பனை விதைக்குள் செங்குத்து நிழல் - சென்றாயன் (முன்வைத்து)

கவிஞர் சென்றாயன் அவர்களின் " பனை விதைக்குள் செங்குத்து நிழல்"
                                  தொகுப்பை முன் வைத்து



ஒரு கவிதையை நாம் எதற்குப் படிக்க வேண்டும்.
வாசகனைப் பார்த்துக் கேட்பது போல் ஒரு கவிஞனை அல்லது ஒரு படைப்பாளியைப் பார்த்துக் கேட்க முடியாது. அப்படிக் கேட்பது இங்கு அனைவரின் சார்பாக ஏதாவது ஒரு மன்றத்தில் ஏதாவது ஒரு படைப்பாளிடம் கேட்டிருக்கலாம். ஆனால் ஒரு வாசகனிடம் இப்படிக் கேட்பது மிகவும் ப்ரியம் கொண்டதாக இருக்கிறது.
கவிதைகள் பிடிக்கும் என்போரைப் போன்றே கவிதைகள் பிடிப்பதில்லை எனச் சொல்வோரும் உண்டு.
சக வாசகன் கவிதையை ஒதுக்க நேரிடும்பொழுது இன்னொரு வாசகன் கவிதை பிடிக்கும் என்பது எப்படி சாத்தியமாகிறது.
இலக்கியம் பல வகை ஒழுக்கக் கூறுகளைக் கொண்டது போல் கவிதையையும் ஓர் ஒழுக்கக்கூறாகவே எடுத்துக்கொள்ளலாம். ஒழுக்கக் கூறு என்ற சொல்லாடல் புதியதாக இருக்குமானால் அளவை என்று கூட படித்துக்கொள்ளலாம்.
கவிதையைக் கையாள்வது கடினமானக் காரியம் என்றே நான் கருதுகிறேன். ஒரு சிறுகதை படிப்பதைக்காட்டிலும் ஒரு கவிதை படிப்பது பல அனுபவங்களை எனக்குப் புகட்டுவதாகவே உணர்கிறேன்.
வாழைப்பழத்தோலை உரித்துச் சுவை காண்பது போல் எனக்கு நான் படிப்பது இருக்கவேண்டும் என்று முடிவு எடுப்பது ஒரு வாசகனின் உரிமை. பலாப்பழத்தை அதன் மரத்திலேறி பறித்து பழத்தை அதன் வாசத்தோடு பிரித்து சுளை சுளையாக எடுத்தாள்தல் போல் ஒரு படைப்பை அணுக வேண்டும் என்பது சிலருக்கு விருப்பமாக இருக்கலாம். இப்படி ஒரு புள்ளியில் வேறு வேறு திசையில் வாசகர்கள் பிரிவதில் கவிதைக்கான வாசகர்கள் குறைந்து கவிதைகளை நோக்கி வருகிறார்கள்.
மழை பொழியும் தருணங்களில் ஒரு மலையின் குறுக்கு வாட்டு ரோட்டில் பயணிப்பது சிலருக்கு எப்படியான அனுபவங்களைத் தரும். நம்மை நனைக்காமல் ஒதுங்க ஓர் இடம் தேடுவது, அல்லது வேகமாக இயங்கி முடிந்தளவு மழையைக் கடப்பது அல்லது தூரல் மழையாக மாறும் வரை மெல்ல நகர்ந்து மழையை முழுதுமாய் அனுபவித்தல் . மழை முடிந்தத் தருணத்தில் ஓர் ஈர மலையை எப்படிப் பார்த்திருப்போம். வெறும் பாறையாகவே என்பது தான் பொதுப்பார்வை.

இரவு மழை
நனைத்த பாறையில்
மண்புழுவாகிறேன்
ஊர்தலற்று

இப்படியாக சென்றாயன் எழுதிச் செல்கிறார். பொதுப்பார்வையில் ஒரு பாறை மட்டும் தெரிய, அந்தப் பாறையில் இருக்கும் ஒரு மண்புழுவாதல் என்பது நம்மை ஒரு கவிதை அதுவும் நான்கு வரிகள் கொண்ட ஒரு கவிதை பிசகாமல் நம் சட்டைக் கலையாமல் தூக்கி அந்தப் பாறையில் அமர்த்திவிடுதல் ஒரு ரசவாதம்.

இயற்கையோடு இயைந்து போதல் ஒரு கவிஞனுக்கான கலை. எல்லாவற்றிலும் அழகியலைப் பாவி எழுதிப் பார்த்தல் அந்தக் கலையின் உச்சம்.
இயற்கையோடு இயைந்து போதலில் கவிஞனுக்கு இன்னொரு சலுகை உண்டு. தன் இயல்பிற்கு ஏற்றபடி இயற்கையை வளைத்துப் பார்க்க ஆசைப்படுவான். ஆம் கவிஞன் எப்பொழுதும் ஒரு சுயநலக்காரன். தான் காண்பதை எழுத எத்தனிப்பதுடன், அது இன்னும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என இயற்கையை வளைக்கப் பார்ப்பான்.

மரக்கிளை நிழல்களின்
இடைவெளியில் வெயில்
காற்றின் விரல்கள்
ஒரு பியானோவை இசைக்கின்றன.  இப்படி எழுதி தனக்கு வேண்டும் இசையை இப்படி மரத்தின் கிளை நிழலில் வெயில் தொட்டும் தொடாது தழுவி நிற்கும் இடைவெளியில் காற்றின் கைகளிலிருந்து கேட்கத் துணியும் சென்றாயன் இயற்கை மீதான சுயநலக்காரனாகத்தான் தெரிகிறார்.

மலையும் வயலும் நீரும் சார்ந்த ஒரு நிலப்பரப்பு இருக்கிறது. அதிலிருந்து ஒரு குடியானவன் வருகிறான். அவனுக்கு மலை என்பது வெறும் மலை மட்டும் அல்ல. என்றோ தானாய் முளைத்த அல்லது மூதாட்டி காலத்தில் விழுந்த மழையின் அல்லது அதிசயத்தின் ஒரு திடச் சாமி.
வயலும் நீரும் கூட அப்படித்தான்.
வயலைத் துண்டாடக் கொடுத்தவர்களின் மத்தியில்
நீரைச் சேமிக்கத்தெரியாத எதேச்சதிகாரர்களின் கால்மாட்டில் இருக்கும் லட்சோபலட்சக் குடியானவர்களின் மத்தியில் ஒரு குடியானவன் தன் இயலாமையை தன் சக மனிதனின் வாழ்வியலை துன்புறுதலை எழுத்தாக்கித் தந்தால் உங்கள் கையில் அது செங்குத்து நிழலாகப் படிகிறது. அப்படித்தான் சென்றாயன் மலையின் மீதான தன் பிடித்தங்களை மழையின் மீதானத் தன் ப்ரியங்களை நிலத்தின் மீதான தன் உணர்வுகளை தன் சக மனிதனின் குரலாகப் பதிவு செய்கிறார்.
உங்களுக்கும் கவிஞனுக்கும் இடையே காண்பது தவிர உங்களைத் தாண்டி ஒரு பெருவெளி இருக்கிறது . அந்தப் பெருவெளியின் திசையில் மிக நுண்ணிய அளவிலான அளவையில் யாரோ ஒருவர் பேசுவார். அதை வாரி எடுத்துக்கொண்டு இருவருக்கும் இடையில் கொட்டுகையில் ஒரு படைப்பு அழகியல் ஆகிறது. இதில் வாசகனுக்கு ஒரு தர்மசங்கடம் ஒன்று இருக்கிறது. படைப்பிற்கானத் தன் பூரிப்புகளை வெளிப்படுத்துவதிலும் அல்லது படைப்பு கூறும் எதார்த்தங்களின் மீதான சுய உணர்வை வெளிப்படுத்துவதிலும் கொஞ்சம் தள்ளாட்டம் நேரிடலாம். உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் ஒருங்கே கையாண்டு வாசகனைக் கவர்தல் ஒரு கவிதை செய்யும் ரசவாதம்.

கொழுமுனையின் நேர்கோட்டுக் கீறலில் பற்றியெறிகிறது அறுவடைக்கு முந்தைய கணம் வரை பசி நெருப்பு

என்பதாக ஒரு கவிதையை முடிப்பதற்கு உழவன் உழலும் அல்லது மாண்டச் சேதிகளை நாம் நம் முன் கொண்டுவந்துவிடுகிறது.

மூளை தன் தூண்டல்களைப் பெறுவது போல் அனுப்புவதற்கும் தனக்கென ஒரு தொடர் அடிமைச் சங்கிலி இணைப்பை வைத்திருக்கிறது.கவிதை மட்டும் தான் சம்பந்தப்பட்ட எல்லாச் சங்கிலி இணைப்பையும் ஒரு கவிதையின் முடிவில் கொண்டு வந்து கோர்க்கிறது. விதை வாங்கிய கடனிற்கு மாண்டுபோனவன் இருக்கும் நிலம் தான் வாங்கிய கடனை அடைப்பதற்கு மாறாக உல்லாசப் பயணமாய் இன்னொரு கனவு தேசத்தில் வாழத்துணிபவனையும் தாங்கும். இது சார் உணர்வு தூண்டலை ஒரு கவிதை ஆழ ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது. எந்தப் பிரக்ஞையுமற்று ஒரு கவிதைக்குள் நுழைந்து வாசிக்கும் ஒரு சராசரியான வாசகனின் மனதிற்குள் ஒன்றை எழுதிவிட்டுச் செல்கிறதெனில் உண்மையில் அதை எழுதியவனின் மூளைக்குள் மனதிற்குள் எவ்வளவு கோபம் ஒரு நெருப்பைப் போல் கசிந்துகொண்டிருக்கும்.
இயல்பை மீறி பழக்கவழக்கமாக மாறிப்போவதில் ஒரு சாதாரணனுக்கு அவ்வளவு போதை இருக்கிறது.
யானைக்கு யாசகம் கேட்பது குணமல்ல
பழகிய விசுவாசம் தான் என்ற படி பயணிக்கும் சென்றாயனின் செங்குத்து நிழல் தொகுப்பு

உழுபவனும் வனப் பழங்குடிகளும்
புதைக்கப்பட்ட மேடுகளில்
ஊன்றப்பட்ட
தேசியக்கொடிகளுக்கு
விரைப்பான தேகத்தோடு
சல்யூட் அடியுங்கள்
ஊழிக்காற்றில் புரண்டெழும்
எம் கரங்களின் புழுதிகள் என அடிமை போதை ஏறிப்போன , புரட்சிகளால் தனக்கென ஒரு முத்திரை வாங்கிக்கொண்ட ஓர் இனத்தின் பிரதிநிதியின் ஆற்றாமையைச் சொல்லி உணர்வுகளை அல்லது உரிமைகளுக்கானத் தேவையைச் சொல்கிறது .

scenario is fine, human nature is finer  என்பார்கள். ஒவ்வோர் இயல்பிலும் சரி சமமாக இந்தத் தொகுப்பு இயற்கையையும் இயற்கைசார் மனித மனத்தின் கொண்டாட்டத்தையும் அதன் மீதான உரிமையையும் உணர்வையும் சொல்லிக்கொண்டே நம்மையும் அழைத்துச் செல்கிறது.

இருந்தாலும் ஒரு சில இயலாமைகளை அல்லது சக வாழ்வியல்காரனின் துன்பியலைக் காட்சிப்படுத்த எத்தனிக்கும்பொழுது கவிதை முழு பெறாமல் பாதியிலேயே நின்றுவிடுகிறது. படிமம் புனைவு அளவைகளென கவித்துவச் சமன்பாட்டைத் தீர்வுபடுத்திச் சொன்னாலும் சக மனிதனின் வாழ்வியலில் நிகழும் மங்களகரமான துன்பியல் நிகழ்வுகள் இப்போதைய காலகட்டத்தில் முடிவுறாத் தன்மை கொண்டு செல்வதால் அந்தக் கவிதைகளை அப்படி நிறுத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஒவ்வொரு கவிதை சார் கட்டுரைகளையும் இந்தப் பூமியின் கவித்துவம் முடிவுறாது என்ற கீட்ஸின் வார்த்தைகளைக் கொண்டு நான் முடிப்பது போல் கவிஞர் சென்றாயனிடம் எனக்கு ஒரு ப்ரிய வேண்டுகோள் இருக்கிறது. எதார்த்தங்களின் மீதான உங்கள் கவித்துவம் இன்னும் எழுதப் பட வேண்டியதிருக்கிறது என்பதே அது.


தாவரங்கள் துளிர்க்கும் மலையிடுக்கின் கருணையென தோழர் சென்றாயன் ஆவணம் செய்வாரென......



                                                                                                      ப்ரியமுடன்
                                                                                                  பழனிக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8