##don'tjail-EleRivaldo

ஒருவர் ஒரு குற்றம் புரிகிறார் என்றால் என்ன செய்கிறோம்.

சிறையில் அடைக்கிறோம்.

எதற்காகச் சிறையில் அடைக்கிறோம்.

வரம்பு மீறியதற்காக ஒரு தண்டனை என்று அதைச் செய்கிறோம்.

சிறைப்படுத்துவது ஒரு தண்டனை என்ற புரிதல் இருக்கும் நாடு தான் நம்முடையது.

ஆனால் யார் யாருடைய இடத்தில் வரம்பு மீறுவது என்பதில் அறம் இருக்கிறது தானே.

நேற்று 18/3/21 'தி இந்து' இணைய தளத்தில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது.

அதில் 'ரிவால்டோ' என்று ஒரு யானையைப் பற்றி கூறியிருக்கிறார்கள்.

கொரோனா இரண்டாம் அலை மற்றும் தேர்தல் எனத் தற்சமயப் பிரச்சினைகளில் மக்கள் மும்மரமாய் இருக்கும்பொழுது நெடுநாள் பிரச்சினைகளைப் பேசுவது கவனத்தில் வராது தான். எத்தனை பேருக்கு 'ரிவால்டோ' பற்றி தெரியும் என்று தெரியாது.

'ரிவால்டோ' ஒன்றும் தெரியாத வெள்ளந்தி யானை.

அவன் தும்பிக்கையில் இருக்கும் காயத்தோடு அவ்வப்போது முதுமலை சரணாலயத்தின் காட்டுப்பகுதியிலிருந்து  அருகிலிருக்கும் ஊருக்குள் வந்துபோகுபவன்.  அவனுக்கு 'ரிவால்டோ' என்ற பெயரை அவ்வூர் மக்களே வைத்திருக்கின்றனராம்.

அவனை யானைகளின் தெப்பக்காடு முகாமிற்கு கும்கி வைத்து மிரட்டி அடிபணியவைக்காமல், மயக்க ஊசி போட்டு தொந்தரவு செய்யாமல் அவன் வழியிலேயே முதுமலை வாழைத்தோட்டம் என்ற பகுதியிலிருந்து தெப்பக்காடு வரை நடத்தி வர வனத்துறை முயற்சி செய்திருக்கிறது

. இரண்டு முழு நாட்கள் பழங்களைத் தந்து 20 கிமீ க்கு மேல் நடத்திவர இரண்டாம்நாள் முடிவில் ஒரு காட்டு யானையைப் பார்த்து 'ரிவால்டோ' பயந்து ஓடிவிட்டான்.

இது முன் கதை.

இவனை முன்மாதிரியாக வைத்து மற்ற யானைகளை இப்படி ஊருக்குள் வரவிடாமல் செய்ய அரசாங்கத்திற்கு ஒரு யோசனையைத் தந்திருக்கிறார்கள்.

அந்த யானை இருக்கும் பகுதியைச் சுற்றி kraal அமைப்பது. அதாவது கற்களை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதியை யானைக்குச் சிறையாக மாற்றிவிடுவது.

மனிதன் எவ்வளவு மகத்தான சல்லிப்பயல். யானையின் பகுதிக்குள் மனிதன் ஊடுருவி விட்டு, அதன் பாதையில் ரிசார்ட்டுகளைக் கட்டிவிட்டு , இவன் பவுசுக்கும் சொகுசுக்கும் சுற்றி வர, யானையைச் சிறைப்படுத்துதல் என்பது எவ்வளவு வன்மமான எண்ணம்.
முக்கால்வாசி வேலை முடிந்துவிட்டதாக 'தி இந்து' வில் வந்த கட்டுரை சொல்கிறது.

யானைகளின் பிரம்மிப்புகளில் ஒன்று, யானை தன் எடையில் 5 சதவீதம் உணவாகச் சாப்பிடுமாம். கிட்டத்தட்ட 200-250 கிலோ. காட்டு யானையின் அந்த உணவில் கிட்டத்தட்ட 10 சதவீதம் விதைகள் தான் இருக்குமாம். அதாவது கிட்டத்தட்ட 25 கிலோ விதைகள். அவற்றில் மிகமிஞ்சிப் பார்த்தாலும் 10 கிலோ விதைகள் மண்ணில் ஊன்றிவிடுமாம். சராசரியா ஒரு யானை 300லிருந்து 500 விதைகளை விதைக்கிறதாம். 500 விதைகளில் ஒரு 300 முளைக்காதா...வேண்டாம், 200...அதுவும் வேண்டாம் ஒரு 100 விதைகள் முளைக்காதா..இது எல்லாம் ஒரு நாளில் நடப்பது. எப்படிப்பார்த்தாலும் ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நட்டுவைத்துச் செல்கிறது.

ஒரு யானை தன்னால் முடிந்ததை இந்தப் பாழாய்ப்போகும் மனிதனுக்கு ஒரு காட்டை கட்டுவிக்கிறது.

ஒரு யானை மெல்ல மெல்ல நகர்ந்து இதைச் செய்ய, ஒரு காடு வளர்கிறது.

யானை எப்பொழுதும் தன் அபார ஞாபகசக்தியால் தான் நடந்து வந்த பாதையில் மீண்டும் வரும்பொழுது, அங்கு ரிசார்ட்டுகளும், மனிதர்களும் உலா வருகையில் அதற்குக் கோபம் வருகிறது. அதன் கோபம் நியாயம் தானே. ஒரு சல்லிப்பயலின் அரசியல் பிரச்சார ஊர்வலத்தில் இன்னொரு சல்லிப்பயலின் பிரச்சாரம் நடந்தால் எல்லாச் சல்லிப்பயலுக்கும் கோபம் வருகிறது நியாயம் என்றால் ஒரு வெள்ளந்தி விலங்கிற்கும் அது நியாயம் தானே.

இப்படி யானைகளைச் சிறைப்படுத்தி அதன் உளவியலை மாற்றி அதன் வாழ்வாதாரங்களை மனிதனுக்குப் பட்டாபோட்டு இயற்கையையும் வன விலங்குகளையும் அழிக்க நினைப்பது மனிதனின் வன்மம் தானே.

இதற்கு அரசு தரப்பில் கூறும் விளக்கமாய் கட்டுரையில் கூறியிருப்பது தான் அதிகபட்ச வன்மத்தின் வெளிப்பாடு. கடந்த முறை மசினக்குடியில் எரியும் டயரைப் போட்டு எப்படி ஒரு யானையைக் கொன்றார்களோ அப்படி ஒரு சம்பவம் நடக்கவிடாதபடி, யானைகளைக் காப்பாற்றும் நடவடிக்கை இப்படி kraal அமைப்பது என்று சொல்லியிருக்கிறார்கள்.
காட்டை காடாக விட்டுவிட்டாலே போதும் அவை வளர்ந்துவிடும். மனிதன் என்ற சல்லிப்பயல் ஒரு விசயத்தில் கரிசனப்படுகிறான் என்றால் அவனது சுய லாபத்திற்காகத்தான் என்பது அப்பட்டமாய் தெரிகிறது. இன்று ரிவால்டோ சிறைப்படுத்துவதன் மூலம், ஒரு காடு வளர்ப்பை சிறைபடுத்துகிறோம். மர வளர்ப்பை சிறைப்படுத்துகிறோம்.

இயற்கை வளங்கள் தான் ஒரு நாட்டின் சொத்து என்று சிறு குழந்தைகளுக்குக் கட்டுரை எழுதிக்கொடுத்து ஆசிரியரிடம் பாராட்டு வாங்குவதோடு நின்றுவிடாமல் இயற்கை வளங்களைக் காக்க நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சமூகவலைதளங்களின் காலத்தில் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
எதற்கும் குழுவாய் இணையவேண்டியதன் அவசியம் இல்லை. அவரவர் அவரவர் இருக்குமிடத்திலும் சந்திப்பவர்களிடமும் நம் இயற்கையைப் பேண வேண்டியதன் அவசியத்தைப் பகிரலாம். இதோ இந்த 'ரிவால்டோ ' வைச் சிறைப்படுத்தாதே என வனவிலங்கு ஆர்வலர்கள் ##don'tjail-EleRivaldo என்ற ##ஐ ஆரம்பித்துவைத்திருக்கின்றனர்.

உண்மையில் காட்டை வளர்க்க விரும்புபவன் விலங்குகளைச் சிறைப்படுத்தமாட்டான்.

அதுவும் 'ரிவால்டோ' வை முன்மாதிரியாக்கி காட்டின் வளர்ப்பைச் சிறைப்படுத்தி மற்ற காட்டை ரிசார்ட்டுகளுக்குத் திறந்துவிடுவது தான் கார்ப்பரேட் கைகூலிகளான அரசுகளின் சதியாக இருக்கும்.

எப்படி உங்கள் வீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உங்கள் வீட்டின் பகுதிக்குள் உங்களை முடக்கி, இங்கு செல்லாதே அங்கு செல்லாதே என்று சொல்கிறோமோ அப்படித்தான் 'ரிவால்டோ'வின் பகுதிக்குள் நாம் போய்க்கொண்டு அதைச் சிறைப்படுத்துவது.

அரசிற்கு ஒரு கோரிக்கை. காட்டையும் காட்டுயிரிகளையும் பேண நாம் தாம் நம்மைச் சிறைப்படுத்தவேண்டுமே தவிர , வெள்ளந்தி காட்டுயிரிகளை அல்ல.
'ரிவால்டோ' வைச் சிறைப்படுத்தாதீர் . மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று அவற்றிற்குப் புரியவைக்காதீர்.

pc: Rivaldo by Vikatan
இந்து கட்டுரைக்கான லிங்க் கமெண்ட்டில்.

##dontjailEleRivaldo

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8