள் என் கல்லூரி தான். அவள் தம்பி எனக்கு நான்கு வயது ஜூனியர். 

ஆனால் எனக்குப் பழக்கமில்லை. 

என் தோழி ஒருவருக்கு இந்த இருவருமே நல்ல நண்பர்கள்.

 அவன் கல்லூரி முடித்து அவனுடைய அப்பாவின் கடையில் உட்கார்ந்துவிட்டான். 


ஒரு முறை அந்த ஜூனியர் தம்பி, என் தோழியிடம், " பழனிக்குமார், நாய் மாதிரி சுத்திட்டு வெயிலுல கருப்பா போவார்...பாக்கவே பாவமா இருக்கும், வண்டிய நிப்பாட்டி, எதுவும் டீ சாப்பிடுறியானு கேக்கத்தோணும் " என்று சொல்லி என் தோழியும் அவனும் சிரித்திருக்கிறார்கள். 

இதை அவளே என்னிடம் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தார். 


இரவு வேலை முடிந்து எங்கள் ஏரியாவில் போகும்பொழுது அவனும் அவனது நண்பனும் சேர்ந்து புகைபிடித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களது பார்வை இருக்கிறதே.....!


வேலைக்குச் சேர்ந்துட்டடா, நல்லா சேர்த்துவை என அப்பா எனக்குச் சேமிப்பைப் பற்றி அவ்வப்போது வகுப்பு எடுப்பார். 

PPF ல் பணம் போடுடா என்று சொல்லியிருந்தார். 


விசாரித்தபோது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில அந்தத் திட்டம் அப்போது இருந்தது என்று கேள்விபட்டு, ஒரு மதிய வெயிலில் வேலை முடித்து மெடிக்கல் ரெப் கிட் பேக் குடன் உள்ளே நுழைந்துவிட்டேன். 


ஒரு ஆபிஷரிடம் ppf திட்டத்தைப் பற்றி விசாரிக்கவந்ததாகக் கூறினேன். என்ன வேல பாக்குறீங்க என்றார். சொன்னேன்...


'மெடிக்கல் ரெப்பா...என்று நிமிர்ந்து பார்த்துவிட்டு, ppf கட்டலாம் பணம் இருக்குமா, என்றார். அடிக்கடி கடன் வாங்குவீங்களே, இத கட்டிருவீங்களா என்றார். 


எவ்வளவு சார் கட்டனும் என்றேன். 


முதல்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க, அதுக்கே ஐநூறு ரூபா கட்டனும், டாக்குமெண்ட்லாம் எடுத்துட்டு வாங்க அப்புறம் ppf கட்டலாம் என்றவர், நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை, குனிந்து அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். 


இது எல்லாம் சிறுகச் சிறுக நான் சேர்த்த வெறி. நம்மைப் பார்ப்பவர்கள் நம் மீதும் நாம் பார்க்கும் வேலை மீதும் அவர்களின் சொந்த அபிமானங்களை ஏற்றிக்கொண்டு எதிர்வினை புரிகிறார்கள். அவர்களது அபிமானங்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்லமுடியாது தானே. 


நேருக்கு நேராய் ஒரு மனிதனை ஒரு சக மனிதனாய் நினைக்கமுடியாமல் ஏளனம் செய்யும்படியாய் உங்களால் முடிகிறதென்றால் மாறவேண்டியது நீங்கள் தான். 


இத்தனை ஏளனங்களுக்கும் வலிகளுக்கும் நடுவே என்னை நானே தக்கவைக்க எனக்குத் தேவைப்பட்டது வெகு சில விசயங்கள் தான். 


திருச்செந்தூர் கோயிலின் வெளிப்பிரகாரத்திற்கு வெளியே கடலுக்குப் போகும் வழியில் நல்ல வெயிலில் மதிய வேளையில் சிலர் பக்திகாரணமாக செருப்பு இல்லாமல் அந்தப்பக்கம் வந்துவிடுவர். ஒதுங்க ஒரு இடம் கிடைத்துவிடாதா என்றும் ஒரு காகிதம் கிடைத்தால் கூட அதில் நின்றுவிடமுடியாதா என்றும் ஓடுவர். 


நல்ல பசிக்குக் குடிக்க தண்ணீராவது கிடைக்குமா என்று டீக்கடைகளில் யாசகக்காரர்கள் கேட்டு பார்த்ததுண்டா, அவர்களின் தொண்டைக்குழியில் இறங்கும் முதல் மிடறு கண்களில் ஒளிரும். அப்படித்தான் சில விசயங்கள் நிகழ்ந்தன.


அண்ணாநகர் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் சம்பளத்திற்காக என் முதல் வங்கி கணக்கு  ஆரம்பித்து, ஒவ்வொரு செலவிற்கும் செலான் கட்டி பணம் எடுப்பேன். ஏ டி எம் லாம் அப்பொழுது இல்லை.


 ராமசாமி என்று ஓர் அலுவலர் தான் பாஸ்புக்கை என்ட் ரி போட்டு தருவார். 


ஒரு நாள் வேலைக்குப் போக பெட் ரோல் போட கையில் காசு இல்லை.

 நூறு ரூபாய் செலான் கட்டி தேவைக்கு எடுத்திருக்கிறேன். 

நினைவு தெரிந்து இதற்கு மேல் எடுக்கமுடியாது என்று மினிமம் பேலன்ஸ் நூறு ரூபாயை விட்டுவிட்டு இருனூற்று ஐம்பது ரூபாய் எடுத்திருக்கிறேன். 


என் ட்ரிகளைப் பார்த்துவிட்டு என்ன ஜாப் தம்பி என்று ராமசாமி கேட்டார். 


மெடிக்கல் ரெப் சார் என்றேன்..


சூப்பர் தம்பி, நல்ல ஜாப் என்று புன்னகைத்தே தான் பாஸ்புக்கைத் தந்திருக்கிறார்.


ஒருமுறை உச்சபட்சமாய் கணக்கில் 158 ரூபாய் தான் மீதி இருந்தது. அதை என் ட்ரி போட்டுத்தந்தவர், தம்பி ஒரு 42 ரூபாய் கட்டி நூறு ரூபாயா நீங்க எடுத்துக்கலாம், சில்லறையா இருக்கே , எப்படி எடுக்கலாம்னு யோசிக்காதீங்க என்று எனக்கு அவர் தான் சொல்லிக்கொடுத்தார். 


நிலக்கோட்டையில் ஊருக்கு வெளியே டாக்டர் ராஜாமணியம்மாளைப் பார்த்துவிட்டு வந்த போது இரவு 10. 


அந்த ஸ்டாப்பில் நின்ற மதுரை செல்லும் வேல்முருகன் பஸ் கிளம்பிவிட்டது. நிற்கும்பொழுதே ஓட ஆரம்பித்திருந்தேன். ஆனாலும் கண்டெக்டர் கவனிக்காமல் விசிலடித்து கிளப்பிவிட்டிருந்தார். 

கடைசி சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் பார்த்துச் சொல்லி,வண்டியை மெதுவாக்க,  ஓடும் வண்டியில் நான் ஏறும்போது, " ஏம்பா, மருந்துக் கம்பெனிகாரகப்பா, எங்கெங்க அலைஞ்சுட்டு வராகளோ, நிறுத்தி ஏத்துனாத்தான் என்னப்பா...." என்று கண்டெக்டரிடம் கேட்டார். 


எவ்வளவு பெரிய கோடைக்கும் இது போன்ற சிறு மழை தானே தேவையாய் இருக்கிறது மீண்டும் மீண்டும் துளிர்ப்பதற்கு...


##விற்பனைப்பிரதிநிதியின்தனிக்குறிப்புகள் 4


##medicalrepnotes

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....