A separation ஈரானிய மொழி திரைப்படம்

A  Separation ஈரானிய மொழி திரைப்படத்தை முன்வைத்து.

பொதுவாக வளரக் கூடிய நாடுகளில் மனிதனின் வாழ்வியல் என்பது அங்கு நிலவக்கூடிய பொருளாதார நிலைமைகளை வைத்து என்ற படியே இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஏற்ற படி பல காரணிகள் இருக்கின்றன. வேலை பார்க்கும் சூழல் நிமித்தமாக புலம் பெயர்தல் என்பது நாம் கேள்விப்பட்டதுண்டு.   மிகவும் பிற்போக்கான கருத்துகளைப் பின்பற்றும் தேசங்களில் கூட கல்விக்காகவோ, பொருளாதாரத்திற்காகவோ புலம் பெயர்தல் அவசியப்படுகிறது. ஆனால் தனிமனிதன் ஓர் இடத்தில் தன்னைத் தகவமைத்துக்கொள்ள பல காரணிகளைத் தின்று செரிக்கிறான். சிலர் அதைத் தியாகம் என்று அழைக்கிறார்கள்.
ஈரானிய மொழி திரைப்படமான 'A Separation" கூட அப்படியானச் சில அளவைகளை முன் வைத்து ஒரு குடும்பத்திற்குள் நிகழும் நிகழ்வுகளைச் சொல்கிறது.

11 வயது ஆகும் மகளிற்கு நல்ல கல்வி கொடுக்க வேறு இடம் செல்ல வேண்டும் என்பது குடும்பத்தலைவியின் ஆசை. இந்த ஊரில் அவளுக்கு நல்ல கல்வி கிடைக்காது என்பதை விட இங்கு கிடைப்பதை விட மேம்பாடானக் கல்வி என்பது அவளது நிலைப்பாடு.
குடும்பத்தலைவனுக்கு 80 வயதில் இருக்கும் Alzhiemers (மறதி போன்ற நரம்புசம்பந்தப்பட்ட) நோய் இருக்கும் தந்தை உண்டு. எங்கும் நகர முடியாது என்ற சூழல். குடும்பத்தலைவன் நகர மறுக்கிறான். இத்தனை விவரணைகளுடன் முதல் காட்சி விவாகரத்துக் கோரும் நிகழ்வாக ஆரம்பிக்கிறது. வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது. மனைவி கோபத்துடன் அவளது அம்மா வீட்டிற்குப் போகிறாள். மகள் அப்பாவுடன் தங்குகிறாள். ஏன் மகள் அப்பாவுடன் தங்குகிறாள் என்பதற்குக் காரணம் படம் முடியும் தருவாயில் வருகிறது.
அப்பாவைப் பார்க்க குடும்பத்தலைவன் ஒரு வேலையாள் தேடுகிறான். வருபவள் மதக்கொள்கைகளை வெகு தீவிரமாகப் பின்பற்றுபவள். ஆளில்லா நேரத்தில் அந்த 80 வயது மறதி நோயாளியான முதியவர் ஆடையிலேயே சிறுநீர் கழித்துவிட , அந்த ஆணிற்கு ஆடைகளைக் கலைந்து வேறு ஆடை அணிய வைப்பதில் , கணவனைத் தவிர இன்னோர் ஆணை நிர்வாணமாய் பார்ப்பது பாவம் என்று வேதநூலில் இருப்பது அவள் முகத்தில் தெரிகிறது. அப்படிச்செய்யவேண்டிய கட்டாயத்தை இது பாவமா என்று யார் யாரிடமோ கேட்டு துணிந்து அந்த முதியவர்க்குப் பணிவிடைகள் செய்துவிடுகிறார். இது பாவம் என்று சொல்லி வேலைக்குவர மறுக்கிறார். அவரது வாழ்வியல் முறைப்படி அது நியாயம் என்றாலும் வறுமைச்சுழல் அவரை வேலையைத் தொடரவைக்கிறது.

கதைக்கான முடிச்சு என்பது எப்பொழுதும் அந்தக் கதை எழுதப்படும் சூழலின் நிழலிலிருந்து தான் புரிந்துகொள்ளப்படவேண்டும். மதக் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றும் மக்கள் உள்ள ஒரு நாட்டில் எழுதப்படும் கதைக்களம். குரானின் மீது சத்தியங்கள் செய்யப்படுகின்றன. குரானில் எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட வாக்கியங்களுக்கு மாற்றாக நடக்கமுடியாது என்று ஒரு கதாபாத்திரம் கதை முழுக்க உலவுகிறது. குரான் மீதான ஒரு பொய்சத்தியம் தன் குடும்பத்தின் அத்தனைக் கடினங்களையும் மாற்றிவிடும் என்ற சூழலில் கணவன் வந்து கெஞ்சியும் அந்தக் கதாபாத்திரம் தன் நிலையில் இறுதியாக எடுக்கும் முடிவு என நிலைநிறுத்தப்படுகிறது.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னும் ஒரு நியாயம் இருக்கிறது. அந்த நியாயத்தை அந்தக் கதாபாத்திரங்கள் வாதிட்டுக்கொண்டே நகர்கின்றன. தன் வேலையாளான ஒரு பெண்ணை அவன் தள்ளிவிடுகிறான். அதில அவளது நான்கு மாதக் கர்ப்பம் கலைகிறது. அவளும் அவளது கணவனும் பாதிக்கப்படுகிறார்கள் வழக்கு போடுகிறார்கள். இதில் அவளுக்கும் அவளது கணவனுக்கும் உள்ள பிரச்சினைகள் வருகின்றன.
தள்ளிவிட்டவன், தள்ளிவிட்டதற்கானக் காரணத்தையும், அப்படித் தள்ளிவிடுவதனால் கீழே விழுந்து அவளது கர்ப்பம்கலைய வாய்ப்பு இல்லை என்றும் செய்முறை செய்து காட்ட நீதிமன்றம் ஏற்கிறது. இதில் தள்ளிவிடும்பொழுது அவள் கர்ப்பிணி என்பதே தெரியாது என் கிறான். இதில் இவனுக்கும் இவனது மனைவிக்கும் உள்ள பிரச்சினைகள்.

இந்த இரு வழக்குதாரர்களுக்கும் தலா ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஒன்றாய் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் பிரச்சினையின் போதெல்லாம் கண்களாலேயே நடித்துள்ளனர். அந்தக் குழந்தைகளின் பார்வையிலேயே பல உரையாடல்களை இயக்குனர் வைத்துள்ளார்.
தந்தை மகள் பாசத்தை கதையின் போகும் போக்கெல்லாம் சொன்னாலும் இரண்டே காட்சிகளில் மகள் அம்மா உறவை எந்த உரையாடலும் இல்லாமல் காட்டிவிடுகிறார்கள்.
எந்தப் பிரச்சினைக்கும் அமர்ந்து பேசிவிட்டால் போதும் என்று நம்மூர் பக்கம் சொல்வார்கள். கேட்பதற்கு வெகு எளிதாக இருந்தாலும் பல பிரச்சினைகள் அப்படி அமர்ந்து மனம் விட்டுப் பேசியிருந்தால் கலைந்திருக்கும் என்பது தான் நிதர்சனமான உணமை. அம்மாவை வரச்சொல்லுங்கள் என்று மகள் கூறும்போதும் கூட அப்பாவால் அதைச் சொல்லமுடியாத ஒரு தருணத்தில் மகள் உடைகிறாள். அம்மாவை விட்டுவிட்டு , மகள் அப்பாவுடன் இருப்பதே அம்மா தன்னை விட்டு வெகு தொலைவில் செல்லமாட்டாள் என்ற ஒரு காரணம் அந்த மகளின் கண்ணீரற்ற கண்களில் புரியும்படியான காட்சியமைப்புகள்.

தனிமனித வாழ்வு என்பது ஏதேதோ காரணத்திற்காகத் தனக்கென்று சில கோட்பாடுகளை மனதில் வைத்துக்கொண்டு நிகழ்கிறது. அந்தக் கோட்பாடுகளுடன் வாழ்வில் நாம் ஏற்றுக்கொண்ட கடமைகளும் சேர்ந்துகொள்ளும் போது தனிமனித வாழ்வு எத்தகைய உளவியல்மாற்றங்களை உணர்கிறது என்பதே சுவாரஸ்யம். இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கிறது. அதை அவர்கள் வாழ்வித்துக்கொள்ள வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். தங்களது நியாயங்களும் தங்களது தேவைகளும் அதற்கானத் தியாகங்களும் தான் ஒரு மனிதனின் வாழ்வை நகர்த்துகின்றன. எந்த நிகழ்தகவை நீங்கள் நிகழ்த்த விரும்புகிறீர்களோ அந்தப் பக்கம் ஏதாவது இரண்டு மட்டுமே உங்களுடன் உறையும்.
'A SEPARATION'  நியாயங்களையும் தேவைகளையும் தியாகத்தையும் தனித்தனியாகப் பிரித்துக்காட்டுகிறது.




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....