அறை


ரெண்டு நாளா இருமலா இருமுறா....இன்னைக்குத்தான் டாக்டர்ட்ட கூப்பிட்டு போலாம்ணு இருக்கேன்...என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்கிறார்..
என்னப்பா....ஆபிஸ்ல இருக்கியா....சரி சரி....வச்சிரு...."
இப்படித்தான் வேதாச்சலம் அய்யாவின் தொலைபேசி உரையாடல் முடிந்தது.
அம்மாவின் இருமலையும் உடல் நலக் கோளாறையும் வெளியூரில்
இருக்கும் மகனுக்கு சொல்லி முடிப்பதற்குள்உரையாடலே முடிந்ததைப் பற்றி அவர் கண்டு கொள்ளவில்லை. அது அவருக்கு முதல்முறை இல்லை . மகனது வேலைப்பளு பற்றி அவருக்குப் புரியாமல் இல்லை. இருந்தாலும் ஆதங்கம் இருக்கத்தான் செய்தது.

இந்தா...எவ்வளவு நேரம்....கிளம்பு... என்று சத்தம் கொடுத்தார். பாவம் பங்கஜம் அம்மாளுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை...
ஆனாலும் கிளம்பியிருந்தார்.
மூன்று வயது குழந்தை நடக்கையில் கால்களை எப்படி அகலமாய் 
வைக்காதோ , எப்படி தரையோடு தடவி தடவி நடக்குமோ அப்படி நடக்கும் பங்கஜம் அம்மாளால் எவ்வாறு வேகமாய்நடக்கமுடியும்..
பங்கஜம் அம்மாளுக்கும் வேதாச்சலம் அய்யாவுக்கும் பெரிய வித்தியாசம் உடல் தெம்பு தான்...ஆனால் முதுமை- முதுமை தான் என்பது அவர்களுக்குத் தெரியும். 
வேதாச்சலம் அய்யாவின் இளவயதில் அவரிடம் சொந்தமாய் பணமோ வீடோ இல்லை. ஆதலால் சொந்தக்காரர்களின் பாசமும் அவருக்குக் கிடைக்கவில்லை. தனியாகவே உழைத்தார். மணந்தார். பிள்ளை பெற்றார். ஒரே பையன். படிக்க வைத்தார். சொந்தமாய் ஒரு வீடு வாங்கினார். மற்ற எல்லா பணத்தையும் மகனின் படிப்பிற்காகச் செலவழித்தார்.படித்த படிப்பிற்கு மதுரையில் இருக்கப்பிடிக்கவில்லை என மகனும் சென்னைக்குச் சென்றுவிட்டான் . மணம் முடித்து வைத்தார். மருமகளும் சென்னைவாசி. இருவரும் அங்கேயே இருக்கிறார்கள். பண்டிகை காலங்களில் வருகிறார்கள். அதுவும் விருப்பமில்லாமல்.  மகனோ, மகளோ யாருமற்று இருப்பினும் அவ்வளவு கடினமில்லை. ஆனால் மகனிருந்தும் வெளியூரில் இருந்து தானும்தன் மனைவி மட்டும் தனியாய் இருந்து பார்த்தால் இந்த் முதுமை எவ்வளவு கொடுமை எனத் தெரியும். வேதாச்சலத்திற்கும் பங்கஜம் அம்மாள் அப்போதைக்கு அதை அனுபவித்துக்கொண்டிருந்தனர்.
வேகமா வா...
வர்றேங்க....என வந்தார் பங்கஜம் அம்மாள்.
அடுப்ப அணைச்சுட்டியா....
ம்
லைட்டு...
என்ன...
(கொஞ்சம் சத்தமாக)...லைட்டு...டி..
ம்..ம்....அணைச்சுட்டேன் 
மரக்கதவை இழுத்து பூட்டினார் வேதாச்சலம்...
வெளிப்பூட்டை எடுத்தீங்களா..
அத மறந்துட்டேனே...
மறுபடியும் கதவைத்திறந்து உள்ளே நுழைந்து பூட்டைத் தடவினார்...ஒரு டம்ளர் கீழே விழுந்தது...
பாத்துங்க....வெளியிலிருந்தே சத்தம் கொடுத்தார் பங்கஜம் அம்மாள்..
வேதாச்சலம் உள்ளே பூட்டைத் தேடிக்கொண்டிருந்தார்.
நான் வேணும்னா வரட்டா...பங்கஜம் அம்மாள் கேட்டார்.
வந்து.....? 
லைட்ட போட்டுக்கங்க....
வேதாச்சலம் பூட்டை எடுத்து வெளிய வந்து கதவைப் பூட்டிவிட்டு 
வெளிக்கதவையும் பூட்டிக்கொண்டு ரோட்டிற்கு இறங்கியபோது மணி சாயங்காலம் ஐந்தரை மணி.
வா...வேகமா...சீக்கிரம் போய்ட்டு சீக்கிரம் வரணும்...இருட்டிரும்.
ஆட்டோவை அழைத்தார் வேதாச்சலம்.
எங்க தாத்தா போகணும்
பழங்காநத்தம்
நூறு ரூபா தாத்தா....
என்னப்பா..நூறா..அறுபதுதான...
எவ்வளவு தூரம் பெரியவரே...அறுபதுக்குலாம் வராது...
சரிப்பா போ...நான் வேற பாத்துக்கிறேன்...
யாரும் அறுபதுக்கு வரமாட்டாங்க...நூறு கொடுங்க....
இல்லப்பா...நான் நடந்துக்கிறேன்.
ஆட்டோக்காரன் ஏளனமாய் பங்கஜம்மாளைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தான். நோயாளி போல் உடல்...இருவருக்கும் தளர்ந்த நடை....இருவரும் நடப்பதாய் சொன்னது அவனுக்கு அப்படிஏளனப்பார்வை.
நீங்க நடந்து நாளைக்குத்தான் போவீங்க...
வேதாச்சலம் நடக்க ஆரம்பித்தார். பின்னாலேயே பங்கஜம் அம்மாள்...ஆட்டோ சத்தம் கொஞ்ச்ம் கொஞ்சமாய் குறைந்தது வேதாச்சலம் அய்யாவின் காதுகளில். 
அவனது ஏளனப்பார்வையில் தன்இயலாமையை அவரால்
 பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அது பங்கஜம் அம்மாளுக்கும் தெரியும்.
ஒரு பெரிய கல் நடுவே இருந்தது. பார்த்துவிட்டு வேதாச்சல்ம்
 பின்பக்கம் திரும்பி பங்கஜம் அம்மாளை நோக்கிப் பார்த்தார்.கல் தடுத்து மனைவி தடுமாறிவிடக்கூடாதென்ற அர்த்தம் தவிர வேறு என்னவாயிருக்கும். அவர் அப்படி நின்று பார்ப்பது அந்த அம்மாளுக்கும் தெரியும். மனைவியின் கால்களைப் பார்க்கும்பொழுதே நேற்றைய இரவில் மனைவியின் கால் வலிக்கு தைலம் இல்லாததால் அவள் வலிக்கிறதென்பதை தழுதழுக்கக் கூறியது நினைவு வந்தது. 

வேதாச்சலம்...ஒருமுறை பங்கஜம் அம்மாளின் கால்களைப் பார்த்தார். .வலி தைலம் வாங்கணும் ...நியாபகப்படுத்து...
ம்..
ஒரு வழியாய் எண்பது ரூபாய்க்கு ஒரு ஆட்டோ பிடித்தார் வேதாச்சலம்.
முகவரி சொல்லி ஆட்டோ விரைந்தது..
சிறிது நேரத்திற்கு அமைதியாய் வெறும் ஆட்டோ சத்தம் மட்டுமே 
கேட்டுக்கொண்டு பயணித்தார்கள். பிறகு,
பேசுனானா...பங்கஜம் அம்மாள் கேட்டார்.
வேதாச்சலம் அமைதியாய் இருந்தார்.
வண்டி இரைச்சலில் கணவனுக்குக் கேட்கவில்லை என மறுபடியும் 
பேசுனானா எனக்கேட்டார். மகனைத்தான் கேட்கிறாள் மனைவி என்பது வேதாச்சலத்திற்கு முதன்முறையே தெரிந்துவிட்டது. பதில்சொல்லத்தெரியாமல் அமைதியாய் இருந்தார். 
மறுமுறை கேட்டதும்...கொஞ்சம் சலிப்பாய்
என்னத்த பேசுனான்...ஆபிஸ்ல இருக்கானாம்...கட் பண்ணிட்டான்...
இல்லாட்டினாலும்....சலிப்பை அதிகமாக்கினார் பங்கஜம்
சரி விடு ஜீவனத்திற்காய் போயிருக்கான்....அவன் பொழப்பப் பாக்கணும்ல....
ஆமா பாத்து கிளிச்சான்...அதான் வீடு கார் ணு நல்லாத்தான இருக்கான்....
இருக்கட்டும் பங்கா.....நம்மபுள்ள தான...நல்லா இருக்கட்டும்...
கொதித்து எழும் பசும்பாலில் ஒரு தண்ணீர் சொட்டு அடக்குவது போல் பங்கஜத்திற்கு வேதாச்சலத்தின் வாயில வரும் அவரது பெயரின் 
செல்லம் பங்கா....
அமைதியானார் பங்கா....
வேதாச்சலம் பேசத்தொடங்கினார்....
பொழப்புத்தேடி மெட்ராஸ் போனான்...ஊண்டிக்கிட்டான். வீடு வாங்குறான்...கார் வாங்குறான். சம்பாதிக்கிறான்...பாவம் அவனுக்கு என்ன வேலையோ...வருசத்துக்கு ஒரு தடவை வர்றான்ல முகத்தபாத்துக்குவோம்...பணம் போடுறான்....முடிஞ்சா நம்ம போலாம். முடியலையே...பத்து கிலோமீட்டரை ஒரு மணிநேரத்துல நடப்பேன்...இப்ப அப்படியா.... 
ஆட்டோக்காரர் மெதுவாய் கண்ணாடி வழியாய் வேதாச்சலத்தைப் பார்த்தார்.
வேதாச்சலம் அதைப்பார்த்துவிட்டு மேலும் பேச ஆரம்பித்தார். 
சைக்கிளில ஏறி மிதிச்சேனா...ஐம்பது கிலோமீட்டர் பறப்பேன்..சத்து புல்லா போச்சு...பையன என்ஜினியராக்கிட்டேன்...ஒரு பய என்னை குத்தம் சொல்லியிர முடியாது. வேதாச்சலம் வார்த்தையில்ஒரு 
கௌரவம் இருந்தது..தளர்ந்த குரலில் கம்பீர வார்த்தைகள் இருந்தன...ஆட்டோக்காரன் அடிக்கடி கண்ணாடியைப் பார்த்தான்.
ஒரு ஆஸ்பத்திரில போய் நின்றது ஆட்டோ. இறங்கினார்கள். தன் சட்டைப்பையில் இருந்து எண்பது ரூபாயை எண்ணி எண்ணி கொடுத்தார் வேதாச்சலம். 
அய்யா லேட் ஆகுமா....நா நிக்கவா...ஆட்டோக்காரர் கேட்டார்.
இல்லப்பா....வெயிட்டிங் கொடுக்கமுடியாது...
எதுத்தாப்ல நிக்குறேன்..வேற சவாரி வந்தா போயிர்றேன்....இருந்தா வர்றேன்....
சரிப்பா...சரி...
மெல்ல மருத்துவமனைக்குள் பெயரைப் பதிவு செய்துவிட்டு அமர்ந்தார்கள்.
ஒரு செவிலியர் வந்து பழைய பிரிஸ்கிரிப்ஸன் பேப்பர்களை வாங்கி
பார்த்துவிட்டு...இப்ப என்ன செய்யுது என்றுதான் கேட்டார்
பங்கஜம் அடுக்கினார்...
எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்டுவிட்டு எடை பார்க்க அழைத்தார் செவிலியர்
நீங்களும் வாங்க...உங்களுக்கும் கால் வலிக்குது ணு நைட் 
முழுக்க அணத்துறீங்கல...என்று வேதாச்சலத்தை அழைத்தார் பங்கஜம்..
ஏ...ஏ...போ...போ..நீ..போ...எனக்கு ஒண்ணுமில்ல....
ஆமா..ஒண்ணுமில்ல....நைட்டு புல்லா அணத்துறது...தைலம்வேற வாங்கணும் னு புலம்பிக்கிட்டே வெயிங் மிஸினில் ஏறினார்.
என்ன பாட்டி எடை ஒரு கிலோ குறஞ்சிட்டிங்க....
களியும் தயிரும் தான் பா இறங்குது...மத்ததுலாம் வாய்க்கு விளங்குதுல்ல...
ஏன் கோழியும் குருமாவும் சாப்பிடவேண்டியது தானே என் ச் செல்லமாய் சீண்டினாள் செவிலியப்பெண்..
பங்கஜமும் வேதாச்சலமும் ஏக்கமாய் பார்த்துக்கொண்டனர்...
மருத்துவர் அழைத்தார்...போனார்கள்...
இருமலுக்கு ஒரு மருந்து...சத்துக்கு ஒரு மருந்து...மற்ற எல்லா மருந்தும் அப்படி அப்படியே சாப்பிடுங்கள்....
அந்த சிவப்பு மாத்திரை...சாப்பிடணுமா...பங்கஜம் கேட்டார்...
மருத்துவர் சிரித்துக்கொண்டே ஆமா..அப்படியே சாப்பிடுங்க..இருமல் டானிக் சத்து மாத்திர மட்டும் எக்ஸ்ட்ரா...சாப்பிடுங்க....
இருமல் நின்றுமா.....மறுபடியும் பங்கஜம் கேட்டார்...
இந்தா....பங்கா....தொணத்தொணணு கேட்டு அவங்க வேலைய கெடுக்காத....அதான் சொல்லிட்டார்ல....வா போலாம்.ல்...ணு அதட்டினார் வேதாச்சலம்...
ஆமா...நான் இன்னும் போகாம எல்லாத்தையும் இடஞ்சல் ப்ண்றேன்...கிளம்புறேன் சாமி ணு  எழுந்தார்...பங்கஜம்...
மாத்திரைலாம் முடிஞ்சதும் வாங்க...சரியாயிடும் என் மருத்துவர் அனுப்பினார்....
அடுத்தவரை தொந்தரவு பண்ணாதே என்ற சொல் எவ்வளவு ஆழத்திலிருந்து வந்து விழுந்திருக்கும். உண்மையில் அந்த எண்ணம் தான் இவர்களது சுய கௌரவத்திற்கு அச்சாணி. தன்னால் எவ்வளவு முடியுமென்ற ஒரு சுய சக்தியை பரிசோதித்துக்கொண்டிருக்கிறார்கள். வாலிப காலத்தில் யாரும் உதவாதத் தருணத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல், யாரிடமும் கை ஏந்தாமல் சுயமாய் உழைத்த ஒரு மாபெரும் வெற்றியாளன் ஒரு முதியவனாய் தனியாய் இருக்கையில் அவனது வெற்றிகரமான பழங்காலம் என்ன செய்யும். தடுமாறாமல் இருக்கக்கூட ஒரு பிடிமானம் தேவைப்படுகிறது. அதைக்கூட வேதாச்சலம் அய்யா தொந்தரவாய் ஆயிரக்கூடாதென்றுதான் நினைக்கிறார். என்னதான் மகனென்றாலும் நம்மை அவன் தொந்தரவாய் பார்த்துவிட்டான் எனத் தெரிந்துவிட்டால் எல்லாமே வலிதான். அந்த வகையான வலியின் விளிம்புகளில் தான் முதியவர்கள் பாதிபேர் வாழ்கிறார்கள். இவர்கள் அதற்கு ஓர் உதாரணம் தான். இதைப் பற்றி எல்லாம் நினைத்துத்தான் வேதாச்சலம் அய்யா மனதிடம் அதிகம் பெற்றுக்கொண்டார் போலும்.
மருத்துவமனை வாசல் கதவுக்கு வந்தார்கள்...
நீ இங்கேயே நில்லு....இல்லாட்டி ஒரு நாற்காலிய காமிச்சு அங்க உட்கார்....நா மாத்திர வாங்கிட்டு அந்த ஆட்டோக்காரப்பயல 
கூப்பிடுறேனு....நகர்ந்தார்.
பங்கஜம் அந்த நாற்காலிக்கு ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து போய் அமர்ந்தார் . அறுபத்தைந்து வய்து மூதாட்டியின் முழங்கால்கள் அவ்வளவு எளிதாய் வளைந்து கொடுக்குமா...பல்லை கடித்துக்கொண்டுகண்களை மூடிக்கொண்டு கடினப்பட்டு அமர்ந்தார்.அமருகையில் அந்த நாற்காலி நகர்ந்துவிடக்கூடாது என்பதால் மிகவும் பத்திரமாக கவனமாக பங்கஜம் அம்ர்ந்தார். எப்படி அமரவேண்டும் என்று கூட வேதாச்சலம் அய்யா சொல்லி கொடுத்திருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு முன்னதாக வங்கியில் சென்று பணம் எடுக்கையில் இவர் ஓரமாய் அமரப்போய் விழுந்துவிட்டார். அப்பொழுதிலிருந்து வேதாச்சலம் அய்யா பங்கஜம் அம்மாவை ஒரு குழந்தையாகப் பார்த்துக்கொள்கிறார். ஆனால் இப்பொழுது பங்கஜம் அம்மா அமர்ந்தது
வாட்ச்மேன்க்காக போடப்பட்ட அந்நாற்காலியில்...
உட்கார்ந்ததும்...ஏம்மா....பெருசு....இங்கியா உட்காருவ....இங்கலாம் உட்காராத...உள்ள போம்மா...என வாட்ச்மேன் தூரமாய் நின்று கத்தினார்.
பங்கஜம் அவனைப் பார்த்து அவன் பேசியது கேட்காமல்....அவர் 
வர்ர்றவரைக்கும்...செத்த உக்காந்துரேன்....என்றார்...
அவனுக்குப் பொறுக்கவில்லை...ஏம்மா சொல்றேன்...எந்திரிமா...
எந்திரி...உள்ள போய் உட்கார்....
கால் நடுங்க எழுந்தார்....அதற்குள் வேதாச்சலம் வந்தார்....
என்ன....எந்திரிக்கமுடியலையா...எனக் கேட்டு பங்கஜத்தின் கையைப் பிடித்தார். அவர் கையைப் பிடித்ததும் வேதாச்சலமும் கொஞ்சம்தள்ளாடினார்.
அதற்குள் வாட்ச்மேன் பக்கத்தில் வர, பங்கஜம் அம்மாள் - தம்பி என்னமோ சொல்லுச்சு...காதுல சரியா கேக்கல..அதான் பக்கத்துல போயி என்னனு கேக்கலாம்ணு பாத்தேன்.. அதுக்குள்ளவந்தீட்டிங்க...
வாட்ச்மேனுக்கு அறைந்தது போல் இருந்தது....
என்னப்பா...என்னமோ கேட்ட- காதுல விழுகல்...வயசாயிடுச்சுல....அதான் பக்கத்துல வந்தேன்.. என்றார் பங்கஜம்...
இல்ல வாங்கம்மா..என வாட்ச்மேனும் ஒரு கையை த் தாங்க....
என் பிள்ளை மாதிரி இருக்கப்பா...அவன் இங்க வேல பாத்திருந்தா அவனே என்னைய கூப்பிட்டுப் போவான்.....
ஆமா மெச்சிக்க....ஏன் ஊருக்கு கூட்டிட்டு போயிருக்கவேண்டியதான...இப்புடி அனாதையா விட்டுட்டான் என வேதாச்சலம் இப்பொழுது சலித்துக்கொள்ள....இவர்களைப் பார்த்ததும் ஆட்டோவைஎடுத்துக்கொண்டு வந்த அதே ஆட்டோ டிரைவருக்கு ஆச்சரியம்..வரும் பொழுது மகனுக்காய் பேசிய அப்பா...இப்பொழுது மறுக்க....அப்பொழுது மகனுக்காய் மறுத்த அம்மா...இப்பொழுதுபேச...அவனுக்குப் புரிந்தது...இருவரும் ஏங்குகிறார்கள்.
இருவரையும் உள்ளே அமரவைத்தான்.
ஏம்பா அதே எண்பது ரூபா த்தான்....வேதாச்சலம் கண்டித்தார்.
அய்யா...எழுபது கூட குடுங்க...ணு சிரித்தார் ஆட்டோக்காரர்..
இதென்னப்பா புத்தகம்....
புத்தகம் இல்லம்மா...சிடி...ரைம்ஸ்...பாட்டி கதைகள்...நம்பர்ஸ் ணு குழந்தைகளுக்கு அதில பாட்டு வடிவத்துல இருக்கும்மா ணு பங்கஜம் அம்மாளுக்கு சொன்னார் ஆட்டோக்காரர் தன் பையனுக்குவாங்கிய சிடியைப் பற்றி....
பாட்டி கத .அதுல சிடியா...ஏம்பா...அப்ப உன் பையனுக்கும் தாத்தா பாட்டி வேணாமா....வேதாச்சலம் கேட்டார்...
இப்பொழுது ஒரு அறை ஆட்டோக்காரர் கன்னத்திலும் விழுந்தது...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....