கிருஷ்ணா.......

அப்பொழுது நான் தூத்துக்குடியில் இருந்தேன்.

மதுரையிலிருக்கும் பெருமாள் மேஸ்திரி வீதிகள் போல் அங்கும் உண்டு.
குறுகலாய், நெரிசலாய், மனிதன் ஆடு மாடு நாய்க்குட்டிகள் குழந்தைகள் சகிதமாய் அங்கும் அப்படியே.

என்னுடன் பணிபுரியும் பணியாளர் இரு சக்கர வாகனம் ஓட்ட நான் பின்னே அமர இருவரும் அத்தெருவிற்குள் சென்றோம்.
குறுகலான சாலை எப்படியென்றால் ஒரே நேரத்தில் இரு கார்கள் மிக நெருக்கமாகத்தான் கடந்து செல்ல முடியும்.

ட்ரை சைக்கிள்கள், ஷேர் ஆட்டோக்கள் என அவ்வளவும் அத்தெருவை நிறைத்திருந்தன.

ஒரு பசு மாடு...நல்லப் பெரிய பசுமாடு. பழுப்பு நிறம் மற்றும் வெள்ளை நிறம் கலந்த பசு மாடு. எங்களுக்கு முன்னே நடக்கிறது.

வயிறு நன்றாக வீங்கியிருக்கிறது. அதன் பால் தரும் மடி பெரியதாய் வீங்கியிருக்கிறது. மிகவும் கீழிறங்கி வீங்கி அதன் பின்னங்கால்களின் இடுக்குகளில் உரசி உரசி அந்த மாடு நடக்கிறது.

போக்குவரத்து விதிகளின் படி இடது பக்கம் தான் செல்ல வேண்டும் என்பதுலாம் அந்த மாட்டுக்குத் தெரியாது . வலப்பக்கமாய் சென்றுகொண்டிருந்தது. மாட்டின் இடதுபக்கம் எல்லா இருசக்கர வாகனங்களும் சென்றன்.

இப்பொழுது எதிரே ஒரு கார் வந்தது. சரியாய்ச் சொல்வதெனில் மாட்டிற்கு எதிர் புறம்.
கார் நின்றது. மாடும் நின்றது.
கார் நின்றதால் அதன் பின்னர் வந்தர் ட்ரை சைக்கிள் அதை முந்திக்கொண்டு வந்து எதிரே வந்த வண்டிகளால் அதுவும் நின்றது.
ஸ்தம்பித்தது அந்த இடம்.
இப்பொழுது அந்த மாடு என்ன செய்யும்.
மாட்டிற்கு பின் வந்த ஒரு இருசைக்கிள் மிருகம் ஹார்ன் அடித்து வாயால் மாட்டை மிரட்டியது.
மாட்டிற்கு எந்த ரணமோ...அதால் நகர முடியவில்லை. மிரள்கிறது . ஆனால் ஓட முடியவில்லை. ஓடுவதற்கும் இடமில்லை. அப்படியே நின்றது.
இப்பொழுது அந்த கார் காரர்  , தன் வண்டியை ஒரு சுண்டு சுண்டி அதன் மூக்கிலும் முகத்திலும் இடித்து நகர்த்தினார்.
மாடு பின்னே நகர வழியில்லாமல் கழுத்தை பக்கவாட்டில் திருப்பியது.

இப்பொழுது பக்கவாட்டில் நின்ற அந்த ட்ரை சைக்கிள்காரர் தன் வண்டியை முன்னும் பின்னும் நகர்த்தி ஒரு இடைவெளி உருவாக்கி , மாட்டைப் பார்த்து "இப்படிப் போ" என்றார்.

அந்த இடைவெளியில் ஒரு ஸ்கூட்டர் காரர் உள்ளே நுழைய, மாடு அப்படியே நின்றது. மாட்டிற்கு பின்னால் நின்றவர் ஹார்ன் அடிக்க, கார் காரர் காரை நகர்த்தி அதன் வயிற்றுப் பகுதியை உரச, மாடு கொஞ்சமாய் அந்த இடைவெளிக்குள் நுழைந்து நகர ஆரம்பித்தது.

எல்லா வண்டிகளும் ஹார்ன் அடிக்க மிரட்சியுடன் தன்னால் முடிந்த அளவிற்கு மாடு வேகமாய் நடந்தது. அப்பொழுது அந்த மடி அதன் கால்களில் உரச் மறுபடியும் மெதுவாய் நடக்க, ஹார்ன் அடிக்க, மாடு தலையை மட்டும் வேகமாய் முன்னி முன்னி நடந்தது. பாவம்! அதனால் முடியவில்லை.

அதன் பின்னே ஒரு பெரியவர் சைக்கிளில் மெதுவாய், பொறுமையாய் மாடு நகரும் வரை பொறுத்து பிறகு நகர்ந்தார். பிறகு எங்கள் வண்டி. மாட்டைக் கடக்கையில் அதன் முகத்தைப் பார்த்தேன். அவ்வளவும் வலி....கொஞ்சம் நகர்கையில், அங்கிருந்த ஒரு கடைக்காரர் ஒரு பெரிய கட்டையுடன் மாடு நோக்கி நகர்ந்தார்......நான் பார்க்கவில்லை. திரும்பிவிட்டேன்.

தன் கடையின் முன் நின்றுவிடக்கூடாதென அந்த மாட்டை அந்த மனித மிருகம் மிரட்டியதா இல்லை அடித்ததா.....எங்கு அடித்திருக்கும். வயிற்றிலா...அய்யோ அது வீங்கியிருந்ததே....பின்னங்காலில்? அங்கு மடியின் வலி இருக்கிறதே....?

கர்த்தர்களும், கிருஷ்ணர்களும் இதற்காகவாவது வரமாட்டார்களா.....



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8