அய்யாக்கண்ணு.....

பத்தாம் வகுப்பு வரை நாங்கள் குடியிருந்தது மதுரை மேலப்பொன்னகரம் பகுதியில். எங்கள் தெருவில் பாய் டீ க்கடை என்று ஒன்று உண்டு. பெயர் எல்லாம் கிடையாது. முஸ்லீம் பாய் கடை என்றால் பிரசித்தம். நடுத்தரக் குடும்பங்கள் நிறைந்தப் பகுதி அது.
சில சமயங்களில் நண்பகலில் அல்லது வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் கூட நாங்கள் அந்தக் கடையில் டீ காப்பி பார்சல் வாங்குவோம்.
அந்த டீக்கடை பாய் க்கு மூன்று மகன் கள் மற்றும் ஒரு மகள். சையது அண்ணன், ஷேக் அண்ணன், கனி அண்ணன். மற்றும் பாத்திமா.

ஷேக் அண்ணன் என் அப்பாவின் மாணவர். அந்த அண்ணன் வீட்டிற்கு வந்து படித்ததும் அவர் வீட்டின் வறுமை காரணமாக படிப்பு நிறுத்தப்பட்டதும் எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் கடையில் அந்த அண்ணன் கல்லாவில் இருக்கும்பொழுது நான் போனால் என்னிடம் அன்பாய் பேசுவார். அவர் ஒரு முறை வீட்டிற்கு வந்த பொழுது நான் அழுதேனாம். அப்பொழுது என்னைச் சமாதானப்படுத்தும் படலமாய் " அய்யாக்கண்ணு" என அப்பா என்னைக் கொஞ்சியிருக்கிறார். அதை அந்த அண்ணன் பிடித்துக்கொண்டார். கடைக்குப் பார்சல் டீ வாங்கச்செல்கையில் அய்யாக்கண்ணு  டீ வேணுமா காப்பி வேணுமா எனக் கேட்பார். என்றோ சிறுவயதில் என்னைக் கொஞ்சியதைக் கேட்ட அண்ணன் பல பேருக்கு மத்தியில் பத்தாம் வகுப்பு படிக்கும் என்னைக் கொஞ்சுவதில் எனக்கு வெட்கம் மட்டுமே இருந்தது. வெறுப்புலாம் இல்லை.

சையது அண்ணன் வேறு ரகம். அப்பொழுது பிரபலமாயிருந்த மௌனராகம் கார்த்திக் என அவர் அவரை நினைத்துக்கொண்டு ரோமியோ ஆன வெட்டி ரகம்.
கனி அண்ணன் வாலு. நம்மைப் போல. கிரிக்கெட், கில்லி. எப்பொழுதாவது கல்லாவில் உக்காரும். ரஜினி பாட்டு போட்டு விடும்.
பாத்திமா ...அவர்கள் வீட்டுக்கு மோர் வாங்கச் செல்கையில் எனக்குக் கூடுதலாய் ஒரு டம்ளர் ஊற்றிக் கொடுக்கும் ஒரு கிளைக் கதைக் காரணி.

இவர்களில் ஷேக் அண்ணன் தனி ரகம். பாட்டு போடாமல் வியாபாரம் பார்ப்பார். பாட்டு போடலையா எனக் கேட்டதற்கு அய்யாக்கண்ணிற்கு இல்லாமலா என விக்ரம் படப் பாட்டைப் போட்டு விட்டார். நானிருக்கும்பொழுது பக்கத்தில் யாராவது சிகரெட் பிடித்தால் என்னிடம் முதலில் காசை வாங்கி டீ போட்டு வேகமாக அனுப்பி விடுவார்.  சில வருடங்கள் பிடித்தது இதையெல்லாம் உணர.

1995ல் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி நகரின் புறப்பகுதிக்குக் குடியேறினோம். ஷேக் அண்ணனிடம் சொல்லக்கூட இல்லை. பல வருடங்கள் கழித்து அப்பாவை ஒரு முறை கீழமாசிவீதி பஜாரில் பார்த்த ஷேக் அண்ணன் என்னை விசாரித்திருக்கிறார். வேலைக்குச் செல்கிறான் என்று அப்பா கூற வளர்ந்துட்டானா என்றிருக்கிறார். அப்பொழுது வருடம் 2004.

மூன்று வருடங்களுக்கு முன் அந்தப் பகுதியில் சென்ற பொழுது அந்தக் கடை இருந்த இடம் ஒரு மாடி கட்டிடமாக மாறியிருந்தது. பல சமயங்களில் நம் பால்யத்தைத் தொலைத்த இடங்கள் இப்படித்தான் நகரமயமாதலில் தொலைந்து போகின்றன. பக்கத்தில் விசாரித்ததில் அந்தக் கடை பக்கத்துத் தெருவிற்கு நகர்ந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். பார்க்கமுடியவில்லை.
நேற்று அந்தப் பகுதிக்குச் செல்கையில் , கண்டிப்பாக அந்தக் கடையைத் தேடிவிட வேண்டும் என்று அடுத்தத் தெருவிற்குள் சென்றேன்.

முன்னால் ஒரு கூரை தாழ்வாக இறங்கி, ஒரு மரம் நடுமத்த வயதில் வளர்ந்து நிற்கிறது அந்தக் கடையின் அடையாளமாய். இரவு எட்டு மணி இருக்கும். பச்சை சட்டை. கொஞ்சம் தொப்பை போட்டுள்ளது. இருபது வருடங்களுக்கு முந்தைய ஞாபகத்திலிருந்த அதே குறுந்தாடி. ஷேக் அண்ணன் தான் . டீக்கடை கொஞ்சம் பலசரக்குக்கடையாகவும் விஸ்தரித்து விட்டது. வண்டியை நிறுத்திவிட்டு ஷேக் அண்ணனிடம் செல்லாமல் டீ மாஸ்டரிடம் சென்று டீ சொன்னேன். டோக்கன் வாங்குங்க னார் அவர்.
ஷேக் அண்ணனிடம் சென்று பத்து ரூபாய் தாளை நீட்டி ஒரு டீ ...னு சொன்னேன்.
யாருக்கோ மொபைலில் ரீ சார்ஜ் செய்துவிட்டு வந்த மெசேஜை அந்த சின்ன விழிகளில் பார்த்துக்கொண்டே ஒரு முறை என்னைப் பார்த்தார். பத்து ரூபாயை வாங்கி கல்லாவில் போட்டுவிட்டு டோக்கனைக் கொடுத்துவிட்டு மறுபடியும் மொபைலைப் பார்த்தார்.

என்னைத் தெரியலையா னு கேட்டேன்..
ஒரு முறை என்னைப் பார்த்தார்.
ஒரு ஹமாம் சோப் கொடுங்க னு ஒரு பெண் கேட்டார்.
அவருக்கு சோப்பை எடுத்துக்கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணின் காசை வாங்கி கல்லாவில் போட்டார்.
தெரியலையா னு கேட்டேன்.
மறுமுறையும் பார்த்தார்.
யோசிங்க..நான் டீய குடிச்சிட்டு வர்றேன் என்று நகர்ந்து விட்டு டீய வாங்கிவிட்டு மறுபடியும் அவர் அருகில் நின்றேன்.

சிரித்தார்.
என்ன தெரியுதா...னு கேட்டேன்.

இருபது வருடங்கள் கழித்து ஷேக் அண்ணன் என்னை " அய்யாக்கண்ணு" என்றார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8