இதோ உன் தேநீர்கோப்பை

ஒரு பயணத்தின்
நடுவே 
நீயென்னை
அழைத்துச்சென்ற
தேநீர் விடுதியைத்
தற்செயலாகப்
பார்க்க நேர்ந்தது. 

நீயும் நானும்
நெடுநேரம்
அமர்ந்து 
பருகிய தருணங்களின்
எச்சம் அது.
ஒரு மிடறுக்குப் 
பின்
நெடுஞ்சாலையைக் 
கவனித்தபடி
ஒரு மழை வந்தால்
எப்படி இருக்குமென்றாய்...
எனை நனைவிக்காத
ஒரு மழைக்காக
நான் அத்தனை
பிரயத்னப்பட்டதில்லை.

ஒவ்வொரு மழைப்பயணத்திலும்
நீயற்றதைச்
சொட்டிக்கொள்ளும்
ஞாபக மின்னல்களை
இப்படித்தான்
எழுதிவைத்திருக்கிறேன்

நீயும் நானும்
அமர்ந்த 
மேஜை
இப்பொழுதும்
அப்படியே
தானிருக்கிறது.

பழுப்பேறிய 
ஞாபக நரம்புகளில்
அடைபட்டுக்கிடக்கும்
சொற்களிலொன்று 
தானாய் விழுந்ததை
நீ
இப்பொழுதும்
கவனிக்கவில்லை.

யாரோ ஒருவர்
தேநீர் வேண்டுமா
எனக் கேட்கிறார்.
எதிரே அமர்ந்திருக்கும்
கடந்த காலத்தின்
நீட்சியாய்
உன் ஞாபகங்களைப்
பார்க்கிறேன். 

கடந்தகாலத்தில்
அமர்ந்துகொண்டு
எனக்கானத் தேநீரைப்
பரிந்துரைக்கிறாய்.
அப்பொழுதும் கூட
அந்தச்சொல்
உனக்கானதெனக்
கூற இயலவில்லை.

தேநீர் வரும்வரை
ஏதாவது பேசலாம்தான்
பெருத்த மௌனமென்பது
கனத்த மொழியை
அடைகாப்பதென்பதைப்
பயிற்றுவித்த
உன்மத்த நாட்களிலிருந்து
மெல்லமாய்
சொற்களைத் 
தேர்ந்தெடுக்கிறேன்.

உனக்குமெனக்கும்
இடையே 
பரிமாறப்பட்ட
தேநீர்கோப்பைகளிலிருந்து
மிடறப்பட்ட
துளிகளோடு
வார்த்தைகளுமிருந்தன
என்பதை
இதோ
தனித்துவிடப்பட்ட
உனக்கான காலியிருக்கை
ஞாபகப்படுத்துகிறது.

நீ
புன்னகைக்கிறாய்.
கருப்புவெள்ளை காலத்தின்
நிறப்பிரிகை அது. 
நீயிங்கே
இருப்பதற்கான
எந்தச் சாத்தியமும்
இல்லை தான்.
இருந்தபோதும்
இதோ என்
வார்த்தை.
இதோ உன்
தேநீர்கோப்பை. 

17/4/21
23.45

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....