க்ர்ர்ச்ச்சுக்

அப்பொழுது மதுரை முத்து ஆரம்பப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன்.
ஆமாம் இது ஃப்ளாஷ்பேக் தான். பழைய பதிவை கொஞ்சம் டிங்கரிங்க் செய்து வெளியிடுவது தான் இது.
அன்று சனிக்கிழமை. விடுமுறை.
அந்த காலத்தில் சனிக்கிழமைகளுக்கென்று சில இலக்கணம் உண்டு. ஒன்று கரண்ட்டை கட் பண்ணிருவானுக. கேட்டா மின் பராமரிப்புனு சொல்வாய்ங்க.
இரண்டாவது ஸ்கூலுக்கு அரை நாள் வைப்பானுக. அதுல வெங்கட்டம்மா டீச்சர் இருந்து எழுதி காமிச்சுட்டு போனு சொல்லும். நாலு மணிக்கு முன்னாடி போனா அந்தம்மாவோட வீட்டுக்காரர் வைவார் போல.
மூன்றாவது லீவா இருந்தா தலைக்கு எண்ணெய் வச்சு குளிக்கனும்.
சம்பவம் நடந்த அன்றைய சனிக்கிழமை தலைக்கு ஆயில்பாத் எடுத்துவிட்டு....ஒரு சந்தனக்கலர் பனியன் மற்றும் அதற்கேற்றார் போல் ஒரு கால்சட்டை...(ட்ரௌஸர்).
அந்த சந்தனக்கலர் சட்டை ஒரு ஸ்பெஸல்.
தாய்வீடு படத்தில் ரஜினிகாந்த் அந்தக் கலரில் வருவார்.
அதே நிறத்தில் பனியன் போட்டு...எங்கள் வீட்டு நிலைக்கண்ணாடியின் முன் நின்று பார்க்கிறேன்
முகத்தை இடது வலது என திருப்பிப் பார்க்கிறேன்...
அப்படியே கண்களை வானத்தை நோக்கிப் பாத்துட்டு மறுபடியும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தா..ங்கொய்யாலே ..அப்படியே தாய்வீடு ரஜினிகாந்த் தான்.....க்ர்ர்ர்ர்ச்ச்ச்ச்சுக்......னு ஒரு கேமரா கிளிக் சத்தம் எனக்குள கேட்டுக்குச்சு.

நாங்கள் இருந்தது மாடிவீடு.
16 படிகள்.
இரண்டு..இரண்டு படிகளாய் தவ்வி இறங்கினேன்.
16....14....12..10..08....நிற்க....இப்பொழுது நின்றேன்.
நம்ம தான் சூப்பர் ஸ்டார் ரசிகனாச்சே, இப்ப ஸ்ட்ரெய்டா முதல் படிக்கு தவ்வினா என்னனு எனக்குள் இருந்த தாய்வீடு  ரஜினிகாந்த் எட்டிப்பார்த்தான் .
இலக்கிய நடைல எழுதலாம்.
பாதங்கள் துடித்தன.
முழங்கால்கள் தவ்வ வளைந்துகொடுத்தன.
உடல் எடையை தூக்கிக்கொண்டு தவ்வினேன்.
பறக்கிறான் தாய்வீடு ரஜினிகாந்த்..8..6..4...2....ஆனால் தரைக்கு லேண்ட் ஆகவில்லை...நேராக கீழே இருந்த கிரில் கேட்டின் இரும்புக்கம்பியில் என் நெற்றி முட்டியது.
அப்படியே மல்லாக்க விழுந்தான் தாய்வீடு ரஜினிகாந்த் இல்லை இல்லை....முத்து ஸ்கூல் பழனிக்குமார்...

கண்ணை மூடி திறந்தேன்.
எதிர்வீட்டு சைமன் அண்ணன் என்னை தூக்கிக்கொண்டு ஓடினார்.
மறுபடியும் கண்ணை மூடி திறந்தேன்.
இரத்தம் வர்ற இடத்தில் காப்பி பொடியை வையுங்கள்னு சத்தம் கேட்டது..இரத்தம் பிறகு கண்ணீரோடு ஆட்டோவில் அம்மாவோடு ஆஸ்பத்திரிக்கு போனோம்.
தையல் போடவேண்டாம்...ஒரு சின்ன ட்ரெஸிங் போதும்...வலிக்காம இருக்க ஒரு ஊசி போடலாம்னு டாக்டர் சொன்னார்.
இடுப்பில் ஒரு ஊசி போடப்பட்டது....
மன்னிக்கவும்....குத்தப்பட்டது..(நெத்தியில முட்டி மோதி இரத்தம் வந்தப்பகூட வலிக்கல...ஆனா அந்த  ஊசி...ஸ்ஸ்ஸ்ஸூ முடியல...)
தலையில கட்டுடடன் வந்து இறங்கினோம்...
கீழ் வீட்டு ரஞ்சிதம் அத்தை பார்த்துவிட்டு...புள்ளைக்கு அடிபட்ருச்சேனு நெத்திய ஒரு அமுக்குஅமுக்குச்சு....(கொஞ்சுறாறாறாங்களாளாமாம்ம்,,,,)
பக்கத்துவீட்டு செண்பகம் அத்தை..அய்யய்யோ...தையல் போட்ருக்கானு பதறுச்சு..
இல்ல அத்தைனு சொன்னேன்
இல்லையா...தையல் போடலையா...னு மறுபடியும் பதறுச்சு...ஏன்னா..செண்பகம் அத்தை அந்த காலத்திலேயே உஷாதையல் மிஷின் 2 வச்சு தைச்சுக்கிட்டு இருந்துச்சு...விட்டா என் தலைய மிஷினுக்குள்ள விட்டு தைச்சுருக்கும் போல...அப்படி ஒரு தொழில் நேர்த்தி.....

எல்லாத்தையும் சமாளிச்சு வீட்டுக்கு வந்ததும், நான் தாவி முட்டி வாங்குன அடி அப்புறம் அந்த கரிமேட்டு டாக்டரம்மா போட்ட ஊசிக்குத்தல விட பெரிய வலி எங்க வீட்டுல நடந்த அட்வைஸ் படலம் தான். இப்படியே ஆடிட்டே திரியாத , ஒழுங்கா உக்காந்து படினானுக.
நம்மளும் முகத்தை எவ்வளவு நேரம் தான் சோகமா வச்சுக்கிறது. சரினு உள்ள ரூம்க்குள்ள போனேன்.
அங்க ஒரு நிலைக்கண்ணாடி.

நான் அந்த நிலைக்கண்ணாடியின் முன்னாடி நின்றேன்...

முகத்தை இடது வலதுஎன திருப்பி பார்க்கிறேன்.
தலையில் இரத்தக்கறையுடன் கட்டு....
வானத்தை நோக்கிப் பார்க்கிறேன்.
மறுபடியும்  கண்ணாடியில்
முகத்தை இடது வலதுஎன திருப்பிப் பார்த்தா....அடங்கொய்யாலே...அப்படியே
தலையில் கட்டுடன் பாயும்புலி ரஜினிகாந்த் ரெடி....
க்ர்ர்ர்ர்ச்ச்ச்சுக்...(கேமிரா சத்தம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8