ஜாதக கட்டம்

உங்களுக்கு ஒரு கதை சொல்றேன். இதை சிறுகதையாகக்கூட எழுத முயற்சி பண்ணேன். ஆனால் நிஜம் கொடுக்கும் அளவிற்கு ஒரு சிறுகதை வியப்பையும் அதிர்ச்சியையும் தருமா என்பது என்னால் முடியாத காரியம். அதற்கு முன்னதாக சினிமாவில் பயன்படும் எடிட்டிங் வித்தையை எழுத்தில் செய்வது இயலாத காரியம். இருந்தாலும் உங்கள் கற்பனைகளை ஒரு ரஜினிகாந்த் படப் பாட்டு போல வேக வேகமாக ஓடச்செய்து படித்தால் ஓரளவிற்கு காலத்தை தாண்டி பார்க்கலாம்.

முதலில் பள்ளிக்காலம். எப்பொழுதும்போல ஏரியாக்குள்ள நண்பர்கள் இருப்பார்கள். அப்படி எனக்கும் உண்டு. ஒரு நண்பன் வீட்டிற்கு அடிக்கடி போவது உண்டு. அதே பகுதியில் சில நண்பர்கள் உண்டு,. அவர்களும் எனக்குப் பழக்கம். எப்பொழுதும் அவுட் ஆஃப் பிரேமில் சில ஆட்கள் இருப்பார்கள். குறிப்பாக நாங்க எங்க ஏரியால கிரிக்கெட் விளையாடுறப்ப விளையாட மாட்டானுக. வந்து நிப்பானுக. பார்ப்பானுக. சிரிப்பானுக. பேசமாட்டானுக. அப்படி அங்க சில கதாபாத்திரம் வரும். அதுல ஒருத்தன் எங்க வயசு செட் இல்ல. சின்ன பையன். விளையாடக்கூப்பிட்டாலும் வரமாட்டான். அவனுக்கு அவுட் ஆஃப் பிரேம்னு வச்சுக்கோங்க. முடிஞ்சது பள்ளி எபிசோட்.

கல்லூரி காலம். அதே நண்பன். வேற வீடு. அங்க அடிக்கடி போவேன். அங்க சில அண்ணன்மார்கள் பழக்கம். வீட்டு மாடில கிரிக்கெட் விளையாடுவோம். எப்போதும்போல பக்கத்துவீட்டுல பந்து விழ சுத்தி எல்லா வீட்டுலயும் பிரச்சினை. அதுவும் பக்கத்து வீட்டுல. ஏன்னா அந்த வீட்டுல ஒரு பொண்ணு இருந்தது. நாங்க என்னமோ அந்த பொண்ண சைட் அடிக்க விளையாண்ட மாதிரி அவுங்க டேடி பேசிட்டாப்புடி. ஆனா அதுக்கப்புறம் தான் அந்தப் பொண்ண அங்க இங்கனு பார்த்தோம். பயபுள்ள வண்டில வேகமா போகுறதும் வரற்துமா ஒரு அலப்பறை கொடுத்துட்டு திரிஞ்சிச்சு. அவள விட அவ ஃப்ரண்ட். உண்மையிலேயே என் நண்பன் பக்கத்துவீட்டுக்காரிய விட அவ தோழி தான் அழகு. அவளைத்தான் எங்க ஏரியா பசங்க சைட் அடிச்சானுக.
நிற்க.
பள்ளிப் பருவத்துல ஒரு கேரக்டர் பால் எடுத்துபோடக்கூட இல்லாம வந்து நிக்குமேனு சொன்னேன்ல அவுட் ஆஃப் பிரேம். அவன் அந்த அழகுப் பொண்ணோட தம்பினு நாலு வருசம் கழிச்சுத்தான் தெரிய வருது. அதுனால ஒண்ணும் இல்ல.

நம் ஒவ்வொரு கட்ட வாழ்விலும் சிலர் வருவார்கள். போவார்கள். சிலர் இருப்பார்கள். எந்தத் தொடர்பும் இல்லாமல். குறிப்பாக ஒரே நேரத்தில் கீரை விக்க வர தாத்தா, ஒரே பேருந்தில் செல்லும் பொழுது பாக்குற நடத்துனர் உடன் பயணிக்கிறவர் யாசகம் கேட்க வரவங்க இப்படி. பார்ப்போம். ஆனால் பழக் மாட்டோம். அப்படித்தான் அந்தப் பெண்ணும் அவள் தம்பி அவுட் ஆஃப் பிரேமும்.

கல்லூரி காலம் முடிஞ்சு நண்பன் வேலைக்குப் போறான். நான் முதுகலைக்குப் போறேன். நண்பனோட பக்கத்து வீட்டுப் பெண் என் காலேஜ்ல சேருறா.  நான் போகுற பஸ்லதான் அவளும் வருவா.
 அவளுக்கு என்னையத் தெரியும். நம்ம அப்பாரு இவனைத்தான திட்டுனாரு சண்டைலனு. அதுனால அவ என்னிடம் பேசல. எனக்கும் நல்லாவே தெரியும். அதுனால நானும் பேசிக்கல. ஒரு வருசம் கழிச்சு ஒரு பஸ் ஸ்ட் ரைக் நாளீல் ஒரே ஆட்டோல எங்க கல்லூரி பசங்க போக முடிவெடுத்தப்ப அறிமுகம் ஆனேன். அவள் என் தோழி ஆனாள்.  கல்லூரி எபிசோட் முடிஞ்சது. எப்போதும் போல அவள் காணாம போயிட்டா.
வேலைக்குச் செல்லும் காலம் வருகிறது. என் தோழி/ என் நண்பன் பக்கத்து வீட்டுக்காரியோட ஒரு அழகி தோழி சொல்வேன்ல அவ அடிக்கடி கண்ணுல படுறா. இவளுக்குக் கல்யாணம் ஆகலையா. இவ இன்னும் இந்த ஏரியால சுத்துறா. இவ ப்ரண்ட் என்னானானு இவட்ட கேட்போமா...எப்படி கேக்குறது னு கூச்சம். ஆனாலும் காலம் ஓடுது. இவட்ட கேக்கல.

நான் முழுசா மெடிக்கல் ரெப் ஆகுறேன். ரெப் அசோசியேஷன் கூட்டங்களில் கலந்துக்குவேன். முழுக்க கம்யூனிசம் பேசுற அந்தக் கூட்டத்துல சில என்டர்டெயினர்கள் இருப்பாங்க. அதான் நம்ம கேங்கா இருக்கும். அதுல ஒருத்தர். சீனியர். நல்லா பேசுவாப்புடி. ஆனா மொக்கை போடுவார். அவரோட ஆங்கில உச்சரிப்பு எனக்கு அவ்வளவு பிடிக்கும். ரெப் னா இப்படித்தான் இருக்கனும்னு லுக் இருக்கும். அப்படி ஒரு எக்ஸ்க்யூட்டிவ் லுக்.  தொழில் ரீதியா ஜெயிக்குற இந்த ஆள ஒருவாட்டி ஒரு மருத்துவ்மனைல பார்த்தா, அங்க இவரைப் பற்றி ஒரு கிசுகிசு சொல்றாங்க. என்னடானு பார்த்தா, இவருக்கு டைவர்ஸ் ஆகிருச்சுனு. அடப்பாவமே...கல கல கலனு பேசுறாரு. இவருக்குப் பின்னாடி இப்படி ஒரு சோகமானு தோணும்.

எனக்கு கல்யாணம் ஆகிறது. எதேச்சையாக எங்கள் ஏரியாவில் என் கல்லூரியில் படித்த என் நண்பன் வீட்டுக்கு அருகில் இருந்த அந்தத் தோழியைப் பார்க்கிறேன். தொலைபேசி எண் பகிர்கிறோம்.  பேச ஆரம்பித்தோம். அப்பா அம்மா குழந்தை மாமனார் மாமியார் கணவர் தொழில் வசதி சென்னையில் குடியேற்றம் இப்படி கதைகளைக் கேட்டு விட்டு என் பராக்கிரமங்களைச் சொல்லிவிட்டு அடுத்ததாக அவள் தோழிகள் பற்றி விசாரிப்பு. அவளுக்கும் எனக்கும் தெரிந்த எங்கள் கல்லூரி தோழிகள் பற்றி விசாரிப்பு. அடுத்து எனக்குத் தெரிந்த ஆனால் எனக்குப் பழக்கமில்லாத  எங்கள் பகுதி அந்த அழகு தோழி பற்றி விசாரிக்கிறேன். அவள் சொல்கிறாள். அவள் கதை பெரிய சோகம் என. என்ன என்று கேட்டால், அவளுக்கும் அவள் கணவனுக்கும் ஒத்துப் போகவில்லை. டைவர்ஸ் ஓடிட்டு இருக்கு. ஈகோ பிரச்சினை. பேசுனா சரியாயிரும். பேசமாட்டுறாங்க என் கிறாள். அவள் கணவர் கூட மெடிக்கல் ரெப் தான் என் கிறாள். நான் மேலே சொன்ன ஆள் தான் இந்த அழகு பெண்ணின் கணவன்.

ஒரே ஏரியா. பள்ளிப் பருவத்திலிருந்து பார்க்கும் ஒரு பெண்,. பழக்கமில்லை. அதே ஏரியா. தொழில் ரீதியாக மட்டும் வாரத்திற்கு ஒரு முறையாவது பார்த்து புன்னகைக்கும் ஒரு ஆண். ஆனால் சொந்த விசயம் பேசிக்கொள்ளும் அளவில் பழக்கமில்லை. இவர்கள் இருவருக்கும் இடையில் மியூச்சுவலாக இவர்களைச் சேர்த்துவைக்க ஒருவர் கூடவா இல்லை என யோசிக்க வைக்கிறது வாழ்க்கை.

காலங்கள் கடக்கின்றன. ஒரு நாள் சென்னை. அஞ்சப்பர் ஹோட்டல். ஆர்டர் செய்கிறேன். வேறு ஏதாவது என் கிறது அந்தக் குரல். யாரெனப் பார்த்தால் எங்கள் ஏரியாவில் பந்து எடுத்துப்போட்டு வேடிக்கைப் பார்த்த அவுட் ஆஃப் பிரேம் அந்தப்  பையன். அந்த அழகுப் பெண்ணின் தம்பி.  பத்து வருடங்கள் கழித்துப் பார்க்கும் அவனிடம் நல்லாருக்கியா என்பது தவிர வேறு எதுவும் கேட்கமுடியாதபடி தூரத்தில் தான் பால்யத்தில் பழகிருக்கேன். அது தான் அவுட் ஆஃப் பிரேம். உன் அக்காவிடம் நீ பேசி அவளை அவள் கணவனுடன் சேர்த்துவைக்கவேண்டியது தானே என எப்படிச் சொல்ல முடியும். இந்த விசயம் எனக்கு எப்படி தெரியும் எனக் கேட்பான். அவனது அக்காவுடன் எனக்கு அறிமுகம் இல்லை. பிறகு?

விதி என விட்டு விட்டாச்சு.
காலங்கள் ஓடிவிட்டன.
இப்பொழுது கூட வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை அந்தப் பெண் சைக்கிளிங் நடைப் பயிற்சி என போவாள். அவளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பத்து வயது கிட்ட இருக்கும். எங்கோ வேலை பார்க்கிறாள்.

ஒரு முறை எங்கள்  ஏரியா ஹோட்டலில் காப்பி குடிக்க உள்ளே நுழைய அவளது கணவன் தன் பிரேக்ஃபாஸ்ட் முடித்து விட்டு வெளிய வருகிறார். சிரிக்கிறேன். சிரிக்கிறார். கடந்து வெளியே சென்று போய் விட்டார்.
எனக்குக் காப்பி வருகிறது.
 குடிக்கிறேன்.
வெளியே வர, அவனது மனைவி அந்தப் பெண் தன் மகளுடன் பார்சல் வாங்க உள்ளே நுழைகிறாள்.
இது தான் விதியின் கோரம். அவன் வந்து போனதற்கும் இவள் வருவதற்கும் இடையே ஒரு ஐந்து நிமிடம் தான். அவன் ஒரு ஐந்து நிமிடம் இவளிடம் தாழ்ந்து போவதற்கும் அல்லது இவள் அந்த ஐந்து நிமிடம் அவனுக்காக விரைந்து வருவதிலும் இருவரும் வாழ்வை தவறவிடுகிறார்கள். அவனும் வேறு மறுமணம் புரியவில்லை. இவளும் புரியவில்லை. நடுவில் இந்த ஐந்து நிமிடம் போல அங்கும் இங்குமாக விதியில் நிறைய அவர்களுக்கு இடையில் புகுந்து ஆட்டம் போடுகிறது.

எல்லாம் ஜாதக கட்டம் என்று இப்பொழுது அடிக்கடி கேட்கும் ஒரு வாசகம். ஆம், காலையில் ஒருவர் என்னுடன் நடைப்பயிற்சி செய்துவிட்டு யோகா செய்யும் வயதான ஓய்வு பெற்ற நாலைந்து பேர்களில் ஒருவர் அவர். ஏதோ அரசு அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றாலும் ஜாதகம் பார்க்கிறார். அவரிடம் கூட நடப்பவர்கள் கன்சல்ட் பண்ணுவது உண்டு. அடிக்கடி ஜாதகம் ஜாதக கட்டம் என்றுல்லாம் அடிக்கடி சொல்வார்.

அப்படி ஜாதகக் கட்டங்கள் சதி செய்து தான் அந்த கணவனையும் மனைவியையும் பிரித்ததா. உங்களுக்கு இருவரையும் தெரியும் . ஆனால் இருவரிடமும் சென்று அவர்களது சொந்த வாழ்வு பற்றி பேச உங்களுக்கு உரிமை இல்லை. அப்படி மீறி பேசினால் இதுலாம் எப்படி தெரியும் எனக்கேட்டால் நமக்கு விசயம் சொன்னவர்களைக் காட்டிகொடுக்க வேண்டியது இருக்கும். அதனால் அவர்களுக்குள் பிரச்சினை இருக்கலாம். நம்மைப் போல் பார்க்கக்கூடிய ஒரு நண்பர் கூடவா இருவருக்கும் இல்லை. ஒரே ஏரியாவிற்குள் இருவரும் குறுக்காக ஒரு நாளும் பார்த்தது இல்லையா. அப்படி பார்த்தால் என்னவாறு யோசிப்பார்கள். அந்த ஹோட்டலில் ஒரு வேளை இவர் சாப்பிடும் போது தன் முன்னாள் மனைவி தன் மகளோடு பார்சல் வாங்க வருவதைப் பார்த்தால் என்ன செய்திருப்பார். இருவருக்கும் நட்பாக நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன். இந்தாப்பிள்ள இங்க வா. இப்படி உட்காருனு மகளுக்கு ஒரு தோசை வாங்கி கொடுத்து அந்தக் கணவனோடு பேசு னு செய்யலாம்ல....எல்லாம் ஜாதக கட்டம்...போகட்டும்.

விதியின் அடுத்த முடிச்சு என்ன என்றால், எல்லாம் ஜாதகக் கட்டம் எனச் சொல்லிக்கொண்டே என்னுடன் யோகா செய்யும் அந்த ஓய்வு  பெற்றவர் தான் அந்தப் பெண்ணின் தந்தை என்பது எனக்கு நேற்றைக்குத்தான் தெரியும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8