பொல்லாதமைனாக்கள்( ஸ்ரீவள்ளி)

பழனிக்குமார்
மதுரை

உயிர்மை பதிப்பித்து ஸ்ரீவள்ளி எழுதிய "பொல்லாத மைனாக்கள்" கவிதைத் தொகுப்பை முன்வைத்து..

ஈசிஜி மெஷினில் மேலும் கீழுமாய் ஓடிக்கொண்டிருக்கும் அலைவெண்களைப் போல பயணம். 
ஒரு நெடும் பயணத்தில், சாலையினோரத்தில் யாராவது ஒருவர் ஆசுவாசமாய் மரத்தடியில் அமர்ந்துகொண்டோ படுத்துக்கொண்டோ அல்லது வெறுமனே வயல்பரப்புகளைப் பார்த்துக்கொண்டோ இருந்தால் பெரும் பொறாமை தொற்றிக்கொள்வதைப் போலவே இப்பொழுதெல்லாம் கவிதை வாசிப்பவர்களையும் எழுதுபவர்களையும் கண்டால் அப்படித் தொற்றிக்கொள்கிறது. 
கவிதை எழுதும் மனநிலை அபூர்வமானது. அதற்குச் சற்றும் சளைத்ததல்ல கவிதைகளை வாசிக்கும் மனநிலையும். எவ்வளவு விலை கொடுத்தேனும் அத்தருணங்களைப் பெறமுடியாது. 
அப்படியொரு அபூர்வ மனநிலையில் பொல்லாத மைனாக்கள் . 
பொருட்காட்சியில் ஒவ்வொரு அரங்கமாக வைத்திருப்பார்கள் (stall). ஒரு அரங்கத்தில் வீட்டிற்கான அத்தியாவசியப் பொருள் இருக்கும். இன்னொரு அரங்கம் மரவேலைப்பாடுமிக்க கலைக்கூடமாக இருக்கலாம். 
அடுத்த அரங்கம் மண் வேலைப்பாடு மிக்க கலைக்கூடமாய் இருக்கலாம். 
அப்படித்தான் "பொல்லாத மைனாக்கள்" ன் ஒவ்வொரு கவிதையும் ஓர் உலகத்தை உங்களுக்குக் காண்பிக்கலாம். 
எல்லா உலகத்திற்கும் பொத்தம்பொதுவான ஒற்றுமை அவை புனைவுகளால் கட்டி எழுப்பப்பட்டவை. 
ஒரு கவிதையில் ஜன்னலோரமாய் நிற்பவளைக் காண்பிக்கும் கவிதை இன்னொரு கவிதையில் பூவரச மரத்தடியில் காற்றுக்குக் காணாமல் போவோர் பற்றிக் கூறும். ஞாபக ஏரியில் நடந்து ஈரத்தில் கைப்பையைத் திறந்தால் தவளை இருக்குமென்பதை ஒரு கவிதை உங்களுக்குக் காட்டும். 

"பொல்லாத மைனாக்கள் " கவிதையில் ஒரு சேரக் காணக் கிடைத்த ஒற்றுமை. கவிதையில் ஒரு வரியை நீங்கள் வெளியிலிருந்து காண்பீர்கள். அடுத்தவரியில் முதல் வரியில் புனையப்பட்ட புனைவிலிருந்து ஓர் உண்மை உங்களுக்கும் அந்தக் கவிதைக்கும் இடையில் வந்து விழும். நீங்கள் புனைவை விடுத்து உண்மையைக் கையில் எடுப்பீர்கள். அது உங்களை மூன்றாம் வரியில் புனைவுலகத்திற்குள் அழைத்துச்செல்லும்.

ஊடங்கிய நேரத்தில்
கண்மாயில்
கருவேல நெற்றாக அசைகிறேன்
நிலவிற்பனைத் தட்டிக்குக்
கீழே பூத்திருக்கும்
சின்ன வயலட் பூக்களின்
வரிசையாயிருக்கிறேன்
என்னைப் 
பறித்துத் தொடுக்கிற விரல்கள்
அவை நாச்சியாருடையதில்லை
ஒரு பழைய கதாபாத்திரத்திற்காக
நான் தொடுக்கப்படவில்லை .

உங்கள் முன் ஒரு வரியில் புனைவைத் தருவதோடு அதற்கான பின்வரியில் நீங்களும் புனைவுகளோடு பயணிப்பீர்கள். 
ஞாபக ஏரிக்குள் ததும்ப ததும்ப நடக்க வைக்கிறது ஒரு வரி. ஏரி என்பதால் கைப்பையில் இருந்து தவளைகளை எடுப்பதாக அடுத்தவரி. 
உன்மீது விட்டெறியும் தவளைகளில் ஒரு புத்திசாலியாவது உன் கையைப் பிடித்துத் தரதரவென இழுத்துவரத்தான்போகிறது என்னிடம் என்கிறது கடைசிவரி. 

புனைவுகளை ரசிக்க வேண்டுமெனில் நீங்கள் அந்த உலகிற்கானப் போதையை ருசிக்கவேண்டும். 
சூல் நாவலுக்கான விமர்சன நிகழ்வொன்றில் பேச்சுவாக்கில் சோ தர்மன் அவர்கள் சூழலியல் எழுத்தைப் பற்றி பேசலானார். ஏன் சிலரின் கதைகளில் ஒரு பறவை கூட வருவதில்லை. நிலம் பற்றி நதி பற்றி என்று கேட்டார். 
உண்மை தானே. நாம் ஏன் நம்மைச் சுற்றி மனிதர்களற்ற இன்னோர் உலகத்தைப் பார்ப்பது கிடையாது. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல தானே..
"பொல்லாத மைனாக்கள்" சூழலியல் சார்புடைத்து. 
மரங்கள் வருகின்றன. பறவைகள் வருகின்றன. காற்று வருகிறது. ஒரு இடத்தில் பிரியமானவனின் கழுத்தைத் திருப்பு வேசைக் காற்றே எனத் திட்டு வாங்குகிறது. 
நாய்கள் வருகின்றன. 
கவிதைகளின் நடுவே பூச்சிகள் ஊர்கின்றன. பறக்கின்றன. மகிழம் பூக்கள் பார்க்கின்றன.
சில நேரம் எல்லா ஜீவினங்களும் புனையப்படுகின்றன. ப்ரியமானவனின் உதட்டைத் தொடுகிறாள். உதட்டில் அணில்கள் ஓடுவதாய் ஒரு வரி.
பாயாசமாய் தித்திக்கும் தேநீரில் எழப்பார்க்காத எறும்பாய் தத்தளிக்க வேண்டும் காதலில் என ஓர் உவமை வருகிறது.
எறும்புகளும் குயில்களும் பொல்லாத மைனாக்களும் தவளைகளும் பல்லிகளும் பூவரசமரமும் என சூழலியலுக்கானப் படிமங்களோடு பொல்லாத மைனாக்கள் இயற்கை மீதானத் தாகத்தை நேர்படுத்துகிறது.

இருளைக் கடலாக்கி அதைக் கடக்க படகு... அதில் சில புத்தகங்கள். 
முதலில் இருளைக் கடலாக்க உங்களால் புனைவை ஏற்றுக்கொண்டு ஸ்ரீவள்ளியின் ரசவாதத்திற்கு ஆளாகையில் உங்கள் கையில் புத்தகங்களைத் தருவார். அதை அந்தப் புனைவோடு நீங்கள் சேர்ப்பீர்கள். ஒரு கவிதையைக் கட்டமைப்பது என்பதைக் காட்டிலும் அந்தக் கவிதையோடு நம்மைக் கட்டிவைத்தல் வேறொரு நிலை.

பழைய மதியமென்பது எண்ணெய் தூக்குக்கு அடியில் பரப்பிய செய்தித்தாளாக என உவமைகள் வேறு....

எதார்த்தச் சிந்தனையாக நீங்களாக நானும் நானாக நீங்களும் இருக்கும்போது எல்லாச் சண்டைகளும் முடிந்துவிடுகின்றன என அவ்வப்போது நேர்மறை எதார்த்தம் பூக்கிறது.
ஆன்மா இல்லை என உறுதிப்படுவது ஆன்மா இல்லாததைவிடக் கொடுமையானது என்று சுடும் வரிகள் இன்னும் நிறையத் தந்திருக்கலாம் தான். 

நண்பனொருவன் பல வருடங்களுக்கு முன் ஓர் அறுவைசிகிச்சைக்கு உள்ளானான். சிறு தலைவலி கூடத் தாங்கமுடியாதவன். அறுவைசிகிச்சை முடிந்து வந்தவன் பாதி மயக்கத்திலேயே கிடந்தான். அவன் உணர்வு பெற்று வரும்பொழுது அந்த வலியை அவன் எப்படி எதிர்கொள்வான் எனச் சந்தேகம் எனக்கு. 
அறுவை சிகிச்சை மருத்துவரைப் பார்த்து இந்தக் கேள்வி கேட்டபோது நோயாளியைவிட நீங்கள் சென்சிபிளா இருக்கிறீர்கள் என்றார் பிறகு என்னதான் மயக்கமருந்து தந்தாலும் அந்த வலியையோ வலி வந்துபோன தடத்தை அவர்தானே உணரவேண்டும் என்றார். 
அப்படியானால் அந்த மயக்கத்தின் வேலை என்ன என்று யோசித்தேன். 
கவிதைகளும் அவற்றில் வாழும் புனைவுகளும் அப்படித்தானே நம்மை எங்கோ அழைத்துச் செல்கின்றன. ஒரு கட்டத்தில் புனைவுகளுக்கப்பால் எதார்த்தம் தன் முகத்தைக் காட்டுகையில் , அவ்வளவு நேரம் நூலோடு காற்றில் போதையில் மிதந்த ஒரு பட்டம் நூல் கைவிட்ட பறத்தலைப் பெற்று ஒரு விடுபடுதலைத் தாங்கி ஒரு மரத்தில் தலைகீழாகச் சிக்கி தன் பலமான குறுக்காக வேயப்பட்ட ஈக்குச்சியினாலேயே கிழிக்கப்படுவதைப் போன்று பட்டம் தன்னை உணர்கிறது..

வெறுமை ஒரு சோதனைக்குப் பின் 
நம்பிக்கையாகிறது 
என்ற வரி கூட பெரும் விடுபடுதலைத் தரும் எதார்த்தம். 


பிரபஞ்சன் கூறுவார், ஒரு நல்ல கதை படிப்பது ஒரு நல்ல காஃபி சாப்பிடுவதைப் போல. 
ஒவ்வொருவருக்கும் ஒன்றின் மேல் ப்ரியம். அப்படியான ரசவாத ரசனைக்காரர்களுக்கு
"பொல்லாத மைனாக்கள்" ஒரு குவளை காஃபி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....