சைரன் பக்க & பக்கா இறுதி

ஒரு நண்பர் என்னை இரு மாதங்கள் கழித்துப் பார்த்து என்ன பழனி இப்படி மெலிஞ்சுட்டீங்க என்றார்
நான் தான் குறைச்சிருக்கேன் என்றேன்
எதுவும் டயட்டா..பேலியோவா என்றார்.
இல்லை சார் என்று என் வழிமுறைகளைக் கூறினேன்.
எல்லாவற்றையும் கேட்டவர் அதெப்படி பேலியோல தான் இப்படி குறையும். மத்ததுல சாத்தியம் இல்ல. நீங்க பேலியோல இருந்துக்கிட்டு பொய் சொல்றீங்களா என்றார்.
ஏனென்றால் அவர் பேலியோ.
நிற்க.
போனத் தொடரிலேயே பேலியோக்காரர்கள் என் தொடரைப் படித்துவிட்டு குறிப்பு அரைகுறையாகப் படித்துவிட்டு கம்பு சுற்றினார்கள்.
ஒரு மதவாதக் கும்பல் போல பேலியோக்காரர்கள் அவர்களின் டயட்முறைக்கு கொடிதூக்கி வருகிறார்கள். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
பிரச்சினை இந்த நண்பர் போல் சிலர் உடல் ஃபிட்டா இருந்தா எடையைக் குறைச்சா அது பேலியோனாலத் தான் முடியும் மத்ததுலாம் சாத்தியம் இல்லை என்று வாதாட ஆரம்பித்திருக்கிறார்கள். சின்னப்பிள்ளைகளில் சண்டை போடுவோம். கமலை பிடிக்கும் அதற்காக ரஜினியை மட்டம் தட்டுவார்கள். அதுபோல்தான் இதுவும்.
பிறகு அந்த நண்பரிடம் என் விளக்கத்தைக் கூறினேன்.
நீங்கள் பேலியோ போலியோ கலிலியோ என்ன டயட் வேண்டுமானாலும் தொடருங்கள். இரகசியம் ஒன்று தான். உடல் எடை பற்றிய ஆரோக்கியமும் அதற்கான நகர்வாக உணவுமுறையில் நீங்கள் செய்யும் சீர்திருத்தமும் உடற்பயிற்சியும் தான் உடல் எடையைக் குறைக்கும். திட்டமிடலும் எண்ணமும் இருந்தால் போதும். தானாக மெலிந்துவிடலாம்.
இந்த டயட் தான் என்றில்லை. பேலியோ போல டயட்டில் சேர்ந்தவுடன் நீங்கள் அடுத்தவேளை உணவை தக்க கலோரிகளுடன் திட்டமிடுவதைப் போல் அதற்கு முன் செய்தீர்களா..கேட்டுப் பாருங்கள். எதையும் செய்யாமல் நான் எடை குறையவில்லை. இந்த டயட்டில் சேர்ந்தேன் ஒரே மாதத்தில் இப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனு நாப்டால் டெலிபை விளம்பரத்திற்கு பேசுவது போல் பேசினால் என்ன செய்வது. உங்கள் உணவுமுறையைத் திட்டமிட்டு மாற்றுங்கள். எல்லா டயட்டையும் நீங்களே உருவாக்கலாம். குழும முறை டயட்டுகள் எல்லாம் கொம்பு அல்ல. தாத்தன் ஆச்சி கள் என்ன டயட்டுலயா இருந்தானுக. உன் டி என் ஏ ல போதிதர்மன் இருக்கானு சூர்யாவை உசுப்பிவிடும் ஸ்ருதிக்களாக டயட்டுகள் செயல்படுவதும் அதில் ஆசிர்வாதம் டிவியில் வரும் பிசாசை விரட்டவிட்டு பரவசநிலைக்குப் போகும் பக்தனாகவும் இருக்கத் தேவையில்லை. உன் வயிறு உன் உடம்பு உன் சாப்பாடு. அவ்வளவே. கடினப்பட்டு யோசிக்க  ஒன்றுமே இல்லை.

அடுத்ததாக நான் டயட்டுல இருந்தேன். இப்ப இல்ல. உடனே மறுபடியும் புஸ்ஸுனு ஏறிடுச்சுனு நண்பர்கள் சொல்கிறார்கள்.
நீங்கள் டயட் என்று வர்ணிப்பதே ஒரு கெடுபிடியான உணவுமுறை. அதை விட்டுவிட்டால் புஸ்ஸுனுதான் ஆகும்.
உங்களுக்கு நன்மை பயக்கும் ஒரு செயல்முறையை நீங்கள் கையாளக் கடினமாக இருந்தால் தொடர்ந்து 21 நாட்கள் செய்து பார்க்கலாம் என நீங்களே செய்து பாருங்கள். அப்படி 21நாட்கள் தொடர்ந்து செய்யும் ஒரு வழக்கம் உங்களது பழக்கவழக்கமாக மாறும் என்றும் அதையே90நாட்கள் தொடர அதுவே உங்கள் வாழ்வியல் முறையாக மாறும் என்றும் மேலை நாடுகள் ஆராய்ச்சியில் தெரிவிக்கின்றன.
நாம் தான் ஒரு டயட்டில் நுழையும் போது ஒரு புது மாணவன் போல அன்ன அன்னைக்குப் பாடத்த அன்ன அன்னைக்கே படிக்கனும்னு ஸ்கூல் முதல்நாள் சொல்றதைக் கேட்டு படிப்பதைப் போல் ஆரம்பிப்போம். ஆனால் கடைசியில் தேர்விற்கு முதல்நாள் தான் சில புத்தகப் பக்கங்களைப் புதிதாகப் பார்ப்போம்.
நாம் டயட்டை விடும்போது ஏன் வந்தோம் என யோசிக்கவேண்டும்.
புரியும்படிச் சொல்லவேண்டுமென்றால் டயட் என்பது சீஸனல் உணவுமுறை அல்ல. நிரந்தரமான ஒரு வாழ்வியல் தகவமைப்பு மாற்றம். அதைத் தவிர்த்துவிட்டு உடம்பு புஸ்ஸுனு ஏறுது என்றால் அப்படித்தான் ஏறும்.
காலை ஐந்து தோசைகள் சாப்பிட்டு வளர்ந்தவன் நான்.
இப்பொழுது மூன்று தோசைகளுக்கு மேல் சாப்பிடமுடிவதில்லை. பழகுகிறது உடம்பு.
பசிக்குச் சாப்பிடுவதோடு நின்றுகொள்வது டயட்டின் ஒரு பகுதி.
ருசிக்காகவும் எதுக்கும் வயித்துக்குள்ள போட்டுவைப்போம் என்று ஆசைக்காகவும் சாப்பிடுவது நிறுத்தப்படவேண்டும்.
ருசி என்பது என்ன..உண்மையில் வாய் முதல் தொண்டை வரை இருக்கும் நம் நாக்கின் நீளம் தானே ருசி.
வாய் புற்றுநோயாளிகளுக்கு உணவுக்குழாய் பு.நோயாளிகளுக்கு தொண்டையில் ஓட்டைபோட்டு அதில் சாப்பாடு தருவார்கள். நீங்கள் சாம்பார் செய்து தந்தால் என்ன பருப்புத் தண்ணியை ஊற்றினால் என்ன. பசி அடங்கும் தானே.
உலகத்தில் ருசியே காணாதவர்களும் ருசிக்க முடியாதவர்களும் இருக்கும் சமூகத்தில் தான் வெறும் ருசிக்காக பசியற்றத் தருணத்திலும் விழுங்குகிறோம்.
சுதந்திரம் என்பது எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது அல்ல.
எது எது எல்லாம் செய்யக்கூடாது என்ற சுதந்திரத்தின் எல்லை தீர்மானித்தலே சுதந்திரம்.

உடல் மனம் சார் பிரத்யேக ஆரோக்கிய வழிமுறைகளைத் தேடுங்கள்.
நீங்கள் தேடத் தேட உங்களால் தேடப்படும் எல்லாவற்றாலும் கண்டடையப்படுவீர்கள்.

மெலிதலின் பொருட்டு நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்.

வேறொரு மாதம்.
வேறொரு தலைப்பு என சைரனைக் கொஞ்சம் அணைக்கலாம் தானே...காது கொய்ங்ங் என இருக்கும் சிலருக்கு.

முற்றும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8