பைத்தியக்காலம்- நர்சிம் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து

எழுத்தாளர் நர்சிம் எழுதிய பைத்தியக்காலம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து.....

" i dont make unconventional stories
   i dont make non linear stories
  but i like linear storytelling lot "

என்ற ஒரு வாசகம் இருக்கிறது. இதைச் சொன்னவர் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீஃபன் ஸ்பீல்பர்க். இதைத் தமிழ்படுத்தி ஸ்பீல்பர்க்கின் வாசகத்திற்குள் அர்த்தப்பிழை கிராஃபிக்ஸ் செய்து அதன் நேர்த்தியைக் கெடுக்க விரும்பவில்லை. அப்படி ஒரு ஸ்டோரி டெல்லிங் வித்தைகளை இப்பொழுது இருக்கும் பல எழுத்தாளர்கள் கையாண்டு வருகிறார்கள். இப்பொழுது இருக்கும் என்பதில் நான் குறிப்பிடுவது அன் டோல்ட் என்ற பதம் பொருந்தும் சரியாகப் பேசப்படாத அல்லது பேசப்படவேண்டிய வயதான அல்லது இளந்தாரி எழுத்தாளர்களையும் சேர்த்துத் தான். பைத்தியக்காலம் தொகுப்பின் ஆசிரியர் நர்சிம் கூட அப்படிப்பட்ட வித்தைகளைச் செய்யும் எழுத்தாளன் என்பது என் அபிப்ராயம்.
பைத்தியக்காலம் படிப்பது என்பது அனுபவங்களைத் தருவது. அல்லது ஒருவனின் அனுபவத்தோடு அவன் குவளை அனுபவத்தை அவன் மடியில் கிடத்தி நம் மூளைக்குள் புகட்டுவது.
தூதுவளை துளசி இஞ்சி எல்லாம் அரைத்து மேலோட்டமாக பெருங்காய்த்தைத் தட்டித் தூவி குழந்தையின் நெஞ்சு சளிக்கு கொடுக்கும் கசாயத்தை அப்ப்டித்தான் குழந்தையின் வாய்க்குள் ஊற்றுவார்கள். குழந்தை எழுந்து முகத்தில் ஒரு பாவனை காட்டும். அந்த மூலிகைகளின் சுவை அது.
உங்களை அப்படி கிடத்தி மூளைக்குள் ஊற்றிய பின் நீங்கள் கூட உங்களுக்கு அந்த அனுபவத்தை ஊட்டிய ஒருவனது சாயலைப் பெறுவீர்கள். அந்த அனுபவத்தை நீங்களே உணர்வீர்கள். நீங்களே அனுபவித்தது போலவே. அப்படித்தான் பைத்தியக்காலம் செய்கிறது என்னை.
visualisation என்று ஒன்று இருக்கிறது. வார்த்தைகளைச் சரியாகத் தேர்ந்தெடுத்து கோர்க்கும் வித்தை. தீ என்றால் சுடவேண்டும் என்பது போல் மாளிகை என்றால் நாம் அந்த மாளிகையின் நடுவில் நின்று அதன் விதான உயரத்தை வார்த்தைகளின் மூலமாகவே உணரவேண்டும் அல்லது மாயையாகப் பார்க்கவேண்டும். தொகுப்பின் முதல் பக்கத்தில் ஆரம்பிக்கும் அந்த வித்தை கடைசிப் பக்கத்தில் வேப்பமரம் பெருஞ்சத்தத்துடன் விழுந்ததுவரை நர்சிம் visualisation ல் பின்னுகிறார்.
இந்த பூத உலகத்திற்கு பூத உடலுடன் வந்திருக்கிறோம். பேசுகிறோம். எதையாவது செய்கிறோம். பூத உடலைச் சிதைக்கச் செத்துவிடுகிறோம். பேசியதையும் செய்ததையும் அடுத்த அல்லது அதற்கடுத்தத் தலைமுறை ஒரு கதையாக மாற்றி அமைத்துச் சொல்லிக்கொண்டிருக்கும். இந்த வளிமண்டலம் தனிமவரிசை அட்டவணைத் தனிமங்கள் அடக்கியது போக இதுபோன்ற கதைகளையும் தூக்கிக்கொண்டு திரிகிறது. ஒவ்வொருவரும் கதைசொல்லிகளாகத் திரிகிறோம். எழுத்தாளன் கதைசொல்லியாக மெருகேறி மின்னுகிறான் அவ்வளவே.
பைத்தியக்காலத்தில் கதைசொல்லிகள் பொறியாளனாக ஓட்டுனராக சினிமா உதவி இயக்குனராக, மண்ணெண்னெய் ஊற்றுபவனாக,ஹைதை நகர் வழிகாட்டுபவனாக, கார்ப்பரேட் மருத்துவமனை வளாகத்தில் டபுள் ஆக்ட் கதாபாத்திரமாக வந்து போகிறான். சில கதை சொல்லிகள் எவனையோ சொல்வது போல் கடைசியாகக் கலைந்து செல்கிறான். பழைய மலையாளப் பட க்ளைமேக்ஸ் போல ஒரு நதிக்கரையில் அவன் செல்லும்பொழுது தூரத்தில் அந்த கதைசொல்லி ஒரு முகத்திரையைத் தூக்கி எறிகிறான். நடந்து செல்லும் கதைசொல்லியின் நிழலில் அந்தக் கதைசொல்லி யாரைக் கதையாகச் சொன்னானோ அவனது நிழலாகவே இருக்கும். அந்த சமயத்தில் ஸ்டோரி பை நர்சிம் என்று ஸ்லைட் விழும். அப்படிக் கதைசொல்லிகள் கலைந்து போவது நர்சிம்மின் வித்தை.

கதையைக் கடைசி நேரத்தில் அதன் நூலை அல்லது கருவைக் கட்டுடைப்பதில் வெற்றி பெறுதலாய் நினைத்துக்கொண்டிருந்த எனக்கு வெவ்வேறு பாடங்களை பைத்தியக்காலம் புகுத்துகிறது. ஒரு கதையைக் கட்டமைப்பதிலும் அவ்வளவு வித்தியாசங்கள். ஒரு கதை வித்தியாசமாக முடிக்கப்பட்டு இருக்கிறது என்பது வேறு. நான் பேசுவது பொறியியல். கதை கட்டமைக்கப்பட்டதே வேறுவிதமாய் இருப்பதைப் பற்றியது.
ஒரு கதை சொல்லியின் குரல் கேட்கும். அது ஒருவரை முன்னிலைப் படுத்தும். அதன் குரலுக்கேற்ப நாம் அவரைப் பார்ப்போம். 'நீங்களும் சில ரகசியங்களும்" கதையில் கதை சொல்லி நீங்கள் நீங்கள் என எதையோ முன்னிலைப் படுத்தி எழுதுகிறது. அது யாரோ யாருக்கோ எழுதியக் கடிதம் போல் கூட இருக்கலாம்.
'நீ இன்றி அமையாது உலகு"வில் இன்னும் அதகளம். இரண்டு கதைசொல்லிகள் போல் வரும். ஒரு கதை சொல்லி வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட வாக்கியம். அஃறிணை வடிவில். கதைசொல்லிகள் உயர்திணையா அஃறிணையா. இங்கு அஃறிணை என்பதற்குக் காரணம் அதைப் படித்தால் தான் புரியும்.
இரண்டு பத்திகளுக்கு முன்னால் சொன்ன மலையாள க்ளேமேக்ஸ் கதைசொல்லி நிழல் தீபாவளி கதையில் வந்து விழும்.
பாஸ்கர் சக்தி, பின்னட்டையில் இந்தத் தொகுப்பில் இருக்கும் காதல் பற்றிச் சொல்லியிருப்பார். காதல் ஒருமை அல்ல. இங்கு பன்மை. உண்மையில் பைத்தியக்காலத்தில் வரும் காதல் களுக்காகத்தான் நான் எழுத நினைத்தேன். ஆனால் பாஸ்கர் சக்தி குறிப்பிட்டுவிட்டதால் நீட்டி முழக்கிறேன்.
ஆண் பெண் இருவருக்கும் இடையில் பூக்கும் ஓர் தொடர்பலை. அலுவலக நிமித்த அல்லது நட்பு நிமித்த புள்ளிகள் பூத்து நெருங்கும். நெருங்குவதை ஆணும் பெண்ணும் அறிந்தாலும் வார்த்தைகளைக் கொட்டிப் பகிர்ந்தது கிடையாது. untold அலைகள் இருந்துகொண்டே இருக்கும். அவற்றைப் பகிர்ந்து கைகோர்த்த சுப லவ் படங்களும் , சண்டையிட்டு அழுகாச்சி டி.ஆர் படங்களும் உண்டு. அந்தத் தவிப்பை அப்படியே சட்டை போல் கழட்டி போட்டுவிட்டு அவ்வப்பொழுது அதை உணர்வது போல் ஓர் உணர்வு. எந்தக் கதாப்பாத்திரத்தையும் சிதைக்காமல் நர்சிம் செய்திருக்கிறார்.
ஓர் ஆண் , பெண் மீதான உளவியல் குறித்த மேலாண்மையைப் பற்றி நிறைய பேசலாம் எப்பொழுது அது வெளிப்படும் என்றால் அந்தப் பெண் இல்லாத போது ஆணுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான மன சலனங்களை வைத்து. அதை நர்சிம் உணர்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார்.

எதார்த்தங்களைப் பேசாத படைப்புகள் நிற்காது என்பார்கள். வார்த்தை கதை முழுக்க அப்படிப்பட்டது. நீர்க்குமிழி வாழ்வை உடையும் தருணத்தை எழுதிப் பார்த்தல் அது. ஆனாலும் நர்சிம், நீங்கள் வார்த்தை கதையை அப்படி முடித்திருக்கக் கூடாது. அது வலி.

முகநூலில் நான் ஏதாவது கட்டுரை எழுதினால் ரத்தினவேல் ஐயா, கனவுப்ரியன் என எல்லாக் கட்ட நண்பர்களும் எனக்குச் சொல்வது மதுரை ஸ்லாங். வட்டார மொழி எப்பொழுதும் அழகு. 'தோது' 'அருப்புக்கோட்டையரிதி' , கும்முனு மணக்கும் போன்ற மதுரை வார்த்தைகள் பைத்தியக்காலத்தில் மண்வாசனையைத் தெளிக்கின்றன.

வாசிப்பில் புது அனுபவத்தைத் தரும் வரிசையில் நர்சிம் எழுதிய பைத்தியக்காலமும் ஒன்று. ஏனென்றால் கட்டுரையின் முதல் பத்தியைப் படிக்கவும்.

பழனிக்குமார்
மதுரை.
09/09/18

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8