ஃபீனிக்ஸ்

அடுப்பில் பால்பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
அம்மாவை படுக்கையில் இருந்து எழுப்பி சுவற்றில் சாய்ந்திருக்குமாறு அமர வைப்பதற்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது.
வேகமாக அடுப்படிக்குள் ஓடி வந்து அடுப்பை அணைத்துவிட்டு பாலை இறக்கினாள்.
வெள்ளாவியாய் பாலிலிருந்து ஆவி பறந்தது போல் இருந்தது. பால் பாத்திரத்தை நகர்த்தியதும் வெள்ளையில் மஞ்சள் பூத்த அந்தப் பாலின் நிறம் சூடானது தெரிந்தது.
சற்று பால் ஆறுவதற்குள் பாத்ரூமிற்குள் சென்று குழாயை மெதுவாகத் திறந்து அதனடியில் பெரிய வாளியை வைத்தாள். அம்மாவிற்கு காஃபி போட்டுவிட்டு வருவதற்கும் அந்த வாளி நிறைவதற்கும் ஏற்றபடி அந்தக் குழாயைச் சன்னமாகத் திறந்துவைத்தாள்.
இப்பொழுது அவளுக்கு நேரம் இல்லை. அம்மா ஒரு சர்க்கரை நோயாளி. சர்க்கரை அதிகமாகி ஒரு காலில் விரலை வெட்டி விட்டார்கள். ஒரே மகள் என்றால் அம்மாவிற்கு யார் இருக்கிறார்கள்.
அப்பா டிவிஎஸ் ஆலையில் மேற்பார்வையாளர். இந்த டிவிஎஸ் ஆலையில் வேலைபார்ப்பவர்களுக்கு விசுவாசம் எப்படித்தான் வருமோ தெரியாது. அந்த ஊழியர்களின் வீட்டில் எல்லாம் அந்த தாத்தா பாட்டியின் படம் வைத்துவிடுகிறார்கள்.
ஓவர் டைம் என்றால் முகம் சுளிக்காது பார்க்கிறார்கள்.
ஜானுவின் அப்பாவும் அப்படித்தான்.
ஜானகி என்ற ஜானு.

முதுகலையில் கோல்ட் மெடலிஸ்ட். வீட்டின் வறுமைக்கு வேலை போகலாம் என்று அம்மா சொல்ல, ஜானுவிற்கு மேற்படிப்பு படிக்க வேண்டும்.
அப்பாவின் பெண் பிள்ளை. படிக்க அனுமதி கிடைத்தது.
கோல்ட் மெடலிஸ்ட்க்கு பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் சீட் கிடைத்தது,
இந்த வருடம் முடியப்போகிறது.
ஜானுவிற்கு இப்பொழுது மதிய உணவிற்குத் தயார் செய்ததை டிபன் பாக்ஸில் எடுத்துவைத்துவிட்டு குளித்து விட்டு கிள்ம்ப வேண்டும்.
இன்றோடு எம்ஃபில் முடிகிறது.

********
அடுப்பில் பால் பொங்கி வழிந்துகொண்டிருந்தது.
சர்க்கரை வியாதியால் படுத்தப் படுக்கையாய் இருந்த அம்மாவை எழுப்பி அமரவைத்துவிட்டு அவருக்குத் தலையில் எண்ணெய் தேய்த்துவிட்டு முடியைச் சீவி விடுவதற்குள் அடுப்பில் பால் பொங்கி வழிந்துவிட்டது. இன்று ஜானுவிற்கு பி ஹெச் டி வைவா. இன்னும் கொஞ்ச நாளில் ஜானு ஒரு முனைவர். எம்ஃபில் படித்தக் கல்லூரியிலேயே வேலை அங்கே பிஹெச்டி படிக்க வாய்ப்பாகப் பயன்படுத்தி முடித்தும் விட்டார்.
ஜானுவிற்கு அல்லையன்ஸ் பார்க்கும் காலம் வந்துவிட்டதை அவளது அப்பா அறியத்தொடங்கிய்ருந்தார். இன்று கூட  சேலத்திற்கு மணமகன் இல்லம் நோக்கிச் செல்கிறார். அவருக்கு மதியம் சாப்பாடு தேவைப்படாது என்றாலும் அம்மாவிற்குத் தயார் செய்துவிட்டு ஜானு கல்லூரி விரைய வேண்டும். வைவா பற்றிய பதற்றம் எதுவும் இல்லை அவளுக்கு. அவளைப் பொறுத்தவரை நல்ல வேலை கிடைக்க வேண்டும். இருந்தாலும் டாக்டர் ஆகி நிரந்தர பணியிடம் வேண்டுமானால் ஒரு கல்லூரி எட்டு இலட்சம் வரை கேட்கிறதாம். வைவா இருக்கும் அன்று தான் ஜானு யோசிக்கிறாள். இவ்வளவு கடினப்பட்டுப் படித்தும் எட்டு இலட்சம் அவளிடம் இல்லை. அவள் திருமணத்திற்கே அப்பா கடன் வாங்க வேண்டிய நிலை. மூன்று மாத ஊதியத்தை எந்தச் செலவும் இல்லாமல் சேமித்து அதை வைத்துக்கொண்டு ஒரு மூன்று நாட்கள் கொடைக்காணல் ஊட்டி இப்படி போய் வரவேண்டும் அவளுக்கு. அது தான் அவளது ஆசை.

******

அடுப்பில் பால் பொங்கிக் கொண்டிருந்தது.
அப்பொழுது தான் தூங்கி எழுந்த நான்கு வயதுக் குழந்தைக்கு உச்சா போக பாத்ரூமி/ற்குள் அனுப்பி அந்தக் குழந்தைக்குப் பல் துலக்கி விட ஆரம்பிப்பதற்குள் பால் பொங்கிவிட்டது.
மதியம் சாப்பாடுலாம் கிட்டத்தட்ட தயார் நிலை. கணவனுக்கு எட்டு மணிக்குள் சாப்பாட்டைக் கட்டிக் கொடுத்துவிட்டு வேலைக்கு அனுப்ப வேண்டும். பிறகு குழந்தையை ஒரு கேர் சென்டரில் குழந்தை அழுது அடம் பிடிக்க கிட்டத்தட்ட குழந்தையைத் திணித்து விட்டு அவள் ஒரு பள்ளிக்குச் செல்ல வேண்டும். பி ஹெ ச் டி படிப்பு கல்லூரிக்கு அனுப்பக் காசையும் கேட்டதால், என்றோ படித்த பி.எட் படிப்பும் டி ஆர் பி தேர்வும் அவளை  ஓர் ஆசிரியையாக மாற்றி அரசு அலுவலராக தூத்துக்குடி தாண்டி ஒரு சிறு கிராமத்தில் விட்டிருந்தது. அவள் எட்டு மணிக்குக் கிளம்பினால் கூட ஒரு மணி நேரம் பிடிக்கும் கீழ ஈராலுக்குள் இருக்கும் குக்கிராமத்திற்கு. மாவட்டத் தலைநகரிலேயே போஸ்டிங்க் வேண்டுமானால் லட்சங்கள் தேவைப்பட்டன. கணவன் வீட்டில் கூட கணவன் தான் ஒரு கூட்டைத் தானாய் கட்ட முயற்சிக்கும் இன்னொரு ஜானு அவன். சேமிப்பு என்பது இப்போதைக்கு அவர்கள் இப்பொழுது தான் ஆரம்பித்திருந்தார்கள். கல்யாணக் கடன் என்ற பெயரிலும் திருமணத்திற்கு முந்தையக் கடன் என்ற பெயரிலும் ஜானுவும் அவள் கணவனும் தனித்தனி அக்கவுண்ட் வைத்திருந்தார்கள். இப்பொழுது கூட ஜானுவின் கணவன் கூட ஆசைப்படுகிறான் ஜானுவிற்காக. மூன்று மாத ஊதியம் எந்தச் செலவும் இல்லாமல் சேமித்து ஒரு முறையாவது கொடைக்காணல் ஊட்டி என்று.

******

அடுப்பில் பால் பொங்கிக்கொண்டிருந்தது.
வீட்டு வாடகை கேட்டு வந்த அம்பலக்காரரிடம் மறுநாள் தருவதாகச் சொல்லிவிட்டு வருவதற்குள் பால் பொங்கி விடுகிறது.
திருச்சியின் புறநகர் பகுதியில் இருக்கும் ஒரு வீடு அது. பத்து இலட்சம் கொடுத்து ஒரு  ஆசிரியர் திருச்சியிலிருந்து சொந்த ஊரான கீழ ஈராலிற்கு பணிமாற்றம் கேட்டிருந்தார். அரசாங்கத்திற்கு அந்த இடத்தில் ஒரு காலியிடம் தேவைப்பட்டது. இலட்சங்கள் இல்லை என்பதால் திருச்சி தாண்டி இருக்கும் ஒரு கிராமத்திற்கு ஜானு மாற்றப்பட்டாள்.
கணவனும் ஆறு வய்து குழந்தையும் தூத்துக்குடியில் தான் இருக்கிறார்கள். கல்வியாண்டை விட்டு மகளை எப்படி இங்கு அழைத்து வருவது.
ஜானு கூட இன்று மாலை விண்ணப்பம் எடுத்துவிட்டு பள்ளி முடிந்ததும் தூத்துக்குடி தான் போகிறாள்.
சாதாரணக் காய்ச்சல் என்று இருந்து டெங்குவாக மாறியிருப்பதாக அன்று காலை தான் ஜானுவின் கணவர் தன் மகளின் ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டுச் சொன்னான்.
ஒரு வாரமாவது விடுப்பு கேட்க வேண்டும். திருச்சியில்ருந்து மதுரை வந்து அங்கிருந்து தூத்துக்குடி என்பது ஜானுவிற்கு சுமைகளின் சுமை.
அடுத்த வருடம் படித்துக்கொள் என்று குழந்தையைத் தன்னுடன் அழைத்துவந்திருந்தாள் டெங்கு தாக்கியிருக்காதோ என்ற குற்ற உணர்வு அவளைக் கொன்று கொண்டிருந்தது.
ஊர் போவதற்குள் டெங்கு தீவிரமாகி குழந்தை இரத்த இழப்பைச் சந்தித்து தன் நிலையை இழந்திருந்தது. தன் சக்திக்கு மீறிய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வாசலில் இருக்கும் பிள்ளையார்கள் அல்லது அம்மன் கள் சமயத்தில் கல்லாகவேத் தான் இருப்பார்களா என்ன.... ஆனாலும் ஒரு வாரத்திற்குப் பின் அவைகள் கடவுள் தான் என்று நிரூபித்துக்கொண்டார்கள்.
ஆனால் என்ன, கடன் அக்கவுண்ட் புதியதாக ஏறிக்கொண்டது.

*******

அடுப்பில் பால் பொங்கிக் கொண்டிருந்தது.
ஒரு வாரத்திற்கானத் துணிகளைப் பையில் எடுத்தாகி விட்டது.  சார்ஜர் , பணப் பை, ஏடி எம் கார்டு, இன்ஷ்யூரன்ஸ் கார்டு இதை எல்லாம் எடுத்து வைத்தாகிவிட்டதா என்று இன்னொருமுறை பார்ப்பதற்குள் அடுப்பில் பால் பொங்கிவிட்டது.
இன்று ஜானுவும் அவள் கணவனும் இராமநாதபுரத்தில் இருந்து கோவைக்குக் கிளம்ப வேண்டும்.
நான்கு நாட்களுக்கானத் துணி எல்லாம் எடுத்தாகிவிட்டது. ஜானுவின் அம்மா இறந்த பத்து நாட்களுக்குள் அப்பாவும் இறந்துவிட்டார் மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.
பத்து வயது குழந்தை லீவுலாம் இல்லை. பரிட்சை நடக்கிறது. பக்கத்து வீட்டில் இருந்துக்கிறீயா எனக்கேட்டதற்கு முகத்தைச் சுளித்துக்கொண்டாள். ஆனால் குழந்தைக்கும் வேறு வழியில்லை. ஜானுவும் அவள் கணவனும் போய்த்தான் ஆக வேண்டும்.

பேருந்து நிலையத்திற்குச் செல்ல வீட்டு வாசலில் ஆட்டோ கூட வந்துவிட்டது. முதலில் மதுரை போக வேண்டும். ஒரு மணி நேரம் அங்கு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலேயே ஓய்வு எடுத்துவிட்டு பிறகு கோவை போகவேண்டும். அப்படித்தான் மருத்துவர் வரச்சொல்லியிருக்கிறார்.
பயணக்காற்று அதிகமாக இருப்பதால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுவிடும் என்பதால் அப்படிச் சொல்லியிருக்கிறார்.
என்ன செய்வது ஜானுவின் கணவனுக்கு இப்பொழுது வந்திருப்பது நுரையீரல் புற்றுநோய்.

*******

பழனிக்குமார்
மதுரை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....