ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - கருத்து.


" ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" நூலை முன் வைத்து.......



ஏதோ ஒரு மூலையில் நமக்கு இப்பொழுது மிகவும் பரிச்சயப்பட்ட ஒரு வசனமாகிய ' ஒருவனை ஏமாற்ற வேண்டுமானால் முதலில் அவனது ஆசையைத் தூண்ட வேண்டும் ' என்பது போன்ற ஓர் அடிப்படைத் தத்துவத்தை அதற்குப் பின்பான நம் சுயநலத்தை நிலைநாட்டுவது மற்றும்
மனிதன் - மனிதன்  அல்லது ஒரு சமூக இன்னொரு சமூக
நம்பிக்கைத் துரோகம் என்பது ஒரு கட்டத்தில் நாகரிகம் வளர வளர நாடு விட்டு நாடு பரவுதல் அல்லது பரப்புதல்
அல்லது தன் பலத்தை அடுத்த ஆள் மீது திணித்து, தான் மட்டும் வாழ்தல் என்ற அரக்கத்தனம்.
என்றோ நடந்தது இன்று வரலாறு. இன்று நடப்பது இன்னொரு வரலாறு. ஆனால் 'நாகரிகம் வளர வளர' என்ற ஒரு சொற்றொடர் கூட போதுமானதாய் இருக்கிறது நம்மை நாமே சீர் குலைத்து சீர் அழிய.

இதை ஒரு வரலாறாகப் படித்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் நடந்து முடிந்தக் கதையாக இல்லாமல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை இப்பொழுது நம்மால் முழுதாய் கண்கள் அகல மூளை அகல பார்க்க முடிகிறது.

தமிழில் இரா.முருகவேள் மொழிபெயர்த்த ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ' confession of an economic hitman'  என்ற ' ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்ற புத்தகம் அப்படித்தான் நம் கண்களை மூளையை அகல அகல விரிக்கிறது.

பொருளாதார அடியாள் என்ற சொற்றொடரே நமக்கு மிகவும் ஒரு வித்தியாசமான உணர்வைத் தருகிறதென்றால் ஒரு கெட்ட பொருளாதார நிபுணர் என்று சொல்லிக்கொள்ளுங்கள்.
பொருளாதார நிபுணராகத் தன்னைக் காட்டிக்கொண்டு நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு உதவி செய்பவர் ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம் தான் இந்தப் புத்தகம்.
கொஞ்சம் கூட அயல் நாட்டுக் கலாச்சார வர்ணனைகள் குறையாதபடி தமிழில் எழுதப்பட்டிருப்பது நம்மையும் ஈக்வடார், அமேஸான் காடுகள், ஈரான், கொலம்பியா, இந்தோனேசியாவின் ஆற்றங்கரை, பனாமா கால்வாய், ஃபிடல் நண்பர்களின் இரவுக் காட்சி, ஈராக்கின் தகவமைப்பு இப்படி அந்தந்த வரிகளினூடே பயணிக்க வைத்து கண் முன் காட்சியைக் கொண்டு வருகிறது.

ஒரு நிறுவனத்தில் வேலை சேரும் நாம் எப்படி பயிற்றுவிக்கப் படுகிறோம். பிறகு நிறுவனத்தின் கொள்கைகளை எப்படி உள்வாங்குகிறோம். பிறகு நாமே அந்த நிறுவனத்தின் பிரதிநிதியாக எப்படி மாறிக்கொள்கிறோம். ஒரு கட்டத்தில் நம் மனதிற்குள் நம் மூளைக்குள் நாமே தான் அந்த நிறுவனம் என்று நினைத்துக்கொள்கிறோம். இப்பொழுது ஒரு நாள் காலை நாம் நம்மிலிருந்து வெளியே வந்து நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று ஆராய்ந்து பார்த்து எது சரி எது தவறு என்று பார்க்கிறோம். தர்மப் படி சில தவறுகள் என்றாலும் வாங்கும் சம்பளத்திற்கு நிறுவனக் கோட்பாடுகளின் படி சரியெனச் செய்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது எதைத் தொடரப் போகிறோம் என்ற குழப்பத்தில் சிக்கிக்கொண்ட ஒரு பொருளாதார அடியாளான ஜான் பெர்க்கின்ஸ் என்பவரின் சுயசரிதை மற்றும் அனுபவமே இந்தப் புத்தகம்.

சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்கா தன் பலத்தை வைத்துக்கொண்டு வேறு சில நாடுகளில் எண்ணெய் மற்றும் மற்ற வளங்களைக் குறி வைத்து அவற்றைக் கையாடல் பண்ணும் பொருட்டு அந்நாட்டு வளங்களைச் சீர்குலைத்து தனக்கு லாபமாக அதை மாற்றுகிறது. மாற்றிக்கொண்டிருக்கிறது.
அதற்குத் தேவையான உலக வங்கி கட்டுமான நிறுவனங்கள் அந்நிறுவன ஊழியர்கள் என களத்தில் இறக்குகிறது. அதை அந்த நாட்டு ஆட்சியாளர்கள் அனுமதிக்காவிட்டால் நாட்டில் குழப்பத்தை உண்டாக்குகிறது. விமான விபத்துகள் நிகழ்கின்றன. அதிபர்கள் விபத்தில் உயிர் துறக்கிறார்கள். அது ஒரு கொலை எனக் கூடச் சந்தேகிக்காதபடி உலகத்தின் மீடியாக்கள் செய்திகளைத் தருகின்றன.
ஆப்கானிஸ்தான், ஈராக் என உங்கள் கண் முன் விழும் செய்திகளை மேலோட்டமாகவே உங்களைப் பார்க்கச் சிந்திக்க அமெரிக்கா முயற்சிக்கிறது.
எல்லாமே கட்டுக்குள் வைத்துக்கொண்டு அமெரிக்கா நடத்துகிறது என்பதை ஆதாரத்துடன் சொல்கிறது உங்கள் புத்தகம்.

பனாமா கால்வாயின் வரலாறும் லத்தின் அமெரிக்கா நாடுகளின் வரலாறும் , மத்திய கிழக்கு நாடுகளின் வளமும் அழிவும் என நாம் படிக்க வேண்டியக் கட்டாயமும் அவசியமும் இந்தப் புத்தகம் படிப்பதனால் வருகிறது. நமக்குச் செய்தியாகக் கிடைப்பவற்றை அது உண்மையா என்று கூட யோசிக்காமல் நாம் அது தான் உண்மை என நம்புதல் தவறு என்பதை இந்தப் புத்தகம் சொல்கிறது.

ஓர் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்குப் பின் நடக்கும் அவலங்கள் பண்பாட்டுச் சீரழிவுகள் மனித குலம் சந்திக்கப்போகும் அவலங்கள் என நம் எதிர்காலத்தின் அபாயங்களை கண் முன் காட்டுகிறது. இந்தப் புத்தகத்தில் எண்ணெய் வளங்களின் நாடுகளைச் சூறையாடி உலகத்தின் நம் கண்ணுக்குத் தெரியாமல் நாம் எப்படி எண்ணெய் தேவையால் கட்டுண்டு கிடக்கிறோம் என்று படித்துக்கொண்டிருந்த போன வாரத்தில் தென்னாப்பிரிக்காவில் ஒரு நகரம் தண்ணீர் அற்ற நகரம் என்று பெயர் வாங்கி உலகம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்ல வைத்திருக்கிறது.

எனக்குப் பிடித்த பாகங்கள் எனச் சொல்வது என்றால் மொழிபெயர்ப்பாளர் இரா. முருகவேள் அவர்களது வரிகளில் வருகிறது இப்படி.
இந்த வாழ்வு தற்செயல்களால் ஆனது.

" உங்கள் வாழ்க்கையில் தற்செயலாக நடைபெற்ற சில நிகழ்ச்சிகளும் அந்த நேரத்தில் நீங்கள் எடுத்த முடிவுகளும் தான் உங்களை இப்போதுள்ள இடத்துக்குக் கொண்டு வந்துள்ளன "

இந்த வரிகள் புத்தகத்தின் சில இடங்களில் ஜான் பெர்க்கின்ஸ் அவர்களின் கூற்றாக வந்து கொண்டிருக்கிறது. உண்மையில் நம் எதார்த்த வாழ்வில் பொருந்தக் கூடிய ஒரு வாசகம். இதன் மூல நூலில் இந்த மொழிபெயர்ப்பு எப்படி ஜான் பெர்க்கின்ஸ் அவர்களின் மொழியாக வந்திருக்கிறது என்பதைப் படிக்க ஆசையாக இருக்கிறது.

எல்லா வரிகளையும் சொல்லி எழுதி ஒரு பதிவை இடுவது அந்தப் படைப்பின் அழகியலை நீங்கள் அனுபவிக்க முடியாதபடி போய்விடும். நமக்கு வெறும் திமுக அதிமுக ரஜினி கமல் மோடி ராகுல்தான் உலகம் என்றிருப்பவர்கள் கொஞ்சம் வெளிதேச  பஞ்சாயத்துகளை இந்தப் புத்தகத்தின் வழியாகப் பார்க்கலாம்.
இது உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடப்பதாகத் தெரிந்தாலும் உங்கள் ஊரில் நடப்பவற்றை நீங்களே கண்களை அகல விரித்துப் பார்ப்பீர்கள்.
ஈக்வடார் நாட்டில் பெட் ரோலை எடுத்தால் நமக்கென்ன, அமேஸான் காடுகளில் எண்ணெய் எடுத்து அந்தக் காடுகளின் ஆற்றில் அதன் கழிவுகளைக் கொட்டி நச்சாக்கி ஏராளமானத் தாவரங்கள் பறவைகள் பூச்சிகள் அழிந்தால் நமக்கென்ன, அங்கு வாழ்ந்த ஆதிவாசி இனங்கள் அழிந்தால் நமக்கென்ன என்பவர்கள் நமக்குள் இருப்பார்கள்.
போன வாரம் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வந்த ஓர் உறவுக்காரரிடம் பேசிய போது இந்த வருட மழையின் 130 அடிக்கு மேல் நிறைந்த பாபநாச அணை (https://www.maalaimalar.com/News/State/2017/11/28132640/1131434/rain-in-Nellai-district-water-level-increased-in-servalar.vpf) இன்று
தண்ணீர் குறைந்து 70 அடியாக வந்துவிட்டது ( http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/feb/01/) வரும் கோடைக்கு கடும் வறட்சிக்கு நெல்லை மாவட்டம் உள்ளாகும் என்று கூறினார்.
நெல்லை மாவட்டத்திலேயே தண்ணீர் பற்றாக்குறை கிராமங்கள் இருக்க, பெப்ஸி கோக் நிறுவனங்களுக்கு தாமிரபரணியிலிருந்து தண்ணீரைத் தாரை வார்ப்பது என்பது நம் இயற்கையை நாமே அழிக்க முனைந்துள்ளது தான்.

பெப்சி கோக் கூடங்குளம் கதிராமங்கலம் எல்லாம் தற்செயல் என்றால் அதற்கு நாம் எப்படி எதிர்வினை ஆற்றப்போகிறோம் என்பது தான் நமக்கும் நமது குழந்தைகளுக்கும் நாம் விட்டுப்போகிற வாழ்க்கை.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
தமிழில் : இரா. முருகவேள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8