அருஞ்சொற்பொருள் விமர்சனம்

அருஞ்சொற்பொருள்
(தமிழ் அறிவோம் 2)
கவிஞர் மகுடேசுவரன்.

பொதுவாக சமூகவலைத்தளத்தில் வட்டாரமொழி என்ற பெயரில் புழங்குபவன் நான். 
அதேபோல் தமிழ் இலக்கணம் குறிப்பாக வல்லெழுத்துகள் மிகும் இடங்களை மிகச் சரியாகத் தவறாக எழுதுபவன். 
' அருஞ்சொற்பொருள்' போன்ற நூலுக்கு என் வாசிப்பனுபவத்தை எழுதுகையில் எந்தத் தவறும் இடக்கூடாது என்றே பயமாக இருக்கிறது. அந்தளவிற்கானத் தேர்ந்தப் புத்தகம். 

அடிப்படை தமிழ் இலக்கணமாக எழுத்து சொல் திணை என ஆரம்பித்து வேற்றுமை உருபுகளில் வலிமிகும் மிகா இடங்கள் எனப் பட்டியலிடுகிறார். 
அது தவிர அவரிடம் அவரது நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்தப் பதில்களும் இடம்பெற்றுள்ளன. 
உதாரணமாக 
முயற்சித்தான், முயல்கிறான் எது சரி என்ற கேள்விக்கு 
முயல் என்ற வினைவேரிலிருந்து ஆரம்பிக்கிறார். பயிற்சித்தான் வருவதில்லை. பயின்றான் என்கிறோம்.
ஆட்சித்தான் வருவதில்லை. ஆண்டான் என்கிறோம்.
அதுபோல் முயற்சித்தான் என்று அல்ல, முயன்றான் என்று கூறுகிறார்.
DVD என்பதற்கு எண்ணியற் பன்திற வட்டு என்று மொழிபெயர்த்ததன் நியாயத்தை விளக்குகிறார்.

சுவாரஸ்யத் தகவல்களாக, 
சல்லி என்று ஒரு பகுதி வருகிறது. 
சல் என்பது ஒலிக்குறிப்பு.
அதிலிருந்து வந்தது சல்லம்.  
இடைமெய்க்குறையுற்றது சலம். நீர் நகர்வின் சிற்றொலிக்குறிப்பால் தோன்றிய சொல்.
சிற்றுருக்களைப் பிரிப்பதே சலித்தல். அதற்கானக் கருவி சல்லடை. 
சல்லிக்காசு என்பது காசு வகையின் சிற்றலகு.
பொங்கலன்று மாட்டுக்கொம்பில் கட்டும் பணமுடிப்புக்குச் சல்லிமாலை என்று பெயர்.
சல்லிமாலை கட்டப்பட்ட காளை சல்லிக்கட்டுக் காளை என்கிறார்.
இன்னொரு தகவலாக , திருவிளையாடல் திரைப்படத்தில் நக்கீரர் குறைகாணும் செய்யுளிற்கு விளக்கம் சொல்கிறார். 

எனக்கு எப்பொழுதும் தமிழாசிரியர்களைப் பிடிக்கும். அவர்களிடம் சொல்வதற்கு ஆயிரம் தகவல்கள் இருக்கும் என நம்புபவன் நான்.
'கொங்குதேர் வாழ்க்கை' என்று ஆரம்பிக்கும் செய்யுளை விளக்க வரும் கவிஞர் மகுடேசுவரன், கொங்கு என்றால் மகரந்தம், பூந்தாது என்கிறார். 
கொங்கு நாடு என்றால் மகரந்தம் இறைந்து கிடக்கும் நாடு , பூந்தாது நாடு , மகரந்த நாடு என்றும் பொழில் வாய்ச்சி யே பொள்ளாச்சி என்றாயிருக்கலாம் என்கிறார்.

இது தவிர வட்டார வழக்கில் தாட்டி விடுதலுக்கான வினைவேரிலிருந்து அர்த்தம் காண்கிறார். 

நாம் பள்ளிக்கூடத்தில் படித்தும் படிக்காமலும் தவறவிட்ட இலக்கணத்தை அயர்ச்சியுறாமல் பல சுவாரஸ்யத் தகவல்களுடன் தருகிறார். 

அருஞ்சொற்பொருள்  நம் மொழி மீதான ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....