அமெரிக்காவின் புதிய அதிபர் ..
எப்பொழுதும் இல்லாமல் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளில் மும்மரமாய் இருக்கிறோம்.
ட்ரம்ப் தோற்றுக்கொண்டிருக்கிறார் என்பது இந்திய சமூக வலைதளங்களில் மகிழ்ச்சிப் பெருக்கைக் காண்பித்தது. நம் நண்பர்கள் ட்ரம்ப் பற்றிய கேலி சித்திரங்களையும் மீம் களையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்கள்.
முடிவு அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்படுவதற்கு முன்பே ட்ரம்ப் பின் பின்னடைவைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறோம்.
இதுவரை இல்லாத ஒரு வல்லரசின் அதிபரை இத்தனைக் கேலிகளுக்கு உள்ளாக்கியிருக்கிறோமா என்றால் ஞாபகம் இல்லை. இவை எல்லாவற்றிற்கும் ட்ரம்ப் தான் காரணம் என்பது நிதர்சனம்.
ட்ரம்ப் தன் முட்டாள்தனங்களை மறைக்கத்தெரியாதவரா என்று தெரியவில்லை.
பதவியோ , வயதோ அல்லது பாதுகாப்பிற்கு இருக்கும் வசதிகளோ அவருக்குத் தடையாய் இருக்கவில்லை , தன்னுடைய தாந்தோன்றித்தனமானப் பேச்சிற்கு.
அவர் என்ன நினைத்தாரோ அதைப் பற்றிப் பேச அவரே முடிவெடுத்துக்கொண்டார். தன் கிறுக்குத்தனங்களின் வாயிலாக ஏகாதிபத்தியங்களின் நிழலை அவர் பரப்ப நினைத்தார்.
உலகின் பல மூலைகளிலிருந்து ட்ரம்ப் பற்றி எள்ளி நகையாட அவரே வாய்ப்பு வழங்கினார். கிறுக்குத்தனங்கள் தனக்குள் இருப்பதை எந்த மனிதனும் ஒரு காலகட்டத்தில் புரிந்துகொள்ளத்தான் செய்வான். காலம் அப்படியான வாய்ப்பைத் தரும். ட்ரம்ப் அந்தப் பருவத்தை இன்னும் எட்டவில்லை போலும். தகுதியும் பதவியும் ஒரு கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ்காரனின் நிலைத்தன்மையை ஒத்தது. ஒருவருக்குத் தகுதி வருவதற்கு முன் பதவி வரலாம். ஆனால் தன்னைத்தானே நிலைபெறச்செய்ய அதற்கானத் தகுதிக்குத் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும். அது ட்ரம்பே இருந்தாலும் அது தான் நியதி.
இவ்வளவு ஏளனங்களுக்கு நடுவிலும் ட்ரம்ப் தன் ஓட்டுகளின் மூலமாக பைடனுக்குக் கடினங்களைத் தருகிறார். பெரும்பான்மையானத் தோல்வியைத் தான் தழுவிவிடாதபடிக்கு வீழப்போகிறார். அப்படியானால் அமெரிக்காவில் பாதி மக்கள் ட்ரம்ப்பை நம்புகிறார்கள். அவரது கிறுக்குத்தனங்களை மக்கள் பழகிக்கொண்டனர். அல்லது அப்படியான கிறுக்குத்தனங்களை ரசிக்கின்றனர். பைடன் மீதான நம்பிக்கையை விட ட்ரம்ப்பின் மீதான பொறுமையே மேல் என்றும் இருக்கலாம்.
இதோ பைடன் வரப்போகிறார். ட்ரம்ப்பின் தோல்வியைக் கொண்டாடுவதன் வாயிலாக பைடனின் வெற்றியை சிலர் ரசிக்கிறார்கள்.
எப்படி ட்ரம்பின் இயல்பை ஒரு அமெரிக்க அதிபர் பதவி மாற்றிவிடவில்லையோ அதே போல் பைடனுக்கும் ஏற்படலாம்.
ஒரு தனி மனிதனின் இயல்பு என்பது வேறு . அவர் வகிக்கும் பதவிக்கானத் தன்மை என்பது வேறு.
பைடனோ, ட்ரம்ப்போ யார் வேண்டுமானாலும் அமெரிக்க அதிபர் ஆகலாம்.ஆனால் அமெரிக்க அதிபர் என்ற பதவி எப்பொழுதும் ஏகாதிபத்தியத்தின் நிழலை உலகெங்கும் பரப்ப நினைக்கும் ஒரு பதவி. ஆதிக்க வல்லூறுகளின் எண்ணங்களால் எழுப்பப்பட்ட நாற்காலியில் அமர்பவர் அமைதிப்புறாவின் சாயலைக் கொண்டிருக்கலாம். ஆனால், சாயலும் இயல்பும் வேறு வேறு.
எப்பொழுதும் போல ஒரு நாட்டின் புதிய அதிபருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம். ஏனென்றால் நம் இயல்பு அது தானே.
கருத்துகள்
கருத்துரையிடுக