தூத்துக்குடியும் புயலும்



தூத்துக்குடினு ஒரு ஊர். துறைமுகம் இருக்குறனால பணப்புழக்கம் இருக்குற ஊர். அரசுக்கு வருவாய் தர ஊர். ஆனால் இரண்டு வருடத்துக்கு முன்னதாக தூத்துக்குடி மாநகரில் மழை இல்லை. ஆனால் ஒட்டப்பிடாரம் , கோரம்பள்ளம், தெய்வச்செயல்புரம், புதுக்கோட்டை போன்ற தூத்துக்குடிக்கு அருகில் உள்ள வெளியூரில் பெய்த கனமழையில் பெருக்கெடுத்த ஒரு நாளைய மழை, கால்வாய் வழியாகக் கடலுக்குப் போகும்வழியில் தூத்துக்குடி மாநகரில் புகுந்தது. அந்த ஊர் மக்கள் ஒரு சொட்டு மழை இல்லாமல் அவ்வளவு தண்ணீரை உள்வாங்கினர். 

பிரைண்ட் நகர், அண்ணா நகர்   மில்லர்புரம் போன்ற பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தால் மோட்டர் போட்டு ஒவ்வொரு தெருக்காரர்களும் அடுத்தத் தெருவிற்குக் கடத்தி ஒவ்வொரு தெரு தண்ணீரும் மெயின்ரோட்டிற்கு வந்து பிறகு வடியவேண்டும். சாதாரண அடைமழைக்கே தண்ணீர் வடிய மூன்று நாட்கள் பிடிக்கும். இத்தனைக்கும் அந்தப் பகுதிகளில் நிறைய மேல்தட்டு மக்கள் குடியிருக்கும் எலைட் பகுதிகள். 

மருந்துவிற்பனை பிரதிநிதியின் மேலாளராக, ஒருமுறை  மழை விட்ட மூன்று நாள் கழித்து தூத்துக்குடி சென்றிருந்தேன். நிறைய மருத்துவர்கள் இருக்கும் ஒரு பகுதியே தீவாக மாறியிருந்தது. ஒரு மருத்துவர் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் செல்ல, ஒருவர் குடும்பத்தோடு உறவினர் வீடு புக, ஒருத்தர் மட்டுமே இருந்தார். அந்த இரவு அந்த மருத்துவரைப் பார்த்துவிட அந்தப் பகுதிக்குள் போனோம். 
அந்தத் தெரு முழுக்க தண்ணீர். தெருவின் முக்கில் மோட்டர் போட்டு தண்ணீரை ஒரு பையன் வெளியேற்றிக்கொண்டிருந்தான். அந்த டாக்டர் அந்தத் தெருவின் மத்தியில் இருந்தார். 

வண்டியை நிறுத்தியதும் ,  உள்ளே போகமுடியாது சார் என்றான் என் உடன் வேலை பார்த்த ரெப். பள்ளம் மேடு கூட பரவால, சகதியா இருந்து மாட்டிக்கிட்டா ஷூ லாம் வீணாகிப்போய்விடும் என்ற பயம் இருந்தது. 

நான் மெதுவாக அந்த மோட்டார் தம்பியிடம், தண்ணீர் வடிய எவ்வளவு நேரம் ஆகும்பா, அந்த க்ளினிக் வர போகனும் என்றேன்...
அந்தப் பையன் ஏற இறங்கப் பார்த்தான்.  " அண்ணே.மூணு நாளா மோட்டர் போட்டு வெளியேத்திட்டு இருக்கோம்ண்ணே, அடுத்தடுத்தத் தெரு தண்ணி வந்திருதுனான்."

சரிப்பட்டு வராது என்றுவிட்டு, பேண்ட்டை முழங்கால் வரை ஏத்திவிட்டு ரெப்பை பின்னாடி அமரச்செய்து ( அவன் தண்ணீருக்குள் போகும்போது வண்டியை நிறுத்திவிடுவான் என்று பயம்) நான் வண்டியைத் திருகி தெருவை நோக்கித் திருப்பினேன். மோட்டர் தம்பி, முன்னாடி நடுல தான்ணே கொஞ்சம் அதிகமா இருக்கும். அத தாண்டிட்டீங்கண்ணா, போயிரலாம்னான். 

ரெப்,  என் காதில் , "இவ்வளவு ரிஸ்க் எடுக்கனுமா சார் என்றான்," ஒரு நாளைக்கு பத்து டாக்டரைப் பார்த்தாக வேண்டிய கட்டாயம். ஏற்கனவே ஆறு அல்லது ஏழு டாக்டர் தான் பார்த்திருந்தோம். வேறு டாக்டர்கள் வாய்ப்பு இல்லை. இன்னொன்று, அந்த முதிய பெண் மருத்துவர் எனக்கு மிகவும் தெரிந்தவர், போனால் ஆர்டர் கூட கிடைக்கும் என்று என் உள் பட்சி சொன்னது.

 
வண்டியை நன்றாகத் திருகி தெருவிற்குள் நுழைந்தேன். தண்ணீர் வரவேற்றது. அந்த மோட்டர் தம்பி சொன்னது போல், உள்ளே நுழைந்ததும், பாதி சக்கரம் வரை தண்ணீர் . 
இருவரும் காலை மேலே தூக்கிக்கொண்டோம்.
 என் வலது காலில் பிரேக் இருந்ததால், அதன் அச்சத்தில் காலைக் கொஞ்சம் இறக்கி வைக்க, வலது ஷீ நனைந்திருந்தது. அந்தப் பள்ளத்தைத் தாண்டியதும், ஒரு வீட்டின் வெளிப்புற லைட்டின் வெளிச்சத்தில் தண்ணீருக்கு நடுவில் ஒரு கரை தெரிந்தது. 
அதில் ஒருவர் மட்டும் கால் வைத்துக்கொள்ளும்படியாய் தரை. அங்கே வண்டியை நிறுத்தி, என் இடது ஷூகாலை  வைத்தேன். முன்னும் பின்னும் தண்ணீர். வேறு எதும் பள்ளம் இருக்குமா என்று எட்டி எட்டிப் பார்த்தோம். தெரியவில்லை. துணிந்து வண்டியைத் திருகினேன். 

மறுபடியும் அடுத்த நுழைவு. பெரிய பள்ளம் இல்லை. க்ளினிக் முன் கொஞ்சம் மேடு இருந்தது. அங்கு வண்டியை நிறுத்திவிட்டு , மருத்துவரைப் பார்க்கப்போனோம். 
நோயாளிகள் யாரும் இல்லை என்பதால் உடனே அனுமதி கிடைத்தது. 

உள்ளே சென்று வழக்கம்போல் புராடெக்ட்டை ப்ரோமோட் செய்து விட்டு, ஆர்டர் எதும் இருக்குமா என்றேன். 

அந்த பெண் மருத்துவர், கண்ணைச் சுருக்கி, ஒரு வாரமா பேஷண்ட்டே வரல என்று இழுத்தவர், " ஆமா, நீங்க எப்படி வந்தீங்க என்றார்"

" நடுல ஒரே ஒரு கரை தெரிஞ்சது டாக்டர்" அதை வைத்து வந்துவிட்டோம் என்றேன். 

இது எல்லாம், நடந்தது பத்து வருடங்களுக்கு முன். இப்பொழுது இல்லை. ஆனால் இப்பொழுதும் அந்தப் பகுதி அப்படியே தான் இருக்கிறது. 

சினிமா படங்களில் எல்லாம், மதுரை , தூத்துக்குடி , நெல்லை காரைங்க என்றால் முரட்டுத்தனமாகவும், கடினமானவர்களாகவும் தானே காட்டியிருக்கிறார்கள். இத்தனை வருடப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தெற்கைங்க பொறுமைசாலியும் தான். 

இதோ, சென்னையில் மழை என்றதும் சமூக வலைத்தளங்கள் ஒப்பாரி வைக்கின்றன. சேனல்கள் முக்கியத்துவம் காண்பிக்கின்றன. ஒரு புயல் தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி விருதுநகர் என்று தென் தமிழகத்தை ஆட்டுவிக்கப்போகிறது என் கிறார்கள். தூத்துக்குடியில் மழை விழுக ஆரம்பித்துவிட்டது என் கிறார்கள். தாமிரபரணி பெருக்கெடுத்தால் நீர் மேலாண்மை மூலமாகச் சங்கரன் கோவில் வரை கூட நீரை திருப்பிவிடுவார்கள். ஆனால், ஆற்றுப்பாசனம் செய்யும் விவசாயிகளின் நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தால் அவர்களது நிலைமை என்னாகும் என்று தெரியவில்லை. இது ஒன்றும் மெட் ரோ சிட்டி இல்லை. இங்கு தண்ணீர் என்றால் அங்கு போவோம் என போய் விட. மண்ணும் மண் சார் வாழ்வியலும் கொண்ட பூமி. 

எவன் வருகிறானோ இல்லையோ,  வருவதை நாங்களாகவேத்தானே எதிர்கொள்ள வேண்டும். கடக்க வேண்டும். அப்படித்தான் தென் தமிழகத்து ஊர் நாட்டானுகளாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

எதிர்கொள்கிறோம். புயலோ , மழையோ. இயற்கையைக் கொண்டாடி வாழ்பவனுக்கு என்ன பயம் இருந்துவிடப்போகிறது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....