கொரொனாவிற்கு முன் - கொரோனாவிற்குப் பின் என மக்களின் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது. வாழ்க்கைத் தரமும் மாறியிருக்கிறது. சில உளவியல் மாற்றமுறைகளும் நடந்திருக்கின்றன . மக்களுக்கு அதீத பயமும் அதே நேரத்தில் தேவையான பதட்டம் இல்லாமையும்(வெற்று தைரியம்) சமமாகப் பரவியுள்ளன. 

மக்களுக்குச் சமூக இடைவெளி என்பது புதியதொரு முறையாக இருக்கிறது. கூண்டுக்குள் வாழ்ந்து பழகிய இந்தியர்களுக்கு இது புது வகையான உளவியல் சிக்கலைத் தருகிறது. 

மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பதற்கேற்ப நாம் தான் வாழ்ந்து இருக்கிறோம். ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து பழக்கப்பட்டு திடீரென தள்ளி நிற்கவேண்டும் வீட்டிற்குள் இருக்கவேண்டும் , இத்தனை மணி நேரத்திற்குள் வேலைகளை முடிக்கவேண்டும், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுக்குள் ஆட்படவேண்டும் என்று வாழ்விற்குள் வந்துவிழும் படிப்பினைகள் புதிய மனதைத் தருகின்றன. 

எப்பொழுதும் வாயால் அளவளாவி பேசிப் பழகிய நாம், திடீரென மாஸ்க் போட்டுப் பழகக் கடினப்படுகிறோம். மக்கள் உளவியல் சிக்கலுக்கு ஆளாவதற்கு இதுபோன்ற புதிய பழக்கங்களுக்கு ஆட்படாமல் இருப்பதும் ஒரு காரணம்.

மருத்துவமனைகளுக்குள்ளும், மருத்துவர்களுடனும், நோயாளிகளுக்கு இடையில் நின்றுகொண்டும் வாழ்க்கையை ஓட்டும் மருந்து விற்பனைப் பிரதிநிதிகளின் வாழ்க்கையில் பல உளவியல் மாற்றங்கள் மக்களின் மனதிற்குள் நடப்பதைக் கண்ணால் காண முடிகின்றது .

மருத்துவமனைக்குள் மாஸ்க் கட்டாயம் என்று சொன்னால், சில பொதுஜனங்கள் சண்டையிடுகின்றனர். மாஸ்க் கம்பெனியுடன் டீல்லா என்று மருத்துவமனை ஊழியர்களை ஏளனம் செய்கின்றனர். மாஸ்க் அணிந்துகொண்டு வருபவர்கள், மருத்துவரின் அறைக்குள் நுழைந்ததும், மாஸ்க்கை இறக்கிவிட்டுப் பேச முயல்கிறார்கள். 

மாஸ்க்கோடு பேசுவது அவர்களுக்குப் பேசிய திருப்தியைத் தருவதில்லை போலும். மாஸ்க்கைப் போட்டுக்கொண்டு நோயாளி பேசுவதை எதிர் தரப்பில் இருக்கும் மருத்துவரின் காதில் விழுந்து அதற்கு அவர் பதில் அளித்தாலும், மருத்துவரிடம் தாம் சரியாகத் தன் நோய் பற்றி விவரிக்கமுடியவில்லையோ என்று அதிருப்தி கொள்கின்றனர் சில நோயாளிகள். 

தான் சொல்வது எதிரில் இருப்பவருக்குக் கேட்கும் சத்தத்தில் பேசுகிறோமா என்பது தான் முக்கியம். வாய் மாஸ்க்கால் மூடப்பட்டிருந்தாலும் போதுமானச் சத்தம் இருக்கிறதா என்பதைக் கவனித்தாலே போதும். ஆனால், மக்களில் சிலர் மாஸ்க்கை கீழ் இறக்கிவிட்டால் தான் தன்னால் வெளிப்படுத்தமுடிகிறது என்று குழம்பிக்கொள்கிறார்கள். 

சாதாரணமாகக் கிராமங்களில் சில நோயாளிகள் ஒரே கேள்வியை இரண்டு மூன்று முறை கேட்பது இப்பொழுது கூடுதலாக இரண்டுமுறைக்கு மாறியிருக்கிறது என்று சொல்கிறார் ஒரு மருத்துவர். 

காரணம் நான் சொன்னதாகக்கூட இருக்கலாம். நோயாளிகளை அடிக்கடி பார்க்கும் மருத்துவர்களுக்கு நோய் தொற்று வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் சில மருத்துவர்கள் நோயாளிகளின் முன் பிபிஈ கிட் உடுத்திக்கொண்டு முகக்கவசம் போட்டுக்கொண்டு, முகத்திற்குப் பெரிய (FACE SHIELD) போட்டுக்கொண்டும் அமர்ந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை பார்க்கிறார்கள். 

இது நோயாளிகளுக்கு,  தான் பார்த்துப் பழக்கப்பட்ட வழக்கமான மருத்துவரின் நடவடிக்கைகளிலிருந்து மாறுபடுவதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஒரே தரமான சிகிச்சை எப்பொழுதும் வழங்கக்கூடிய மருத்துவரின் உடையையும் மாஸ்க்கையும் நோயாளிகள் தன்னுடைய உளவியல் சிக்கலுக்கு ஆளாக்குகிறார்கள். அவரிடம் பேசிய திருப்தியை அவர்களால் உணர முடியாமல் அவர்களுக்குள்ளேயே அதிருப்தை வளர்த்துக்கொள்கிறார்கள். 

சில மருத்துவர்கள் தான் சார்ந்திருக்கும் குடும்பத்தினரின் நலத்தைக் கருத்தில் கொண்டும், தன்னுடைய நலத்தைக் கருத்தில் கொண்டும், நோயாளிகளை வீடியோ கால் மூலமாகப் பார்த்து சிகிச்சை அளிக்கிறார்கள். அதிலும் சில நோயாளிகளுக்குத் திருப்தி இருப்பதில்லை.

உதாரணத்திற்கு, வழக்கமாக வரும் ஒரு சர்க்கரை நோயாளி தன்னுடைய சர்க்கரை அளவுகளை வெறும் வயிற்றில், உணவிற்குப் பின், சிறுநீர் சோதனை, கல்லீரல் சோதனை, சிறுநீரகச் சோதனை, கொழுப்பு சோதனை  என எல்லாவற்றுக்கும் இரத்தத்தைக் கொடுத்துவிட்டு முழு ரிப்போர்ட் வந்ததும் கேமரா முன் அமர்ந்து மருத்துவரிடம் பேசிவிட்டு மருந்து சீட்டை அவர் எழுதி தன் கைக்கு வந்தாலும், மருத்துவர் சரியாகப் பார்த்திருப்பாரா என்ற சந்தேகத்திற்கு உள்ளாகிறார்கள். இதற்கு முன்னும் கூட அந்தத் தரவுகளை வைத்துத்தான் மருத்துவர், தனக்கு மருந்து வழங்கியிருப்பார் ஆனாலும் கூட நேரில் பார்க்கவில்லை என்பது அவர்களுக்கு உளவியல் சிக்கலைத் தருகிறது. 

சமீபத்தில் க்ளப் ஹவுசில், நோய் சம்பந்தமானக் கலந்துரையாடல் ஒன்று நிகழ்ந்தது. அதில் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் ஒரு பெண் சொல்கிறார், டாக்டர், வீடியோகாலில் தான் பேசினார். (ரிப்போர்ட்டுகளை டாக்டருக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதை டாக்டர் கையில் வைத்துக்கொண்டு தான் மருந்துகள் வழங்கியிருக்கிறார்.) வீடியோவில் பார்த்ததால் அவர் சரியாகத்தான் மருந்து தந்திருக்கிறாரா என்று அந்த நோயாளிக்குச் சந்தேகமாம். 

ஒரு நோயாளிக்கு ஒரு நோய் குணமாகிறது என்றால், அந்த நோயாளியின் மன நிலையும் அதனால் உடலுக்குள் ஏற்படும் வளர்சிதை மாற்றமும், உளவியல் திடமும் இதற்கு எல்லாம் அடிப்படையாய் நோயாளி கொள்ளும் நேர்மறை நம்பிக்கையும் தான் முதற்காரணம். பிறகு தான் மருந்தும் மற்றதும். 

மருத்துவர்கள் , அதனால் தான் நம்பிக்கையை ஊட்டுவார்கள். ஆனால், ஒரு நோயாளி மருத்துவரைப் பார்த்துவிட்டு சந்தேகத்துடனே தன்னுடைய வாழ்க்கையையும் மருந்துகளையும் அணுகினார் என்றால் அதுவே அவருக்குப் பல உளவியல் சிக்கல்களைத் தந்து அவரை இன்னும் நோயிலேயே கிடத்திவைக்கும். அதன் வெளிப்பாடு தான் அன்று நடந்தது. ஒரு அகச்சுரப்பியல் நிபுணரான ஒரு மருத்துவர் வீடியோகாலில் தான் பார்த்தார், அவர் சரியாக மருந்து கொடுத்திருக்கிறாரா என்று மன உளவியலாளர்கள் மற்றும் உணவு ஆலோசகர்கள் நிறைந்திருக்கும் குழுவில் தன் சந்தேகத்தை அந்தப் பெண் முன் வைக்கிறார். 

உங்களுக்கு , உங்கள் மருத்துவர் வழங்கும் சிகிச்சை முறையில் சந்தேகம் இருந்தாலோ, அல்லது தான் சரியான சிகிச்சை முறையில் தான் போகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளவோ நீங்கள் SECOND OPINION  முறையைத் தேர்ந்தெடுத்துத் தான் பார்க்கும் சிறப்பு மருத்துவருக்கு நிகரான இன்னொரு அதே துறையைச் சார்ந்த சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம். 

வாய்க்கால் தகராறு என்று ஒரு வக்கீலிடம் நீங்கள் கேட்ட ஆலோசனை சரியா என்று இன்னொரு வக்கீலிடம் கேட்கலாம். கட்டப்பஞ்சாயத்து அடியாளிடம் கேட்டால் சரிப்படாது. 

சிகிச்சை முறையும் அதே பாணி தான். மருத்துவர்க்கு மாற்று மருத்துவர் தான். ஜோசியக்காரர்கள் அல்ல. 

நம் முன் தேவையான விழிப்புணர்வும் இருக்கிறது. தேவையற்ற பயம் பற்றிய செய்திகளும் இருக்கின்றன.  எதைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதில் தான் நம் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. நம்மை வெகுவிரைவில் ஈர்ப்பது தேவையற்ற செய்திகளும் பயமும் தான். 

கொரோனா என்பது உலகம் முழுதும் பரவி உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் ஒரு நோய் தொற்று. நோயிலிருந்துத் தன்னை தக்கவைத்துக்கொள்ள சில அடிப்படை வாழ்வியல் மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும். நாம் கடந்து வந்த மானுட குல வரலாறும் அதைத்தான் போதிக்கிறது. 

நாம் செய்யவேண்டியது எல்லாம் தேவையான விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது தான். நமது அதீத பயம் நமது எண்ணங்களின் திசையை மாற்றும். 

மனதை ஒரு நிலைப்படுத்தி, நேர்மறையாய் வாழ்வை எதிர்கொண்டு வெற்றி பெறுவதைத்தான் கொரோனா சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறது. 

எத்தனை பேர் அதற்குத் தயாராய் இருக்கிறோம் என்பதில் தான் அவரவர் வாழ்க்கை இருக்கிறது. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8