விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 7

 பழனிக்குமார்

மதுரை

விற்பனைப்பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 7

மருந்துவிற்பனைப் பிரதிநிதியின் வேலைகள் என்று சுருக்கமாகச் சொல்வீர்கள் எனில், மருத்துவரைப் பார்க்கவேண்டும், அவரிடம் நமது நிறுவனத்தின் மருந்துகளைப் புரோமோட் செய்து அவரை எழுத வைக்க வேண்டும். இதற்குச் சமமானக் கடினமான வேலை, அந்த மருத்துவர் நம் மருந்தை எழுத ஆரம்பித்துவிட்டால் அவரது அல்லது அவருக்கு அருகில் இருக்கும் மருந்துக்கடையில் நம் மருந்தை ஸ்டாக் வைப்பது. அவர் ஆயிரக்கணக்கான மருந்தை எழுதுவார், அதில் நம் மருந்து எது என்பதை அந்தக் கடைக்காரருக்குத் தெரியப்படுத்தவேண்டும். இதற்காக மருந்துக்கடைகளுக்குச் சப்ளை செய்ய ஒரு மொத்தவிலைக்கடையை (மெடிக்கல் ஹோல்சேல்) நியமித்திருப்போம். 

அந்த மருத்துவர் எழுதுகிறாரா என்பதைப் பார்க்கவேண்டும், அந்தக் கடைக்காரர் வாங்கிவிட்டாரா எனப் பார்க்கவேண்டும், அந்தக் கடைக்காரருக்கு அந்த ஊரின் மொத்தவிலைக்கடைக்காரர் சப்ளை செய்துவிட்டாரா எனப் பார்க்கவேண்டும், இதற்கு இடையில் அந்த மருந்து அந்த மொத்தவிலைக்கடைக்காரரிடம் இருக்கிறதா என்றும் அவ்வப்போது பார்க்கவேண்டும். இது தான் சங்கிலித்தொடர். 

நான் மேலாளராகப் பொறுப்பேற்றிருந்த இரண்டு வருடத்தில் வெளியூரில் எங்களுக்கு இருந்த இரண்டு மொத்தவிலைக்கடைக்காரர்களில் ஒருவர் கடையை மூடுவதாக அறிவித்தார். உடனடியாக இன்னொரு மொத்தவிலைக்கடையை நியமிக்க வேண்டும். விற்பனை பாதிக்கக்கூடாது. ஏனென்றால் நமது சந்தை விற்பனையாளர்களின் சந்தை (sellers market)என்பதிலிருந்து நுகர்வோர்களின் சந்தை (buyers market) என்று மாறிவிட்டது. ஒரு நுகர்வோர் வேண்டும் பொருள் கிடைக்கவில்லை என்றால் காத்திருந்து அதே பொருளை வாங்கும் காலத்தை எல்லாம் கடந்துவிட்டோம். ஆதலால், ஒரு புது ஹோல்சேல் காரரை அணுகி அவரை எங்கள் கம்பெனிக்கு டீலர்ஷிப் எடுங்க என்று வற்புறுத்தி எடுக்கவைக்கவேண்டிய கட்டாயம். 

கம்ப்ளீட் சர்வே எடுத்து , அந்த ஊரின் பெரிய ஹோல்சேல்காரர்களின் பட்டியல் என்னிடம் இருந்தது. எங்கள் கம்பெனி அப்போது நடுத்தர வர்த்தகம் கொண்ட கம்பெனி. ஊரில் பெரிய ஹோல்சேல் காரர்கள் எங்களைப் போன்ற கம்பெனிகளை மதிக்கமாட்டார்கள் என்பது நிதரசனம். மீறிப்போனால் "பாக்கலாம் பா "என்று சொல்வார்களே தவிர, வேலை நடக்காது. ஒருவரைத் தேடிப்போனால் அவர் நம் கம்பெனிக்கு டீலர்ஷிப் எடுக்கவேண்டும் என்ற திட்டத்தோடு இரண்டு நிறுவனங்களைத் தேர்வு செய்துவைத்திருந்தேன். இதற்கு என் மேலதிகாரிகளிடம் நான் அனுமதி வாங்கவேண்டும். அந்த ஊரின் பாரம்பர்ய முறையில் நெடுநாட்களாக ஹோல்சேல் வைத்திருக்கும் ஒரு நிறுவனம், புதியதாய் வளரவேண்டும் என்று துடிப்புடன் இருக்கும்  ஒரு நிறுவனம் என்று இரு நிறுவனங்கள். 

ஒரு நாள் காலை என் மேலதிகாரியின் அறையில் அதை விவாதிக்கக் காத்திருந்தேன். இருவரின் நிறுவனங்களின் பெயரைச் சொன்னதும், அனுபவங்களால் மெருகேறிய என் மேலதிகாரி, பாட்ஷா படத்தில் போலிஸ் ஆபிஷர் , மாணிக்கம் என்ற பெயரைக்கேட்டதும் , மாணிக்கமா என்ன பண்றார் ஆட்டோ ஓட்டுறாரா என்று அதிர்வது போல் ஒரு நிறுவனத்தின் பெயரைச் சொன்னதும் ஆனார். 

என் மனதிற்குள் புதியதாய் வளரவேண்டும் என்ற துடிப்புடன் இருக்கும் நிறுவனத்தைத்தான் ஹோல்சேல் க்குச் சம்மதிக்கவைக்கவேண்டும் என்று கணிப்புடன் இருந்தேன். ஆனால், என் மேலதிகாரி புருவங்களை உயர்த்தியது, அந்தப் பாரம்பர்யமாய் நெடுநாட்களாய் இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனம் தான். அந்தப் பெயருக்கு அதிர்ந்தார். 

"நீங்க பார்த்திட்டீங்களா ரெண்டு பேரையும் பழனிக்குமார், "

"இல்ல சார் , நாளைக்குப் போறேன் "என்றேன். 

"அந்த நிறுவனத்தின் முதலாளி என் கணிப்பு சரியாக இருந்தால் ஒரு மெடிக்கல் ரெப்பாக இருந்தவர் என்று நினைக்கிறேன். அவர் ஒரு மாதிரி. பார்த்துப் பேசுங்கள். நம்ம டீலுக்குச் சரிவருமா என்று பாருங்கள்" என்றார்,

"ஏன் சார், பணம் ஒழுங்கா தரமாட்டாரா "என்றேன்.

"இல்ல அப்படி சொல்லல, அவர்ட நீங்க மெடிக்கல் ரெப்பா இருந்தீங்களா" என்று ஒரு கம்பெனியில் இருந்தாரா என்று கேட்கச்சொன்னார். அப்படி ஆம் என்றால் தன் பெயரைச்சொல்லச்சொன்னார். 

மறுநாள் அந்த ஊரில் இறங்கினேன். அந்த நிறுவனத்தைத் தெரிந்த இரு கடைக்காரர்களிடம் விசாரித்தேன். கனக்கச்சிதமாய் சிஸ்டமடிக் என்று தெரிந்தது. 


ஒரு கடைக்காரர் , "பழனிக்குமார், அவருக்கு ஒரு மருந்து வேண்டும் என்றால் என்னிடம் தான் வந்து பில் போட்டு வாங்குவார், இத்தனைக்கும் அந்த மருந்திற்கு அவர் தான் ஹோல்சேல். கேட்டா அது சட்டப்படி குற்றம். நான் யார் பேர்ல பில் போடுறது, கடைல தான் வாங்கனும் என்பார்" என்றார். 

என் மேலதிகாரி சொன்னது ஞாபகம் வந்தது " அவர் ஒரு மாதிரி". 

குறைந்தபட்ச நேர்மையாகக்கூட இருக்கலாம்.

காலை பன்னிரெண்டு மணி, அந்த வில்லங்க ஹோல்சேல் க்குச் சென்றேன். 

ஒரு உயரமான வயதான ஆனால் ஸ்திரமான ஓர் ஆசாமி ஜிப்பா போட்டு அமர்ந்திருந்தார். பெரிய மூக்குக்கண்ணாடி போட்டிருந்தார். பெரிய டேபிள். பெரிய வரவு செலவு நோட்டு. எதிரில் ஒரு பெண். அலுவலகப் பணியாளர். அவருக்கும் வயது நாற்பதுக்கும் மேல் இருக்கும். நெடுநாளாய் வேலைபார்ப்பார் போல். காலுக்கு ஒரு சின்ன ஸ்டூல் லாம் போட்டு அதில் கால் வைத்திருக்கும் அளவிற்கு அவருக்கு வசதி செய்யப்பட்டிருந்ததில் தெரிந்தது. 

உள்ளே போனதும், வணக்கம் சார் என்றேன். நிமிர்ந்துப்பார்த்தார். 

என் விசிட்டிங்க் கார்ட் கொடுத்தேன். வாங்கிப்பார்த்தார். 

வாட் ஷேல் ஐ டூ என்றார்.

வீ ஆர் லுக்கிங்க் ஃபார் ஆல்டர்னேட் ஹோல்சேல் சார். அதுக்காக வந்திருக்கேன். உங்கட்ட பேசனும், எப்ப ஃப்ரீ னு சொன்னீங்கனா, அப்ப வரேன். உங்க டைம்ம வேஸ்ட் பண்ண விரும்பல என்றேன். (இது தான் defence shot)

ஏற இறங்கப் பார்த்தார். அமரச்சொன்னார். என்னைய அவ்வளவு எளிதாக யாரும் ஒரு டீலரா நியமிக்கமாட்டாங்களே என்றார். 

ஆர்டர் எடுத்துத்தரோம். சப்ளை பண்ற இடங்களில் எல்லாம் உங்கள் பெயரைச் சொன்னாங்க. அதான் கேட்கவந்தேன். நீங்க எங்க கம்பெனிய எடுக்க விருப்பமானு கேட்க வந்தேன். 

அவரது நிபந்தனைகளைச்சொன்னார். அவருக்கு டீ குடிக்கும் நேரம். எனக்கும் தந்தார். உங்களது அப்ரோச் பிடிச்சிருக்கு தம்பி என்றார். உள்ளே வந்ததும் கார்டைத் தந்தீர்கள்ல அப்படிக்கூட யாரும் பண்றது இல்ல. பூசி மெழுகாம நேரடியாச் சொன்னீங்க என்றார். 

நீங்க மெடிக்கல் ரெப்பா இருந்தீங்கனு கேள்விப்பட்டேன், இவரைத்தெரியுமா என்று என் மேலதிகாரியின் பெயரைச் சொன்னேன். அதே பாட்ஷா படத்தின் போலிஸ் ஆபிஷர் போல் இவரும் ஜெர்க் ஆனார், அவரா, இந்தக் கம்பெனியிலா இருக்கிறார் என்றார். 

ஆம் என்றேன்.

யோசித்தார். என் நிபந்தனைகளுக்குச் சரினா உங்க கம்பெனிய எடுக்கலாம். சொல்லுங்க என்றார். 

மூன்று கம்பெனிகளிடம் விசாரிக்க உத்தரவு சார். மேலதிகாரியிடம் கேட்டுவிட்டு முடிவைச்சொல்கிறேன் என்றுவிட்டு வெளியே வந்துவிட்டேன். 

வெளியே வந்து என் மேலதிகாரியிடம் சொல்லி, என்ன சார் கதை என்று கேட்டேன். 

மெடிக்கல் ரெப்களுக்கு அசோசியேஷன் உண்டு. தீவிர கம்யூனிச சித்தாங்கள் கொண்ட இடதுசாரி அமைப்பு அது. ஆனால் உள்ளூற வலதுசாரி அமைப்பினரும் உண்டு. ரெப் களுக்கான உரிமைகோரும் போராட்டங்களில் ஒன்றுபடும் கூட்டம் ,அரசிற்கு எதிரானப் பொதுவானப் போராட்டத்திற்கு ஆதரவு தந்து போராட அழைத்தால் வலதுசாரியினர், கடனுக்குச் சங்கத்தில் இருப்பவர்கள் ஒதுங்கிவிடுவர். ஆனால் இரு அணியினருமே மெடிக்கல் ரெப்களின் அடிப்படை உரிமை கோரும் விசயத்திலும் தொழிலாளர் சட்டவிதிகளை அமல் படுத்துவதிலும் மும்மரமாய் செயல்பட்டிருந்த நேரத்தில் பனிப்போர் புரிந்தவர்கள் தான் என் மேலதிகாரி( வலதுசாரி) அந்த ஹோல்சேல் நிறுவன முதலாளி (இடதுசாரியும்) யும். இது எல்லாம் அது நடந்த இருபது முப்பது வருடங்களுக்கு முன் அவர்கள் மெடிக்கல்ரெப்பாக இருந்தபோது ஏற்பட்ட அமைப்பு சார் முறைப்பு. இருவருமே சங்கப்பிரதிநிதிகளுக்கானத் தேர்தலில் நின்றவர்கள்.

"எனக்கும் அவருக்கும் ஆகாது பழனிக்குமார், ஆனால் என்னை அவருக்குப் பிடிக்கும். என் வளர்ச்சி, என் புரோமோஷன், என் விற்பனை இது எல்லாம் அவருக்குப் பிடிக்கும். என்னுடைய வளர்ச்சியை ஒரு சீனியராக என்னைப்பார்க்கும்பொழுதெல்லாம் பாராட்டியிருக்கிறார். ஆனால் அமைப்பு ரீதியாக நான் சங்கத்தில் பொறுப்பில் இருந்தபோது என்னிடம் முட்டிக்கொண்டே இருப்பார். அதான் அவர்தானா என்று கேட்டேன்" என்றார். 

கட்டக் கடைசியில் அந்த ஹோல்சேல் நிறுவனத்தை நியமிக்கவில்லை. புதியதாய் மும்மரமாய் இருக்கும் ஒரு நிறுவனத்தைப் பாருங்கள் என்று உத்தரவிட்டனர். எனக்கும் அது தான் சரி என முடிவெடுக்க சில வாடிக்கையாளர்கள் பரிந்துரைத்தனர். 

அன்று இரவு அந்த இடதுசாரி முன்னாள் மெடிக்கல்ரெப் முதலாளி பதினொரு மணிக்கு என்ன முடிவு எடுத்தீர்கள் என்று செய்தி அனுப்பினார். 

வேறொரு நிறுவனத்தைத்தான் கம்பெனி பரிந்துரைக்கிறார்கள் சார் என்று பதில் அனுப்பினேன். 

அது அவர்களின் கோட்பாடு. அப்படித்தான் இருக்கும். அவர்களை மாற்றமுடியாது. எனக்கு முன்னரே தெரியும் .ஆல் த பெஸ்ட் என்று செய்தி அனுப்பியிருந்தார். 


##விற்பனைப்பிரதிநிதியின் தனிக்குறிப்புகள்

#medicalrepnotes

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....