கழுவி ஊத்துறாஙைக...


எவ்வளவு நாளைக்குத்தான் கவிதை மாதிரி எதையாவது எழுதி காலத்த ஓட்ட முடியும். 
பேஸ்புக்ல ஆக்டிவா இருக்குறதே ஒரு பெரிய கலை ஆயிருச்சு.
வர்ற லைக்குலாம் குறைஞ்சுட்டே வருது...
நம்ம மோடி பண்றதுலாம் பார்த்தா இத்தனை லைக் விழுந்தா உங்களுக்கு புது இரண்டாயிரம் ரூபா நோட்டு வீட்டுக்கே வரும் னு சொல்லுவார் போல...
எதையாவது எழுதனும்.
என்னத்த எழுதுறதுனே தெரியல...
ஒரு நாள் எப்படி ஆரம்பிக்கிறது னு எழுதலாம்.
அந்த நாள எப்படி எதிர்நோக்குறதுனு எழுதலாம்.
அந்த நாளுக்காக நாம் எப்படிலாம் நம்மளை தயார் செய்துகொள்ளலாம் னு எழுதலாம்.

இப்படிலாம் மோட்டிவேட் ஆர்ட்டிகிள் எழுத நிறைய பேர் இருக்காங்க..எனக்கு ஒர் நாள் எப்படி ஆரம்பிக்குதுனு என் பார்வைல எழுதனும்.
இப்பலாம் உடல் எடை கூடிட்டே போகுதேனுதான் படுக்குறென் எந்திரிக்கிறேன். 
அப்படி ஒரு நாள் சீரியஸா..ஜிந்திச்சப்ப
உடல் எடைய குறைக்க நம்ம ஒரு நாளில் என்னென்ன செய்யனும்

உடல் உழைப்பை அதிகரிக்கனும்.
எல்லாரும் சொல்லுங்க
அதுக்கு என்ன பண்ணனும். 

என்னமோ டோரா புஜ்ஜி கதை மாதிரி சொல்லிக்கிட்டேன்.

 உடம்ப குறைக்க ஏதாவது பண்ணனும்னு யோசிச்சா தாத்தா காலத்து டெக்னிக் ஒண்ணு இருக்கு. 

வாக்கிங் போகனும்ன்றது தான் அது.

நைட்டே சாப்பிட்டு படுக்கப் போறப்ப வீட்டுல சொல்லி வச்சிருவேன். 

நாளைக்கு வாக்கிங் போறேன். வாக்கிங் போறேன். வாக்கிங் போறேன்.

இப்படி நாலு பேருட்ட பத்து தடவை சொல்லி வச்சாத்தான் போகலாட்டி கழுவி கழுவி ஊத்துவானுகனு நமக்கே எந்திரிக்க தோணும். 

நமக்கு நம்மளே வச்சுக்குற சூனியம் அது.
 இல்லாட்டி பொத்திட்டு படுத்துக்கிடப்பேன். 
அதுவும் அடிக்கிற குளிருக்கு போர்வைக்குள படுத்துக்கிட்டு நெளுப்பு எடுத்தாக் கூட (ஆமா...நெளுப்பு க்கு இந்த  ளு வா இல்ல இந்த லு வா... எந்த லு ளு வோ...)
போர்வைக்குள இருந்து கை கால் வெளியே நீட்டாதபடி உள்ளுக்குள்ளேயே நெளுப்பு எடுத்து தூங்குறது இருக்கே....அட அட அடாஆஆஆஆஆஅ...
எவ்வளவு சுகம் தெரியுமா...

எவனாவது திருப்பாவை திருவெம்பாவை பாடிக்கிட்டு வந்து 
எம்பாவாய் எம்போவாய் னு காது கிழிய கத்துனாலும் போர்வையிலிருந்து எந்திரிக்காம அவைங்களுக்கும் தலகாணிய கொடுத்து படுத்துக்கோடா செல்லம் அப்புறமா...போவாய்...தூங்கி போவாய் னு அவைங்களையும் அமுக்கி தூங்குற சுகம் அது.

முந்திலாம் அலாரம் வச்சுட்டு எந்திரிக்கனும்னா நைட்டு புல்லா தூக்கமே வராது.. ஏன்னா அலாரம் அடிக்கிற சவுண்ட் கேக்காம போயிருச்சுனா என்னாறதுனு அலாரம் வச்சுட்டு தூங்காம இருக்குறது ஒரு காலம்.
ஆனால் வெளியே பெருமைக்கு எருமை மேய்க்கிறது எப்படினா....

நான் லாம் அலாரம் வச்சுட்டுப் படுத்தா அது அடிக்கிறதுக்கு முன்னாடியே எந்திருச்சுருவேனு...

ஆனா நம்ம பவுசு நமக்குத்தான தெரியும். நம்ம தூங்குனாத்தான எந்திரிக்கிறது.

நைட்டு அலஞ்சுட்டு வந்து படுத்தா பாயிண்ட் டூ பாயிண்டு பஸ் மாதிரி தூங்குறேன். நேரா காலைல தான் விழிப்பு வருது. 

இதை மீறி கட்டுப்பாடா காலைல எந்திரிச்சு முழிச்சுப் பார்த்தா அப்பத்தான் வேலை சொல்வாய்ங்க. பத்து நாளைக்கு ஒருதடவை தண்ணி விடுறவன் நான் சீக்கிரம் எந்திரிக்கிற அன்னைக்கு கரெக்டா தண்ணிய விட்டுறுவான். மாடில இருந்து எந்திரிச்சு கீழ இறங்குனா எங்கப்பா அந்த காலத்து மலேசியா வாசுதேவன் மாத்ரி ஒரு முறை முறைப்பார்.

 அது என்னன்னா வீட்டுல ஆயிரம் வேலை கிடக்கு அத விட்டுட்டு என்னத்த நடந்து கிழிக்க போற னு அர்த்தம் அப்படிங்கிற எங்கப்பாவோட மைண்ட் வாய்ஸ பல தடவை சத்தமா கேட்டு பழக்கம் ன்றனால அது மறுபடியும் கேட்கும். 

அப்புறம் எப்படி வாக்கிங் போறது. அப்படியே போனாலும் குடும்பமே அமைதியா இருக்கும். நம்மளும் கிளம்பி போயிருவோம். 

வந்த பின்னாடி வண்டிய உள்ள வைக்க கதவ திறக்குறப்ப எங்கப்பா ஆரம்பிப்பாப்ல.....அந்த காலத்துல சின்னமனூர்ல எங்கப்பனுக்கு சோறு கொடுக்க வாய்க்கால் வரப்பு ஆறு நடந்து அஞ்சு மைல் நடந்து ( இதுல ஒரு டிஸ்கி: மைல் னா எத்தன கிலோமீட்டர் னு ஒரு சின்ன கணக்கு கிளாஸ் வேற நடக்கும்....) அப்படினு ஆரம்பிப்பாங்க.

அத பல்ல கடிச்சுக்கிட்டு வண்டிய நிப்பாட்டிட்டு சாவிய வைக்க உள்ள போனா எங்கம்மா.....மேலப்பொன்னகரத்துல வாடகை வீட்டில குடியிருந்தப்ப மாடிக்கு தண்ணிய குடத்துல சுமந்து வச்சுட்டு அப்புறமா என்னைய தூக்கிக்கிட்டு (அப்ப நான் சின்ன பையன்) ஸ்கூலு க்கு போய் என்னைய விட்டுட்டு அப்புறமா அவங்க ஸ்கூல் போவாங்களாம். இதுல ஒரு டிஸ்கி இருக்கு. மேலப்பொன்னகரத்துல மாடி வீட்ல படிலாம் சின்ன படியா இருக்குமாம்...

சரினு அதையும் கடந்து போடா குமாரு னு கடந்தா எங்கண்ணேன் இருக்கானே எங்கண்ணேன்..அவன் கரெக்டா எங்கப்பா எங்கம்மா காதுல கேக்குற படி....."எங்க போன , காலைல..." அப்படினு கேட்பான்.

காலைல எந்திரிச்சு காப்பி கூட குடிக்காம நைட் பேண்ட் போட்டு ஷீ லாம் போட்டுக்கிட்டு நான் என்ன இலக்கிய கூட்டத்துல பேசவா போறேன்....அவனுக்கே தெரியும். இருந்தாலும் கேட்பான். இப்ப அவன் கேட்ட கேள்விக்கு பதில ஒட்டு மொத்த எங்க வீடே என் மூஞ்சிய பாத்து காத்துக்கிட்டு இருக்கும். 

நமக்கு சும்மாவே வாய் ஜாஸ்தி. கொட்டாவி விட்டாக்கூட சனி வந்து கூலா கூல் ட்ரிங்க் சர்வ் பண்ணுவாரு...இதுல வில்லங்க கேள்விக்கு பதில் நம்ம சொல்லப்போறோம்னா விடுவாரா....பெட்டி படுக்கை தலகாணியோட வந்து சனி குடியேறிடமாட்டாரா என்ன....

இப்ப எங்கண்ணே கேட்ட கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லிருப்பேன் னு மக்களே நீங்களா எடை போடாதீங்க....ஏன்னா அவைங்க இப்ப நம்மள கழுவி கழுவி ஊத்துற மூட் ல இருக்காய்ங்க...

எங்கண்ணே கேட்ட கேள்விக்கு பதில் நான் சொல்றதுக்குள எங்கம்மா ஆரம்பிப்பாங்க..."ஆமா..இன்னைக்குத்தான் துரை வாக்கிங் போயிருக்கார்...போயி லட்சம் லட்சமா சம்பாதிப்பாருல....

"ஆமா..ஆமா ....அவ்வளவு ரூபா போட்டு போன் வாங்கனும்...எப்ப பாத்தாலும் போன நோண்டிட்டே இருக்கனும்ல...." இது என் தகப்பனார்....

"ஆமாப்பா இவனுக்கு வாட்ஸப்புல எப்ப பாத்தாலும் ஆன்லைன் காமிக்குது..நம்ம போன் பண்ணா மட்டும் எடுக்க மாட்றான்...கேட்டா பிஸி ன்றான்..." இது நம்ம கிரியா ஊக்கி என் உடன்பிறப்பு...

அவ்வளவு தான் இவங்க மூணு பேரும் கூட்டணி வச்சு எடுக்குற தண்ணில கழுவி கழுவி ஊத்துவாங்க...

காப்பி கேட்டு ஒரு மணி நேரம் கூட  வராத காப்பிலாம் நம்ம கேக்காம அப்பத்தான் தானா வரும். 
எங்க இவனை திட்டிட்டு அடுத்து நம்ம தலைய உருட்டிருவானுகளோனு  பயத்துலேயே என் மனைவி தானா " இந்தாங்க காப்பினு..." கொடுப்பா...
இவன் கெட்ட கேடுக்கு காப்பி வேறயா னு நமக்கே நம்மளே பார்த்தா தோணுதுனா அவங்களூக்கு என்ன பண்ணூம் னு யோசிங்க.

இப்படித்தாங்க ஒரு பேஸ்புக் போராளிய முடக்குறது.

அப்புறம் எப்படி நான் நடந்து போட்டோ எடுத்து போஸ்ட்டிங் போட்டு லைக்குலாம் குவிக்குறது.
சும்மாவே நமக்கு லைக்கு பத்து பதினைஞ்சுனு இழுத்துட்டு கிடக்கு. அந்த பத்து பதினைஞ்சும் நானா அவைங்க போஸ்ட்டுக்கு போயி கன்னாபின்னானு லைக்கா போட்டது. ஒரு அம்மா இருக்கு .ஏதேதோ போட்டோவா போடுது....நம்ம இருக்குற நெட்வொர்க்குக்கு அந்த போட்டோவோ மெதுவாத்தான் பார்க்க முடியும். அது லோடிங்...லோடிங் னு காமிச்சுட்டே இருக்கும். இத்தனைக்கும் அந்தம்மா ஒல்லியாத்தான் இருக்கு. அப்படி இருந்தும் லோட் ஆக லேட் ஆகுது.

 அதுக்காக காத்திருக்கமுடியுமா என்ன....சும்மா லைக்க போட்டுட்டு போயிட்டே இருப்பேன்...போட்டோ தான எப்ப பார்த்தா என்ன....

அதுல ஒருத்தர் அரசியல் விமர்சகர்...ரூபா நோட்ட மாத்துற விசயத்துக்கு மோடிய அந்தா இந்தா னு புகழ்ந்து தள்ளுறாப்புடி....நமக்கு பிடிக்கல தான்...அந்தாள நாலு கேள்வி நறுக்குனுதான் கேக்கனும். அப்படி கேட்டா என்னா ஆகும் தெரியுமா...எனக்கு விழுகுற பதினைஞ்சு லைக்குல ஒண்ணு போயிரும்.. தேவையா....ஆப் கி பார் லைக் க்கா சர்க்கார் னு ஒரு லைக்க போட்டு போயிரனும்...இப்படி சம்பாதிச்சு பதினைஞ்சு தான் தேறுது.
இது என்ன பெருமையா....கடமைஅ அ அ அ அ அ அ.....

இப்படி இந்த தடுதல்லாம் தாண்டி நடை பயிற்சிக்கு போனா, அங்க நடக்கனுமே...ஆனா அங்க வேற நடக்கும்.

வாங்களேன் நான் நடக்குற வாக்கர்ஸ் க்ளப்.

உள்ளே நுழைஞ்சதும் இடது பக்கம் ஒரு பெரிய ரவுண்ட் 1.9 கிலோமீட்டர் இருக்கும். வலது பக்கம் ஒரு சின்ன ரவுண்ட். அது ஒரு ஒரு கிலோ மீட்டர் கிட்ட இருக்கும்.அங்கங்க பெஞ்ச் போட்டுருப்பாங்க. நடந்து முடிச்சவங்க உட்கார்ந்து ரிலாக்ஸ் செய்யலாம். 

நம்ம உள்ள நுழைஞ்சதும் இடது பக்கம் திரும்பி வேகமா நடக்கனும் . அப்புறம் கொஞ்ச தூரம் ஜாக்கிங் பண்ணனும்னு ப்ளான்.


 கடைசியா எப்ப ஓடுனோம்னு யோசிச்சா போன ஜென்மமே நியாபகத்துக்கு வரும் போல....அவ்வளவு நாளைக்கு முன்னால ஓடுனது.
அதுனால இன்னைக்கு வேகமா நடை, அப்புறமா ஓட்டம். அப்புறமா உடற்பயிற்சி அப்படினு செய்யலங்க...ஒரு ப்ளான் போட்டு உள்ளே போனா....அப்பத்தான்...

பழனிக்குமார் சார் ....வணக்கம் னு ஒரு தொழில்முறை நண்பர் வருவார்.

சரி வாங்க நடக்கலாம் னு அவர் கூட நடக்க ஆரம்பிச்சா...அவர் காலை எடுத்து வைக்கிறப்பவே...என்ன சார் வேகமா நடப்பீங்களோ னு கேப்பார்...

விளங்கும்...

வாங்கனு நடப்பேன். 

ஒரு தடவை பேசுனப்ப , அவர் சொல்றார் காலைல எந்திரிக்கிறது ஆறரை மணியாம். ஏழே கால் மணிக்கு பார்க் வருவாராம். எட்டு மணிக்கு கிளம்பிறனுமாம். அவரது மகளைக் கொண்டுபோயி பள்ளிக்கூடத்துல விடனுமாம். வீட்டுல இருந்தா பொண்டாட்டி வேலை சொல்றாங்களாம். அதுனால பார்க்குல வந்து உட்கார்ந்துட்டு போவாராம். என்னைய பாத்ததுனால நடக்குறாப்லயாம்...

அதுக்கப்புறம் தான் பாக்குறேன். ஒரு க்ரூப் அங்கங்க வருது. உக்காருது. நடக்குறதே இல்ல.... இவைங்க புல்லா காலைல பொண்டாட்டி வேலை சொல்லுமேனு பயந்து வந்து உட்கார்ந்து இருக்காய்ங்க போல...அதுல ஒரு மூணு பேரு சாயங்காலமும் வராய்ங்க....ரொம்ப பாதிக்கப்படுறாய்ங்க போல....

நடக்கவே வராத ஒரு ஆள கூப்டுக்கிட்டு நான் எங்க நடக்க...ரெண்டு பேரும் தவழ்ந்து போறமாதிரி பேச ஆரம்பிச்சோம்....

ஒரு வழியா நடந்து முடிச்சு வலப்பக்கம் இருக்குற மரத்துக்கு அடியில் தஞ்சம் புகுவேன். அங்க ஒரு சிமெண்ட்ல பெரிய திண்ணை மாதிரி கட்டி எப்போதும் ஏழெட்டு பெரியவர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அங்க போயி யோகா பண்ணிக்கலாம்.

நான் போனது கிடையாது. முதன் முறையா போனேன். பாய் வச்சிருப்பாங்க.. போய் எடுத்துக்கோங்க னு ஒருத்தர் சொன்னார். பாய் விரிச்சு மூணு பேர் படுத்து இருந்தாங்க. நான் நாலாவது ஆளா விரிச்சு படுத்து அது என்ன இலக்கியவாதிக சொல்வாய்ங்கள.....ஒரு வார்த்தை.....அதான் ஆசுவாசப்படுத்திக்கிட்டேன்.

பாய விரிச்சு படுத்து மேல பார்த்தா வேப்ப மரம். பூவரசு மரம். ரெண்டு கிளை விட்டு பரந்து தெரியும். இடையில இடையில வானம். ஏதோ கவிதை மாதிரி இருக்கு ..நான் கவிதை எழுதப்போறேனு யாரும் பதட்டப்படவேண்டாம்....

நான் பக்கத்துல இருக்குறவர்ட " படுத்துட்டு மேல பார்த்தா செமயா இருக்குண்ணே "னு சொன்னேன்.

அதுக்கு அவர்...." அப்படியே மேல பாக்காம கண்ண மூடி தூங்குங்க...இன்னும் செமையா இருக்கும் " னார்.

எப்ப காலைல..

நடந்து முடிச்சு காலங்கார்த்தால ஏழரை மணிக்கு.

எந்திரிச்சு உட்கார்ந்து திண்ணை ஓரமா பார்த்தா ஒரு பெரியவர் அப்படியே படுத்து கிடக்கார்...

இன்னொருத்தர் அப்படியே சுவருல சாஞ்சு உக்கார்ந்து கண்ண மூடி இருக்கார். கேட்டா தியானம் னு சொல்றாய்ங்க...

"அண்ணே...இங்க வந்து நிறைய பேர் தூங்குவாங்களானு " கேட்டேன்
அட நீ வேற....நானே தூங்கிருக்கேன்...ஞாயித்துக்கிழமை பாரு..வந்திருவேன்...இரண்டு ரவுண்ட் நடப்பேன்...நடந்துட்டு வந்து பாய விரிச்சு மல்லாக்க படுத்து ரோட்டோரமா போற வண்டி சத்தத்தை மட்டும் கூர்மையா கேளு தம்பி....சொகமா இருக்கும்....சொகம்னாலும் சொகம்..பொண்டாட்டி திட்டுறதுலாம் மறந்துருவ...." னார்....

அடங்கொய்யாலே.....பாதி பேரு இப்படித்தான் வர்றாய்ங்க போல...

அங்க பார்த்தியா...னு ஒருத்தர காமிச்சார்.
பாய் விரிச்சு காலை விரிச்சு இரண்டு கையயையும்பின்னால முட்டு கொடுத்து சாஞ்சு உக்கார்ந்திருந்தார்.

ரிட்டையர்ட் சப் ரிஜிட் ரர்.
கரெக்டா வந்திருவார்.
இப்ப அவர் சம்சாரமும் கூட நடக்க வருதாம். அதான் சார் முட்டி வலி மூச்சுப் பயிற்சி பண்றேனு நம்ம கூட ஐக்கிய மா ஆயிருவார். அவர் சம்சாரம் மூணு ரவுண்ட் அடிக்கும். அடிச்சு இந்த ஏரியாவ க்ராஸ் பண்றப்பலாம் பாரு அவர் படுத்து மூச்சுப் பயிற்சி பண்ணுற மாத்ரி சாஞ்ச்ருவார்ப்புடி...

நானும் கவனிச்சேன். ஒரு ரிட்டையர்ட் ஆன கெமிஸ்ட்டிரி புரொபஸர் மாதிரி ஒரு பெண் நரைச்ச தலை ஒரு கண்ணாடி யோட இவரை பார்த்துட்டே நடக்குறாங்க...பார்க்குற பார்வை இருக்கே...அடேயப்பா...அது புரொபஸர் இல்ல...ஹெ ச் ஓ டி தான் போல....இருந்தாலும் ஐயா பாவம் தான் னு தோணுச்சு...

பாவம் ரிடையர்டு சப் ரிஜி ட் ரர் படுத்துட்டு மனைவி போறத பார்த்தாப்ல...அவங்க க்ராஸ் பண்ணதும் எந்திரிச்சு உக்காந்துக்கிட்டு ஜெயலலிதா சாவுல மர்மம் இருக்குனு ஒரு டாபிக் ல பேச ஆரம்பிச்சார் பக்கத்துல இருக்குறவங்க கிட்ட...

யோவ்...உன் வாழ்க்கைய்லயே இவ்வளவு பெரிய மர்மம் இருக்கு...இதுல ஜெயலலிதா க்கு போயிட்டாரு... அந்தம்மா மறுபடியும் வரப்போகுது நீ முதல படுயா னு சொல்லத்தோணுச்சு.



இவைங்கள புல்லா கடந்து யோகா பண்ணி முடிச்சு வந்தப்பின்னாடி தான் வீடு...

வீட்டு கோபத்தை சமாளிக்கனும்னா ஒரு நாலு குடம் தண்ணி எடுத்து ஊத்தனும். அதையும் பண்ணிமுடிச்சாத்தான் அந்த நாளுக்கான ஒரு மனக்கோழி கூவும்...விடிஞ்சிருச்சுனு....

வேலைக்குப் போறதுக்குள்ளேயே...டயர்ட் ஆகுதே......

நாள் எப்படி ஆரம்பிக்குதுனு பாருங்க




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....