முதல் பிறழ்வு

முதல் பிறழ்வு

முதல் பிறழ்வுனு தலைப்பைப் பார்த்ததும் பிறழ்வு பொறழ்வுனு கவிதை கிவிதை எழுதிருவேனு வயசானவங்கலாம் நெஞ்ச பிடிச்சிர வேணாம். அதுலாம் பண்ண மாட்டேன். பயப்படாம படிக்கனும்.
அப்புறம் ஏன் பிறழ்வுனு தலைப்புனா அப்படித்தான்....ஒரு அந்தி வேளை நேரம், ஆகச்சிறந்த தருணம், மழைமுடிந்த இரவு, பிரயத்னம், இப்படிலாம் வார்த்தைகள போட்டாத்தான் நமக்கு இலக்கியவாதினு மார்க் போடுறானுக சீனியர் இலக்கியவாதிக...

சரி விடுங்க...விசயத்துக்கு வாங்க மக்களே..

 சமயத்துல முதன்முதலா ஏதாவது ஏடாகூடமா பண்ணி அது சொதப்பிருக்கும். உடனே இப்படித்தான் அந்த காலத்துல னு சீரியஸா கதை சொல்லாதீங்க..நான் சொல்லப்போறதுலாம் வெட்டிக்கதை தான்.

முதல் தடவையா பண்ண மிஸ்டேக் பற்றிய வெட்டிக்கதை.( யாருய்யா அது கல்யாணம் அந்த லிஸ்ட்ல வருமானு மனசுக்குள கேக்குறது....)

மெடிக்கல் ரெப் ஆகி நான் பஜாஜ் எம்80 வண்டி வச்சிருந்தேன். மதுரைல இருந்து வெளியூருக்கு வண்டில போறதா இருந்தா நானும் என் நண்பனும் சேர்ந்து போவோம். அவன் புதுசா வண்டி வாங்குனான். அதுவும் பைக்.ஸ்பெலணடர் ப்ளஸ் பைக்.
 புது பைக் ல திருப்பாசேத்தி ஒரு நாற்பது கி.மீ இருக்கும். போக்லாம் னு ப்ளான்.

சாயங்காலம் ஆறு மணிக்கு கிளம்பி போறோம். அவுட்டர்ல வண்டி அப்படியே மிதக்குற மாதிரி சிலாகித்து போறோம்..
வண்டி நான் தான் ஓட்டுனேன்.
இருட்ட ஆரம்பிக்குது.

நான் மெதுவா கேட்டேன்..

எவ்ளோடா மைலேஜ்
பின்னாடி உட்கார்ந்திருக்குற பைய சத்தத்தைக் காணாம்.
என்னடானு பார்த்தா
சட்டை பாக்கெட்ல கிமீ. குறிச்சு வச்சிருந்த பேப்பர்ல எழுதி  மைலேஜ் கணக்கு பண்றாப்ல...

83 கி.மீ ஆச்சு. இன்னும் ரிசர்வ் வரல...னான்.
ஏ...யப்பா முரட்டு மைலேஜ்ஜால இருக்குனு நானும் ஓட்டுறேன்.
பதினைஞ்சு கி.,மீ தாண்டி வண்டி சுண்ட ஆரம்பிச்சுச்சு....

டே..ரிசர்வ் வருது போல டா..
சூப்பர் னு உடனே  மைலேஜ் 97னு சொல்றான்.

ரிசர்வ் வைக்க அந்த பட்டன திருக கைய விடுறேன்...
அப்பத்தான் தெரியுது...பக்கி..வண்டி வாங்குனதுல இருந்து ரிசர்வ்ல வச்சுத்தான் ஓட்டிருக்கு...கடைசில பெட் ரோல் இல்லாமத்தான் வண்டி நிக்குது...

என்னடா ரிசர்வ் லயே வச்சு வண்டி ஓட்டிருக்க...னு நான் கேட்டேன்...
ரிசர்வ்க்கு கீழ வைக்கனும் னு சொன்னான்.
பெட் ரோல் நிறைய இருந்தால் கீழ் நோக்கியும் தீர போற மாதிரி இருந்தா மேல் நோக்கியும் அந்த பட்டன் திருகி பைக் ஓட்டுறது காந்தி காலத்துல இருந்து இருக்குறது.

 என்னடா கம்பெனிக்காரனே மைலேஜ் 60 போட்டு ஒரு ஸ்டார் மார்க் போட்டு கண்டிஷன் அப்ளைனு போட்டுருக்கான். இவன் எண்பது நூறுனு கிமீ கணக்குல அடிச்சுவிடுறானேனு பார்த்தா கடைசில ரிசர்வ் பட்டன திருக தெரியாம வண்டிய தள்ளிக்கிட்டு நடக்குறோம்.

ஆக வண்டி வாங்குனப்ப பைக் ஓட்டுன முத சந்தோசத்துல ரிசர்வ் எப்படி திருகனும்னு தெரியாம அவதிபட்டு இருக்கோம்.

அடுத்ததா டிவிஎஸ் கம்பெனில சென்ட் ரா னு ஒரு பைக் போட்டுருந்தானுக. செம மைலேஜ்னு வாங்கியிருந்தேன். வண்டி வெயிட்டே இருக்காது காத்தா இருக்கும் சார்னு என்ட புரொமோட் பண்ணி வித்துட்டானுக. எனக்கு அப்ப புரியல. அவுட்டர்ல போனா அடிக்குற காத்துக்கு வண்டி தானா புதருக்குள தள்ளுது...இது பரவாலங்க..கோயம்புத்தூருல வேல பாத்துட்டு இருந்தப்ப மேட்டுப்பாளையம் ரோட்டுல ப்ரீகால் தொழிற்சாலை  தாண்டி போறப்ப ப்ரைவேட் பஸ்காரன் எவனாவது ஒட்டிக்கிட்டு கடந்து போனான்னா அதுக்கே வண்டி காத்துக்கு ஆடும்.
இப்ப அது இல்ல பிறழ்வு. கணபதி பஸ் ஸ்டாண்ட் தாண்டி ஒரு காம்ப்ளக்ஸ் ல ஏடிஎம் போயிட்டு வந்து பைக் சென்ட்ரால ஏறி உக்காந்து சாவி போட்டு ஸ்டார்ட் எடுத்துட்டேன். ஒரு ஆள் வந்து என் கைய புடிக்கிறார். என்ன சார் னு கேட்டேன்...
என்ன பண்றீங்க னு கேட்டார்..
நான் புரியாம பேந்த பேந்த னு முழிச்சுட்டு அவர பார்த்தா..அவர் சொல்றார்
இது என் வண்டி னு....
ஆமா ..அது அவரோட வண்டி.

அப்புறம் தான் பாக்குறேன் அது என் வண்டி இல்ல. என் வண்டி என் லக்ஷ்மி பக்கத்துல சாஞ்சு நிண்டாலும் கம்பீரமா நிண்டுட்டு இருந்துச்சு.
நான் வண்டி மாத்தி உக்கார்ந்து ஸ்டார்ட்டும் பண்ணிட்டேன்.
நல்ல வேல அந்தாளு புரிஞ்சுக்கிட்டு சிரிச்சாப்டி...

என்னய்யா கண்டுபிடிக்கிறீங்க...ஒரே லாக்க ரெண்டு வண்டிக்கு போட்டுருக்கானுக...
அந்தாளு மட்டும் வரலைனா வண்டிய நான்பாட்டுக்க எடுத்துட்டுப் போயி ஆட்டைய போட்ட கேஸ்ல உள்ள போயிருப்பேன்.


அதுல இருந்து வண்டிய பாத்து நம்பர பாத்துத்தான் உக்காருறது.

மெடிக்கல் ரெப் ஆகி முதல் தடவையா தேனி ஊருக்குப் போனேன். தேனி மாதிரி ஊருகளில் முழு நாள் வேலை இருக்கும். நம்ம சீனியர் முதல் தடவை சாயங்காலம் போ..னு சொன்னார்.

தேனிக்கு போக இரண்டு மணி நேரம் ஆகும்னும் நாலு மணிக்கு பஸ் ஏறுனா ஆறு மணிக்கு போயிரலாம்னும் கனக்கச்சிதமா ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் உள்ள நுழையிரேன்.
ஒரு சோலமலை ப்ரைவேட் பஸ் காரன் தேனி தேனி தேனி னு கூப்பிட்டான். கடைசி சீட்ல மட்டும் தான் இடம். எனக்கு அப்பலாம் ட்ரைவருக்கு நேரா இருக்குற சீட்ல தான் உட்காருற பழக்கம்னு அடுத்து நிண்ட ஒரு அரசு பஸ்ல ஏறுனேன். இப்ப உங்க மனசுக்குள்ள அந்த கரகாட்டக்காரன் காருக்கு போடுற பிஜிஎம் ம கேட்டுக்கோங்க.

முன்னாடி ஜம்முனு உக்காந்து சமஸ்தானம் வேடிக்கைப் பார்க்குது. கண்டெக்டர் டிக்கெட் போடுறாரு. தேனி எடுத்தாச்சு. ட்ரைவர் முரட்டு ஆளா இருக்காப்புடி. அடி தூள்...அண்ணன் இன்னைக்கு வண்டிய பரத்தப் போறாரு...( பரத்தப் போறாரு னா கன்னாபின்னானு விரட்டப்போறாருனு அர்த்தம்)

ஏறி உக்காந்துட்டு சட்டையோட முதல் இரண்டு பட்டன கழட்டி விட்டுட்டு அரசு படத்து சரத் குமார் மாதிரி காலர ஏத்திவிட்டுக்கிட்டாரு. அடி செம...கண்டிப்பா வண்டிய விரட்டிருவாருய்யானு சொல்லி முடிக்கிறதுக்குள்ள வண்டி ஆப் ஆயிருச்சு. ரேடியேட்டர திறந்து பாக்குறானுக. கியர்கிட்ட திறந்து பாக்குறானுக. ட்ரைவர் ஜிடி நாயுடு மாதிரியும் கன்டெக்டர் சர் சி வி ராமன் மாத்ரியும் பேசிக்கிட்டானுக. இவனுக இரண்டு பேரும் சேர்ந்து அடுத்த பஸ் ஐன்ஸ்டீன கூப்பிட்டு ஆலோசனை பண்ணானுக. கடைசில வண்டிய தள்ளீவிட்டு நகட்ட ஆரம்பிச்சப்ப நாலரை மணி. மெதுவா ஐம்பது கிமீ தாண்டல மழை பெஞ்சது. இருட்ட ஆரம்பிச்சது.

பஸ் மெதுவா போச்சு.
பொறுமை இழந்து ட்ரைவர்ட்ட ஏண்ணே மெதுவா போறீங்கனு கேட்டேன்...
மழை பெய்யுதுல சார் னார்.

(ஏன்யா நம்ம என்ன கப்பலுலயா போறோம்...மழ பெஞ்சா உனக்கென்னயா..)
நான் அப்படியே அவரையே பார்த்தேன்.
கன்டெக்டர் முன்னாடி இருந்து பஸ்ல முன்னாடி லைட் கொஞ்சம் ப்ராப்ளம் னார்.

 பஸ்ஸ்க்கு இரண்டு கண்ணுல ஒரு கண்ணு நொள்ளக் கண்ணு. அதாங்க முன்னாடி இரண்டு லைட்டுல ஒன்னு ப்யூஸ் போயிருச்சு. இது அந்தாளுக்கு கொஞ்சம் ப்ராப்ளமாம்.பத்தாக்குறைக்கு வண்டி எடுத்ததுல இருந்தே மெதுவா உருட்டுறாரு ட்ரைவர்.

தூரத்துல லைட் போட்டு சைக்கிள் வந்தாக்கூட ஆக்ஸிலேட்டர மிதிக்காத நல்ல மனுஷன்யா அவரு.
இப்ப ஒரு லைட்ட உத்துப்பார்த்து ஆக்ஸிலேட்டர மிதிக்காம வர்றாரு.
யோவ்...அது பஸ் ஸ்டாப்புல இருக்குற டீக்கடையோட பெட் ருமாக்ஸ் லைட்யா...
இந்தாளூ ஏதோ வண்டி வருதுனு ஆக்ஸிலேட்டர மிதிக்கமாட்றாரு...

ஐயயோ...இவைங்கள நம்பி நான் எப்ப தேனி போயி..வேல பாத்து கம்பெனிய முன்னேத்துறது.

அடுத்து ஆண்டிப்பட்டி கணவாய் மலை.

வண்டி நிக்குதா ஏறுதானு தெரியல..அப்படி நகருது. இறங்கி வண்டிய தள்ளிவிட்டா தேவலைனு தோணுச்சு...

இது பரவால..வண்டி இறங்குனப்ப ட்ரைவர் சொல்றாரு...ரோட்டுல வரையுற நடுக்கோடு சரியா தெரியலையாம் போட்டு நாளாச்சாம். மங்கலாருக்காம் அதான் ரோடு க்ளியரா தெரியலையாம்...

ம்கும்...ஆமா...அப்படியே தெளிவா தெரிஞ்சுட்டாஆஆஆஆஆஆஆஆஆஆலும் இவர் ஓட்டிருவாருனு தோணுச்சு.
கடைசியா மணி ஏழரை நான் தேனி இறங்குனப்ப.
இனி நான் அட் ரஸ் விசாரிச்சு வேலைக்குப் போயி டாக்டர பாத்து நைட்டே திரும்பனும். விளங்கும்.
ஒரு மருந்துக்கடைல முகவரிய விசாரிச்சுட்டு டீய குடிச்சுட்டு மறுபடியும் மதுரைக்குப் போக தேனி பஸ் ஸ்டாண்ட் வர்றேன்.

சார்..வாங்க ரிட்டர்னா..மதுரை மதுரை...னு கத்திக்கிட்டு

அண்ணன் நிக்குறாப்புடி..முரட்டு மீசையோட அதுவும் அந்த சட்டை காலர தூக்கிவிட்டப்படி....
அதே பஸ்...
வாடா வா..இன்னைக்கு தேனில ஏறி நாளைக்கு மதுரைல இறங்கவா...னு வேற பஸ் ல ஏறுனேன்.
அதுல இருந்து புதுசா ஊருக்குப் போறதுனா டைம்ம சரியா ப்ளான் பண்ணிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்துல ஒரு கிராமம். கிராமம் னா நெடுஞ்சாலை ரோட்டுல பத்து கடை இருக்கும் அவ்வளவுதான் ஊரோட நீளமே.
நான் வேலை பார்த்த கம்பெனில ஆயுர்வேத மருந்துகள் இருந்தன. அதுனால கிராமங்களில் இருக்குற சித்தா ஆயுர்வேத அப்புறம் க்வாக் டாக்டர்களையும் பார்ப்போம்.
அந்த ஊருல இறங்கி ஒரு பலசரக்குக்கடைல ஒரு பெண் சித்தா மருத்துவர் பேர சொல்லி விசாரிச்சேன்.
அவர் வெளிய வந்து..அந்தா தெரியுதுல ஒரு போஸ்ட் அந்த பச்சை கலர் வீடுனு காமிச்சார்.
ஊரோட நீளமே பத்துகடை தான். அந்தம்மா வீடு அதையும் தாண்டி இருந்தது.

நான் போனேன் . அந்த வீட்டுல ஒரு அக்கா சாயங்காலம் வீட்ட கூட்டிட்டு இருந்துச்சு.

அக்கா...டாக்டர் இருக்காங்களா.னு கேட்டேன்.
ஆங்..உள்ள உக்காருங்கனு ரூம்ல உக்கார வச்சது.
டாக்டர் வருவாங்கனு உக்காந்திருந்தேன்.

தில்லு முள்ளூ படத்துல மீசை இல்லாத ரஜினி தேங்காய் சீனிவாசன்ட்டயே வந்து உங்க முதலாளி இருக்காரானு கேக்குற சீன் தான் அது.

நான் உக்காந்திருக்கேன். அந்த நைட்டி போட்ட அக்கா உள்ள வந்து டாக்டர் சீட்டுல உக்காருது.

மேடம் நீங்கதான் டாக்டருனு தெரியாமனு ஒரு அசடு வழிஞ்சு பெர்பாமன்ஸ் தந்தேன் பாருங்க.....அடாடாடாடாடாடாடாடா....ஆர்யா கூட அப்படி பண்ணிருக்க மாட்டான். அப்படி அசடு வழிஞ்சேன்.

அதுல இருந்து யார தேடி போனாலும் பார்த்துதான் பேசுறது.

ஏன்னா நமக்கு  வாய் வேற  சும்மா இருக்காது.

ஒரு மருத்துவமனைல ஒரு முகாம் நடத்துனாங்க. நானும் என் நண்பனும் சேர்ந்து அதை ஒருங்கிணைச்சு மருத்துவமனைக்கு உதவியா இருந்தோம்.
அதுல விழாவிற்கு முதல் நாள் அந்த ஏரியா கவுன்சிலருக்கு அழைப்பிதழ் கொடுத்து கூப்பிடப் போகனும். நாங்க தான் போனோம்.

ஒரு காம்பவுண்ட் வீடு மாதிரி. சந்து. முன்னாடி கேட் பூட்டிருக்கு. வெளிய கூடி பூட்டு போட்டு பூட்டியிருக்கு. ஆனா உள்ள பத்தடி தூரத்துல ஒரு அக்கா துவைச்சுட்டு இருக்காங்க...

நண்பன் சொன்னான்..பூட்டியிருக்கே...
நான் சொன்னேன் உள்ள ஆள் இருக்காங்களே...
என்ன பண்ண னு வாசல் க்கு முன்னாடி நண்பன் நிக்க நான் பின்னாடி நிண்டுக்கிட்டு...

சார் ...னு சவுண்ட் கொடுத்தேன்.
உள்ள இருந்து ஒரு ஆண்ட்டி அரக்க பறக்க வந்துச்சு....
கவுன்சிலர் இருக்காங்களா...
என்ன விசயம் ..னு அவங்க கேட்டாங்க..
அந்த மருத்துவமனை பேர் சொல்லி இன்விட்டேஷன் கொடுக்கனும் னோம்.

உடனே நான் தான் கவுன்சிலர் மத்ததுலாம் அவுக தான் னு கொஞ்சம் வெக்கப்பட்டு சிரிச்சது...(அதாவது அக்கா கவுன்சிலர் பதவி. மற்ற வேலைகள் எல்லாம் அவுக வீட்டுக்காரராமாம். அதாவது மாமா)

உள்ளே அந்தம்மா நிக்குது.
வெளியே என் நண்பன் அவனுக்குப் பின்னாடி நான்.

இன்விட்டேஷன நாங்க யார்ட்ட கொடுக்க னு நண்பனுக்கு பின்னாடி இருந்து கேட்டேன்.
நண்பன் முன்னாடி நிண்டுகிட்டு பின்னாடி என்னைய திரும்பி முறைக்கிறான்.

அவுக வர லேட்டாகுமேனு அந்தம்மா சொல்லிட்டு
உள்ள வாங்க னு சொல்லுச்சு..


வெளிய பூட்டிருக்கே....இது நானு
யாரும் வந்திருவாங்கனு அவுக தான் பூட்டிட்டு போயிருக்காங்க....இது அந்தம்மா...

இப்ப நான் என் நண்பன்ட்ட...நம்ம வருவோம்னு தெரியுமோனு கேட்டேன்...
அவன் சிரிச்சுட்டான்...

அதுல இருந்து நம்ம வாய பூட்டு போடனும் அப்படி அதுவா ஓபன் ஆனாலும் கூட இருக்குற ஆள சிரிக்காதனு சொல்லிட்டு கமெண்ட் பண்ணிக்கனும்னு யோசிச்சுக்கிட்டேன்.

ஒரு முறை வேலை நிமிஷமா திருநெல்வேலி போயிருந்தப்ப நானும் என் மருந்து விற்பனை பிரதிநிதியும் பாளையங்கோட்டைல வேலை பார்த்துட்டு இருந்த இரவு நேரம். திடீருனு கண்ண உறுத்தி தூசி விழுந்த மாதிரி ஆயிருச்சு. பயங்கர தூசி மாதிரி அரிக்க, பக்கத்துல இருந்த கண் டாக்டர்ட்ட உடனே போயிட்டேன். அவர் பார்த்துட்டு தம்பி இது கண்வலி...அப்படினு ஒரு சொட்டு மருந்து வாங்கி போடச்சொன்னார். நான் வெளிய வந்ததும் லீவு சொல்றதுக்காக என் மேலாளருக்கு போன் பண்றப்ப அவர் சொன்னார் நைட்டு தங்கிட்டு காலைல வா லீவு போட்டுரு. நைட்டு தூங்காம அலையாத. உடனே கண்வலி எரிச்சல் தாங்க ஒரு சொட்டு மருந்து சொல்லி அதைப் போடு னார்.

நம்ம எப்படியும் மதுரை போயி ஒரு கண் மருத்துவரைப் பார்க்கத்தானே வேண்டும்னு டாக்டர் சொன்ன மருந்தை வாங்காமல் என் மேலாளர் சொன்ன மருந்தை வாங்கி நைட்டு ஊத்திக்கிட்டேன். நம்மளே நம்ம கண்ணுக்கு சொட்டு மருந்து ஊத்துறத ஆய கலைகள் லிஸ்ட்ல ஏன் சேக்காம வச்சிருக்காய்ங்கனு தெரியல. கண்ணுக்கே குறி பார்த்து ஊத்துனாலும் கை நடுங்குது. இல்லாட்டி கண்ண மூடிக்கிறோம். சொட்டு வெளிய விழுந்திருச்சு. இப்ப இமைக்கிட்ட சொல்லிட்டேன். கண்ண மூடாதனு சொல்லிட்டு மல்லாக்க படுத்துக்கிட்டு கண்ணுக்கு நேரா சொட்டு மருந்து பாட்டில் சாச்சு வச்சு கண்ண பே...னு (ஏற்கனவே நம்ம கண்ணு முழிக்காமலே முழிச்சமாதிரி தான் இருக்கும்) முழிச்சா சொட்டு மருந்து கரெக்டா கன்னத்துல விழுது. சரினு உசரத்தைக் குறைச்சு கண்ணுக்க்ட்ட வச்சு ஊத்துறோம்னு கண்ணையே குத்திக்கிட்டா என்ன பண்றது.  சரினு பல்ல கடிச்சுக்கிட்டு கண்ண திறந்து ஊத்தி ஒரு வழியா அடுத்த நாள் கிளம்பி மதுரை வந்தாச்சு. சாயங்காலமும் ட்ராப்ஸ் ஊத்தி பாத்துரலாம்னு பார்த்தா அடுத்த நாள் காலைல சத்ரியன் படத்து க்ளைமாக்ஸ் விஜயகாந்த் மாத்ரி கண்ணு சிவப்பா இருக்கு. சரியாகல. சரினு காலைல மதுரைல டாக்டர பாக்கப்போறேன்.

அவர் கண்ண பார்த்துட்டு என்ன சொட்டு மருந்து போட்டீங்கனு கேட்டார். மருந்தைச் சொன்னேன். இதை யார் உங்களுக்குச் சொன்னதுனு கேட்டார்.
என் மேலாளரை அவருக்குத்தெரியும். அவர் பேரச் சொல்லி நாளைப்பின்ன அவர் இவரைப் பார்க்கவந்து எதுக்கு நமக்குஇதுனு கொஞ்சம் சொதப்புனேன்.
உங்களுக்கு கண்வலி குறைஞ்சிருக்கு. ஆனா நீங்க ஊத்துன சொட்டுமருந்துதான் கண்ணு முழுக்க நிக்குது. நாளை காலைல வாங்க அதுவரை கண்ணை ஒரு ஆயிரம் தடவை யாவது வெதுவெது சுடுதண்ணில கழுவிருங்க.. எத்தனைதடவை கழுவுனீங்க னு நாளைக்கு காலைல வந்து சொல்லுங்கனு அனுப்பிட்டார்.

நான் என் மேலாளருக்கு போன் பண்ணி சார் நீங்க சொன்னீங்கனு மருந்த ஊத்துனா, இப்படி ஆயிருச்சேனு கேட்டா...அவர் கேக்குறாரு...நீ இன்னுமா அதை ஊத்துற..நான் உன்னைய நைட்டு மட்டுந்தான ஊத்துனு சொன்னேன்...னு..

விளங்கும். அன்னைக்கும் லீவு போட்டு வீட்டுக்குப் போயி டாக்டர் சொன்னமாதிரி வெதுவெதுப்பான தண்ணீல நிறைய தடவை கழுவி அடுத்த நாள் டாக்டர பாக்க போனேன்.

கண் ஓரளவிற்கு சிவப்பு விலகி இருந்தது. நான் போறப்ப டாக்டர் நோயாளிகளோட உக்காந்து பேசிட்டு இருந்தார். என்னையப் பார்த்ததும்...

பார்த்தீங்களா..தம்பி..இப்ப உங்க கண்ணு எவ்ளோ அழகா இருக்குனு...
ம்கும்...கழுவி கழுவி ஊத்துனா நல்லாத்தான் இருக்கும்னு மனசுக்குள நினைச்சுட்டு சிரிச்சேன்.

அந்த வரவேற்பறையில ஒரு நாலு பேஷண்ட் உக்கார்ந்திருந்தாங்க.
டாக்டர் என்னைய காமிச்சு இந்தப் பையன் நேத்து வந்தப்ப ரெண்டு கண்ணும் அவ்ளோ சிவப்பா ரோஜா பூவாட்டம் வந்தாப்புல. இப்ப எப்படி இருக்கு பாருங்கனு என்ன கண்ண காமிச்சுட்டு

தம்பி , நான் உங்களுக்கு என்ன வைத்தியம் செய்யச்சொன்னேனு இவங்களுக்குச் சொல்லுங்கனார்.

நானும் அங்க நிண்டுக்கிட்டு அங்க உக்காந்திருந்த நாலு நோயாளிகளுக்கு இதுல என்ன கொடுமைனா ஒரு ஆளு கண்ணுல சொட்டு மருந்து ஊத்தி கண்ண மூடிட்டு காதால கேட்டுக்கிட்டு இருக்கார்.
சொன்னேன்.
என் கண்ணு சிவப்பா ஆகி ட்ராப்ஸ் தப்பா ஊத்தி இன்பெக்ஷன் ஆயிருச்சு.
அப்புறம் சார்ட்ட வந்தேன். சார் தான் சுடு தண்ணில ஒரு ஆயிரம் தடவையாவது கழுவு னு சொன்னார். நானும் அதை பண்ணேன். இப்ப பரவால..னு

இந்த மாதிரி சீன்லாம் இந்த ராஜ் டிவில பாலிமர் டிவில விஜய் டிவில காலங்காத்தால ஒரு டாக்டர் ஒரு நோயாளீய உக்கார வச்சு பண்றது மாதிரி இருக்கேனு யோசிச்சேன். அது சரி ..நம்மளும் எவ்ளோ நாளைக்குத்தான் டாக்டர்கள வச்சு பிஸினஸ் பண்றது. அவர் நம்மள வச்சு பண்ணட்டும்னு விட்டுட்டேன். இருந்தாலும் அவர் பண்ணது ஒரு விழிப்புணர்வுதான். அதுக்கப்புறம் யாருக்காவது கண்வலி வந்தா சொட்டு மருந்தே வேணாம் சுடுதண்ணில கழுவுனு தான் சொல்றது. இது எப்படி பிறழ்வு  தலைப்புல சொல்லுறனு கேக்காதீங்க..

அப்படிச் சொன்னாத்  தான் பிறழ்வு.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....