இந்த அறையில் நான் மட்டும் தான் இருக்கிறேன்.

இந்த அறையில்
நான் மட்டும் தான்
இருக்கிறேன்.
இந்த காலி 
இருக்கையில்
நீ வந்திருந்தால்
அமர்ந்திருக்கலாம்.
பாதி படித்து 
மீதிப் பக்கங்கள் 
திறந்தபடியே கிடக்கும்
இந்தப் புத்தகத்தை
நீ
எடுத்துப் புரட்டியிருக்கலாம்.
ஒழுங்கற்றுக் கிடக்கும்
என்
மேசைக் காகிதங்களை
வரிசைப்படுத்தி நீ
அமரலாம்.
சுவற்றில் 
சாய்ந்தபடி தொங்கும்
ஒரு பிள்ளையாரை
நீ 
நேராக்கி வைக்கலாம்.
நேற்றைய நாளில்
இருந்து
இன்றைய நாளுக்குக்
கிழித்து வைக்கலாம்.
சமமற்ற மின்சாரப் 
போக்கால்
குளிர்சாதனப்பெட்டி
மின்னழுத்தச் சத்தம் 
கொடுக்கையில் தெரிகிறது
இந்த அறையில்
நான் மட்டும் தான்
இருக்கிறேன்.
மறுபடியும்
இந்த இருக்கை
காலியாகத் தானே 
இருக்கிறது.
பாதிப் பக்கங்கள்
புரட்டப்படாமல் தானே
புத்தகம் திறந்து
கிடக்கிறது.
ஏதோ ஒரு தனிமை தானே
இந்தக் காகிதங்களை
வீசியிருக்கிறது.
உன்னால் நேராக
பிள்ளையார் 
வெறும் குறியீடு தானே..
காலண்டர்களில்
இன்றுகள்
உன்னால் துவங்கப்படாமல்
இருக்கின்றன..
என்னைப்போலல்லாது
இந்தக் குளிர்சாதனப் பெட்டி
ஏன் 
சமமற்ற அழுத்தத்தை
வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது
இந்த அறையில்
நான் மட்டும் தானே
இருக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....