டைனிங் டேபிள்...

டைனிங் டேபிள்...
அழகான மர வேலைப்பாடுகள்.. சில டிசைன்கள் தந்திருக்கிறார்கள். ஒரு கோலம் போட்டதுபோல  நடுவே தடயங்கள் வைத்திருக்கிறார்கள். அம்மேசையின் மீது நடுவே சில பழங்களை வைத்துக்கொள்வதற்கும், உப்பு, மிளகுப் பொடி என நிரந்தரமாய் சிலவற்றை வைத்த்துக்கொள்வதற்கும் வசதி கொடுத்திருக்கிறார்கள். இப்படி சில டைனிங் டேபிள் பார்த்தேன். 

எங்கள் வீட்டிலும் ஒரு டேபிள் இருக்கிறது. அதை டைனிங்க்கிற்காக வாங்கி வைத்துக்கொண்டு மற்ற எல்லா வேலைகளையும் அதில் செய்கிறோம். கால்களுக்கு மட்டும் டிசைன் கொடுக்கப்பட்டு மிகவும் எளிமையாய் இருக்கும் எங்கள் வீட்டின் டைனிங் டேபிளின் மேல் பகுதி கரும்பச்சை நிறத்தினாலான மைக்கா போடப்பட்டிருக்கும். எனக்கு விவரம் தெரிந்து டைனிங் டேபிள் வாங்கி ஒரு மாதம் தான் அதில் அமர்ந்து சாப்பிட்டிருக்கிறேன்.

இப்பொழுது அதில் என்ன என்ன சுமை ஏற்றியிருக்கிறோம்..-.ஒரு எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், புதிதாய் வாங்கப்பட்ட திண்பண்டங்கள். வாங்கிய புத்தகங்களில் இன்னும் படிக்கப்படாமல் இருக்கும் புத்தகங்கள், அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் கடிதங்கள் (மொத்தமாய் சேர்ந்த பின் தொகுக்க வேண்டும்), வங்கிகளிலிருந்து வந்திருக்கும் கடிதங்கள், தண்ணீர் பாட்டில்கள், லேப்டாப், நான் கவிதை என எழுதி பத்திரப்படுத்த நினைத்த சில காகிதங்கள்...எல்லாவற்றையும் சுமந்து கொண்டு ஒரு குவளை சோற்றுக்கு அனேகமாய் அந்த டேபிள் மிகவும் ஏக்கமாய்த்தான் பார்க்கும் என்னை.

என்ன செய்வது...அலுப்பாய் வேலையிலிருந்து வந்ததும், உடை மாற்றி, முகம், கை, கால் கழுவி ஈரம் தலையில் சொட்ட, சொட்ட....கால்களை மடக்கி சமணங்கால் என்று சொல்வார்களே அப்படி மடக்கி, அமர்ந்து, ஒரு தட்டை கீழ் வைத்து, கையில் சோற்றை எடுத்து விட்டு, அது வாய் நோக்கி மேல் வர, சாதத்தை நோக்கி நம் முதுகுத்தண்டும் வளைய முகம் கீழ் பாய....வாயாற., வயிறாற , பசியாற எங்கு அமர்ந்து சாப்பிட்டாலும், இம்முறையில் சாப்பிடும்பொழுது மனதும் மகிழ்ந்துகொள்கிறது. 

மிக அரிதாக இப்பொழுதும் கீழ் அமர்ந்து சாப்பிடும் வண்ணம் சில உணவு விடுதிகள் இருக்கின்றன. செல்லும்பொழுது அப்படி அமரும் ஆசையில் செல்வதுண்டு. ஆனால் அப்படி விடுதிகள் குறைந்துவிட்டன. மூப்பு அடைவதாலும், சிலர் நாகரிகம் என்ற பெயரில் மனதளவில் மூப்படைவதாலும், கீழ் அமர்ந்து சாப்பிடுவது குறைந்து விட்டது.. நான் கூட விருந்தினர் வருகை புரியும் பட்சத்தில் அனைத்துச் சுமைகளையும் எங்கள் டைனிங் டேபிளிலிருந்து நீக்கிவிட்டு சாப்பாட்டுப் பொருள்களை அதில் ஏற்றுவதுண்டு. காலம் சில பிழைகளைச் செய்யும். அதை சில் சமயம் நாம் ஆராதித்துக்கொள்கிறோம். சில உரிமை இருக்கும் நண்பர்கள் வரும்பொழுது கீழ் அம்ர்கிறாயா...டேபிளில் அமர்கிறாயா என்றே கூட நான் கேட்டிருக்கின்றேன். யாரும் என்னைத் தவறாகவோ, கேவலமாகவோ நினைத்ததில்லை. அவர்களுக்கும் அப்பழக்கம் பிடித்திருக்கும் போலும். சில மதிப்பிற்குரிய நண்பர்கள் வரும்பட்சத்தில் நான் எதுவும் கேட்பதில்லை. எங்கள் டைனிங் டேபிள் அதன் உண்மையான சுமைகளை ஏந்திக்கொள்ளும் அந்நாட்களில் மட்டும். அதை நானே செய்து கொண்டிருக்கின்றேன். அப்படிப்பட்ட விருந்தினர்கள் எல்லாம் சென்ற பிறகு...என் சாப்பாடு தரையில் தான்...உணவருந்துதல் மண்ணோடு சம்பந்தப்பட்டது தான் எனக்கு கொஞ்சம் மனம் சம்பந்தப்பட்டதும் கூட......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8