அநேகம்....

அவர் ஒரு குடை வைத்திருந்தார்.
கருப்பு நிறத்தில் இருக்கும் மடக்கிய அந்த குடைக்கு அழுக்கும், சில வண்ணங்களாலான ஒட்டுகளும் போதும் ஒரு மேய்ப்பவனின் வறுமையைக் காண்பிக்க.

ஆறு ஆடுகள் வைத்திருக்கிறார்.
அந்த ஆடுகள் கட்டுப்பாடற்று ஓடுகையில் எல்லாம் கட்டுப்படுத்த அவைகளுக்கும் அவருக்கும் தொடர்பாய் எந்த கயிறும் இல்லை. மாற்றாக அந்த குடைக்கம்பியும் அதட்டும் அவருடைய குரலும் தான்.

எப்பொழுது வேண்டுமானாலும் மழை வரும் அந்த நண்பகலுக்கு முந்தைய நேரத்தில் அனேகமாய் ஒரு நல்ல மேய்ச்சல் நிலத்தைத் தேடி அவர்கள் செல்லலாம்.

சாத்தியப்பட்ட , பழக்கப்பட்ட அந்த மேய்ச்சல் நிலம் அனேகமாய் அவர்களுக்குத் தொலைவில் இருக்கலாம்.

இவர்களைக் கடந்த ஒரு கிலோமீட்டருக்கெல்லாம் என் இருசக்கரவாகனத்தை நிறுத்தும்படியாய் மழை குறுக்கிடுகிறது. துளிகள் விழாத அந்த கூரையின் கீழ் நிற்க, அதன் எதிர்புறத்தில் ஒரு கனரக இயந்திரம் மேய்ச்சல் நிலத்தை வீடு கட்ட ஏதுவாய் கற்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறது.

இப்பொழுது அந்த ஆடுகள் துள்ளிக்குதித்து ஓடி வருவது ஏதோ ஒரு துளி விழுந்த கண்ணுக்கு அவை தள்ளாடி தள்ளாடி வருவது போல் திட்டு திட்டாய் தெரிய ஆரம்பித்தது.

நான் மறுபடியும் நனைய ஆரம்பித்தேன்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....