தூங்குறியா.....

தூக்கம் என்பது என்ன.
ஒரு மனிதன் ஆரோக்கியமான வாழ்விற்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்.
தூக்கத்தில் மூளை என்ன வேலை செய்கிறது

இப்படி அறிவியல் சம்பந்தமான கட்டுரைய எதிர்பார்க்குற தோழர்கள்லாம் அடுத்த தெரு வழியா போகலாம். இது நான் பார்த்த உணர்ந்த தூங்கிய தூக்கத்தைப் பற்றியது.

பொதுவாக தூங்கனும்னா சில டெக்னிக் இருக்கு. மாத்திரை போடுவானுக. டி.வி பார்ப்பானுக. புக் படிப்பானுக. . இரவு படுக்கைல மல்லாக்க படுத்தாத்தான் தூக்கம் வரும் இல்லாட்டி குப்புறக்கா படுத்தாத்தான் தூக்கம் வரும்ன்றது லாம் வேற கணக்கு.

எனக்கும் தூக்கத்திற்கும் உள்ள பல தருணங்களைத் தொகுத்தா இப்படி வருது.

கரிமேடு மார்க்கெட் பகுதில முத்து ஸ்கூல் இருக்கு.
அதான் நம்ம ஆரம்பப்பள்ளி.
அஞ்சாப்பு வரை அங்க தான் படிச்சேன். (அஞ்சாப்பு என்பது ஐந்தாம் வகுப்பு என்று அர்த்தம்..யுவ புரஸ்காருக்குலாம் ட்ரை பண்ணாதனால பேச்சு டமிளில எழுதுறேன்..) அஞ்சாவது படிக்கிறப்ப ஆயுத லட்சுமி டீச்சர் தான் க்ளாஸ் டீச்சர். உடனே தமிழுக்கு ஒருத்தங்க ஆங்கிலத்துக்கு ஒருத்தங்கனு நினைக்காதீங்க. அவங்க தான் ஆள் இன் ஆல்.
ஆள் ரொம்ப குட்டையா இருப்பாங்க.
ஒல்லியா இருப்பாங்க.
கண்ணாடி போட்டு இருப்பாங்க.
தலைமை ஆசிரியருக்கு அடுத்த படி அவங்க தான்.
அதுனாலே ஸ்கூலே நடுங்கும்.

பெரிய டீச்சருனு கூப்பிடுவானுக. அப்ப அவைங்க கலாய்ச்சானுகளா இல்ல பயந்தே சொன்னானுகளானு தெரியல.

அஞ்சாவதுல ரெண்டு செக்ஸன். இன்னொரு செக்ஷன் சகுந்தலா டீச்சர். திட்டவே திட்டாதாம். திட்டுனாலும் வெளிய கேக்காது. அவ்வளவு சாஃப்ட்.

 இருந்தாலும் நம்ம கிரகம் ஆயுத லட்சுமி டீச்சர் க்ளாஸ் தான். அந்தம்மா க்ளாஸ்ல தூங்குனா ரெண்டு பனிஷ்மெண்ட்.
ஒண்ணு உக்கி போடச்சொல்லும்.
இல்லாட்டி வெளுக்கும்.
வெளு னா எப்புடி தெரியுமா. வகுப்பறைக்கு ஒரு வழி தான் இருக்கும். வகுப்புல 45 பேர் இருப்போம். தரைல தான் உட்காரனும்.
வழிய லாம் மறச்சுருவோம்.
 திடீருனு தலைமை ஆசிரியர் அந்த டீச்சர கூப்பிட்டா அந்தம்மாக்கு எல்லா பசங்களும் வழி விடனும். அந்தம்மா உட்கார்ந்திருக்குறவனுகளோட புக் பேக் கால் கை னு எல்லாத்தையும் மிதிச்சு ஓடும்.
அப்படி இருக்குற க்ளாஸ்ல எவனாவது தூங்கிட்டா முன்னாடி வரச்சொல்லும். எவனாவது கடைசி வரிசைல தூங்கி அந்தம்மாட்ட சிக்கிட்டா முன்னாடி போர்ட் கிட்ட வரச்சொல்லும்.
அவன் தூக்க கலக்கத்துல தடுமாறி தடுமாறி போனா, அந்தம்மா சாவுகாசமா குத்த வச்ச உக்காந்துக்கிட்டு அவன் காலுல முழங்காலுக்கு கீழ பிரம்பால அடி வெளுக்கும்.
நிண்டு குனிஞ்சுகிட்டு அடிக்க முடியாது அந்தம்மானால.
அதுனால உக்காந்துக்கிரும். அப்படி ஒரு தடவை ஒருத்தன அடிச்சப்ப அவன் வலி தாங்காம குதிக்க அந்தம்மாவோட கண்ணாடிய  மூக்கோட அடிச்சு தட்டி விட்டு அதுக்கு சேத்து அடி வாங்குனது தனிக் கதை.



அப்படி அடிக்குப்  பயந்துட்டே தூங்காம இருந்தது தான் என் அப்போதைய சாதனை.

அத விட்டா ஆறாம் வகுப்பு ல அறிவியல் க்ளாஸ். புலவேந்திரன் னு சார். அவர் அறிவியல பாட்டாவே பாடி நடத்துவாரு.
எப்ப -  மதியம் சாப்பாடு முடிஞ்சு முதல் வகுப்புல.

விளங்குமா.

எல்லாப் பயலும் தூங்குவானு எல்லாத்தையும் நிக்கச்சொல்லி கைகளை அப்படியே உருட்டச்சொல்ற மாதிரி ஆட்டச்சொல்வார்.
அதாவது தூக்கம் போயிருமாம்.
ஆனா என்ன நடக்கும்னா எவன் தூங்காம இருந்தானோ அவன் அத வேகமா பண்ணி டயர்ட் ஆகி அவர் பாட ஆரம்பிச்சதும் தூங்க ஆரம்பிச்சுருவான்.

ஏற்கனவே தூங்கிட்டு இருந்தவன் கைய ஆட்டவே மாட்டான்.
ஆனா இன்னும் டயர்ட் ஆயிருவான்.
அதாவது அறிவியல் ஆசானுக்கு எவனாவது முழிச்சுட்டு இருந்தா பேசுவானு ஒரு துடிப்பு இருக்கும்ல...
அதான் அந்த டெக்னிக்கு.
எல்லாப் பயலும் தூங்கிருவான்.
எவனும் பேசமாட்டான்.
பயபுள்ள தனியா பாடிட்டு கிடக்கும்.

இதலாம் தாண்டி காலேஜ்.
பிஸிக்கல் கெமிஸ்ட்டிரி க்ளாஸ்.
எனக்கு அந்த சப்ஜெக்ட் பிடிக்கும் ஏன்னா அந்த புரொஃபசர்.
எனக்கு அந்த சப்ஜெக்ட் பாதி பிடிக்காது அதுக்கும் காரணம் அதே புரொபசர் தான்.
டிபார்ட்மெண்ட்ல அந்தாளு என்ன வாய கொடுத்தாரோ எங்களுக்கு அவரோட க்ளாஸ மதிய உணவு வேளை முடிஞ்சு வர்ற முதல் க்ளாஸா போடுவானுக.

மனுஷன்ட்ட பிடிச்ச விசயமே எவன் தூங்குனாலும் கவலைப் படமாட்டார்.

அவருக்குத் தேவை எதிரே எவனும் பேசக்கூடாது.
எவனாவது பேசிட்டா அட்டெண்டன்ஸ் போட்டேன். நீ வெளிய போயிக்கோ.. அப்படினு சொல்லிருவார்.
ரொம்ப சின்சியர்.
அந்தக் க்ளாஸ்ல எவனுமே இல்லாட்டினாலும் கூட க்ளாஸ் எடுத்துருவாருனா பாத்துக்கோங்களேன்.

நானும் அவர் க்ளாஸ்ல தூங்காம இருக்கனும்னு எவ்ளோவோ முயற்சி பண்ணிருக்கேன். கண் இமைக்கு நடுல குச்சி வச்சு முட்டு கொடுத்து தூங்காம இருக்க மட்டுந்தான் முயற்சி பண்ணல. மத்த எல்லாமும் பண்ணிட்டேன். ம்ஹீம்...

ஒருவாட்டி திடீருனு பாடம் நடத்தி பேசிட்டே இருந்தவரு அமைதியா இருந்தார். க்ளாஸும் அமைதியா இருந்தது. பக்கத்துல இருந்தவன்ட என்னடா ஆச்சுனு கேட்டேன். ஏதோ கேள்வி கேட்டாராம். உனக்குத் தெரியுமானு கேட்டான்.
தெரியாதுனேன்.
எனக்கும் பதில் தெரியாதுனு அவன் சொன்னான்.
நான் அவன தட்டி , தம்பி எனக்கு ப் பதில் தெரியாதுனு சொல்லல, அவர் கேள்வி கேட்டதே தெரியாதுனு சொன்னேன்..தேட் மீன்ஸ் நான் தூங்கிட்டேனு எனக்கே தெரியாதுன்ற மொமேன்ட். அது ஒரு பரவச நிலை.

நம்ம நண்பர்கள் சிலர் இருப்பானுக. பஸ்ல போனா தூங்கிருவானுக. ஒரு முறை மாட்டுத்தாவணில மதியம் சாப்பிட்டு இராமநாதபுரம் போக நண்பர் ஒருவருடன் பஸ்ல ஏறியாச்சு.
அப்பலாம் ஒரு கணக்கு.
பஸ் மதுரைல இருந்து 25கிமீ தொலைவுல இருக்குற திருப்புவனம் தாண்டுனாத்தான் வேகமா போகும்ன்றது ஒரு நம்பிக்கை.
இல்ல மூடநம்பிக்கை.
நல்லா சாப்புட்டு உக்காந்தாச்சு. டிரைவர் வந்தார்.
உட்கார்ந்தார்.
பழனி டிக்கெட் எடுத்துருனு பக்கத்துல இருக்குறவர் கொஞ்சம் அசர ஆரம்பிச்சார்.
குறிப்பு- டிரைவர் வந்து பஸ்ஸ ஸ்டார்ட் பண்ணாரே ஒழிய பஸ்ஸ கிளப்பல.
கீழ கண்டெக்டர் நிண்டுக்கிட்டு ராமநாதபுரத்த ஏலம் விட்டுட்டு இருந்தார். எவனாவது ப்ளாட்பாரம் ஓரமா மஞ்சப் பையோட வந்தா அவன பஸ்ல ஏத்துற மூடுலயே அவர் இருந்தார்.
 மண்வெட்டிய எடுத்து வழிச்ச மாதிரி எல்லாப் பயலயும் பஸ்ல ஏத்தி வண்டி கொஞ்சம் கொஞ்சமா நகர ஆரம்பிச்சு மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட விட்டு வெளிய வந்துச்சு.

பக்கத்துல அசந்தவர் எந்திரிச்சு என்ன திருப்புவனம் வந்திருச்சானு கேட்டாரு.
யோவ் ...இன்னும் டிக்கெட் கொடுக்க கண்டெக்டரே வரல..அதுக்குள்ள திருப்புவனம் வந்திருச்சாவாம்...படுயா...னு சொன்னேன்.

அந்த டிக்கெட்  எடுக்குற பொறுப்பு  மட்டும் எனக்கு இல்லாட்டி நானும் தூங்கிருப்பேன். குறிப்பா இராமநாதபுரத்துக்கு பஸ்ல போறதுலாம் செடேட்டிவ் மொமேன்ட்.

இதை எல்லாம் தாண்டி வேலை பாக்குற கம்பெனி மீட்டிங்குல கிடைக்கும் பாருங்க ஒரு தூக்கத்துக்கான தருணம். கோடிக்காசு கொடுத்தாலும் அப்படியொரு தூக்கம் வெளியே கிடைக்காது.

ஒரு நிறுவனத்தில் ட்ரெயினிங்க் பீரியட்.
மும்பைக்கு புறநகர் பகுதில ஒரு ரிசார்ட்ல தங்க வச்சுட்டானுக.
தமிழ்நாடு கேரளா ஆந்திரா உத்திரப்பிரதேசம் பூனா கல்கத்தா இப்படி அங்க இங்கனு முப்பது பிரதிநிதிகள்.
மதியம் சாப்பாடு முடிஞ்சதும் மருந்துகளைப் பற்றி நடத்துவானுக.
கண்ணு சொக்கும்.
உத்தரப் பிரதேசத்துக்காரனுக கையில புகையில பொட்டலத்த எப்பவும் வச்சிருப்பானுக. டேபிளுக்குக் கீழ கசக்கி உருட்டி நாக்குக்கு கீழ வச்சிருவானுக.
கண்ணு அப்படியே ரெங்கி சிவப்பா நிக்கும்.
அவைங்க தூங்காத மாதிரியே இருக்கும். ஆனாலும் மயங்கிருப்பானுக. ஆனாலும் சட்டம் தன் கடமைய செய்யும் மாதிரியே அங்க முன்னாடி ஒரு டாக்டர் பாடம் நடத்திட்டு இருப்பாரு. வடக்கைங்களுக்கு எப்பவுமே நம்மள பாத்தாத்தான் எரியும் போல. கரெக்டா கேரளா தமிழ்நாட்டுக்காரைங்களேயே பார்த்து கேள்வி கேட்பானுக. தூங்குறவன விட்டுருவானுக...தேட் இஸ் ஆரிய திராவிட மொமேண்ட்.....

அப்புறம் நடக்குற மாதாந்திர கூட்டம்
அப்புறம் காலாண்டு நிதியாண்டுக் கூட்டம்லாம் நம்ம எப்படி உழைக்கனும் எப்படி முன்னேறனும் எப்படி ஒரு பொருளை விக்கனும்னு சொல்வானுக. அதாவது சாப்பாடுலாம் போட்டு உக்காரவச்சு பேசுறது அந்த டாபிக் தான்...
நான் வேல பார்த்த கம்பெனில செட்டா உக்காந்திருப்போம். ஒரு மூணு பேரு... தூங்கலாம் மாட்டோம்.
ஆனா மீட்டிங்க்ல எவன் தூங்குனாலும் விட மாட்டோம்.
பக்கதுல முழிச்சிருக்கிறவனுக்கு சிக்னல் கொடுத்து அவன எழுப்பச் சொல்வோம்.
 இல்லாடி வைப்ரேஷன்ல போட்டு இருக்குற அவன் மொபைலுக்கு மிஸ்டு கால் கொடுப்போம்.
அறண்டு அடிச்சு முழிப்பானுக.
முழிச்சதும் சொல்வோம்...நாங்களாம் முழிச்சு கேக்குறோம்ல...நீயும் கேளுடா, தூங்குறியா...கொன்னுருவோம் பாத்துக்க..மொக்கைய நீயும் கேளுயானு சிக்னல் கொடுப்போம்.. இதான் எங்க வேலை.

இப்பவும் ஞாபகம் இருக்கு.
கல்லூரி படிக்குறப்ப NSS கேம்ப் க்கு ஒரு கிராமத்துக்குப் போனோம். ஒரு செட் பசங்க வெளிய உக்காந்து பேசிட்டு ஹால் போனப்ப மணி இரவு 12 க்கு மேல இருக்கும்.
ஒரு பொது ஹால் தான் எல்லாரும் படுத்து இருப்போம்.
 இருட்டுல எவன் எங்க படுத்து இருக்கானு தெரியாம லைட் போட்டா பசங்க ட்ஸ்டர்ப் ஆவானுகனு காலாலேயே தடவி தடவி எங்க இடத்துக்கு போனோம்.
அப்படிப் போனப்ப ஒருத்தன மிதிச்சுட்டேன்...
ஏய் யாருடா...னு வெளிய் எரிஞ்ச விளக்கு வெளிச்சத்துல என்ன பீ.கே...னு கேட்டான்.
எனக்கு என்ன சொல்றதுனு தெரியல....
என்னடா பண்ணுற ....தூங்குறியானு கேட்டேன்.
எனக்கு அவன் முறைச்சானு காலைல அவன் சொல்லித்தான் தெரியும்...இருட்டுல ஒண்ணுமே தெரியலேல....
தூங்குறவன எழுப்பி தூங்குறியானு கேட்டுட்டியேடானு பதினைஞ்சு வருஷம் கழிச்சும் பயபுள்ள கேக்குது...

நீங்க தூங்க போகலையா...



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....