ஷேர்னி திரைப்படத்தை முன் வைத்து...

 ஷேர்னி திரைப்படத்தை முன் வைத்து...


ஃபேஸ்புக்கில் அனைவரும் உருட்டி விளையாடி உடைக்கப்பட்ட ஷேர்னி ( AMAZON PRIME OTT) படத்தைப் பற்றி எழுதவேண்டுமா என்று தான் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன். இருந்தாலும் என் சார் சில நண்பர்களுக்காக...

இணையதளத்தில் ஒரு படம் வெளிவரும்பொழுது அதீத நேர்மறை விளம்பரங்களும் அதீத எதிர்மறை விளம்பரங்களும் விமர்சனமாக வருவது இப்பொழுதெல்லாம் தவிர்க்கமுடியாதவையாக  இருக்கின்றன. 

அந்த வகையில் 'ஷேர்னி' நான் பார்த்தவரையில், இணைய தளத்தில் விமர்சனங்களைப் படித்தவரையில் அதீதமாகக் கட்டமைக்கப்பட்டப் படம். இருந்தாலும் படத்தின் மீது இல்லாவிட்டாலும் படத்தின் திரைக்கதை இலாகா மீதும் இயக்குநர் மீதும் எனக்குச் சில கவலைகள் அல்லது எதிர்பார்ப்புகளை இழந்த ஏமாற்றம் உண்டு.  

ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இந்தப் படத்தை அணுகுபவர்களுக்கு, இந்தப் படத்தில் ஒளிப்பதிவும் , அரசியல்வாதிசார்  சுவாரஸ்யங்களும் ஒரு பெண் அதிகாரி மீதான இரக்கமும் வந்து சேரும். அவர்கள் அதை அனுபவிப்பார்கள். 

மத்தியப் பிரதேசக் காடுகளுக்குள் சுற்றித்திரிந்த கேமராக்காரருக்கு இன்னும் எத்தனையோ இயற்கை காட்சிகளைக்  காட்ட வாய்ப்புகள் இருந்தாலும் , இந்த ' ஷேர்னி' திரைப்படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் காட்டிவிட்டார். இதனால் அவர் தப்பித்துக்கொள்கிறார். 

இந்தப் படத்தின் மிகப் பெரிய அபத்தமாக இருப்பது திரைப்படத்தின் நாயகியாக வரும் வித்யாபாலன் தான். 

படத்தின் ஆரம்பத்திலிருந்து 'பேய் அறைஞ்ச' முகத்தைத் தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் நடக்கிறார். இணையத்தில் வித்யாபாலனுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதை ஒத்துக்கொள்ளப்போவதில்லை. பெரும்பான்மையானோர் ஒத்துக்கொள்வதற்காக உண்மை தன்னை மாற்றிக்கொள்ளப்போவதில்லை. ஒரு சிக்கலான சூழ்நிலையைக் கையாளும் அதிகாரியின் கதாபாத்திரத்தை பெண் கதாபாத்திரமாகச் சித்தரிக்கும்பொழுதே கதை மெருகு ஏறுகிறது . ஒரு பெண் எந்தச் சூழ்நிலையையும் சமாளிப்பாள் என்பதே உண்மை. அதற்கேற்றபடியான கதாபாத்திரத்தில் வித்யாபாலனிடம் , இயக்குநர் சரியாக உணர்வுகளைக் கேட்டு வாங்கவில்லை என்றே சொல்லமுடியும். 

கேளிக்கை விருந்தில் விஸ்கி கேட்டு வாங்கி சாப்பிடும் வித்யா வின்சென்ட் அதிகாரியை ஒரு கான்ஸ்டபிள் பார்க்கும் பார்வையாக திரையின் பின்னால் காட்சிப்படுத்துவதே, வித்யா வின்சென்ட்டின் ஆளுமையை மேலும் நிரூபிக்க என்று தெரிகிறது. வித்யாவின்சென்ட்டின் கதாபாத்திரத்திற்கான நிறுவுதலை இயக்குநர் அவரளவில் குழப்பிக்கொண்டு பிறகு அதை நியாயப்படுத்த இப்படியானக் காட்சிகளைச் சேர்த்திருப்பது போல் இருக்கிறது. 

நிதர்சனத்தில், எத்தனையோ காடுகள், புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு உண்மையில் வனத்துறை அதிகாரிகள் திறமையாகச் செயல்பட்டு மக்களையும் காடுகளையும் அச்சமூகவியலையும் நடுநிலை ஆக்கியிருக்கிறார்கள். அது சம்பந்தமான எந்த ஆதாரத்தையும் படத்தில் காண்பிக்கவில்லை. அல்லது அது குறித்து பேசப்படாதது புனைவு கதை தான் என்று வம்படியாக நம்ப வைக்கிறார்கள். 

காட்டிற்குள் வாழும் ஆதிகுடிகளையும் பழங்குடிகளையும் வெளியேற்றி காடுகளை கார்ப்பரேட்டுகளுக்கு கை மாற்றும் என் ஜி ஓ க்கள் பற்றி எதுவும் பேசப்படவில்லை. 

நட்ட நடு காட்சியில் தாமிரச் சுரங்கமாக , காட்டின் நடுவில் அழிக்கப்பட்டு ஒரு சுரங்க வேலை நடைபெறுவதை உரையாடல் ஏதுமற்று பெண் வனத்துறை அதிகாரி அதைப் பார்த்து அழுவதாய் காட்சி வைப்பதன் மூலம் காடு அழிப்பைப் பற்றி மக்களுக்கு உணர்த்தி விடலாம் என்று இயக்குநர் நினைத்திருப்பது அபத்தம். அப்பொழுது தான் அப்படியானச் சுரங்கம் இருப்பதைப் பார்ப்பது போல் வித்யாவின்சென்ட் பார்ப்பது முரணாக இருக்கிறது. 

ஒரு பெண் புலி காட்டிற்குள் இடம்பெயர்கிறது. நடுவில் ஊர் வளர்ந்திருக்கிறது. காடு - ஊர்- காடு என்று போகும்பொழுது ஊரில் இடைப்படும் மக்களைத் தாக்குகிறது. மறுபடியும் காட்டிற்குள் திருப்பிவிட ஒரு அணியும், புலியைக் கொல்ல ஒரு அணியும் புறப்படுகிறார்கள். இதற்குள் புலி குட்டி போடுகிறது. குட்டியையும் கொல்ல நினைக்கிறார்கள். தாய்ப்புலி சுடப்படுகிறது. குட்டிப்புலிகள் காப்பற்றப்படுகின்றன.  இது தான் கதை. இதை அப்படியே படமாக்கியிருந்தால் பெண் புலி - பிரசவம் - குட்டிகள் - மனிதம் இப்படி ஓட்டியிருக்கலாம். தாய்மார்களின் கண்ணீரைக் காவு வாங்கி ஒரு வகையில் திருப்தி அடைந்திருக்கலாம். ஆனால், 

இயக்குநருக்குக் காடு அழிப்பு பற்றியும் பேச வேண்டும். புலிகள் காப்பு பற்றியும் பேசவேண்டும். அதே சமயத்தில் அரசிற்கு எதிராய் குரல் உயர்த்தக்கூடாது என்று பிரக்ஞை வந்து பாதி முலாம் பூசியும் பூசாமலும் விட்டுவிட்டார். 

இவர் உருப்படியாகச் செய்தது, ஒரு விலங்கியல் பேராசிரியர் வனவிலங்கு ஆர்வலராக கதையில் வரவைத்ததும், FOREST FRIENDS என்ற பெயரில் சிறுவர்களை வன விலங்கு ஆர்வலர்களாகக் காட்டியதும் தான். 

குஜராத்தில் உள்ள கிர் காடுகளில் பிரசித்திப் பெற்ற சிங்கக் கூட்டங்கள் பெருகி அவை வாழும் சதுர கிமீ பரப்பளவுகள் காடுகளைத்தாண்டி வெளிவரை நீள்கிறது. அல்லது காடு அழிக்கப்பட்டு நகரமயமாதல் ஆகிறது. சிங்கக்கூட்டங்கள் பெருக, பெருக  ஊருக்குள் வர ஆரம்பிக்கின்றன. கொரோனா தொற்று போல் விலங்குகளுக்கு ஏதேனும் தொற்று நோய் வந்தால் என்ன செய்வதென்று வனவிலங்கு ஆர்வலர்கள் குழு, கிர் காடுகளில் உள்ள சிங்கங்களில் இரண்டு அல்லது மூன்று ஜோடிகளை குஜராத்திலிருந்து வேறொரு மாநிலத்தில் உள்ள தேசியப் பூங்காவிற்கு மாற்றலாம். இதன் மூலம் சிங்கக்கூட்டங்கள் ஆரோக்கியமாகப் பெருகலாம் என்றும் காடும் விருத்தியடையும் என்று சொல்லி, இன்னொரு மாநிலத்தில் சிங்கத்திற்காகவே தேசியப்பூங்கா ஆரம்பித்தனர். சிங்கம் வாழும் தகவமைப்புகளைச் செய்தனர். காடு உருவாகியது. மான் கள் பெருகின. ஆனால் சிங்கம் எங்கள் அடையாளம் என குஜராத்தை ஆளும் பிஜேபின் முதல்வர் மோடி அப்போது சிங்கத்தைத் தர மறுக்க , கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அப்படியான தேசியப்பூங்கா அமையப்பெற்ற மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் தான் 'ஷேர்னி' திரைப்படமும் படமாக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இவ்வளவு அரசியல் காட்டிற்கும், வன விலங்குகளுக்கும், இவற்றினூடே வாழும் பழங்குடிகளுக்கும் உண்டு. இது பற்றி எல்லாம் பேசாமல் ஒரு புலி, குட்டி ஈனுவது பற்றியாவது  முழுமையாகப் பேசலாம்.காட்டிற்குள் வாழும் மக்களுக்கு இன்னொரு வாழ்வியல் முறைக்குப் பழக்கப்படுத்துவது பற்றியும் காட்டிற்கு நடுவில் இருக்கும் சுரங்கம் பற்றியும் காட்டாமலாவது இருக்கலாம். காட்டிற்குள் இருப்பவர்களது வாழ்வியல் முறை பற்றி ஒரு நொடி காட்சியும், காட்டை அழித்து ஒரு சுரங்கம் இருப்பதைக் காட்டும் இடத்தில் எந்த உரையாடலும் இல்லாமல் ஒரு நிமிடத்தில் கடந்து போவதையும் உற்றுப்பார்த்தால் ' ஷேர்னி'  ஒரு குறைப் பிரசவம் தான். 


பழனிக்குமார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....