காலா - விமர்சனங்களின் விமர்சனம்

அட ஆமாங்க.
இது காலா பற்றியப் பதிவு தான்.
விமர்சனங்களின் விமர்சனம் தான்.
திரைப்படத்தைத் திரைப்படமாகப் பார்க்கும் பழக்கம் ஆரம்பக் காலந்தொட்டே தமிழ் ரசிகர்களுக்கு இருந்ததில்லை.
அரசியல் அறிவிப்பிற்கு முன் வரை ரஜினிக்கு இவ்வளவு எதிர்ப்பாளர்கள் இருந்ததில்லை.
இப்பொழுது வந்துவிட்டார்கள்.
எப்பொழுதெனக் காத்திருந்து கற்களை எறிய அவர்களிருக்க, ரஜினியும் தானாய் மனமுவந்து தூத்துக்குடியில் அந்த வாய்ப்பை வழங்கிவிட்டார்.
நிற்க.
ஒரு அரசியல்வாதி ரஜினி மீது அவரின் எதிர்ப்பாளர்கள் பல காரணங்களைக் கூறி அவரது குறையுடன் அவரை வீழ்த்த முடியும். ஆனால் ஒரு நடிகனாக அவரது உழைப்பை அவர் கட்டமைத்த ஒரு வடிவத்தை அவ்வளவு எளிதாக அவரது வெறுப்பாளர்களால் உடைக்க முடியாது. 
ஆதலால தான் படம் வருவதற்கு முன் பொங்கி பொங்கல் வைத்த பல போராளிகள் பட
ஆரம்ப சீனிலேயே ரஜினி போல்ட் என்பது போன்ற குற்றங்களைச் சொல்கிறார்கள்.
ஒரு சிலர் இது ரஞ்சித் படம் அதான் வெற்றி என்கிறார்கள். 
அதாவது அந்தப் படம் அவர்களுக்குப் பிடித்துவிட்டது. 
ஆனால்.ரஜினியைப் புகழ விருப்பமில்லை . அதற்குக் காரணம் சொல்கிறார்கள்.

ரஞ்சித் படமென்றால் இருக்கட்டுமே. 
அதானே உண்மை. 
அந்தக் கதாபாத்திரத்தில் ரஜினியைத் தவிர்த்து வேறு ஏதாவது நடிகரைப் போட்டு இந்தக் கதையை நீங்கள் சொல்லமுடியும். அப்படி 
கற்பனை செய்யமுடியாதென்றால் அது ரஜினியின் வெற்றி .

முன்னாள் காதலியைப் பார்த்து எல்லோரும் உருக முடியும் தான். 
ரஜினி வெர்ஷன் இது .
அவ்வளவே.

ரஜினியின் மாஸ் எண்ட்ரோ எப்படி இருக்கவேண்டும்.
படத்தின் ஆரம்பக்காட்சி.
ஏழைகளின் குடிசை வீடுகள் அத்துமீறலாக இடிக்கப்படுகின்றன. மக்களில் ஒருவன் கதாபாத்திரம் இருங்கடா அவரைக் கூப்பிட்டு வரேன் என ஓடுகிறது. 
அவர் ரஜினி. 
வருகிறார்.
அக்கிரமம் செய்பவரைத் தன் கையால் காலால் உதைத்து துவம்சம் பண்ணி அறிமுகமாவார். 

இதானே எதிர்பார்ப்பு. 
இதானே ரஜினி படம். 
இதை ரஞ்சித் செய்யவில்லை.
குழந்தைகளோடு குழந்தையாக கிரிக்கெட் விளையாடி அவுட்டும் ஆகி இது நோ பால் எனக் குழந்தைத்தனமாய் அடம் பிடிக்கும் காட்சி.
இதனால் படம் ஃபெயிலியராம். மக்கள் ரசிக்கவில்லையாம் விமர்சனம் எழுதியிருக்கிறார்கள்.
இப்படி ஒரு காட்சி வரமுடிகிறது. ஏனென்றால் இது ரஞ்சித் படம்.

தன் செட்டிங் டயலாக்கிற்குப் பின் இந்தியாவின் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆக அந்தக்காட்சியிலும் ரஜினிக்கு சண்டைக்காட்சி இல்லாமல் ஒரு ரஜினியின் ரசிகன் தலைவனின் ஆட்டத்திற்கானத் தாகத்திற்கு உள்ளாவான்.
ஏனென்றால் இது ரஞ்சித் படம்.

தன் அத்தனை ஃபார்முலாக்கள் உடைந்தாலும் தன் முத்திரையை ரஜினி மறுபடியும் மறுபடியும் பதிக்கிறார். அது தான் உண்மை. ஏனென்றால் இது உண்மையிலேயே ரஜினி படம்.

பொதுவாக புதிது புதிதான விசயங்கள் தான் வெற்றிக்கு நம்மை சுவாரஸ்யமாக அழைத்துச் செல்லும். 
அதைச் செய்யத் துணிந்தவன் வெற்றியாளன் ஆவான்.
தன் ஃபார்முலாக்களை உடையக் கொடுத்தாலும் தனித்தன்மையை நிரூபித்தலில் ரஜினி வெற்றி பெறுகிறார்.

தன் தனித்தன்மையை விட்டுக்கொடுத்து தன் ஃபார்முலாவை அனைவரும் பார்க்கும்படிச் செய்ததில் ரஞ்சித்திற்கு மாபெரும் வெற்றி.

70 80களில் பிறந்த ரஜினி கமல் கூட்டப் பிரிவுகளில் கமல் ரசிகர்கள் இது தான் சாக்கு என்று சூப்பர் ஸ்டார் படத்திற்கு கூட்டம் இல்லையா எனத் தன் ரசிக விஸ்வாசத்தைக் காட்டிக்கொண்டு விளையாடினார்கள்.

தன் பிஜேபி ஆதரவு என்ற முகமூடியை ரஜினி ஊர்ஜிதப்படுத்தாமல் இருப்பது ரஜினிக்கு அரசியல் பின்னடைவு தான்..
ஆனால் கதையில் பிஜேபி எதிர்ப்பை அப்பட்டமாகக் காட்ட இங்கு சிலர் இது ரஜினிக்கேத் தெரியாமல் நடந்துவிட்டது எனக் கூறியுள்ளார்கள். அவ்வளவு பெரிய நடிகனுக்கு அது தெரியாதா. இல்லை யாரேனும் சொல்லமாட்டார்களா. இது வெறும் உப்புக்குச் சப்பாகச் சொல்லும் குறை.
தெரிந்தே ரஜினி நடித்திருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம்.
பொத்தம் பொதுவாக ரஜினி படம் என்றால் எல்லாத்தரப்பினருக்கும் பிடிக்கும்தான். இந்த எல்லாத் தரப்பும் என்பது அரசியல்பாகுபாடுள்ள அனைவருக்கும்.
அரசியல் பாகுபாடற்ற அனைவருக்கும் எனப் பிரிக்கலாம்.
அரசியலில் ரஜினியின் வருகைக்குப் பிறகு அரசியல் பாகுபாடு உள்ள க்ரூப் இந்தப் படத்தை வஞ்சிக்கத் தொடங்கியது.
படத்தைப் பார்க்காமலே கழுவி கழுவி ஊற்றிய இனம் உண்டு.
அரசியல் பாகுபாடற்ற வகையறாக்கள் கொண்டாடினாலும் கூட வெளியே சொல்லமுடியாத அளவு அல்லது நல்லாருக்கு என ஒரு ப்ரோமோ வெர்ஷனை ஏற்படுத்தமுடியாதபடி போகிறது.

உடன் பழகுபவர்  சொல்கிறார். ஒரு குறிப்பிட்ட இனத்திற்காக கூட்டத்திற்காக மட்டும் போராட்டம் பண்றனால இது எல்லாருக்குமானப் படம் இல்லை என்கிறார்.
அவர் ரஜினி ரசிகர். 

ஆதிக்கச் சமூகத்தைக் கேள்வி கேட்கும் தொணி இந்தப்படத்தில் வெற்றி அடைவதற்கு அத்தாச்சியே இது போன்றோரின் உள்குத்து விமர்சனம் தான்.
ஒரு விமர்சனத்தில் தாராவியில் பெரியார் சிலை எப்படி? லாஜிக் இடிக்கிறதே என்கிறார்கள்.
மதுரையை அடுத்த மண்டேலா நகரில் அம்பேத்காரை ஏற்பது போல் தாராவியில் பெரியார் இருப்பார் தானே.
பெரியாரை தமிழ்நாட்டிற்குள்ளேயே ஒடுக்க நினைப்பது கூட ஆதிக்க இனத்தவரின் வன்மம்தானே. தமிழர்கள் உலவும் பூமியில் பெரியார் பாரதி வள்ளுவன் என இருந்துவிட்டுப் போகட்டுமே.

ஓர் ஆதிக்கச் சமூகத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சலை வெறும் ரஜினி படமாகப் பார்க்கமுடியாமல் போவது தான் விமர்சனங்களும் வெற்றியும் ஆகின்றன.
படைப்பிற்குப் பின் பேசப்படும் கருத்தியல்களைக் கொண்டு அரசியல் பேசுவதை விடுத்து அல்லது
படைப்பில் பகிரப்படும் அரசியல் சார் கருத்தியலை முன்னிலைப்படுத்துவதை விடுத்து 
படைப்பு உருவாவதற்கான படைப்பாளிகளின் இனம் மொழி என முன்னிலைப்படுத்துவதில்தான் சர்ச்சைகள் வருகின்றன.

இந்தக் கதையின் கருவை இன்னொரு புது இயக்குனர் புது நாயகனைக் கொண்டு படமாக எடுத்திருந்தால் இவ்வளவு பேர் பார்வையில் பட்டிருக்குமா.
எவ்வளவு முற்போக்கான எழுத்தாளரோ அல்லது எழுத்தாளரெனக் காட்டிக்கொள்பவரோ அவர்களாவது ஆதரிப்பார்களா... இருந்திருக்காது.
 பல முற்போக்கு எழுத்தாளர்கள் கூட இது போன்ற கதையம்சங்களுக்கு ரஜினியைக் காரணம் காட்டி வெறுப்பதும் ஒதுக்குவதும் விதண்டாவாதமே.

ஒடுக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட சமூகம் தன் உரிமைகளுக்காகப் போராடுவதன் ஒரு மிடறு உதாரணம் காலா.

ரஜினியின் ரசிகனாக நான் சொல்வதென்றால் காவல்நிலையக் காட்சியைச் சொல்லலாம்.
பொத்தம்பொதுவான ரசிகன் என்றால் கண்ணம்மா பாடலில் தன் மகனின் வயிறைத் தட்டிச் செல்லும் பழைய காதலியைச் சந்திக்கச் செல்லும் அப்பா
காதலியின் மகளின் தலையைத் தடவிச் செல்லும் ஒரு ரஜினி
தன் மனைவியின் பழைய காதலன் எனச் சொல்லப் பதறும் ஒரு கணவனென பொத்தம்பொதுவான ரசிகர்களுக்கு காலா விருந்து.

பழுப்பதற்கு முன்பே கல்லடி பெறும் காலா 
வன்மங்களால் சூறையாடப்பட்ட ஒரு மரம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8