டிவி ய ஆப் பண்ணுங்க பாஸ்

சில நாட்களுக்கு முன் என்டிடிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. மருந்து விற்பனை பிரதிநிதியும் , மருத்துவர்களும் பேசுவதாக அந்தக் காட்சியில் இருந்தது.

சில தினங்களுக்கு முன் விஜய் டிவியில் மருத்துவர்களைச் சாடி கோபிநாத் பேசியதும் ஒரு லிங்க் ஆக முகநூலில் பரவி வருகிறது.

இதுவரை இப்படி எந்த பேரங்களும் நடக்காதபடியும் இப்பொழுதுதான் அது நடப்பது போலவும் சமூகத்தில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
அடுத்ததாக மருத்துவத்துறையைத் தவிர மற்ற எல்லாத் துறைகளிலும் எல்லாம் நேர்மையாகவும் உண்மையாகவும் நடப்பது போலவும், இங்கு மட்டும் இப்படி வியாபாரம் நடப்பது போலவும் மக்கள் புருவங்களைத் தூக்குவது வீணான உணர்ச்சி வெளிப்பாடு.

மீடியாக்கள் எப்பொழுதெல்லாம் தங்கள் கையில் சுவாரசியமான விசயங்கள் இல்லையோ அப்பொழுது எல்லாம் இப்படி மருத்துவத்துறை மருத்துவர்கள் மருந்துகள் மருந்து கம்பெனிகள் என கை வைக்கும்.
காரணம் என்ன

வேறு துறையிலிருக்கும் மக்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை கடைசி 5 ஆண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். வங்கி வர்த்தகம், கட்டுமான வர்த்தகம், வாகன வர்த்தகம், எரிபொருள் வர்த்தகம், இயந்திர உற்பத்தி வர்த்தகம் இப்படி டிரேடிங் சம்பந்தப்பட்ட வர்த்தகங்கள் நமது பொருளாதார வளர்ச்சியில் எப்படி பங்கு பெறுகின்றன என்று பாருங்கள். ஏறி இறங்கி என நிலையான வரைபடமாயிருக்காது. ஆனால மருத்துவத்துறையை எடுத்துப் பாருங்கள் சராசரியாக 18 லிருந்து 20 க்குள் நிலையான வளர்ச்சியில் இருக்கும். மற்ற துறைகள் விழுந்து விடும் என பயம் இருந்தாலும் இத்துறையில் நிலையான வளர்ச்சி இருக்கிறது. காரணம் நமது நாடு அத்தகைய சந்தையைப் பெற்றிருக்கிறது.

அடுத்த விசயம் மருத்துவர்கள் கடவுள்களுக்கு அடுத்தப்படியாகப் பார்க்கப்படுவதனால், அவர்கள் மீது நம்பிக்கையில்லா நிகழ்வுகள் நடக்கும்பொழுது சில அதிருப்தி அனைவரும் மீது ஏற்படுகின்றது.

பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளுங்கள். டோலோ என்று ஒரு மாத்திரை இருக்கிறது. அதிகமாய் விற்பனை ஆகும் ஒரு பாராசிட்டமால் மாத்திரை தான் அது. இந்த டோலோ வை தயாரிப்பதற்கு அதைத் தயாரிக்கும் நிறுவனம் பாராசிட்டமால் என்ற மூலப்பொருளை வேறொரு நிறுவனத்திடமிருந்து வாங்கும் என்றால் அதன் உண்மையான விலையையும் அது சம்பந்தப்பட்ட இன்வாய்ஸையும் அரசிடம் சமர்ப்பிக்கவேண்டும். அதற்குரிய வரியையும் அரசிற்குக் கட்ட வேண்டும். அந்தந்த மாதமே. அடுத்ததாக அந்த மூலப்பொருளை அது டோலோ வாக மாற்றி பேக் செய்து ஒரு விலையை நிர்ணயம் செய்து சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் டிற்கு விற்கும். அந்த உண்மையான விலையையும் இன்வாய்ஸ் மூலமாக அரசிற்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்கான வரியையும் கட்ட வேண்டும். இப்படி செய்யும்பொழுது மூலப்பொருளுக்கும் , மாத்திரையாய் வடிவம் பெற்ற பிறகு நிர்ணயம் செய்யப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசம் நேரடியாய் அரசிற்குத் தெரியும்.
பிறகு சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் மூலமாக அடுத்த நம்மூரில் இருக்கும் ஸ்டாக்கிஸ்ட்டுகளுக்கு அனுப்பப்படும். இங்கும் அதே நடைமுறை தான். வாங்கும் விலை, விற்கும் விலை நேரடியாகத்தெரிவிக்கப்பட்டு வரியும் செலுத்தப்படுகிறது. பிறகு அதே நடைமுறையில் ஸ்டாக்கிஸ்ட் மூலம் உங்கள் தெருவில் உள்ள மருந்துக்கடைக்கு விற்கப்படும். அதே போல் வரி கட்டப்படவேண்டும். ஒவ்வொரு மருந்திலும் பேட்ச் நம்பர் இருக்கும். அதை வைத்து ஒரு பேட்ச்சிற்கு எத்தனை மாத்திரைகள் உற்பத்தி செய்யப்பட்டன எவ்வளவு வரி செலுத்தப்பட்டிருக்கிறது, எவ்வளவு மூலப்பொருள் கொள்முதல் செய்யப்பட்டதென மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வு செய்யும்.
ஆதலால் தான் இத்துறையில் இருக்கும் லாபங்கள் நேரடியாக சமூகத்திற்குத் தெரிகின்றது. அதில் ஒரு சிறு கீறல் விழுந்தாலும் பெரிய விசயமாகத் தெரிகிறது. இது ஒரு வெளிப்படையான வியாபாரத்துறை.

எங்கே சொல்லுங்கள்....உங்கள் படுக்கை அறையில் இருக்கும் கட்டில் என்ன விலைக்கு வாங்கியிருக்கிறீர்கள்? அதன் உற்பத்தி விலை என்ன? அதன் உண்மையான விலைக்குத்தான் வாங்கியிருக்கிறீர்களா. அதற்குரிய வரி உங்களிடம் விற்ற விற்பனையாளர் அரசிற்குக் கட்டியிருப்பாரா?

ஒரு உறவினருக்கு ஒரு படுக்கைஅறை மரப்பொருள்கள் கட்டில் பீரோ, லைட் ஸ்டாண்ட், சின்ன மேஜைகள் 2 என ஒரு செட் அப் முழுவதும் வாங்கச் சென்ற போழுது அதன் விலை 1.25 லட்சம் எனச் சொல்லப்பட்டது. மிகப்பெரிய பேரத்திற்குப் பின் பில் இல்லாமல் 90 ஆயிரத்திற்கு விற்க்ப்பட்டது. அப்படியென்றால் அதன் உண்மை விலை என்ன. இவ்வளவு பெரிய வர்த்தகம் நடக்கிறது. அரசிற்கு எவ்வளவு வரி செலுத்தப்படுகிறது. உங்கள் மருத்துவர் ஒரு ஊசி உங்களுக்குப் போடுகிறார் என்றால் அதில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அவர் அரசிற்கு வரியாய் கட்டிவிடுகிறார் எனத்தெரியுமா உங்களுக்கு. ஊசியின் விலை 10 ரூபாய் என வைத்துக்கொள்வோம்.  அதில் 50 பைசாக்கள் வரி செலுத்துவார். ஆனால் நடந்த 90 ஆயிரம் வர்த்தகத்திற்கு வரி எவ்வளவு.
உங்கள் டிவி யை எடுங்கள். எவ்வளவு விலை. எவ்வளவு வரி. அலைபேசி எடுங்கள். வரி எவ்வளவு. உண்மையான விலை எவ்வளவு. இன்று நீங்கள் வாங்கும் மொபைல் 10 ஆயிரம் ரூபாய். 2 மாதங்கள் கழித்து 8 ஆயிரம் ரூபாய். அப்படியெனில் அதன் அடக்க விலை எவ்வளவு. மீடியாக்கள் இதற்குக் குரல் கொடுக்கவில்லை. ஏன் மக்களே? எல்லா இடத்திலு வியாபாரம் இருக்கிறது. எல்லா இடத்திலும் லஞ்சம் இருக்கிறது. எல்லா இடத்திலும் பேரம் இருக்கிறது.

கோபிநாத் சொல்கிறார் - நீயா நானா நிகழ்ச்சியில் பேசுவதில் இருந்து ஒரு துறையையும் அது சார்ந்தவர்களையும் எடை போடுவது தவறு.

டாக்டர்கள் மருந்தை எழுதுவதற்கு எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்பது குற்றச்சாட்டு. மருந்து ஒழுங்காய் வேலை செய்தால் தான் நோய் குணமாகும். நோய் குணமானால் தான் நோயாளிகள் மருத்துவரை தொடர்ச்சியாகப் பார்க்கவருவார்கள் அடுத்தடுத்த நோய்களுக்கு. அதுதான் மருத்துவர்களுக்கு மூலம். அப்படியிருக்க பெரும்பாண்மையான மருத்துவர்கள் தரம் குறைந்த மருந்தைத் தானே எப்படி தேர்வு செய்வார்கள்.
அடுத்து அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது குற்றச்சாட்டு.

எதிர்ப்பார்ப்பு எங்கு தான் இல்லை.

எதுவுமில்லாமல் உங்களால் ஒரு வேலையைக் கூடச் செய்யமுடியாது. வீட்டிலிருக்கும் ஒருவரது பெயரை ரேசன் கார்டிலிருந்து நீக்கி வேறொரு முகவரிக்கு மாற்றுங்களேன் உடனடியாக....பார்க்கலாம். கலெக்டர் ஆபிஸ் சென்று உடனடியாய் உங்களால் ஒரு வேலையை முடிக்க முடியுமா. விஜய் டிவி அதை ஏன் சொல்வதில்லை. என்டிடிவி தைரியம் இருந்தால மறைமுகமாய் கேமரா வைத்து ஒரு பிறப்புச் சான்றிதழ் வேண்டி மதுரை மாநகராட்சி க்கு வரட்டுமே. கண்டிப்பாக அந்த சேனலுக்கு நல்ல தீனி கிடைக்கும். ஆனால் அரசாங்கத்தின் எதிர்ப்பு கிடைக்கும்.

ஒண்ணும் வேணாம் அய்யா, கோபிநாத்தும் அவர்கள் குழுவும் சேர்ந்து சென்னை டிராபிக் போலீஸ்களை கண்காணியுங்கள். லஞ்சம் வாங்கினால் ஒளிபரப்பட்டும். முடியுமா?

சேனல்களுக்குத் தைரியம் இருக்கிறதா.

விடுங்கள். 2 நாள்களுக்கு முன்னர் முதல்வர் மதுரை வந்திருக்கிறார். அரசாங்க பஸ்கள் ஏராளமாய் வந்திருந்தன . சிறு கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள் எல்லாம் முடக்கப்பட்டன். மதுரை அண்ணாநகர் மெயின் ரோட்டில் கோயம்புத்தூர் ஊட்டி பேருந்துகள் அங்கிருக்கும் அமைச்சர் வீட்டிற்காகவும் அங்கு வந்த இளைஞ்ரணித்தொண்டர்களுக்காகவும் வந்திருந்தன. அனுமதியிருந்ததா என நீயா நானா நிகழ்த்த முடியுமா......
வரும் அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி வரும். மதுரை அல்லோலப்படும். என்டிடிவி கேமரா கொண்டுவரட்டும். ஒளிபரப்ப முடியுமா?

எதுவும் வேணாம். நான் சொன்ன மரக்கடை வர்த்தகத்தில் மறைமுகக் கேமரா வுடன் சென்று 1.25 லட்சத்திலிருந்து 90 ஆயிரம் வரை பேரம் நடத்தி ஒளிபரப்பட்டுமே. சமூகத்திற்கு நல்லது செய்யட்டுமே. அரசிற்கு வரி வரட்டுமே. வருமானம் அரசிற்குக் கிடைக்கட்டுமே. அப்படி அல்ல. சொந்த லாபத்திற்காக யாரை அடித்தால் வருமானம் கிடைக்கும் விளம்பரம் கிடைக்கும் என பார்க்கிறார்கள். அப்படி அடித்தால் மறுபடியும் அடிக்கக்கூடாது அப்படி அப்பிராணிகளை அடிக்க மருத்துவர்களைத் தவிர வேறுயாரும் இல்லை. நம்மளும் ஆ.....வெனப் பார்த்து பொழுதைப் போக்கிறோம். தவறான மதிப்பீடு செய்து ஒட்டுமொத்தமாய் அனைவரையும் தவறாய்த்தான் பார்க்கிறோம். அது சரி நமக்கு ஏமாறுவது தானே புத்திசாலித்தனமான விசயம்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....