முள்ளங்கி....

முள்ளங்கியோட தாவரப் பெயர் என்ன
முள்ளங்கி எந்த வகையான குடும்பத்தைச் சார்ந்தது.
மேட்டுப்பாத்தியில் இது விளையுமா.
என்னென்ன மருத்துவப் பயன்கள் இதுலாம் பத்தி நான் எழுதலைங்க.
காலையில் வேலைக்குக் கிளம்பும்போது மதியம் சாப்பிட வருவியா னு அம்மா கேக்குறாங்க.
என்ன குழம்பு மா
சாம்பார்
நேத்துத்தான சாம்பார்
நேத்து முருங்கைக்காய் சாம்பார் இன்னிக்கு முள்ளங்கி சாம்பார்.
முள்ளங்கி ....முள்ளங்கி...முள்ளங்கி சாம்பார் னு நம்ம காதுல எக்கோ...

அட ஆமாங்க முள்ளங்கி எனக்குப் பிடிக்கும்.

ஆனால் வீட்டில் என் அப்பாவிற்கு முள்ளங்கி பிடிக்காது. அதைச் சமைக்கையில் வரும் வாசம் அப்பாவிற்குப் பிடிக்காது;
நமக்கு அப்படியல்ல.
சாதத்தின் சாம்பார் ஊற்றுகையில் விழும் முள்ளங்கி அவ்வளவு அழகு. எடுத்து பார்த்தா கண்ணாடி மாறி அதோட நடுப்பகுதி இருக்கும்.
முள்ளங்கிய இளசா இருக்கிறப்பவே பிடுங்கிரனும். அப்படித்தான் மார்க்கெட்ல வரும். அப்படி இளசான முள்ளங்கி சாம்பாரோட வந்து விழுறப்ப...அடேயப்பா...

ஞானஸ்தானத்துக்கு பேராயர் அப்பம் தருவாருல ...அதைக் குழந்தைகள் லாவகமா வாங்குறதா ஸ்கூல் படிக்கிறப்ப பார்த்திருக்கேன். அது மாதிரி ஒரு முள்ளங்கித் துண்டை நடு நாக்கில் வைத்து உறிஞ்சி அதுல இருக்கிற சாம்பார முழுங்கி மறுபடியும் உறிஞ்சினால் உண்மையான முள்ளங்கி சாறு வரும்.....அரே.....வாஹ்...வாஹ்.....னு பீடா போட்ட சேட்டு மாதிரி வாயில முள்ளங்கிய வச்சு ஜொல்லுவேன்.

மதுரை அண்ணாநகர் மரத்தடி இட்லி கடை இருக்கு. இரவு பிளாட்பாரம் வகையறா. அவிங்களுக்கு மட்டும் தினமும் முள்ளங்கி கிடைச்சிரும். சீசன் இருக்கோ இல்லையோ அந்தக் கடைல தினமும் முள்ளங்கி சாம்பார் தான். அவிங்க கடை சாம்பார் முள்ளங்கி வித்தியாசம். நல்ல அவிச்சு பஸ்பமா ஆக்கிருப்பானுக. நல்ல பச்சை இலையா விரிச்சு தண்ணிய தெளிச்சு நாலு இட்லிய வைப்பானுக. தேங்காய் சட்ணி, மல்லி சட்னி, தக்காளி சட்னி னு கலருக்கு ஒரு சட்ணி. அப்புறமா கொதிக்க கொதிக்க சாம்பார அந்த அண்ணன் கொண்டு வருவார்.நம்ம ராசிக்கு எப்படியும் ஒரு முள்ளங்கி இட்லில விழும். ஒரு முள்ளங்கித் துண்ட எடுத்து ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்குனமாதிரி தூக்கி வாய்க்கு கொண்டு வரறதுக்குள்ள அந்த முள்ளங்கி கொஞ்சம் சாம்பாரோட பாதியா வழிஞ்சு விழும். அவ்ளோ சாப்ட்....

இவ்ளோ பிடிக்கிற முள்ளங்கிய நான் பத்தாம் வகுப்பு வரை சாப்பிட்டது கிடையாது. பத்தாம் வகுப்பு படிக்கிறப்ப தான் முள்ளங்கி என் வகுப்பறை மூலமா எனக்கு வந்தது. வாங்களேன்..என் பத்தாம் கிளாஸ்க்கு.

புனித. பிரித்தோ.மேனிலைப்பள்ளி, மதுரை.

'ப' வடிவத்தில் பள்ளிக்கூடம்
இடது மூலையில் என் வகுப்பறை.
10 F
டபுள் டெஸ்க். அதாவது ஒரு டெஸ்க்குக்கு இரண்டு பேர்.
நானும் பாலாவும்.
ஜன்னலோரம்.
ஜன்னல் வழியா பார்த்தா தூரத்தில் சத்துணவுக்கூட மதிய உணவு வழங்கும் இடம் தெரியும்.
மதியம் 12.30 க்கு வகுப்பு முடியும் . உணவு இடைவேளை. அப்பலாம் கையில வாட்ச் கிடையாது. தூரத்துல சத்துணவு ஆயா பாத்திரம்லாம் எடுத்து வச்சு ரெடியாகும். அப்படித்தான் அப்பாடா பெல் அடிக்கப்போறாய்ங்க...னு நானும் பாலாவும் நினைச்சுக்குவோம்.

பெரும்பாலும் காலையில் உணவு இடைவேளைக்கு முந்திய வகுப்பு சமூக அறிவியல் வகுப்பாத்தான் இருக்கும். திவ்யானந்தம் சார்.
அவர் ஒரு ஜென் மாதிரி. நாற்காலியில் உட்கார்ந்திக்குவாரு...(ஓ....ஆசிரியர் இருக்கிற இடத்தை விவரிக்கலேல....அதையும் எழுதிரேன்...அப்பத்தான் நம்புவாங்க...நானும் எழுத்தாளனு...)
ஒரு சின்ன மேடை மாதிரி போட்டு அது மேல சாருக்கு நாற்காலியும் மேஜையும் இருக்கும்.
அதுல திவ்யானந்தம் சார் உக்காந்திக்குவாரு...எந்திரிக்கவே மாட்டாரு. புத்தகத்தை விரிச்சு வச்சுக்குவாரு. பாடத்தை கதை மாதிரி சொல்வாரு. எங்கள் கூட பாக்க மாட்டாரு. ஆனால் கவனிப்பாரு. எவனாவது பேசுனா உடனே...புத்தகத்தைப் பார்த்துக்கிட்டே சைடுல இரண்டு பேரு பேசுறாய்ங்க....அவிய்ங்களுக்கு நல்ல மார்க்கே கிடைக்காம அடுத்தவருசம் பதினொண்ணாம் வகுப்புக்கு ஸ்கூல் கிடைக்காம தெருவில திரியுறப்பத் தெரியும் னு சாபம் போடுவார்.
சைடுல இருக்குற ஒவ்வொருத்தனுக்கும் அல்லைய பிடிக்கும். அதுல ஒரு சைடு நானும் பாலாவும்.
இப்படி நல்லா போயிட்டு இருந்தப்பத்தான் ' அது' வந்தது.
'அது ' வந்தப் பின்னாடி தான் கச்சேரியே...

அந்த ' அது' என்னானு கேக்குறீங்களா...சிரிக்கக்கூடாது மக்கழேழேழே........

அது முகப் பரு.
பாலாவுக்கு முகப்பரு வந்தது. அந்த சீஸன்ல பசங்களுக்கு முகப்பரு வர்றது சங்கடமான நிலைமை தான். பாலாவிற்கு பயங்கரச் சங்கடம்.
பல மூட நம்பிக்கைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
பொண்ணுகள சைட் அடிச்சா முகப்பரு வரும்.
இதைக் கேட்டதும் எனக்கு அல்லைய பிடிச்சது. எங்க நம்ம பாத்திமாவ சைட் அடிக்கிறது இந்த பிரபஞ்சத்திற்கு தெரிஞ்சுருமோனு.....
P.E.T பாடவேளையில் கிரவுண்ட்க்கு போறப்ப வர்றப்ப அப்புறம் மதிய உணவு வேளை இப்படி நிக்குற சார்களின் வண்டிகளில் பாலா கண்ணாடில பருவோட வளர்சிதை வளர்ச்சிய கிராப் போட ஆரம்பிச்சான்.

பின்னாடி பென்ச் ல இருந்த கண்ணன் சும்மா இருக்காம கண்ணாடி பாத்தா பரு பெருசாயிரும்னு ஒரு நாள் அள்ளிப்போட்டான். அடுத்த இரண்டு நாளைக்கு பாலா கண்ணாடி கூட பாக்காம ஸ்கூல் க்கு வந்து என்னைய கண்ணாடி ஆக்கிட்டான்.

தமிழுக்கு சூசை மணி ஐயா வந்து பாடம் நடத்துவாரு. இவன் பழனி...பழனி னு என் கால சுரண்டுவான்.
என்னடா...
பருவ பாருடா....
( நான் பருவ பாக்குறதா சூசை மணிய பாக்குறதா...ஏன்னா நம்மட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு....புரியுதோ இல்லையோ ....சார் பாடம் நடத்துனா தலைய கொஞ்சம் ஆட்டுவேன்...அவர் என்னமோ நல்லா நடத்துற மாதிர்யும் எனக்கு அது புரியுதுனும்  அந்த சூசை மணி ஐயா என்னைய பாத்துட்டே நடத்துறாரு...)

ஆமாடா

பரு பெருசா இருக்கா பழனி....
( எப்படியும் ஆமா னு சொன்னா அடுத்த கேள்வி கேட்டுத் தொலைப்பான்...)

இல்லைடா...

(உடனே அவனுக்கு சந்தோசம் ஆயிரும்)
டே...உண்மையாவா....
நான் அமைதியா இருப்பேன்...எங்க இருக்கிறது...ஐயா க்கு தலைய ஆட்டிக்கிட்டு இருப்பேன்...
இவன் விடமாட்டான்...

கால சுரண்டுவான்.
என்னடா...
உண்மையாவா..
ம்.....
நேத்த விட சிறிசு ஆயிருச்சா....
நான் அமைதியா இருப்பேன்....
இவன் விடமாட்டான்...கால சுரண்டுவான்...

என்ன்ன்ன்ன்னடா.......
இப்ப சூசை மணி ஐயா பாலாவையும் சேத்து பார்ப்பாரு....
ரெண்டு பேரும் தலைய ஆட்டுவோம்....
வேற எவனாவது தலைய ஆட்டி எங்கள மீட்டனும். அது வரை ஐயா எங்களைப் பார்த்துட்டே இருப்பாரு...
கொஞ்சம் அவர் அங்கிட்டு பார்த்ததும்...இவன் ஆரம்பிச்சுருவான்...
பழனிஈஈஈஈஈ...
ம்...
சிறுசாயிருச்சா....
ம்...
நேத்த விட.....
ம்ம்ம்....
உண்மையாவா.....
ம்ம்ம்....
வகுப்பே முடிஞ்சிரும். ஐயா என்னத்த நடத்துனாரோ...எனக்கு தலை வலி வந்திரும். சாரி..கழுத்து வலி...ஆட்டி ஆட்டி....

இவன் என்ன பண்ணுவான்...ஐயா போனதும்..ஜன்னல் கதவுல இருக்குற மங்கிப்போன கண்ணாடில முகத்தப் பார்ப்பான்.. பருவை அளக்க....
பழனி சிறுசாயிருச்சா....
ம்...
நீ பொய் சொல்ற... பரு அப்படியே தான் இருக்கு.....
நீ கண்ணாடி பார்த்தேல அதான் பெருசாயிருச்சு னு பின்னாடி கண்ணன் சொல்வான்...
பாலா அப்சட் ஆயிருவான்.
இப்படியே போயிட்டு இருந்தப்பத் தான் பின்னாடி பென்ச் ல இருந்த கண்ணன் முள்ளங்கி சாப்பிடு பரு போயிரும் னு சொன்னான்..
கேமராவ கட் பண்ணி ஆன் பண்ணா அடுத்த நாள் வகுப்பறை.
மதிய உணவு வேளைக்கு முந்திய வகுப்பு.
சமூக அறிவியல் வகுப்பு.
த்வ்யானந்தம் சார்.
ஏதோ பிஸ்மார்க் ன்ற எதேச்சதிகாரிய பத்தி அள்ளிப்போட்டுக்கிட்டு இருக்காரு.
நான்  கவ்னிச்சிட்டு இருக்கேன்...ஸாரி..தலைய ஆட்டிக்கிட்டு இருகேன்.
இவன் மெதுவா...டெஸ்க் ரேக் ல இருந்து டிபன் பாக்ஸ எடுத்தான்.
மெதுவா திறந்தான்....
எனக்கு அது வரை முள்ளங்கிய பார்த்ததே இல்ல.. சாப்பிட்டதும் இல்ல...
திடீருனு நல்ல வாசனை.
டக்குனு திரும்பினேன்...
இவன் டிபன் மூடிய திறந்து ஒரு விரல மட்டும் உள்ள விடுற அளவுக்கு திறந்து ஒரு முள்ளங்கிய எடுத்து வாயில போட்டுட்டு டிபன் பாக்ஸ மூடி வச்சுட்டான்.
மணி 12 இருக்கும்.
எனக்கு அந்த சாம்பார் வாசம் பசிய தூண்டிருச்சு.
சத்துணவு ஆயா வேற பாத்திரத்தை இன்னும் எடுத்து வைக்கல....
எனக்கு பசி ஆரம்பிக்குது.
இப்ப பிஸ்மார்க் என்ன பண்ணானா...னு த்வ்யானந்தம் சார் புத்தகத்தோட ஜெர்மனில இருக்காரு....
இப்ப மறுபடியும் அதே முள்ளங்கி சாம்பார் வாசம்...
பாலா பக்கம் திரும்புனேன்...
அவன் மறுபடியும் லைட்டா திறந்து ஒரு துண்டு முள்ளங்கிய வாயில போட்டு இரண்டையும் மூடிட்டான்...
இப்ப நான் ஆரம்பிச்சேன்...
பாலா....( அவன் கால சுரண்டுனேன்...)
ம்...(இது அவன்)
என்னதுடா...
எது...
நீ சாப்பிட்டது.....
(அவன் அமைதியா இருக்கான்..)
இப்ப நான்...பாலாஆஆஆஆஆஅ
ம்ம்ம்ம்.....
என்னடா சாப்பிட்ட.......
முள்ளங்கி....
எனக்குத் தா....
(பயபுள்ள அமைதியா இருக்கான்...)
பாலாஆஆஆஆ..(வேறென்ன கால சுரண்டுறென்)
டேய்....சோற வேண்ணா எடுத்துக்கோ...முள்ளங்கி எனக்கு வேணும்....

பிஸ்மார்க்கோட படையெடுப்பு பயங்கரமா இருந்தது....த்வ்யானந்தம் சாரு இப்ப போர்க்களத்துல இருக்காரு.

நாங்க டிபன் பாக்ஸ ஓபன் பண்றோம்.....
பாலாவோட அம்மாவ நச்சரிச்சு முள்ளங்கி சாம்பார் வச்சு வாங்கிட்டு வந்திருக்கான் கண்ணன் சொன்னத நம்பி.....
சாம்பார் சாதத்துல முள்ளங்கி பத்து துண்டுக்கும் மேலா குவியலா கிடக்குது...இன்னும் கண்ணுக்குள நிக்குது....
பயபுள்ள ஒரு துண்டுல பாதி தருது....
டிபன் பாக்ஸ மூடிட்டு ஆளுக்கு வாயில ஒரு முள்ளங்கித் துண்ட போட்டுக்கிட்டோம்....
இப்ப கொஞ்ச நேரத்துல பாலா மறுபடியும் டிபன் பாக்ஸ திறக்குறான்...
எங்க பின்னாடி யாரோ எத்துறாங்க....
பின்னாடி பாத்தா...கண்ணன் எத்துறான்.....முள்ளங்கிக்கு....
பிஸ்மார்க்கோட ராஜ்ஜியம் பெருசாயிருக்கு....நம்ம த்வ்யானந்தம் சார்.
பாலாவும் முள்ளங்கி சாம்ராஜ்யத்த விஸ்தரிச்சான்....
டெஸ்க்குக்கு கீழ ஒரு முள்ளங்கி துண்டு சப்ளை செய்யப்பட்டது கண்ணனுக்கும்.
இப்ப த்வ்யானந்தம் சார் ...'க்ளாஸ் நடந்துட்டு இருக்கிறப்ப கவனிக்காம சோறு திங்குறவன் நாளைக்கு சாப்பாடு கிடைக்காம படிக்காம தெருல அலைவான் னு ஒரு சாபத்த போட்டாரு.....
எனக்கு அல்லைய பிடிச்சது.
என்னடா முள்ளங்கிக்கு வந்த சோதனை...
எந்தச் சலனும் இல்லாம பாலா அமைதியா இருந்தான்.
பயபுள்ள வாய் புல்லா முள்ளங்கி....
க்ளாஸ் முடிஞ்சது.
த்வ்யானந்தம் சாரு போட்ட சாபம் பத்தி பாலாட்ட கேட்டேன்...பழிச்சுருமா பாலா....
அத விடு...எப்படியோ பரு போனா சரி பழனி...னான்..
அவனவனுக்கு அவன் கவலை....
அடுத்த நாள் க்ளாஸ்.
முதல் வகுப்பு... இருதயராஜ் சாரோட இங்கிலீஸ் கிளாஸ்.
மத்த வகுப்பிலாவது என்ன நடத்துனாங்க ஞாபகம் வச்சுக்க முடிஞ்சது. இங்கிலீஸ்ல சுத்தம்.
தலைய ஆட்டிக்க வேண்டியது தான்...
முத வகுப்புலேயே சாம்பார் வாசம்.....
பாலா...இன்னிக்கும் முள்ளங்கியா....( அட சத்தியமா நானில்லங்க...பின்னாடிருந்து கண்ணன்)
ம்...
நான் கைய நீட்டுனேன்...எனக்கொண்ணு....
பாலா தரல....
நான் முடிவு பண்ணேன்..இன்னொரு தடவ கேப்போம்...பாலா தரலாட்டி புடுங்கிருவோம்னு....
பாலாஆஆஆஆஆ
ம்.....
தா......
முடியாது.....
இப்ப டிபன் பாக்ஸ் ஓபன் பண்றான்...
நான் கைய உள்ள விடுறேன்....
பாலா டிபன் பாக்ஸ தள்ளி கொண்டு போறேனு டெஸ்க்ல இடிச்சுட்டான்.
இருதயராஜ் சார் பார்த்துட்டாரு...
பாலா என்ன விளையாடுறீயா....
(சத்தம் போடுறாரு)
கொஞ்ச நேரத்துக்கு பாலா அமைதியா இருந்தான்.
க்ளாஸ் முடிஞ்சதும். ஒரு ஒப்பந்தம். ஒரு துண்டு தான் தருவானாம். அது மருந்தாம். பரு குறையுதாம்.
இப்ப க்ளாஸ்ல பாதி பேரு அவிங்க வீட்ல நச்சரிச்சு முள்ளங்கி சாம்ப்பர் கொண்டு வர்றாய்ங்க.....
எல்லாப் பயலுக்கும் பரு வந்திருச்சு போல...
நானும் தான்...அப்புறம் பாத்திமாவ சைட் அடிக்கிறது தெரியக்கூடாதுல...
பயபுள்ள எப்படியோ என்னையவும் முள்ளங்கிக்கு அடிமையாக்கிருச்சு..
முள்ளங்கி சாப்பிட்டா பரு குறையுமானுலாம் தெரியாது...த்வ்யானந்தம் சார் க்ளாஸ் அறுவை குறையும் எங்களுக்கு....

இன்னிக்கு முள்ளங்கி சாம்பார்ல உப்பு, காரம் சுவை போக த்வ்யானந்தம் சார் பிஸ்மார்க் கண்ணன்..அப்புறம் என் பாலா....




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8