நல் தீபாவளி

நரகாசுரனை
நினைக்க
சில நேரம்
சிவகாசியே எரிகிறது!

அந்தச்
சுருட்டிற்குள்
சுருண்டிருப்பது
எங்கள்
இளம் ஏசுக்களின்
உயிர்போதை..

சில வெடிகள்
வெடிக்காமல் போனதற்குக்கூட
சில
கண்ணீர்துளிகளில் தான்!
1998ம் ஆண்டு தியாகராசர் கல்லூரி ஆண்டுவிழா மலருக்காக அங்கு படித்தபொழுது எழுதியது.
ஒரு பட்டாசு தொழிற்சாலை வெடித்து ஒரு சிறுவன் தீயில் கருகிய கையோடு ....கையோடு என்றால் விரலோடு உள்ளங்கை இல்லை. முகம் முழுதும் தீக்காயம். கை வலியின் உச்சத்தில் அவன் முகம் வெந்த பாகங்கள் எரிச்சல் தந்திருக்க அவனும் உணர்ந்திருக்க வாய்ப்பு இல்லை. அருகில் அவனது அம்மா சடலம். கருகிப்போன உடல் இரத்தத் திசு கிழிந்து தீ கொக்கரித்த அந்த புகைப்படத்தை நாளிதழில் பார்த்து இப்படி ஒரு பட்டாசு வெடிக்கவேண்டுமா என்ற ஒரு கேள்வித்தீ தான் என் சிறுவயது பட்டாசுக்கனவுத் தீயை அணைத்தது....
பட்டாசுகளை வெறுக்கத் துணிந்தேன்.
புகையும் புகை சார் நாளுமெனத் தீபாவளி புகைவதை வீட்டு மாடியில் அமர்ந்து பார்த்த தீபாவளிகள் ஏராளம்.
சாஸ்திரத்திற்கு ஒரு கம்பிமத்தாப்பென்ற அம்மாவின் ஆசை கூட புரியவைக்கப்பட்டது .
படிப்பு முடிந்து வேலை வருகையில் வெடி வெடிப்பது ஒரு காசு கரி ஆவதாகக் குறியீடு ஆனது.
அந்த தேநீர் கடையில் வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி சகிதம் 70 வயதிற்கும் மேலான அந்த முதியவன் விற்பது ஒரு  வாசனை பத்தி. தட்டுத்தடுமாறி கீழ் விழுந்தால் மரணம் வரும் அந்த எளிய முதியவனுக்கு ஒரு பத்தி வாங்குதல் தகும் ...ஒரு வெடியை விட...

வெடிகளுக்குப் பயந்து வண்டிகளின் கீழ் ,மர இடுக்குகளில், குப்பைக் கூடங்களில், வீட்டின் பக்கவாட்டு சந்துகளில்  தஞ்சம் புகும் சில நாய்க்குட்டிகளின் பசி தீர்க்கும் ஒரு ரொட்டி மேல்,...ஒரு வெடியை விட..

வர்ணஜாலத்தைக் காட்டும் இந்த இரவின் அந்த வானுயரும் வெடி ஒரு குடும்பத்தின் ஒரு வேளை சாப்பாட்டை எரிச்சலற்று தந்திருந்தால்  இதுவும் ஒரு நல் தீபாவளி தான்...




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....