தி நேரேட்டர்..

ஒரு வாரத்திற்கு முன் எனக்குத் தெரிந்த financial consulting கம்பெனி முதலீடு சம்பந்தமான ஒரு கூட்டம் நடத்துவதாக மெயில் அனுப்பியிருந்தார்கள். ஏற்கனவே  ஒரு வருடத்திற்கு முன் இது போல் கூட்டம் நடத்தி அதற்கு நான் போகவில்லை. ஆர்வமும் இல்லை. இந்த முறை அந்த அலுவலகத்தின் மேலாளரே தொடர்புகொண்டு வரும்படி இரு முறைஅழைத்திருந்தார். இன்னொன்று பேச அழைத்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவர் பஜாஜ் ஃபின்செர்வ் மற்றும்  ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்தவர். சரி போய்த்தான் பார்ப்போமே என்று கூட்டம் ஆரம்பித்த அரைமணி நேரம் கழித்து உள் நுழைந்தேன்.
கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல் ஹால் அது. எண்பது வரை ஆடியன்ஸைத் திரட்டியிருந்தார்கள். கிட்டத்தட்ட பாதிபேர் ஓய்வு பெற்றவர்கள். எனக்குத்தெரிந்தே வாக்கர்ஸ் க்ளப் உறுப்பினர்கள் நான்கைந்து ரிட்டையர்ட் வங்கி மேலாளர்கள் இருந்தார்கள். அந்த நிறுவனம் வங்கியோடு இணைந்து மியூச்சுவல் இன்வெஸ்ட்மெண்ட் லாம் பகிர்வதால் பல நபர்களை அப்படி அழைத்து வந்திருந்தார்கள்.
முதலில் பேசியவர் ஹெச்டிஎஃப்சி மேலாளர்.
சுருக்கமாக அந்தக் கூட்டத்தின் சாராம்சம் மியூச்சுவல் ஃபண்டில் இன்வெஸ்ட்மெண்ட் செய்வது பற்றித்தான் இருந்தது. மார்க்கெட் லிங்க் இருப்பதால் இருக்கும் அச்சத்தைப் போக்க மாதாந்திர இன்வெஸ்ட்மெண்ட் ப்ளான்(s.i.p) பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார். 2004ல் நான் s.i.p ஆரம்பித்தபொழுது என்னை நம்பச்செய்தது 12 மாதத்தில் உங்கள் முதலீடு குறைந்தது 15 சதவீதத்திற்கு மேல் இருக்கும். வழக்கம் போல ம்யூச்சுவல் ஃபண்ட் ரிஸ்க் டிஸ்க்ளைமர் ப்ள்ள்ள்ள்ள்ள்ளாஆஆ...ப்ள்ளாஆஆஅ வாசித்தார்கள். நான் 30 சதவீதத்திற்கு அதிகமாகக்கூட ரிட்டர்ன்?ஸ் எடுத்திருக்கிறேன்.
ஆனால் இந்த முறை புதிதாக முதலீடு செய்ய வருபவர்களுக்கு குறைந்தது மூன்று வருடங்கள் காத்திருக்கச்சொன்னார்.
அந்தளவில் தான் நம் நாட்டின் பொருளாதார நிலை இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மை தான்.
இந்த மாதிரி பேச வருபவர்கள் சில ஜிமிக்ஸைக் காண்பிப்பது வழக்கம். ஆனால் அது எப்போதும் பேசுபவர்கள் போல ஒரு முன் வழங்கப்பட்ட வரையறையுடன் முடிந்துவிடும்.
பொதுவாக MLM மார்க்கெட்டிங்க்கில் இருப்பவர்கள் பேசும்பொழுது இப்பொழுது ஆரம்பித்தால் உங்களுக்கு கீழ் மூவர் அவருக்குக் கீழ் நால்வர் அவருக்குக் கீழ் பத்து என்று வளையங்களைப் போட்டு உங்களுக்காக ஒரு இலட்சம் பேர் வேலை பார்த்து உங்களுக்குப் பணத்தைத் தருவர் என்பார்கள். அப்படி ஒரு கணக்கு எழுதுவார்கள். இன்னைக்கு நீ ஒரு ரூபாய் உன் கணக்குல போடுவ. அதுவே ஒரு லட்சம் பேர் உன் கணக்குல ஒரு ரூபாய் போட்டா எவ்வளவு வரும்னு கேள்வி கேட்பார். கூட்டத்துக்குள் நமக்குள் ஒரு பணக்காரனாக ஆசைப்படும் மேதாவி ஒரு லட்சம் சார் என்று கையைத் தூக்குவார்.
பேசுபவரும் வெரி குட் என்று இப்படி பத்து நாள் அக்கவுண்ட்ல போட்டா என்னாகும் என்பார். உடனே இப்பொழுது ஐந்தாறு பேர் மகிழ்ச்சியுடன் பத்து லட்சம் என்பார்கள்.
இப்பொழுது பேசுபவர் அவர்களை ஆசிர்வதிப்பார்..நீங்களெல்லாம் ஒரே மாதத்தில் லட்சாதிபதி...இப்படி ஒரு வருடம் என்றால் என்றிழுப்பார். அவ்வளவு தான் வெற்றிக்கொடி கட்டு பாடல் மலையை உடைப்பதும் ஆலை தொடங்குவதும் ஓவர் நைட்டில் ஒபாமா என்றும் காட்சிகள் உருவாகும். இந்த வகை கூட்டத்திற்கும் ஏசு உங்களில் இறங்கி பாவத்தை வாஸிங்க் பவுடர் போட்டு க்ளீன் செய்துவிட்டு என்லைட்மெண்ட் கொடுப்பார் என்ற பிரசங்கக் கூட்டங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.
இந்த இன்வெஸ்ட்மெண்ட் கூட்டங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. உண்மையாகவும் இருக்கும். ஆனால் இவர்கள் எதிர்காலம் மட்டும் பேசமாட்டார்கள். கடந்தகாலத்திற்குச் செல்வார்கள்.
அதற்கென்று சில தரவுகளை லேப்டாப்பில் டவுன்லோட் பண்ணி காண்பிப்பார்கள்.
உதாரணத்திற்கு 1980ல் ஏசியன் பெயின்டிங்கின் ஷேர் விலை 20 ஓவா என்பார்கள். அன்று நீங்கள் 100 ஷேர் வாங்கிருக்கீங்கனு வச்சுக்குவோம்னு அவர்களாகவே ஒரு கணக்கை வீட்டில் போட்டு வருவார்கள். இன்று அதனோட ஷேர் விலை 1980 என்பார்கள். 20 ரூபாய்க்கு வாங்குனது இப்ப 1980னா ஒரு ஷேர்க்கு ப்ராஃபிட் எவ்வளவு என்பார்கள். நம் கூட்டத்திற்குள் ஒரு இராமனுஜம் கண்டிப்பாக இருப்பார். 1960 என்பார். அப்ப நூறுக்கு என்று கேள்வி கேட்பதற்குள் நான்கைந்து இராமனுஜர்கள் 196000 என்பார்கள். இது மாதிரி பத்து வகையான ஷேர்களை அவர் காண்பிப்பார். கடைசியில் அது கோடியில் போய் நிற்கும்.
கூட்டத்தில் எவனாவது எழுந்து அந்த காலத்துல ஷேர்மார்க்கெட் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பதையோ, அந்த காலத்துக்கு 2000 ஓவா என்பது மிகப்பெரிய தொகை என்பதையோ கேட்கமாட்டான். இன்னொன்று அவன் எடுக்கும் ஷேர் களைப் போல சாலிடெர் , நிர்மா, சித்தாரெஞ்சன், கோல்ட் ஸ்பாட், சிட்டாடெல், டயனோரா, யாசிகா இப்படி அழிந்து போன கம்பெனிகளின் கதைகளைக் கூட சொல்லமாட்டார்கள். நாம் எப்படி சரியாக நல்ல கம்பெனியில் அதைப் போடுவோம் என்று அன்று தெரிந்திருக்குமா..தெரியாது.
அதைக் கேட்டால் ம்யூச்சுவல் ஃபண்ட் அன்ட் ட்ரெடிங்க் அண்டர் ரிஸ்க் னு டிஸ்க்ளைமர் வாசிப்பார்கள்.
இப்பொழுது சொல்லவருவது எதைப் பற்றியும் தெரியாமல்கூட்டத்திற்கு வருபவர்களை வழக்கம் போல ஒரே மாதிரியாகப் பேசி பர்ப்பஸ் நிறைவடையாமல்போகிறது. வரும் கூட்டம் மட்டும் ஆட்டுக்கிடை போல் இல்லை. கூட்டத்திற்கு நடுவில் பேசுபவர் கூட கிடை ஆடு போல் ஒரே மாதிரியாகப் பேசும் வழக்கமாக இருக்கிறது.
அடுத்து வந்த சிறப்பு விருந்தினர் அந்த பஜாஜ் மற்றும் ஐசிஐசிஐ ஜாம்பவான் லேப்டாப்பை எடுத்து 1980ல் ttk  ஷேர் எவ்வளவு என்று காண்பித்தார். இப்பொழுது எவ்வளவு எனக் காண்பித்தார். ஆனால் வெகுஜன ஈர்ப்பாக அந்தக் காலத்தில் இரண்டு டிடிகே பிரஸ்டிஜ் குக்கரை வாங்குவதற்குப் பதிலாக இரண்டு ஷேர்களை வாங்கி வைத்திருந்தால் அந்தக் குக்கர் வேஸ்ட் ஆகிருக்கும். அந்த ஷேர் உங்களுக்குப் பலனைத் தந்திருக்கும் என்றார். பொதுவாகப்பெண்கள் எத்தனை வருஷத்திற்கு ஒருமுறை குக்கர்களை மாற்றுகிறார்கள் என்று கேட்டார். அப்பொழுதெல்லாம் இரண்டு ஷேர்களை வாங்கிப்போட்டு இருக்கலாமே என்றார்.
பதினைந்து வருடத்திற்கு முன் வாங்கிய ஒரு ஷேர்க்கும் அன்று பிறந்த ஒரு குழந்தைக்கும் இன்று என்ன வொர்த் என்று கூறினார். பதினைந்து வயதில் உங்கள் குழந்தை சம்பாதிக்க ஆரம்பித்திருக்குமா என்றார். ஆனால் வாங்கிப் போட்ட ஷேர் உங்களுக்கு நல்ல பலனைத் தந்திருக்கும் என்றார்.
உண்மை தானே.
உங்களில் யாராவது இருபது வருடங்களுக்கு மேலாக மியூச்சுவல் ஃபண்டில் ஒரே ஃபண்டில் முதலீடு செய்கிறீர்களா என்றார். யாரும் கை தூக்கவில்லை. தன் லேப்டாப்பில் நான் சொன்ன உதாரணம் போன்று ஒன்றைக் காண்பித்தார். வழக்கம்போல் தான் என்று இருந்தேன். ஆனால் அடுத்து பதினைந்து வருடங்களாக ஒரே ஃபண்டில் இன்வெஸ்ட் செய்பவர்கள் இருக்கிறீர்களா என்றார். யாரும் இல்லை. பத்து வருடங்களுக்கு மேலாக என்று கேட்டதும் தன்னிச்சையாக நான் கையைத் தூக்கிவிட்டேன். அங்கு நான் மட்டும் தான் கையைத் தூக்கி இருந்தேன். எத்தனை வருடம் என்று கேட்டார். பதின்மூன்று வருடங்கள் என்றேன். எத்தனை மடங்கு உங்கள் முதலீடு அதிகமாகி இருக்கிறது என்று கேட்டார். மூன்று மடங்கு என்றேன். இப்போது இதற்கு முன் பத்திகளில் கூறப்பட்ட மேதாவி மற்றும் இராமனுஜர் மாதிரி மற்றவர்களுக்கு நான் கண்ணில் பட்டு இருப்பேன்.
இதில் ஒரே ஆறுதலான விசயம், கேட்டவர், பதின்மூன்று வருடமா என்றதும் உங்கள் வய்து என்ன என்று கேட்டார், 38 என்றேன். நீங்கள் பார்ப்பதற்கு அப்படித்தெரியவில்லை என்றார்.
துரதிர்ஷ்டவசமாக, நான் உண்மையைச் சொல்கிறேன் என்று ஆங்கிலத்திலேயே பதிலுரைத்தேன்.

இப்பொழுது இந்தக் கட்டுரை எழுதுவதற்கானக் காரணம் கிடைத்துவிட்டது என்று யாரும் எண்ண வேண்டாம். கூட்டங்களை நடத்துவோர் மற்றும் பேசுவோர் எந்த விதமான ஆடியன்ஸ்களைத் திரட்டியிருக்கிறார்கள் என்பது பொறுத்துப் பேசவேண்டும் என்பதே... மற்றபடி இரண்டாவது நபர் பேசியிருந்த சேமிப்பு பற்றியத் திட்டங்கள் அனைத்தும் உபயோகமானவை.

ம்யூச்சுவல் ஃபண்ட் பற்றிய குறைந்த பட்ச அறிவு இல்லாமல் அந்தக்  கூட்டம் கல்ந்துகொண்டிருந்தால் நான் கண்டிப்பாக ம்யூச்சுவல் ஃபண்டில் இன்வெஸ்ட் பண்ணியிருக்க மாட்டேன். அந்தளவு குழப்பி இருந்தார் முதலில் பேசியவர்.
என்னைப் பொறுத்தவரை ம்யூச்சுவல் ஃபண்ட் அருமையான வழி சேமிக்க.

டிஸ்கி: ம்யூச்சுவல் ஃபண்டில் முதலீடு அண்டர் சப்ஜெக்டட்..ப்ளா..ப்ளா..ப்ளா..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8