கொரோனா தடுப்பூசியும் மேய்தலும்

 கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சில உரையாடல்களும் கேள்விகளும் நம்பிக்கைகளும் உலா வருகின்றன. அவற்றில் பதிவர் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பிரித்து மேய ஆசைப்படுகிறார்.


மேய்தல் ஒன்று:

கொரோனா தடுப்பூசி உண்மையில் வேலை செய்யுமா, இந்தியாவில் தடுப்பூசி ஒரு விற்பனை தந்திரம் தானே.

பதில்:
கடவுள் இல்லைனு சொல்லல. இருந்தா நல்லாருக்கும்னு தான சொல்றோம் என்ற ரீதியில் தான் பதில் சொல்லமுடியும். கடவுளை நம்பினால் ஆத்திகர். நம்பவில்லை என்றால் நாத்திகர். உங்கள் அறிவு சொல்வதைக் கேளுங்கள் அவ்வளவே.

மேய்தல் இரண்டு:

தடுப்பூசி ஒரு டோஸ் போட்டுக்கொண்டுவிட்டால் போதும். மாஸ்க் தேவையில்லை. சமூக இடைவெளி தேவையில்லை. கை கழுவ தேவையில்லை அப்படித்தானே.

பதில்:

தடுப்பூசி முதல் டோஸ் போட்டு அடுத்த டோஸ் (கோவிஷீல்ட்) க்கு 45 நாட்கள் கழித்துத்தான் தடுப்பூசி வேலை செய்து , ஆண்ட்டிபாடிகள் உருவாக வாய்ப்பு இருக்கிறதாம். 28 நாட்கள் என்று சொன்னவர்கள் 45 என்று மாற்றியிருக்கிறார்கள். உருவாகும் வீதத்தின் அடிப்படையில் தான் சொல்கிறார்கள். எப்படிப்பார்த்தாலும் 28 நாட்கள் கழித்துத்தான் ஆண்ட்டிபாடி உருவாகும். அப்படி உருவாகும் நோய் எதிர்ப்புத்திறன், உள்ளே வரும் கொரோனா கிருமியை அடித்துக்கொல்ல வலிமை பெற்றவனாய் இருப்பான் என்று நினைக்கமுடியாது. அவன் கிட்டத்தட்ட பாதியளவு சார்ஜ் ஏறிய எந்திரன் படத்து சிட்டி ரோபோ போலத்தான்.
இரண்டாவது டோஸ் போட்டதும் அதற்குப்பின் ஆண்ட்டிபாடி உருவாகும் நாட்களைக் கணக்கிட்டாலும் கிட்டத்தட்ட 90 நாட்களுக்குப்பின் தான் தடுப்பூசியின் பலன் கிடைக்கத்துவங்கும்.
அதற்குள் முதல் டோஸ் போட்ட மறுநாளே வாடா கொரோனா மாப்பிள்ளை எப்படி இருக்க என்று கோயில் மாடுகள் திரிவது போல் மாஸ்க் போடாமல் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கொரோனாவைக் கட்டிப்பிடித்து திரிவேன் என்று அவரவர் மாமியார் மீது சத்தியம் செய்து வந்தால், எவனாலும் காப்பாற்றமுடியாது.

மேய்தல் மூன்று:

தடுப்பூசி போட்டும் இதை எல்லாம் கடைபிடிக்கவேண்டும் என்றால் எதற்காகத் தடுப்பூசி போடவேண்டும்.?

பதில்:

கொரோனா வைரஸ் என்பது இப்பொழுது பல ரூபத்தில் வருகிறது. பழைய பேய் படங்களில் ஜெயமோகினி பல உருவங்களில் வருவது போல், நீயா படத்தில் பாம்பு பல வேடங்களில் வருவது போல், கொரோனாவும் பல மரபணுக்களை மாற்றிக்கொண்டு வரும். முதல் அலையில் சிக்கிய கொரோனாவை அடித்து பிடித்து அதையோ ( கோவேக்ஸின்) அல்லது அந்தக் குடும்ப உறவை( கோவிஷீல்ட்)யோ பிரதி எடுத்து தடுப்பூசியாய் செய்வதன் மூலம், இதே மரபணு கொண்ட ஒரு கிருமி உங்களைத் தாக்காமல் இருக்கலாம். அல்லது தாக்கும்பொழுது நீங்கள் தாக்குப்பிடிக்கலாம்.

சிட்டி ரோபோவை சார்ஜ் செய்து வைத்திருப்பீர்கள். ஆனால் எதிரிக்கு நார்மல் சிப்பை புடுங்கிவிட்டு ரெட் சிப் போட்டுவிடும் வில்லனைப்போல் கொரோனா தன் சிப் கார்டை மாற்றிவிடும்.

இப்பொழுது இந்தியாவில் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களுக்கு ஐரோப்பாவில் மரபணு மாற்றிக்கொண்ட ஒரு கொரோனா வைரஸ் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவருக்கு ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தடுப்பூசி வேலை செய்யுமா என்பது எந்த அறிவியலாளர்க்கும் இன்னும் தெரியாது. எல்லாம் சோதனையில் தான் இருக்கிறது.

உங்களுக்குப் புரியும்படியாகச் சொல்லவேண்டும் என்றால், நீங்கள் ஓடோமாஸ் தடவிக்கொண்டு , தெரு நாயிடம் போய் கடித்துப்பார் என்று கையை நீட்டக்கூடாது . மீறினால் அது கையை மட்டும் தான் லாவும் என்றும் நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது அல்லவா. அது போல் தான் நீங்கள் போட்ட தடுப்பூசி.
எந்த வைரஸிடமிருந்து படி எடுத்து உங்கள் உடம்பில் செலுத்தப்பட்டதோ, அதே படி வந்தால் சண்டை போடும். ஓடோமாஸ் கொசுக்களுக்கு மட்டும் தான் என்று நம்பவைக்கப்படுகிறோம். போய் மனைவியிடம் வம்பிழுத்து புடணியில் அடி வாங்குவதை அது தடுக்காது.

மேய்தல் நான்கு:

தடுப்பூசி யில் அரசு காசு பார்க்கிறது. அந்த ஊழல் பற்றி ஏதாவது?

பதில்:

உங்கள் தலையில் முடியே இல்லை. அடுத்தவர் தலை ஹைகோர்ட்டில் பேன் இருப்பதற்காக நீங்கள் அதிகம் சிந்திக்கவேண்டாம். ஒரு சின்ன ஸ்பூனிற்கு ஆசைப்பட்டு மைதா அதிகம் கலந்த க்ளோப்ஜாமுன் பாக்கெட் வாங்கும் அறிவார்ந்த சமூகத்தில் உங்களுக்கு தடுப்பூசி பலன் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் போடவும். இல்லாவிடில் விழிப்புணர்வு பெற்றுக்கொள்ளவும், அதுவும் இல்லாவிடில் அறிவியலை நிரூபிக்கவும். அவ்வளவு தான். பிடித்தால் போடு இல்லாவிடில் போய்வா தான் தீர்வு.

மேய்தல் ஐந்து:

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இரத்தம் கட்டுகிறதாம், வாய் கோணுகிறதாம், முடி நட்டுக்கிறதாம், சாகிறார்களாம் இது பற்றி...

பதில்:

கொரோனா கிருமி உடலுக்குள் வந்து தாக்குதலுக்கு உள்ளான கொரோனா நோயாளிகளே தேறி வருகிறார்கள். உலகத்தில் இந்தியாய்வில் இறப்புவிகிதம் குறைவு. நேரடியாக கொரோனா தாக்கியே தேறும் பொழுது, இதில் தடுப்பூசியாகி உள் நுழைந்த நல்ல சிப் கார்ட் பொருத்தப்பட்ட வெள்ளந்தி கிருமி என்னென்ன செய்யும். அப்படிப்பார்த்தால் எந்தத் தடுப்பூசியும் நாம் போடமுடியாது.
எந்த ஊசி போட்டாலும் வலிக்கத்தான் செய்யும். தடுப்பூசி என்பது ஸ்பெஷல். சிலருக்கு வலிக்கலாம்.
நான் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு வேலை நிமித்தமாக 175 கிமீ பயணித்தேன். இரவு அசதியாக இருந்தது. அசதிக்குக் காரணம் 175 கிமீ பயணமா, ஊசியா என்றால் தெரியாது. எல்லா தடுப்பூசி மையங்களிலும் ஒரு பேராசிட்டமால் மாத்திரை தருகிறார்கள் அல்லது பரிந்துரைக்கிறார்கள். தடுப்பூசி போட்டு வலியோ காய்ச்சலோ வரலாம். வராமலும் இருக்கலாம். வந்தால் போட்டுக்கொள்ளவும். ஒரு டோஸ் போதும் தான்.

இங்கு நிறைய பேர் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படுவதற்காக சிப் பொருத்தப்படுவது போல் தடுப்பூசியை நினைத்துக்கொள்கிறார்கள். நீங்கள் நினைக்கும் அளவிற்கு இல்லாமல் சாதாரண திரவம் தான் அது. சர்க்கரை இருதய நோய் இருப்பவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனிக்கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் தங்களது தனி மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கலாம்.

குறிப்பு: அவரவர்களின் தனி மருத்துவர்களின் ஆலோசனை. முகநூலில் ( இந்தப் பதிவு முதற்கொண்டு) எழுதுபவர்களின் அனுபவ , ஆருட , எழுத்து பராக்கிரம புலமையானவர்களின் கருத்தை அப்படியே ஆமோதித்து போய் முட்டிக்கக்கூடாது. ஏனெனில் இங்கு தோனி க்கே லீடர்சிப் க்ளாஸ் எடுப்பவர்களும், வார்னே க்கே ஸ்பின் சொல்லித்தரும் பவுன்சர்களும், மோடிக்கே வடை சுட பயிற்சி அளிக்கும் ஆயாக்களும் மாறுவேடங்களில் அலைவார்கள். அவரவர் மருத்துவர்களே அவரவர்களின் உடல்நிலை பற்றி ஓரளவு தெரிந்தவர்களாய் இருப்பார்கள்.

மேய்தல் கட்டக் கடைசி:

கொரோனா தடுப்பூசி என்னதான் செய்யும்?

பொத்தம்பொதுவான கடைசி பதில்:

உங்கள் உடம்புக்குள் நுழைந்த நல்ல குணங்கள் படைக்கப்பட்ட கிருமி, அதே குடும்பத்தைச் சேர்ந்த கிருமி வந்தால் சண்டை போடுவான். உங்களைக் காப்பான். ஆனால் உங்கள் உடம்பில் அவன் இருக்க அனுமதிப்பான். விளைவு, அவனால் உங்களுக்குப் பாதிப்பு இல்லை. உங்களை அறியாமலேயே நீங்கள் carrier ஆவிர்கள். உங்கள் மூலம் வயதானவர்கள், எதிர்ப்பு சக்தி குறைந்த நோயாளிகள், குழந்தைகளுக்கு உங்கள் மூலம் போகலாம். ஆதலால் சமூக இடைவெளியும், மாஸ்க்கும், சுய சுத்தமும் அத்தியாவசியம். கள்ளன் பெருசா காப்பான் பெருசா என்பார்கள் கிராமத்தில். அது தான் நிலைமை.

தடுப்பூசி ஒரு கேடயம் . கத்தியோடு வருபவனிடமிருந்து காப்பாற்றும். துப்பாக்கியோடு வருபவனுக்கு சிறு மறைவைத் தரும். அவ்வளவே.

பஞ்சாயத்து முடிஞ்சது. எல்லாம் போய் மாஸ்க்க போடு....


26/03/21
20.00

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....