கோவிட் இரண்டாம் அலையும் மனிதர்களும்

கோவிட் இரண்டாம் அலையும் மனிதர்களும்:
பழனிக்குமார்.மதுரை.

கொரோனா முதல் அலையின் போது இவ்வளவு தாக்கம் இல்லை என்பது எல்லாரும் அறிந்ததே.

முதல் அலையில் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் அறுபது வயதைக் கடந்தவர்கள் அல்லது சர்க்கரை மற்றும் இருதய போன்ற பாதிப்பு இருந்தவர்களை வேகமாகத் தாக்கியது. ஆனால் இரண்டாம் அலையில் வயது வித்தியாசம் இன்றி தாக்கிக்கொண்டிருக்கிறது.

இதை மக்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

போன முறை பரவிய வைரஸின் ந்யூக்ளியஸில் மாற்றம் ஏற்பட்டு வந்திருக்கும் புதிய வைரஸின் படியில் தாக்குதல் தீவிரமாக இருக்கிறது. அறிகுறிகளும் வித்தியாசமாக வருகின்றன.

கொரோனா வைரஸ் சுவாசப்பாதையில் தன்னைத் தகவமைத்துக்கொள்வதால் தான் மூச்சுப்பிரச்சினைகள் வருகின்றன. ஆனால் இது மட்டுமே அறிகுறியாய் இப்பொழுது இல்லை.

வயிற்றாழை (டயேரியா) , காய்ச்சல், முதுகுவலி ( பேக் பெயின்) கை கால்கள் வலி, உடல் அசதி, இருமல், சளி, பிறகு கடந்த வருடம் அனைவருக்கும் பரிச்சயமான அறிகுறிகளான மூச்சுவிட சிரமம் இருத்தல், வாசம் அறியாமல் இருத்தல், சுவை அறியாமல இருத்தல் இன்ன பிற. இவை தான் அறிகுறிகள். இவற்றில் எதுவுமே இல்லாமலும் இருக்கலாம்.



ஒருவருக்கு மேற்சொன்ன அறிகுறிகள் தவிர வேறு அறிகுறிகளும் தென்படலாம். இதை மெடிக்கல் டெர்மினாலஜியில் INDIVIDUALS என்று பொத்தம் பொதுவாய் சொல்லிவிடுவார்கள்.


அதே போல் கொரோனா தொற்று உள்ள ஒருவருக்கு மேற்சொன்ன எல்லா அறிகுறிகளும் தென்படும் என்று அர்த்தம் அல்ல.
இவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகளோ தென்படலாம்.
அல்லது ஏற்கனவே சொன்னது போல் எந்த அறிகுறியும் இல்லாமல் கூட தொற்று ஏற்பட்டிருக்கலாம்.



இப்பொழுதிருக்கும் நிலையில் கேள்விப்பட்டவரை கடந்த ஒரு வாரத்தில் எட்டு நண்பர்கள் அழைத்து கோவிட் க்கு அறிகுறிகள் என்னென்ன என்று கேட்டார்கள். சிலர் அறிகுறிகளைச் சொல்லி என்னவா இருக்கும் என்று கேட்டார்கள். எட்டு நண்பர்களில் ஆறு நண்பர்களுக்கு டயேரியா என்பது பொதுவான அறிகுறியாய் இருந்தது.

ஆறு நண்பர்களில் மூன்று நண்பர்களுக்கு கொரோனா பாசிட்டிவாக மாறினார்கள்.

மீதி மூன்று நண்பர்களில் ஸ்வாப் நெகட்டிவ் என்றாலும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.


சுருக்கமாக, இப்பொழுது உள்ள கொரோனாவின் இரண்டாம் அலையில் ஸ்வாப் நெகட்டிவ் வந்தாலும் தொற்று இருப்பதை சிடி ஸ்கேனிங்க் முறையில் மருத்துவர்கள் உறுதி செய்கிறார்கள்.



மக்கள் தங்களுக்குத் திடீரென வரும் முதுகுவலி அல்லது உடல் அசதிக்குத் தன்னுடைய வேலை யைக் காரணம் காட்டி அலட்சியமாக இருந்துவிடுகிறார்கள். அலட்சியமாக இருந்தாலும் பரவாயில்லை, தெருக்களில் சுற்றி அடுத்தவர்களுக்கும் பரப்புகிறார்கள்.



முதல் அலையில் இவ்வளவு தீவிரம் இல்லாததற்கு முக்கிய காரணம் லாக்டவுன் சீக்கிரமாக அறிவிக்கப்பட்டு, நாம் அனைவரும் தனித்தனியே இருந்தோம். இப்பொழுது அப்படி இல்லை. அது தான் சிக்கல்.


ஒரு நண்பன் அழைத்தான், முதல் நாள் இறால் சாப்பிட்டேன் அதனால் இரவு அலர்ஜிடா என்றான். என்ன அலர்ஜி என்றால் மூச்சுவிடுவதில் சிரமப்பட்டதாகச் சொன்னான். கோவிட் பாசிட்ட்வ் என்று நான்காவது நாள் உறுதிசெய்யப்பட்டது. அதுவரை அவன் வேலைக்குச் சென்றிருக்கிறான்.



காலையில் சூப் சாப்பிட்டேன், அதனால் டயரியா என்று மக்கள் தங்களைத்தாங்களே சமாதானப்படுத்திக்கொள்கிறார்கள். இது எப்பொழுதும் நடப்பது தான் .



கடலை மாவை பக்கத்துக் கடையில் வாங்கி சாம்பார் வைத்தால், பழைய மாவு னு நினைக்கிறேன், அதான் வயித்தாழ போகுது னு ஒரு பாட்டி சொல்லியிருக்கிறார். வெயிலுக்கு சூடு அதிகமாகி இப்படி போகும் என்றும் சொல்வார்கள், மாம்பழ சீசன், ரெண்டு மாம்பழம் சாப்பிட்டேன். அதான் இப்படி என்றும் சொல்வார்கள்.


ஆதலால், மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு என்னவென்றால், இப்பொழுது டெங்குவும் பரவிக்கொண்டிருக்கிறது. சாதாரண வைரஸ் காய்ச்சலும் வந்துகொண்டிருக்கிறது. உங்களுக்கு வந்திருப்பது ஏற்கனவே வந்துபோகும் சீசன் பேயா அல்லது கொரோனா அரக்கனா என்பதை அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் மருத்துவர்களால் தான் அடையாளம் காண முடியும்.

முடிந்தவரை மக்கள் , தங்களையே விஞ்ஞானியாக நினைத்துக்கொள்ளாமலும், ஒரு மருத்துவராக நினைத்துக்கொள்ளாமலும் அருகில் இருக்கும் மருத்துவமனையை நாடுவது நல்லது.


கிருமி நம் உடலுக்குள் நுழைந்து விரவி, மெல்ல மெல்ல நுரையீரலுக்குள் வந்துவிட்டால், மூச்சுவிடுவதில் சிக்கலாகி விடும்.


நம் நோயை அல்லது நம் அறிகுறிகளை எவ்வளவு வேகமாக நாம் இனம் காண்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் எளிதில் நோயின் பிடியிலிருந்து வெளிவந்துவிடலாம்.



அறிகுறிகள் நமக்குத் தெரிய ஆரம்பித்தவுடன் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் (க்வாரண்டைன்) அவசியம்.

ஏனெனில் , நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வீரர்கள் இருப்பானுக, அவனுக, உடலில் கொரோனா போன்ற வைரஸ் எதிரிகள் நுழைந்ததும் எதிர்த்து சண்டை போட ஆரம்பிப்பானுக.
நமக்கு அறிகுறிகள் தெரிந்து தனிமைப்படுத்திக்கொண்டால், மேலும் எதிரிகளின் எண்ணிக்கை அதிகம் ஆகாமல் நம் நோய் எதிர்ப்பு வீரர்கள் சண்டையிட்டு அதை முறியடிப்பார்கள்.

ஆனால், நாம் தனிமைப்படுத்திக்கொள்ளாமல், பொதுஜன வாழ்க்கைக்குள் திரியும்பொழுது ஏற்கனவே தொற்றுள்ள மக்களும் இதுபோல் திரியும்பொழுது கொரோனா வின் எண்ணிக்கை நம் உடலில் அதிகரிக்க ஆரம்பித்துவிடும் ( VIRAL LOAD) விளைவு எதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து நம் நோய் எதிர்ப்பு வீரர்களின் படலம் உடைந்துவிடும். இதன் மூலமாக நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகும் வீதம் அதிகரிக்கிறது. நுரையீரல் என்பது சிக்கலான வலைப்பின்னல் கொண்ட நுண்ணியத் தன்மை கொண்ட ஒரு குட்டி காற்றுப்பை. அதற்குள் கிருமியை நாம் ஏற்றிக்கொள்வது பெருஞ்சிக்கல்.



ஆதலால் தான், நோயின் அறிகுறிகளை உடனே தெரிந்துகொண்டு மருத்துவர்களின் தகுந்த ஆலோசனை பெற்று தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.



நாம் நினைப்பதுபோல் நிலைமை அவ்வளவு இலகுவாக இல்லை. மக்கள் நோயின் தீவிரம் தெரியாமல் சுற்றிக்கொண்டு இருப்பது மோசமான நிலைமைக்குத்தான் செல்லும். அனைவருக்குமான தடுப்பூசியையே பக்குவமாய் பட்டுவாடா செய்யத்தெரியாத அரசு நம் மக்கள் அனைவருக்குமான ஆக்சிஜன் சிலிணடர் வைத்திருக்குமா, இல்லை வெண்டிலேட்டர் வைத்திருக்குமா,? மக்கள் யோசிக்கவேண்டும்.


நுரையீரல் தொற்றுக்கு ஓரளவு சமாளிக்கும் ரெம்டிசிவிர் tocillizumab மருந்துகள் கடும் தட்டுப்பாட்டில் இருக்கும் வேளையில் தினம் நான்கு நபர்கள் கிடைக்கவில்லை எனத்தெரியும் இருந்தாலும் எங்கேயாவது கிடைக்குமா என்று கேட்டு சொல்லமுடியுமா என்று கேட்கிறார்கள். கையறு நிலையில் தான் நாமும் இருக்கிறோம் என்று தெரிந்தும் அவர்கள் நம்மிடம் கேட்பது அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் காட்ட்கிறது.

இன்று கேட்டவர்கள் அனைவரும் மருத்துவர்கள். அதுவும் அவர்களது உறவினர்களுக்காக.
மருத்துவர்களாலேயே அந்த மருந்துகளை ஏற்பாடு செய்யமுடியாத நிலை. முடிந்தவரை தொற்று வராமல் பாதுகாத்துக்கொள்வதே நமக்கும் நம்மைச் சார்ந்தோருக்கும் நாம் செய்யும் உதவி.



உங்களுக்கு வந்திருக்கும் காய்ச்சலுக்கும் சளிக்கும் வாந்திக்கும் எந்தவித அறிகுறிக்கும் நீங்களே காரணத்தை வலிய புகட்டாமல் உடனடியாக மருத்துவர்களைப் பாருங்கள். நோய் தீவிரமாவது நோயின் கையில் இல்லை. நம் கையில் தான் இருக்கிறது.



கொரோனா இரண்டாம் அலை நீர்த்துப்போகும் வேளையில் வைரஸே வெளியேறும் நிலை வந்தாலும், மக்கள் பொதுஇடங்களில் கூட்டம் போட்டும் முகக்கவசம் அன்றியும் தகுந்த சுத்தம் அற்றும், அறிகுறிகளை அலட்சியப்படுத்திகொண்டும், தனக்குத் தொற்று இருக்கிறது என்று தெரியாமலும், சிலர் தனக்கு கொரோனா என்று தெரிந்த பிறகும் விலங்கினங்களாகத் திரிந்துகொண்டு கொரோனாவுடன் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.


உயிரின் இழப்பை அதை இழந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் இல்லாவிட்டால் தானாய் தெரியும்பொழுது உங்களுக்கு அது வாழ்வில் மறக்கமுடியாத தழும்பை ஏற்படுத்தும்.


கொரோனாவைக் கடக்க ஒரே வழி, தனித்து வாழ்வோம், அனைத்தையும் வெல்லுவோம்.

பழனிக்குமார், மதுரை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....