ஞாபக மழை

நீங்கள்
இப்பொழுது
கவிதையொன்றை
எழுத எத்தனிக்கிறீர்கள்.


எழுதவே முடியாத
தழுவலொன்றை
விடுபட வகையேதுமற்ற
பார்வைக்குள்
விழுந்ததைப் பற்றி
எழுத எத்தனித்த
பழையக் கவிதையொன்றை
அது
ஞாபகப்படுத்துகிறது.

நீங்கள் 
இப்பொழுது
உங்களது பழையக்
கவிதையைத் 
தேடிச் செல்கிறீர்கள்.

உங்களுக்கு 
இப்பொழுது
ஒரு தழுவலும்
விடுபட வகையேதுமற்றதான
ஒரு பார்வையும்
ஞாபகம் வருகிறது.

நீங்கள்
இப்பொழுது
கடந்த காலத்
 தழுவலுக்கானக் 
காத்திருத்தலில்
மறுபடியும் 
காத்திருக்கிறீர்கள்..

தழுவலுக்கு 
முந்தையத் தருண
லப்டப்புகளை 
அப்பொழுதைப் போலவே
இப்பொழுதும் 
கேட்கிறீர்கள்.

கடந்தகால 
விரலிடுக்கு 
இடைவெளிகளில் எல்லாம்
இப்பொழுது 
அணைத்துக்கொள்ள 
சீர் செய்கிறீர்கள்.
நினைவில் மீளும்
மழையென 
நனைக்க மறுக்கிறது
ஈரப்ரியங்கள்.

இப்பொழுது
அணைப்புக்குள்
தகித்தப் ப்ரியத்தீயை
நீங்கள்
உணர்கிறீர்கள்..

ப்ரியம் கொண்டு
விரல் பற்றிப்
பார்க்கும் 
விழிகள் 
உங்களுக்கு
ஞாபகம் வருகிறது.

நீங்கள்
விடுபட விரும்பாத
அந்தப் பார்வையைத்
தேடுகிறீர்கள்.

எரி நட்சத்திரத்தைப் போல
விழுகிறது
ப்ரியத்தின் பிம்பம்.

இப்பொழுதும் கூட
மொழிபெயர்க்க முடியாத
மொழிதலைக் 
கையிலேந்தி 
நிற்கிறீர்கள்.

உங்கள் 
உள்ளங்கைகளுக்குள்
உங்களுக்காக மட்டும்
விழுந்து வழியும்
உங்களுக்கான
ஒரு மழையைப் போல
உங்கள் ஞாபகம்
விடுபடுகிறது.

நிற்க-
நீங்கள்
இப்பொழுது
கவிதையொன்றை
எழுத
எத்தனிக்கிறீர்கள்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....