தொ.பரமசிவன் எழுதிய "பண்பாட்டு அசைவுகள்" நூலை முன்வைத்து..

 தொ.பரமசிவன் எழுதிய "பண்பாட்டு அசைவுகள்" நூலை முன்வைத்து..

சில நாட்களுக்கு முன்னதாக ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் புத்தகம் வாசிப்பாளர்கள் மத்தியில் ஒரு ரீல் பிரபலமாகக் கண்ணில் பட்டது. அதில் எழுத்தாளர். எஸ்.ரா அவர்கள்  " அறியப்படாத தமிழகம்" நூலைப் பரிந்துரைத்திருப்பார். அப்படியான "அறியப்படாத தமிழகம்" மற்றும் " தெய்வங்களும் சமூக மரபுகளும்" என்ற இரண்டு நூல்களின் தொகுப்பே இந்த " பண்பாட்டு அசைவுகள்". (காலச்சுவடு பதிப்பகம்)

இப்புத்தகம் எழுதிய தொ.ப  என்று அன்புடன் அழைக்கப்படும் தொ.பரமசிவன் ஒரு பண்பாட்டு ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியர். தொல்லியல் ஆய்வுகளின் கண் நாட்டம் கொண்டவர். அந்த நோக்கில் " பண்பாட்டு அசைவுகள்" பல ஆய்வு தரவுகளைத் தருகிறது.

தமிழ் குறித்து ஆரம்பிக்கும் தொ.ப, ஒரு மழையைப் போல, ஓடுகின்ற நதியைப் போல, தமிழ்- தமிழர்- தமிழர் உணவு - உணர்வும்,உப்பும்- உணவும் நம்பிக்கையும்- சோறு விற்றல்- பிச்சை- தெங்கும், தேங்காயும்- உரலும் , உலக்கையும்- சிறுதெய்வங்களுக்கான உணவு என்று ஒன்றோடன்று ஒன்று ஒட்டி இழுத்துச்செல்கிறார். 

வேலை பார்ப்பவர்களுக்கு ஆதிகாலத்தில் சம்பா நெல்லும், அளத்தில் விளைந்த உப்பும் தரப்பட்டிருக்கிறது என்பதையும் " சம்பளம்" என்ற சொல்லின் ஆதியையும் தொடர்புபடுத்துகிறார். 

பல்வேறு வட்டாரங்களில் வழங்கப்பெறும் சடங்குகளை, சொல்லாடல்களை, வாழ்வியலைப் பிடித்து பின்னோக்கி நகர்ந்து சங்க காலத்தில் இருக்கும் வாழ்வியலோடு தொடர்புபடுத்துகிறார். 

உதாரணத்திற்கு பருத்திப் பெண்டும், பள்ளர் நெசவும், பாய் நெசவும் என்ற பகுதியில், நூற்றல் தொழிலைப் பெண்களோடு சேர்த்தே சங்க இலக்கியக் குறிப்புகள் பேசுகின்றன என்று கூறுபவர் , நூற்றல் தொழில் அக்காலத்தில் அதற்குரிய சமூக மரியாதையைப் பெற்றிருக்கவில்லை, ஆதலால் தான் கைம்பெண்களுக்குரிய தொழிலாகக் கருதப்பட்டிருக்கிறது என் கிறார். கோவை மாவட்டத்தில் கண்ட கள ஆய்வில், ஒருபெண் கைம்பெண் ஆக்கப்பட்டால், ' கொல்லன் கொடுத்த கதிர் இருக்கு, கொறநாட்டுப் பஞ்சு இருக்கு; நூறு வயசுக்கும் நூற்றுப் பிழைச்சுக்க" என்று பெண்ணின் உடன் பிறந்தவன் அவள் கையில் நூல் நூற்கும் கதிர்(தக்களி) ஒன்றையும் சிறிது பஞ்சையும் கொடுத்துவிட்டு இதைச் சொல்வானாம். 

 

திராவிடப் பண்பாட்டின் தனித்த கூறுகளான " தாய்மாமன்" பற்றிய தரவுகள், தைப்பூசத் திருவிழாவும் தமிழர் பண்பாடும் என்று கருத்தியலின் உண்மைத்தன்மையைப் புரியவைப்பது , பார்ப்பனியப் பண்பாட்டிலிருந்து தமிழ் நாகரிகம் விலகி நிற்பதும், தமிழர் பண்பாடு சமண, பௌத்த, சைவ, வைணவ மதங்களுக்கும் முந்தையது என்பதையும் பல ஆய்வுகளின் வழி தெரிவிக்கிறார்.


நவீன காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ, மக்களை நோக்கி மதவாத சக்திகள் பலவித அச்சுறுத்தல்களை, பல வித தவறான உரிமையாடல்களைப் பரப்பிவருகிறார்கள். குறிப்பாய் தமிழகத்தில்.

இது மாதிரியான சமயத்தில் தமிழகத்தின் தொல்வரலாறு என்னவென்று நாம் அறிந்துகொள்வது நல்லது. 

கதைகள் புனையப்படலாம். இதிகாசங்கள் வழி உங்களுக்கு வழங்கப்படும் வரலாறு இதிகாசங்களைப்போலவே புனையப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் ஆய்வுகளின் மூலம் கிடைக்கும் வரலாறு உண்மையானதாக இருக்கும். உண்மைகளைப் புறக்கணிக்கமுடியாது. மறைக்கவும் முடியாது. தொ.ப இந்த நூலின் வழியாக தமிழர் பண்பாடும், வாழ்வியலும் எவ்வித தனித்துவமானது என்பதை ஆய்வுகளின் வழி நிறுவுகிறார். 

பார்ப்பனர்களின் வருகைக்கு முன் பறையர் சில சாதியினருக்குச் சமய குருமார்களாக இருந்திருக்கின்றனர். திருவாரூர்க்கோயிலில் பார்ப்பனர்கள் ஒரு நாழிகை மட்டும் பறையர்களாக மாறுவதன் பின்னனியில் இருக்கும் கதை, 

பண்டாரம் என்ற சொல்லுக்கு முதற்பொருள், பொன் வெள்ளி முத்து போன்ற உயர் மதிப்பு உடைய பொருள்களைச் சேர்த்துவைக்கும் கருவூலம் என்றும் அங்கு காவல் காப்பவர்களுக்குப் பொழுதுபோக்கிற்காகக் கையில் பூக்களைக் கொடுத்து கட்டி வைக்கச் சொல்லியிருக்கிறார்கள். பிற்காலத்தில் பண்டாரம் என்பது பூக்கட்டும் தொழிலாக மாறியிருக்கும் கதை, அப்படி பண்டாரம் என்போர் பழனி, இராமேசுவரம் போன்ற பெருங்கோயில்களில் பூசாரிகளாக இருந்திருக்கின்றனர் போன்ற தரவுகள் சுவாரஸ்யமானவை. 

மதுரை, முகவை மாவட்டங்களில் காணப்பெறும் சாத்தன் ( ஐயனார்) வழிபாடு சமண மதம் தந்தது என்றும் அதனால் தான் மற்ற சிறு தெய்வங்களோடு அமர்ந்திருந்தாலும் ஐயனார் இரத்த பலி பெறாத தெய்வமாக இருக்கிறார் என்ற தகவல்களையும் சொல்கிறார். 

சமண பௌத்த மதங்கள் தமிழகத்தில் பரவிய விதம், அவை சரிய காரணம், அவற்றை மீறி பக்தி இயக்கமாக வளரும் சைவ , வைணவ மதம் என்று தொ.ப வின் நடை, நமக்கு பல ஆச்சர்யங்களையும் மதம் சார்ந்த உண்மைத்தன்மையையும் தருகிறது. 

பொத்தம் பொதுவாக தமிழ் பண்பாடு எந்த ஆகம விதிகளுக்கும் ஆகம வழி நிற்கும் சைவ வைணவப் பெருஞ்சமயங்களின் எல்லைகளுக்கு உட்படாதது என்பதை வெளிப்படையாக இப்புத்தகம் விளக்குகிறது. சாமான்ய மக்களின் உணர்வுகளோடு நாட்டார் வழிபாடும், கலாச்சாரமும் தொல்காலத்திலிருந்து இருப்பதையும் சொல்கிறது.

உண்மைத்தன்மையோடு பண்பாட்டின் ஆதி முடிச்சைக் கண்டறியும் வேட்கை உள்ளவர்களும், தனக்கு மதம் சார்ந்து இப்போது வரும் வாட்சப் செய்திகளை நம்பும் வெள்ளந்திகளும் கண்டிப்பாக மதம் குறித்து விழிப்புணர்வு பெற, தமிழ்நாட்டு கலாச்சாரம் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்களும் கண்டிப்பாக இப்புத்தகத்தை வாசிக்கலாம். 

"பண்பாட்டு அசைவுகள் " புத்தகத்தை நாம் வாசிக்கவேண்டும் என்பதற்கு நியாயமான ஒரு காரணம் என்னிடத்தில் உண்டு. அது தொ.ப போன்றோர் இனியும் வரலாம். ஆய்வுகளைத் தொடரலாம். உண்மைகளை வெளிக்கொணரலாம். ஆனால் நாம் இழந்த தொ.ப ஒருவர் தான். இன்னொரு தொ.பரமசிவன் வாய்க்கப்பெறாது. non substitute asset என்பார்களே. அப்படி. அதனால் அவரை நாம் வாசிக்கலாம். பேராசிரியர். பண்பாட்டு ஆய்வாளர் , தொ.பரமசிவனின் உழைப்பு அசாத்தியமானது. 

" பண்பாட்டு அசைவுகள்" கூறும் உண்மைகள் உங்களை அசைத்துப்போடும். 


பழனிக்குமார். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8