பால்யக்காதலிகள்...

பால்யக்காதலிகள்
பரஸ்பரமானவர்கள்
அல்லர்!

என்
இதயக் கல்லுக்கு
முதல் உளி
செய்து கொடுத்தவர்கள்
அவர்கள்!
என்
கடிகார முட்களை
முன்னோக்கியே
நகர்த்திக்கொண்டிருந்தவர்கள்
அவர்கள்!
தாஜ்மகாலை
படம் வரைந்து
பாகம் குறிக்கச் செய்த
மும்தாஜ்கள்
என் பால்யக்காதலிகள்!

சில
தெருக்களின்
நீள அகலங்களை
அங்கலாய்க்கச் செய்தவர்கள்
அவர்கள்!
மிட்டாய் துண்டுகளைத்
துண்டாடி
அதன் பாதியைப்
பகிரப் பயிற்றுவித்தவர்கள்
என் பால்யக்காதலிகள்!

கோயில்விழா
இரவு கச்சேரிகளில்
இசையை மீட்டுக்
கொடுத்தவர்கள்
அவர்கள்!
கொடுக்காமல்
புதைக்கப்பட்ட
சில
வாழ்த்து அட்டைகளில்
இன்னமும் வாழ்பவர்கள்
என் பால்யக்காதலிகள்!

என்
சாளரங்களை
வேவு பார்த்த
தேவதைகள்
அவர்கள்!
வெயில் நேரத்து
மழையாய்
என் வாசல்
நனைத்துச் சென்ற
மழைக்காயங்கள்
என் பால்யக்காதலிகள்!

காலியாயிருக்கும்
பக்கத்து இருக்கைகளைக்
கண்களால்
குடிகொள்ளச் செய்தவர்கள்
அவர்கள்!
மேகம்
விலகிய பின்னும்
கலையாத வானவில் கூட்டம்
என் பால்யக்காதலிகள்!

பழைய பூங்காக்கள்
கோயில்களின்
எனக்கானப்
புராதனங்கள்
அவர்கள்!
என்
பால்யப்புகைப்படத்தின்
நிழற்படமாயிருக்கும்
பால்யக்காதலிகள்
பரஸ்பரமானவர்கள்
அல்லர்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....