மறதி நோய்...Dr Neethiarasu அவர்களின் உரையை முன் வைத்து

08/07/18 அன்று மதுரை வாக்கர்ஸ் க்ளப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் விருந்தினராக வந்த  DR.நீதி அரசு , நரம்பியல் நிபுணர்,மதுரை அவர்களின் சொற்பொழிவை முன்வைத்து....

வாக்கர்ஸ் க்ளப்பில் சில சமயங்களில் மாதாந்திரக்கூட்டம் நடக்கும். அறுபது சேர்கள் கூட்டத்தைப் பார்த்து பார்த்து போடப்படும். பொதுவாக முப்பது நபர்கள் ஆஜர் ஆவார்கள். கூட்டம் ஒரு பெரிய பூங்காவின் நடுவே மரத்தடியில் நடப்பதால் ஆங்காங்கே அமர்ந்திருப்பவர்கள் நடப்பவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே நடப்பார்கள். இன்று நடந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட இருநூறு நபர்கள் இருப்பார்கள். ஆங்காங்கு நின்று டாக்டர் நீதி அரசின் சொற்பொழிவைக் கேட்டார்கள். அதற்கானக் காரணம் இரண்டு. ஒன்று சில மாதங்களாகவே வாட்ஸப் ஆடியோ வழி மருத்துவர் நீதி அரசு அவர்களின் ஆடியோ ஒன்று குழந்தைகளுக்கான நரம்பியல் சம்பந்தமான அறுவுரை ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது.
இன்னொன்று இன்று எடுத்துக்கொண்டத் தலைப்பு - மறதி நோய் வராமல் தடுக்க என்ன செய்வது. (prevention of Dementia)

ஞாபக மறதி அவ்வளவு பெரிய நோயா என்று நீங்கள் கேட்டால் நெட்டை போய் பாருங்கள். நாம் அந்த நோய்க்குள் போய்க்கொண்டிருக்கிறோமா இல்லை போய்விட்டோமா என்று மிரள்வீர்கள்.
உலகளவில் 47.5 மில்லியன் மக்கள் மறதிநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் சொல்கிறது.
ஒவ்வொரு நான்கு வினாடிகளுக்கு ஒரு ஆள் மறதி நோயாளி எனக் கண்டறியப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இது அயல் நாடுகளில் தான் என்று இல்லை. நம் நாட்டிலும் தான்.

டாக்டர் நீதி அரசு பேசுகையில் 1994ல் அவர் நரம்பியல் துறை மாணவராக இருந்தபொழுது அவரது ஆசிரியரின் ஆசிரியர் சொன்னாராம், மறதிநோய் எல்லாம் சப்ஜெக்ட் தான் நம் நாட்டுக்கு வராது என்று.
படித்து முடித்துவிட்டு ப்ராக்டிஸ் ஆரம்பிக்கையில் மாதத்திற்கு ஒரு மறதிநோய் நோயாளி வருவதாக இவர் தன் ஆசிரியருக்குச் சொன்னாராம். இப்பொழுது தினம் ஐந்து நோயாளிகள் வருகிறார்களாம்.

அதற்கானக் காரணமாக டாக்டர் சொல்லும் பல காரணங்களில் சில காரணங்கள் நம்முடைய வாழ்வியல் முறைகள் தான்.
அதற்குமுன் அப்படி அந்தளவிற்கு மறதிநோய் நம் நாட்டில் அதிகமாகி இருக்கிறதா எனக் கேள்வி எழுவது அவசியமாகிறது.
வயதானப் பின்னாடி தானே மறதி நோய் வருகிறது என்பார்கள். வயதானாலும் சில ஞாபகசக்தியுடன் இருக்கத்தானே செய்கிறார்கள் பிறகு எப்படி வருகிறது.
அறிகுறிகள் சிலவற்றை மருத்துவர் சொன்னார்.

பேன்ட் ஜிப் போடாமல் வந்துவிடுவதாகச் சிலர் சொல்கிறார்கள்.
எப்பொழுதாவது இது நடந்தால் பரவாயில்லை. அடிக்கடி நிகழ்கிறதா கவனியுங்கள்.
உங்கள் வண்டி கீ செயினை திடீரென எப்பொழுதும் வைக்கும் இடத்தில் வைக்காமல் வேறு இடத்தில் வைத்துவிட்டு அதை எங்கு வைத்தோம் என்று தேடுகிறீர்களா...( அலுவலகத்தில் டேபிள் மீது வைத்துவிட்டு அதன் மீது நாலு ஃபைல்களை வைத்துவிட்டு சாவியைத் தேடுபவர்கள் பயப்படவேண்டாம். ஏனென்றால் நானுலாம் அந்த வகையறா.)
உங்கள் மொபைலை வீட்டிற்குள் எங்கேயோ வைத்துவிட்டு அதை எங்கு வைத்தோம் எனத் தேடுகிறீர்களா..
(மொபைலை வைத்த இடத்தைத் தேடுவது இப்பொழுது அதிகம் ஆகிவிட்டதாகத் தெரிகிறது. ஒரு முறை வாக்கர்ஸ் க்ளப்பில் நடந்துவிட்டு அமர்கையில் ஒரு பெரியவர் அவர் மொபைலில் வால் பேப்பர் செட்டிங்க் வைக்கச்சொன்னார். நானும் சமூகசேவை என வைத்துவிட்டு கிளம்ப, அவர் மொபைலை வாங்கினபொழுது கீழே தரையில் என் மொபைலை வைத்தவன் மறந்துவிட்டு, ஓடி வந்து அதை எடுத்தேன். பக்கத்தில் இருந்தவர் சொன்னார். மனைவிக்கு அடுத்த இடம் மொபைலுக்கு மிக பத்திரம் என்றார். அப்படிப்பட்ட மொபைல் மனைவியை முந்தி முதலிடத்தில் வந்துவிட்டது. )

டாக்டர் நீதி அரசிடம்  வந்த ஒரு நோயாளின் கதை. 65 வயதுக்காரர். வங்கி செல்கிறார். மூன்று லட்சம் பணம் எடுக்கிறார். அதை ஒரு மஞ்சள் பையில் வைக்கிறார். ஆனால் பணத்தை வங்கியிலேயே வைத்து விடுகிறார். இப்படி அவர் அடிக்கடி மறந்துவிடுகிறார் என்று வந்தாராம். குறிப்பு அப்படி வந்த நோயாளி ஒரு மருத்துவர்.
அடுத்து வந்த ஒரு நோயாளி ஒரு வக்கீல்.
இப்படி சில உதாரணங்களை அள்ளி வீசினார்.

இந்த உதாரணங்களை நீங்கள் அனுபவிக்கிறீர்களா. இப்பொழுது சொல்லுங்கள் மறதி நோய்க்கும் வயதிற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று இன்னும் நாம் நம்ப வேண்டுமா.
நம் மூளையில் இருக்கும் ஞாபகக் கிடங்கிற்கு( ஹிப்போகேம்பஸில் )ஏதாவது சேதாரம் நிகழ்ந்தால் இந்தக் குறைபாடு ஏற்படுகிறதாம். சேதாரம் எப்படி  நிகழும் எனத்தானே கேட்கிறீர்கள்.
முதலில் லெட் என்ற தனிமம் தான் நம்மை அழிக்கிறது என்று சொன்னார்கள். இப்பொழுது மாங்க்னீசு என்ற தனிமம் காற்றில் கலந்து(pollution) அதை நாம் சுவாசித்து அது போய் இந்த ஹிப்போகேம்பஸில் அமர்ந்து அமுக்கிக்கொள்ள நாம் நம் கீ செயினை மறந்துவிடுகிறோம். ஜிப்பை போடுவதில்லை. இதான் காரணம்.
அல்சீமர் நோய் என்பது மிகவும் பிரபலமான மறதி நோய்களில் ஒரு நோய். இதில் தான் நிறைய நோயாளிகள் வகைப்படுத்தப்படுகிறார்கள்.
தைராய்டு ஹார்மோன் சமச்சீரற்று ஹைப்போதைராய்டிசம் ஏற்படும்போது மறதி நோய் ஏற்படுகிறது. விட்டமின் B12 குறைபாடு ஏற்பட்டு மறதி நோய் ஏற்படுகிறது ( முடியும் உதிரும் பாஸ்). ஏதோ ஒரு டயட் வகையில் இந்த B12 விட்டமீன் சரியாகக் கிடைப்பதில்லை என்பது சேதி.
மருத்துவர் சொல்கையில் அசைவம் சாப்பிடுபவர்களுக்குக் கூட ஓரளவிற்கு B12 கிடைத்துவிடுவதாகவும் சைவம் சாப்பிடுபவர்கள் பலருக்குக் கிடைப்பதில்லை என்றும் கூறினார்.
அப்படிப்பட்டவர்கள் உணவில் தயிர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். pro biotic வகையான தயிர் ஈஸ்ட்களுடன் சேர்ந்து நமக்குத் தேவையான அளவு b12 தரும் என் கிறார்.
மறதி நோய் நமக்கு வராமல் இருக்க சில முறைகளை Dr நீதி அரசு எடுத்துரைத்தார்.
அதில் அவர் சொல்வது தக்காளி ஜீஸ் எடுத்துக்கச்சொல்கிறார்.  ஒரு ஏரோப்ளேனில் ஆப்பிள் மாதுளை ஜூஸ் எடுக்கும் சூழலில் தக்காளி ஜூஸ் கேட்பது சமூகத்தில் ஒரு ஸ்டேடஸ்விசயமாக இருப்பதாகவும் சொன்னார். ஆனால் லைக்கோபீன் கள் நிறைந்த தக்காளி நம் உடம்பிற்கு முக்கியமான ஒன்றாகச் சொன்னார்.
அடுத்துச் சொன்னது எலுமிச்சை ஜூஸ். எலுமிச்சை ஜூஸ்ஸை எல்லாம் நாம் ஒரு ஜூஸ்ஸாகவே கருதுவது கிடையாது என்பது வருந்தத்தக்கது.
முட்டைகோஸ் காலிஃபிளவர் எடுக்கவேண்டுமாம். இது கேன்சருக்கும் நல்ல மருந்தாம்.
கேஃபின்(caffeine) கலந்த காப்பி நல்லதாம். அதுக்காக காப்பியா குடிச்சா தூக்கம் வராது. அப்புறம் மன நோய் வந்துவிடும்.
தவிர்க்க வேண்டியவை. மொத்தமாக கேக் கடைகளைத் தவிர்க்கச் சொல்கிறார்.
வெள்ளை உணவுப்பொருட்கள் வேண்டாம் என்றார். மைதா, சீனி, உப்பு மற்றும் அதிர்ச்சி அடைய வேண்டாம் பளபளப்பான அரிசி வேண்டாம் என் கிறார். சேட்டன் களைப் போல சிவப்பு அரிசி பெரிய அரிசி எடுக்கச் சொல்கிறார்.
இது எல்லாம் உணவுப்பொருட்கள்.

ஆனால் பழக்கவழக்கங்கள் என்று சில கருத்துகள் சொல்கிறார். கிட்டத்தட்ட நாம் அன்றாடம் செய்வது அல்லது செய்து கொண்டிருந்தது.
வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக் என்று இணைய படையெடுப்பு வந்ததும் நம் இளைஞர்கள் அதில் அதிகமாக குறிப்பாக மொபைலில் கவனம் அதிகமாகச் செலுத்துகிறார்கள்.
ஒரு வகையில் வாழ்வியல் முறை மாறுபடுவது தான் இந்த நோய்க்கான முதல் மூலம் என்றாகிறது.
1990வாக்கில் நம் நாட்டிற்கு வராது என்று இருந்த ஒரு நோய் நம் வாழ்வியல் முறை மாறுவதால் படையெடுத்து வருகிறது .
நேற்று என் மூன்று வயது குழந்தைக்கு முடி வெட்ட  சலூன் அழைத்துச் சென்றிருந்தேன். வேற்று ஆளை சற்று விகாரமாகப் பார்க்கும் என் மகளை என் மடியில் அமர வைத்து முழுதும் முடி வெட்டி முடிப்பதற்குள் அந்த அரங்கத்தைய மிரட்டி எடுத்துவிட்டோம். அவ்வளவு அழுதாள். விடவில்லை. அவ்வளவு தான் என்று கூறி கூறி சமாளித்து முடித்தோம். அடுத்த அறையில் ஒரு அம்மா அவரது பையன் வந்தார். அவனுக்கு மூன்று வயது தான் இருக்கும்.
ஒரு கையில் மொபைலைக் காண்பித்தும் ஒரு லாலி பாப்பையும் கொடுத்து முடி வெட்ட வைத்தார். கழுத்தைத் திருப்ப முடி திருத்தம் செய்பவர் கேட்டால் மொபைலைத் திருப்பிக்கொள்கிறார்.
குழந்தைகள் எப்பொழுதும் கெடுவதில்லை. கெடுக்கப்படுகிறார்கள். முதலில் நல்ல வாழ்வியல் முறையை நாம் வாழ்ந்தால் தான் நாம் நமது குழந்தைகளுக்கு அதைச் சொல்லித்தரமுடியும்.
ஒரு முறை மொபைலை என் குழந்தைக் கேட்டு அடம் பிடிக்கிறார் என்ன செய்வது என்று ஒரு தோழரிடம் கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதில் கொஞ்சம் ஆழமானது, " பழனி, தீயைத் தொட ஆசைப்படுவாள், கொடுப்பீர்களா ". உண்மை தானே. அந்த பதில் ஒவ்வொரு தருணமும் என் காதில் கேட்டு மாற்று வழிமுறைகளைக் கையாள வேண்டி இருக்கிறது.

 மறதி எப்படி வருகிறது.
மூளையின் வரைபடம் வரைந்து அதன் பகுதி சொல்லி பாடம் எடுக்கவில்லை. சுருக்கமாக ஒன்று தான் .
மூளையின் நரம்பு செல்கள் மீது ஏதேதோ ஏற்பட்டு அவை செயல்படாமல் இருந்துவிடுகின்றன.
அவை செயல்படாமல் இருந்து செத்தும் விடுகின்றன.
நாம் ஓடியாடி விளையாண்டால் உடம்பில் அனைத்துச் செல்களும் சுறுசுறுப்பாய் தானே இருக்கும். சும்மா ஒரு மொபைலைத் தூக்கிக்கொடுத்து குழந்தையை அமரவைப்பது எப்படி.
குழந்தைக்கே அப்படி என்றால் நமக்கு.
உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு யோசித்துப் பாருங்கள். உடல் உழைப்பும் இல்லை. மூளை உழைப்பும் இல்லை.
டாக்டர் சொல்வதில் ஒன்று குறுக்கெழுத்துப் போட்டி போன்று பங்கெடுங்கள். தவறாக இருந்தாலும் பங்கெடுங்கள் என் கிறார்.
மூளைக்கு வேலை கொடுக்கச்சொல்கிறார்கள்.
வயோதிகர்கள் இந்த நோய்க்குள் புகாமல் இருக்க மூளையை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க இளைஞர்களுடன் வாக்கிங்க் செல்லலாம் எனச் சொல்கிறார்.
ஓய்வு பெற்ற பிறகு வயதானவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகச் சொல்கிறார்.
ஒரு சோசியல் கம்யூனிட்டியாக செல்வது உதாரணத்திற்கு கோயிலுக்குச் சென்று நான்கு நபர்களுடன் பேசுவது. வாக்கிங்க் செல்வது. அங்கு பலரைப் பார்ப்பது. எப்பொழுதும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது என்று சொல்கிறார்.
உண்மை தானே, உடலுக்கு உழைப்பு தருவது போல் மூளைக்கும் உழைப்பு தரலாமே.
அது போல் குறைந்தது ஆறு மணி முதல் ஏழு மணி நேரம் தூங்கவேண்டுமாம்.
மூளையின் செல்கள் ஓய்வும் எடுக்க வேண்டும். புத்துணர்வும் பெற வேண்டும்.
புதிய நபர்களைப் பார்ப்பது பேசுவது புத்துணர்வைத் தருமாம்.
ஆக, மறதி நோய்க்குள் புகாமல் இருப்பது நம் கையில் இருக்கும் வாழ்வியல் முறை தான்.
மறதி அடிக்கடி வருகிறதா...ஒரு நாளில் நடந்ததை அன்று இரவு தினமும் காலையிலிருந்து என்னென்ன நடந்தது என்று எழுதிப் பாருங்கள். யோசித்து யோசித்து கவிதை எழுதுவதைக் காட்டிலும் அது ஆகச் சிறந்தது என்று அந்த ஏழை விற்பனைப் பிரதிநிதி சொல்கிறார்.
அது யாருனு மறந்திராதீங்க மக்களேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ....




கருத்துகள்

  1. சூப்பர் சகோதரா ஞாபகமறதியை பற்றிய பயனுள்ள விரிவான அலசல் நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....