பீஹார் தேர்தலின் பிஜேபியின் வெற்றியை முன்வைத்து...

பழனிக்குமார்
மதுரை.


ஸ்வீட் கடைக்குப் போகிறோம். ஒரு பெரிய ஆர்டர் தரப்போகிறோம். கடைக்காரரிடம் விலை எல்லாம் கேட்கிறோம்.
அவர் அதைத் தயார் செய்ய  ஏதாச்சும் அட்வான்ஸ் தாங்க என்பார்.
வியாபாரத்தில் அட்வான்ஸ் தரலாம். 

அட்வான்ஸ் தராமல், ஆர்டர் டெலிவரி பண்ணும்பொழுது கூட முழு பணத்தையும் செட்டில் செய்யலாம் என்று சில நபர்கள் சொல்லலாம்.


நீங்கள் ஒரு ஃபர்னிச்சர் கடைக்காரரிடம் ஒரு பெரிய மேஜை செய்யச்சொல்கிறீர்கள்.
அவர் அட்வான்ஸ் கேட்பார்.
அதைவைத்து சில பொருட்களை வாங்கிக்கிறேன். மீதிப்பணத்தையும் மேஜை செய்துமுடித்து ஒப்படைக்கும்பொழுது வாங்கிக்கொள்கிறேன் என்று கூடச் சொல்வார்.

நீங்கள் அட்வான்ஸ் தர மறுத்து மேஜையும் செய்தாகி ஒப்படைக்கும்பொழுது அட்வான்ஸ் தராததற்காக பெனால்டிலாம் போடமாட்டார்.


முன்பணம் என்பது எப்படியும் நாம் தரப்போகிறோம் என்பதற்கான அறிகுறிக்கு உள்ளானது.
தரலாம், தராவிட்டாலும் மொத்தமாகத் தரலாம்.

வியாபார நோக்கில் செயல்படும் வியாபாரிகள் கூட முன்பணம் தரவில்லை என்பதற்காக நம்மிடம் வட்டிலாம் போடுவது கிடையாது.


இப்பொழுது கதைக்கு வாருங்கள்.


தனியார் தொழில் நிறுவனங்களுக்கு அட்வான்ஸ் டேக்ஸ் கட்டவேண்டும் என்று மத்திய அரசின் நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
அட்வான்ஸ் டேக்ஸ் என்றால் என்ன.
முதலில் நீங்கள் ஒரு நிறுவனம் வைத்திருக்கிறீர்கள். அதில் நடக்கும் வியாபாரத்திற்கு வருமானத்திற்கு மேல் இருக்கும் லாபத்திற்கு வருமானவரி கட்டவேண்டும். அதற்காகப் பேன் கார்ட் எல்லாம் வாங்கியிருப்பீர்கள். எப்படியும் நீங்கள் கட்டித்தான் ஆகவேண்டும். அந்தளவிற்குக் கட்டமைப்பு உள்ள நிறுவனம் தான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.


ஆனால், அரசாங்கம் என்ன செய்கிறது என்றால், நீ எப்படியும் கட்டுவ, அதற்கு முன்பணம் கட்டிக்கோ என் கிறது.



ஏப்ரல் மாதத்தில் துவங்கும் புது நிதியாண்டிற்குப்பிறகு , ஜூன் மாதத்திற்குள் தாக்கல் செய்து கட்டவேண்டிய வருமானவரியை முன் கூட்டியே அட்வான்ஸ் டேக்ஸ் என்று ஒரு குறிப்பிட்டப் பணத்தை முன் பணமாகக் கட்டச்சொல்லுகிறார்கள். அதற்கு சலுகை தரவேண்டாம். கட்டவேண்டிய வரியை முன் கூட்டியே தருகிறான் என்று அதற்கு மான்யமோ தரவேண்டாம்.


ஆனால், அப்படி ஒரு நிறுவனம் அட்வான்ஸ் டேக்ஸ் கட்டவில்லை என்றால், அதற்கு ஒரு மாதத்திற்கு 1 சதவீதம் வட்டி போடுகிறது நம்மை ஆளும் மத்திய அரசு. கேட்டால் பெனால்டி என் கிறார்கள்.


நான் எப்படியும் கட்டவேண்டிய வரி அது.
அது கட்ட வேண்டிய காலம் இந்த 2020ன் ஜூன்.

ஆனால் 2019 ஏப்ரலிலிருந்து 2020 மார்ச் மாதங்களுக்குள் அட்வான்ஸ் டேக்ஸ் கட்டியிருக்கவேண்டும்.
அப்படி கட்டவில்லை என்றால் வட்டி.


இந்த ஒரு சதவீதத்தில் என்ன வந்துவிடப்போகிறது என்பார்கள். சிறு குறு நிறுவனங்கள் தான் இங்கு ஓரளவிற்கு நேர்மையுடன் வருமான வரி கட்டுபவர்கள். பீஹாரைப் போல குஜராத்தைப் போல ஜி எஸ்டி இல்லாமல், பேன் கார்ட் இல்லாமல் அண்டர்க்ரவூன்ட் பிஸினஸ் வகையறாக்கள் இங்கு குறைவு ( இருக்கலாம், ஆனால் வரி வருமானத்தில் இந்தியாவில் தென்னக மாநிலங்கள் அதிகம் தருகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை)


அப்படியான நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமே 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதத்திற்குள் தான். அவர்கள் கட்டும் வரியில் ஒரு சதவீதம் என்பது பெரிய தொகை ஆகும். இப்படி முன்பணமாய் வரி வாங்கவேண்டிய கட்டாயம் என்ன?


அவர்கள் கல்லாவில் பணம் இல்லை.
இல்லாவிட்டால் கல்லாவில் இருக்கும் பணம் பெரும் முதலாளிகளுக்குத்தான்.

ஒரு சதவீத வட்டி யை வடிவமைத்தவன் கார்ப்பரேட்களின் நண்பனாய்த்தான் இருப்பான்.

யாரோ ஒருவன் வடிவமைக்கும் திட்டத்தில் ஒட்டுமொத்த கார்ப்பரேட்டும் பலனடையும்.
காரணம் அவர்களுக்கு அந்த ஒரு சதவீத வட்டி பெரிய தொகையாய் இருக்கப்போவதில்லை. ஆனால் சிறு குறு தொழில் நடத்தும் முதலாளிகளுக்கு இது பெரும் தொகை.


இந்தப் பதிவின் நோக்கம் அட்வான்ஸ் டேக்ஸின் தீமைகளை ஒப்பாரி வைக்க அல்ல.


பிஜேபியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தமிழகத்தில் இவ்வளவு பிரதிபலித்தாலும், இப்பொழுது கூட பீஹாரில் ஜெயிக்கிறார்கள் எப்படி என்பதைச் சொல்வதற்காகத்தான்.



இந்த அட்வான்ஸ் டேக்ஸ் விசயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று ஒரு டீக்கடையில் இருக்கும் பத்து பேர்களுக்கு நடுவில் நின்று சொன்னால், யாருக்கும் புரியாது.

மக்களுக்கு எந்த இடத்தில் புரியவில்லையோ அந்த இடத்தில் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள், அங்கு பிஜேபி ஜெயிக்கிறது.


FASTAG எடுத்துக்கொள்ளுங்கள். எந்தச் சட்டத்தின் அடிப்படையில் அனுமதித்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா, PAYTM தான் முதலில் டேக் வழங்கியது, மோடியின் முகத்தோடு.


எல்லா வாகனங்களுக்கும் அவசியம் என்று அவர்கள் கூப்பாடு லாம் போடவில்லை.
ஒவ்வொரு டோல் கேட்டிலும் போர்ட் வைத்தார்கள். நாளிதழில் மூன்றாம் பக்கத்தில் பதிப்பித்தார்கள். முடிந்தது கதை.


எனக்குத் தெரிந்து முதியவர்களின் குடும்பம் இருக்கிறது. கார் வைத்திருக்கிறார்கள்.
FASTAG பற்றிய குழப்பத்தில் அது இல்லாவிட்டால் அபராதம் போன்ற செய்திகளால் வாங்கினார்கள்.

அவர்கள் ஓட்டுவது மதுரைக்குள் மட்டும் தான்.
ஒரு முறை பிள்ளையார்பட்டி போகவேண்டும் பழனிக்குமார், எவ்வளவு ஆகும் டோலுக்கு என்றார்கள். போய் வர 120 ஆகும் என்றேன் 24 மணி நேரத்திற்குள் சென்று வர.

அவர்கள் எதற்கும் இருக்கட்டும் என 500 ரூபாய் ரீ சார்ஜ் செய்யச்சொன்னார்கள். ஏதாவது அவசரத்திற்கு ஆன்லைன் ரீசார்ஜ் செய்யத்தெரியாது என்றார்கள். செய்துகொடுத்தேன்.

எனக்குத்தெரிந்து மீதி 380 ரூபாய் ஒரு வருடத்திற்கும் மேலாக அந்த வங்கியின் FLOATING பிஸினசில் இருக்கிறது.
இதுமாதிரி எத்தனை டேக் கில் விரிச்சுவலாய் பணம் இருக்கும்.


இதை யாரிடம் சொல்வீர்கள்.
கார் இல்லாதவர்கள் காது கொடுக்கமாட்டார்கள்,
கார் இருப்பவர்களில் செழிப்பானவர்கள் காது கொடுக்கமாட்டார்கள்,
கார் இருப்பவர்களில் என்னைப் போன்று அதிகம் பயணிப்பவர்கள் அதைப் பொருட்படுத்தமாட்டார்கள் (அவர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதால்)
அதையும் மீறி கார் வைத்துக்கொண்டு இவ்வளவு தொகையா எனக் கணக்கு பார்க்கும் நபர்கள் மட்டும் தான் புலம்புவார்கள்.


மக்கள் தங்கள் குறைகளைக் கூறி ஒன்று சேராமல் இருக்கும்பொழுது எதிரி பலமானவனாய் தெரிவான்.



FASTAG விசயத்திற்குக் கார் இருப்பவர்களே இத்தனை வகையாய் பிரியும் பொழுது , FASTAG தேவையா என்ற கேள்விக்குப் பலம் கூடாமல் பார்த்துவிடுகிறார்கள்.



மக்களுக்குத் தங்களின் குறைகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதைத் தெரியும்வரை அவர்களால் ஒன்றுபட முடியாது. பீஹாரை எடுத்துக்கொள்ளுங்கள், மாயாவதி, பஸ்வான் போன்றோர் செய்யும் திருவிளையாடல்கள் பிஜேபியைப் பலமாக்குகிறது.



ஜிஎஸ்டி யை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஜிஎஸ்டியை அமல்படுத்தினால் விலை குறையும் என்றார்கள், பிஜேபியின் ஆதரவாளர்கள்.
அவர்களை அழையுங்கள். எந்தப் பொருள் குறைந்தது என்று சொல்லுங்கள் எனக் கேளுங்கள்.

மருத்துவத்துறையை எடுத்துக்கொள்ளுங்கள்.
எந்தச் சாமான்யன் ஜி எஸ் டியை அமல்படுத்தியதால் தன் சட்டைப்பையிலிருந்து ஒரே மருந்தை ஜிஎஸ்டிக்கு முன்னால் வாங்கியதை விடக் குறைவான காசைக் கொடுத்து ஜிஎஸ்டி பில்லில் வாங்கினான் என்று கேளுங்கள்.


உதாரணத்திற்கு ஜி எஸ் டிக்கு முன்னால் ஒரு மருந்தின் விலை 100 ரூபாய் என்றால் மருந்தின் அடக்க விலை 95.23 காசு தான் மீதி 4.77 காசு நாட்டுக்குக் கட்டிய வரியாய் இருந்தது.

ஆனால் ஜி எஸ் டிக்க்குப் பின் அதே 100 ரூபாய் இருந்த மருந்தில் சாமான்யன் கொடுக்கும் காசு 89.29 தான் மருந்திற்கு, நாட்டிற்குக் கொடுக்கும் வரி 10.71 காசுகள் .


கிட்டத்தட்ட 125 மடங்கு மருந்திற்கு வரியை அதிகமாக்கி வரி வருமானத்தை அதிகமாக்கியும் கஜானாவில் காசு இல்லை என் கிறார்கள்.
மருந்து விலை குறைந்தது என்றார்கள், சாமான்யன் அதே காசில் தானே இன்றும் செலவளிக்கிறான்.
அதற்கு ஏன் பதில் சொல்வதில்லை.
ஏன் என்றால் மக்களுக்கு இந்த நுணுக்கத்தைப் புரிந்துகொள்ள அறிவு இல்லை.
அல்லது தெரிந்துகொள்ளும் அளவிற்கு விழிப்புணர்வு இல்லை.


எப்பொழுது பொதுமக்களிடம் தாம் ஏமாற்றப்படுகிறோம் என்ற விழிப்புணர்வு வரவில்லையோ, அப்பொழுது ஆட்சியாளர்கள் சொல்வது தான் 'வேத' வாக்கு என்று நம்பும் படிக்கான ஒரு கோஷ்டி உருவாகும். ஆட்சியாளர்கள் அவர்களையே மூலப்பொருளாய் நமக்குள் ஊடுருவச்செய்து நம்மை தோற்கடிப்பார்கள்.



மதம் மற்றும் எல்லை பிரச்சினைகள் இவை  இரண்டையும் தவிர்த்து ஆரோக்கியமானப் பல கருத்துரையாடல்களை பிஜேபியின் ஆதரவாளர்களிடம் நீங்கள் பேசிப்பாருங்கள்.
உங்களுக்கு ஆரோக்கியமானப் பதில் கிடைக்காது அல்லது பயனுள்ள தகவல் கிடைக்காது.



பிஜேபி செய்வது எல்லாம் ஒருவனைப் பழித்து , ஒருவனைத் தாக்கித் தன்னைத் தக்கவைக்கும் அரசியல்.

தானாய் உருவாக்கி அதன் மூலம் ஆதரவு கேட்கும் திராணி அவர்களுக்கு இல்லை.


இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் பாகிஸ்தானும், சீனாவும் தான் அவர்களின் அரசியல்.
இதை மக்களுக்குப் புரியாதவண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள்.


பிஜேபி ஜோடிப்பது ஒரு கட்டமைப்பு வேலை.
மிகவும் பிரமிப்பாய் இருக்கும்படிக்கு சீட்டுக்கட்டுகளைக் குலைத்துப்போட்டு ஒவ்வொன்றாய் அடுக்கிக் கோபுரம் கட்டி வித்தை காட்டிக்கொண்டிருக்கிறது பிஜேபி.


மட்டையைத் தூக்குகிறார்கள், பந்து அதுவாய் விழும்படிக்கு நாம் ஒன்று படாமல் பார்த்துக்கொள்கிறோம். பந்து சிக்ஸருக்குப் போகிறது. பார்க்கும்கூட்டம் வலிமையானவன் அடித்துப்பந்து போகிறது என்று நாமாகவே போதை ஏற்றிக்கொள்கிறோம்.



நம்பிக்கைக்குரிய காற்று ஒரு திசையிலிருந்து எல்லா மரங்களும் கூடி எழும்பப் போலியாய் கட்டமைக்கப்பட்ட சீட்டுக்கட்டுகளின் கோபுரம் சரியத்தான் போகிறது. அப்படியான மரங்களை ஒருங்கிணைத்து ஆட்டி அசைப்பது தான் காலத்தின் கட்டாயம்.

பழனிக்குமார், மதுரை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....